பெரிய அபாயம்

உங்களுக்கு தெரியுமா??

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 93% சதவிகிதம் பேர் மருத்துவம் (MBBS) படிக்க முடியாது என்று..

நீட் தேர்வில் தேர்ச்சி அடைவது என்பது நாம் +2 வகுப்பில் 35% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது போன்றது.
 முன்பு நுழைவுத்தேர்வு இல்லாதபோது எப்படி 35 விழுக்காடு மதிப்பெண் பெற்றால் மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்காதோ, அதுபோல, நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விடாது.

நீட் தகுதி தேர்வில் வேற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காது.. 
உதாரணமாக, தமிழ் நாட்டில் 2018 ஆம் ஆண்டு 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. 
ஆனால், இங்கிருக்கும் MBBS படிப்பு இடங்களோ வெறும் 5660 மட்டுமே..


 அதாவது, தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களில், மெரிட் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 5660 பேருக்கு (12.5% சதவீதம்) மட்டுமே மெடிகல் படிக்க இடம் கிடைக்கும்..

. மீதமுள்ள 40 ஆயிரம் பேரில் இருந்து, பணம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் அந்த ஐநூறு மேனேஜ்மென்ட் கோட்டா சீட்டுகளில் பணம் கொடுத்து சேரலாம்..

முன்பு 200க்கு 198 , 197, 196 என்று எப்படி கட் ஆப் மதிப்பெண் இருந்ததோ அது போல நீட் தேர்வில் 720க்கு 600 க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.
நீட் தேர்வில் 150 மதிப்பெண் எடுத்தும் ஒருவன் மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான் என்றால் அவன் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு கோடி ரூபாய் பணம் கட்டி சேர்த்துவிட வசதி உள்ள பெற்றோர்களுக்கு பிறந்தவராகத்தான் இருக்க முடியும்.

நீட் தேர்வு என்பது கார்ப்பரேட்களால் உருவாக்கப்பட்ட கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிப்பதற்கான பல்லாயிரம் கோடி வணிக உத்தி ஆகும்.
அம்பானிகள் இந்த கோச்சிங் சென்டர் தொழில் இறங்கியுள்ளதே நீட் யாருக்கானது என்று தெரியவைத்த விடுகிறதே.

இத்தேர்வில் உள்ள முக்கிய அபாயம் நீட் தேர்வு கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் இருந்து தடுத்துவிடும்.

நீட் தேர்வு வந்தபின் மாணவர்கள்  அரசாங்க மருத்துவ சீட்களில் சேர்வதும் குறைந்து விட்டது, இதனால் எதிர்காலத்தில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு..

ப்ளஸ் டூ முடித்த பின்பு ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தனியார் நீட் கோச்சிங் சென்டர் மூலம் பயிற்சி எடுப்பவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு .

அகில இந்திய அளவில் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் பாதிப்பேர் நீட் கோச்சிங் படித்திருந்தாலும், நீட் கோச்சிங் வணிகத்தில் புரண்ட தொகை, சுமார் 12,000 கோடி..
இப்போது புரிகிறதா கார்பரேட்கள் ,கொள்ளை லாபம் இருப்பதால்தான் மோடி அரசு நீட்டை கைவிட மறுக்கிறது என்பது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அதிரடி விற்பனை .
24 அரசு நிறுவனங்களின் சொத்துக்களை, முழுமையாகவோ, பகுதி யாகவோ, விற்பதற்கு ‘நிதி ஆயோக் அதிகாரிகள் பட்டியல் தயாரித்து இருப்பதாகவும், 2020 மார்ச் மாதத் திற்குள் இந்த சொத்துக்களை விற்று விடுவது என்றும் இலக்கு நிர்ண யித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட்களில், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, அரசுக்கு தேவையான நிதியைத்திரட்டுவதற்கு தனியாக இலக்கு நிர்ணயிக்கப்படும்.
அந்த அடிப்படையில், 2018 - 19 நிதியாண்டில் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து, சுமார் 84 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திரட்டப்பட்டது.
அதாவது உழைத்து வருமானம் ஈட்டாமல், முன்னோர் சேர்த்து வைத்திருந்த சொத்தை விற்று, பவிசு காட்டும் வேலையை மோடி அரசு செய்தது.

தற்போது 2019 - 2020 நிதியாண்டி லும் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தில் கீழ் இயங்கும் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை யிடம்தான் (Department of Invest ment and Public Asset Management (DIPAM) மத்திய அரசுக்குச் சொந்த மான சொத்துக்களை விற்று வருவாயைத் திரட்டித் தரும் பணி ஒப்படைக் கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த பொதுச் சொத்து மேலாண்மைத்துறையானது, ரூ. 90 ஆயிரம் கோடிக்கு எந்தெந்த சொத்துக்களை விற்கலாம் என்று பட்டியல் ஒன்றைப் போட்டுள்ளது.
இந்த பட்டியலில், ஸ்கூட்டர்ஸ் இந்தியா (Scooters India) பாரத் பம்ப்ஸ் மற்றும் கம்ப்ரசர்ஸ் (¡õharat Pumps & Compressors) புராஜெக்ட் மற்றும் டெவலப்மெண்ட் இந்தியா (Project& Development India), இந்துஸ்தான் பிரிபாப் (Hindustan Prefab) இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் (Hindustan Newsprint), பிரிட்ஜ் & ரூப் கம்பெனிமற்றும் இந்துஸ்தான் புளூரோகார்பன்ஸ் (¡õridge & Roof Co. and Hindustan Fluorocarbon) போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்களின் சொத்துக் களை விற்கத் தேவையான நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வருகிறார்கள்.
இதனிடையே, நிதி ஆயோக்கும் தனியாக ஒரு பட்டியலை தயாரித்துள்ளது.
நிதி ஆயோக் கொடுத்த பட்டியலில், என்டிபிசி என்ற மின்சார உற்பத்தி நிறுவனத்தின் பதர்பூர் மின் ஆலையை விற்பது, அதே என்டிபிசி-யின் 400 ஏக்கர் நிலத்தை விற்றுவிடுவது; செயில் நிறுவனத்தின் ப்ரவுன்ஃபீல்ட் திட்டத்தை விற்பது, சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சில திட்டங்களை விற்றுவிடுவது, என அந்த பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.

இவையெல்லாம் ஒரு நிறு வனத்துக்குச் சொந்தமாக இருக்கும் ப்ராஜெக்ட் திட்டங்கள் மற்றும் சொத்துக்கள். ஆனால், இதையெல் லாம் தாண்டி அரசுக்குச் சொந்தமான 24 நிறுவனங்களை, முழுமையாக, அப்படியே விற்கவும் மோடி அரசு திட்டம் போட்டுள்ளது.
இதில் ‘ஏர் இந்தியா’ தான் பட்டி யலில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 நிதி அமைச்சகத்தின் கீழ், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அரசு சொத்துக்களை விற்க உருவாக்கப்படும் பேனல்களின் ஒப்புதல் கிடைத்த உடன் அடுத்த மார்ச் 2020-க்குள் ஒவ்வொரு சொத்தாக விற்க நிதி ஆயோக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொன்முட்டையிடும் வாத்துக்களை அறுத்து கொல்வதுதான் மோடி மஸ்தான் வேலை.
----------------------------------------------------------------------------------------------------------------------
 வேலையை செய்ய வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கணும்?
மன்னார்குடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்ற பொழுது கிராம கணக்கு,வரைபடம் ஆகியவற்றுடன் ஆய்வுக்கு வர மறுத்த

 மண்ணை  கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்திற்கே கட்சித்தொன்டைர்கள் ,பொதுமக்களுடன் நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்  சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா.

தனது பணியையே ஆக்கிரமிப்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்யமறுக்கும் இது போன்ற அலுவலர்களை மக்களிடம் இப்படித்தான் அமபலப் படுத்த வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
அன்னைத் தமிழ்மொழி.
ஆங்கிலம் - உலகத் தொடர்பு மொழி. 

இரண்டும் போதும் என்பதே இருமொழிக் கொள்கை.
 இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆண்ட பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்து விட்டுப்போன மொழிக் கொள்கை இது. 
இருமொழிக் கொள்கையே ஒருவனை உயர்த்தும்.
 மும்மொழிக் கொள்கை முடக்கும். 
அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், 'இருமொழிக் கொள்கைக்கு எதிரான எதனையும் இறுதிவரை எதிர்ப்போம்' என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

 அண்ணா வழியில் நடக்கும் கழகம், இப்படித்தான் முடிவெடுக்க முடியும். 
தர்மம் - அதர்மம் என்ற பொருள் கொண்ட தி.மு.க.வுக்கு எதிர் இயக்கமாம் அ.தி.மு.க.வின் தலைமை நாற்காலியை அபகரித்து வைத்திருக்கும் சேலத்துச் சேக்கிழார், ஏதோ தமிழுக்காக தீக்குளிக்கத் தயாராக இருப்பதுபோல காட்டிக் கொள்ள நினைத்து, 'இந்தியா முழுமைக்கும் மூன்றாவது மொழியாக தமிழை கற்பிக்க வேண்டும்' என்று முழங்கி' இருந்தார்.

'எனக்கே கோரிக்கை வைக்கிறாயா?' என்று மோடி மிரட்டினாரோ என்னவோ சில மணி நேரங்களில் அந்த முழக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.


தமிழை மூன்றாவது மொழியாக இந்தியா முழுமைக்கும் கற்றுத் தாருங்கள் என்றால், மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறாரா? 
மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பது என்பதே இந்தியை ஆதரிப்பதுதான். இந்தியை படிக்க வைப்பதற்காகவே, மும்மொழித் திட்டம் கொண்டு வரப்பட்டது. 
ஒருவர் முப்பது மொழி கூட படிக்கலாம்.
 அது அவர் விருப்பம் சார்ந்தது. 
 ஆனால் கட்டாயத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியைக் கூட திணிக்கக் கூடாது. இது தாய்மொழி வெறுப்பு அரசியல். அந்நிய மொழி திணிப்பு அரசியல்.
 இந்தி மேலாதிக்க மேட்புமை அரசியல். 

ஆங்கிலம் கூடத் தேவையில்லை ; தமிழ் மட்டுமே போதுமானது என்று சொல்லப்பட்டபோது,
 'பச்சைத் தமிழர்' காமராசர்தான் சொன்னார் : 
 "ஆங்கிலத்தை எதிர்த்தீங்கண்ணா , அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்னேன்" என்றார். 

எனவே இருமொழிக் கொள்கை என்பதும் தமிழும் - ஆங்கிலமும் என்பதுதான். மற்ற மொழியினருக்கு அவரவர் தாய்மொழியும், ஆங்கிலமும் என்பதுதான். 

 தமிழும், இந்தியும் என்பது இருமொழிக் கொள்கை ஆகாது.
 அப்படிச் சொன்னால் அது இந்தி மொழிக் கொள்கையே தவிர, இருமொழிக் கொள்கை ஆகாது.

 'இந்தியை எதிர்த்தால், நமக்குத் தொடர்பு மொழி என்ன? நாம் தனிமைப்பட்டு விடுவோம்' என்று இன்று நய வஞ்சகமாகக் கேள்வியை நல்ல பிள்ளை போல் கேட்பவர்கள் அண்ணா காலத்திலும் இருந்தார்கள்.

 'உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலம் இருக்கும்போது, இந்தியத் தொடர்பு மொழியான இந்தி எதற்கு?' என்று கேட்ட அண்ணா அவர்கள், அந்த அதிபுத்திசாலிகளுக்கு புரியும் வண்ணம் பூனை உதாரணம் ஒன்றைச் சொன்னார்.

"தாய் பூனை செல்வதற்கு ஒரு துவாரம் போட்டால், குட்டி பூனை செல்வதற்கு தனி துவாரம் தேவையில்லை. அதிலேயே இதுவும் சென்றுவிடும்" என்றார் அண்ணா . 
அது இன்றைய சேக்கிழாருக்கு புரியுமா எனத் தெரியவில்லை .
 இந்திப் பிரச்சினை ஒரு வாரகாலமாக தீப்பற்றி எரிகிறது.
 தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பின் வெப்பம் டெல்லியைச் சுட்டது. 
புதுப்புது மத்திய அமைச்சர்கள், புதுப்புது விளக்கங்களைக் கொடுத்தார்கள். 
ஆனாலும் தமிழக எதிர்ப்பைத் தணிக்க முடியவில்லை. இறுதியாக அந்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையிலேயே திருத்தம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 

இது கஸ்தூரிரங்கன் ஒப்புதலோடு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.
 மத்திய அரசாங்கம் நினைத்தவுடன் அதில் திருத்தம் செய்கிறது என்றால் அது கஸ்தூரிரங்கன் அறிக்கையா? 
பா.ஜ.க.வின் அறிக்கையா? 
'இது வரைவுத் திட்டம்தான், எங்களது அரசு முடிவு அல்ல' என்றது பொய்யா?
 வரைவுத் திட்டத்துக்கு பொதுமக்கள் கருத்துச் சொல்ல ஜூன் 30 வரை கால அவகாசம் இருக்கும்போது அவசர அவசரமாக திருத்தம் போட வேண்டிய அவசியம் என்ன? 


- இவ்வளவு விவாதங்கள் பொது வெளியில் நடந்து கொண்டிருந்தபோதெல்லாம், கருத்தே சொல்லாமல் 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஞானோதயம் வந்தவராக கிளர்ந்து எழுந்து, 'இந்தியா முழுக்க தமிழைக் கற்றுக் கொடுங்கள்' என்று கிளம்பினார். 

பா.ஜ.க.வின் அடிமை அணியாக, துணை அமைப்பாக அ.தி.மு.க.வை ஆக்கிவிட்ட இந்தக் கூட்டத்துக்கு இருமொழிக் கொள்கையும் தெரியவில்லை. 
மும்மொழிக் கொள்கையும் தெரியவில்லை. 
அண்ணாவையும் தெரியவில்லை. 

இவருக்குத் தெரிந்ததெல்லாம், 'டிபன் சாப்பிட்டீங்களாண்ணா ?', 'காபி சாப்பிட்டீங்களாண்ணா ?' தான். 

அ.தி.மு.க. கொடியில் இருப்பது அண்ணா அல்ல, அமித்ஷாவின் தாத்தா என்று கூட விளக்கம் சொல்வார்கள், ஜெயலலிதாவையே மறந்து விட்ட இந்த ஜென்மங்கள்! 
                                                                                                                            -முரசொலி 

 ---------------------------------------------------------------------------------------------------------------------
 பெரும் அபாயம்.
மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை மீண்டும் வெற்றிபெறச் செய்வதற்கான பொறுப்பை, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.

கொல்கத்தாவில் சுமார் 2 மணிநேரம் நடைப்பெற்ற மம்தா - கிஷோ சந்திப்பின்போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இடதுசாரிகள் ஆட்சியிலிருந்த வரை, மேற்குவங்கத்தில் பாஜக நுழைய முடியவில்லை. அப்போது பாஜக-வோடு கூட்டணி சேர்ந்து, அக்கட்சியை வளர்த்து விட்டவர்தான் மம்தா பானர்ஜி.

1999-இல் மத்தியில் ரயில்வே அமைச்சர் பதவியை பெற்ற மம்தா பானர்ஜி, அதற்கு நன்றிக்கடனாக, மேற்குவங்கத்தில் பாஜக-வுக்கு சில எம்.பி.க்கள் கிடைக்கக் காரணமானார்.
சிங்கூர், நந்திகிராம் பிரச்சனைகளையொட்டி, பாஜகவையும் சேர்த்துக் கொண்டுதான் இடது முன்னணி அரசுக்கு எதிராக சதிகளை அரங்கேற்றினார்.

2011-இல் ஆட்சிக்கு வந்தபின், இடதுசாரிகளின் அரசியல் செயல்பாட்டை, தனது ஆட்சியதிகாரம் மற்றும் குண்டர் படையின் மூலம் முடக்கிய மம்தா பானர்ஜி, மறுபுறத்தில் பாஜகவை மறைமுகமாக வளர்த்து விடும் வேலைகளில் இறங்கினார்.


வெளியில், பாஜக-வை எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், மம்தா பானர்ஜி கையிலெடுத்த, சிறுபான்மையினரை மத ரீதியாக அணிதிரட்டும் அரசியல், பெரும்பான்மை மதத்தினரை கச்சிதமாக பாஜக பக்கம் தள்ளிவிட்டது.
பாஜக-வும் அதனை அறுவடைசெய்து, நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 18 எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றியது.

தற்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை, கூட்டம் கூட்டமாக பாஜக-வுக்கு இழுத்து வருகிறது.

இந்நிலையில்தான், 2021 தேர்தலிலும் தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், பிரசாந்த் கிஷோர் விளம்பர நிறுவனத்துடன் மம்தா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி ஆட்சியைப் பிடிப்பதற்கும்,
2015-ஆம் ஆண்டு, நிதிஷ்குமார் பீகாரில் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பிரச்சாரத் திட்டங்களை வகுத்துத் தந்தது பிரசாந்த் கிஷோர் நிறுவனம்தான்.

அண்மையில், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 151 இடங்களுடன் அபார வெற்றிபெற்றதற்கும் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் வகுத்துத் தந்த திட்டங்களே காரணம் என்று கூறப்பட்டது.

இந்த பின்னணியிலேயே, மம்தா பானர்ஜியும் மேற்குவங்கத்தின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
ஆக தேர்தல் வெற்றிக்கும் மக்களை விட கார்ப்பரேட் நிறுவனங்களை நமப வேண்டிய சூழல் நம் அரசியல்வாதிகளுக்கு.
கோடிகளை பெற்றுக்கொண்டு அந்நிறுவனங்கள் வகுத்துத்தருவது  மக்களாட்சியை வலுப்படுத்துவதாகவா இருக்கும்.திருமங்கலம் கோட்பாடுகளால் கட்டபப்ட்ட திட்டங்களாகத்தானே இருக்கும்.
இது மக்களாட்சிக்கும்,தேர்தல் முறைக்கும் பெரிய அபாயம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?