புராண(திணிப்பு)க்கல்வி கொள்கை.

  புதிய கல்விக்கொள்கையல்ல.
 புராணக் கல்வி கொள்கை
இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு அது குறித்து மக்களின் கருத்தறிய ஜுன் கடைசி வரை அவகாசம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதில் உள்ள மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு குறித்து பொதுவாகப் பேசி வருகிறோம்.
ஆனால் இதில் இன்னும் ஏராளமான கொடிய விஷ(ய)ங்கள் உள்ளன.


இதுதொடர்பாக கனடாவிலுள்ள நரம்பியல் விஞ்ஞானி, மனநல மருத்துவர் லேனா பழனியப்பன், “இது கொள்கை அறிக்கையே இல்லை;
ஒரு ‘‘பிரச்சார முழக்கம்’’ என்று காரணங்களோடு விளக்குகிறார்.
இது கல்விக்கான மாற்றம் அல்ல; இந்திய அரசியலமைப்பையே மாற்றி கேள்விக்குறியாக்கும் முயற்சி என்கிறார்.

“பொய்கள், ஆதாரமில்லாத செய்திகள், நிரூபிக்கப்படாத விஷயங்கள், மேற்கோள் இல்லாத குறிப்புகள், எடுக்கப்படாத புள்ளி விவரங்கள், தொடர்பற்ற உண்மைகள், பொத்தாம்பொதுவான கருத்துக்கள், முட்டாள்தனமான பிதற்றல்கள், அறியப்படாத வரலாறுகள், முரண்பாடான விளக்கங்கள், விளம்பரயுக்தி, நம்பமுடியாத சான்றுகள், தவறான வாதங்கள், பயத்தை/உணர்வைத் தூண்டும் வாசகங்கள், ஒப்பனை செய்த சொல்லாடல்கள் என இந்த வரைவு அறிக்கை முழுவதும் ஒரு பிரச்சார அறிக்கைக்கான கூறுகளே உள்ளன” என்றும், கொள்கை வரைவு அறிக்கைக்கான எந்த முகாந்திரமும் இதில் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

 புதிய கல்விக்கொள்கை வரைவில் இடம்பெற்றுள்ள சில பிதற்றல்கள்

 இந்தியாவில் 15% தான் ஆங்கிலம் பேசுகிறார்கள். 
54% இந்திதான் பேசுகிறார்கள். 
ஆங்கிலம் சர்வதேச மொழி கிடையாது. 
 தற்போது மாணவர்களுக்கு ஒரு கோடி வரைதான் எண்ணத் தெரியும்.

 ஆனால் புதிய திட்டத்தில் கோடிக்கு மேல் அராப், கெராப், நீல், பத்மா, ஷாங்க், மஹாசாங்க் என பல எண்களை புரிந்துகொண்டு அது குறித்து பேச கற்றுக்கொள்வார்கள்.

 பல்வேறு விதமான பிரிவுகளைக் கொண்ட பெரிய கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு பக்க மூளையும் சிறப்பாக இயங்கும்.

 இதில் பல சமஸ்கிருத புத்தகங்களை குறிப்பிட்டு ஆயகலைகள் 64யையும் கற்றவனே உண்மையான கல்வியறிவு பெற்றவன் எனவும் அது தற்போது 512ஆக உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. 

இது நவீன கல்வியை அறிமுகப்படுத்த வில்லை; மாறாக நம்மை பின்னோக்கியே அழைத்துச் செல்கிறது. 

 ஐஐடி கல்வி நிலையத்தில் கலை மற்றும் மானிடவியல் சொல்லித்தர வேண்டும். 
 கல்வியில் மாநிலத்துக்கான உரிமை குறைக்கப்பட்டு மத்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.


 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படும். உயர்கல்வியில் தனியார்மயமாக்கல் தீவிரமாக்கப்படும். வெளிநாட்டு மாணவர்கள் சித்தா, ஆயுர்வேதம், யோகா, யுனானி போன்ற படிப்புகள் படிக்க நிதி வழங்கப்படும். 

 உடற்கல்வி குறித்தோ, பள்ளிக்கூடத்தில் விளையாட்டு குறித்தோ ஏதும் குறிப்பிடவில்லை. யோகா பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ என்று வரும் வாட்ஸப் பகிர்வுகளுக்கும் இந்த 484 பக்க கொள்கை பரப்புரைக்கும் கருத்தளவில் பெரிய வேறுபாடு கிடையாது என்றே தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் பழனியப்பன்.
இது புதிய கல்விக்கொள்கையல்ல புராணதிணிப்புக்கல்வி கொள்கை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------


 நீர் மேலாண்மை நமக்குத் தெரியாததா?
தமிழகம் இந்திய மக்கள் தொகையில் 7சதவீதமும், பரப்பளவில் 4 சதவீதமும் இருந்தாலும் நீர் ஆதாரம் 3 சதவீதம் மட்டுமே உள்ளது.
தமிழகம் ஒரு மழை மறைவுப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழகத்தில் நீருக்கான ஒரே ஆதாரமும் மழைதான்.
 இரு பருவமழைகள் மூலம் தமிழகத்துக்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ ஆகும்.
 இது தேசிய சராசரியை விடக்குறைவுதான்.

தென்மேற்கு பருவ மழை மூலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை 332 மி.மீட்டரும், வடகிழக்குப் பருவமழை மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 459.2 மி.மீட்டரும் கிடைக்கிறது.
குளிர் காலத்தில் 36.8மி.மீ கோடைகால மழையின் மூலம்129.6மி.மீ நீரும் கிடைக்கிறது.
தென்மேற்குப் பருவமழை கடலோர மாவட்டங்களில்தான் அதிகம் பெய்கிறது.
அதனால் கணிசமான அளவு மழை நீர் கடலில் கலந்துவிடுகிறது.
கோடைகால மழையோ பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு ஆவியாகி விடுகிறது.
 ஆக மாநிலம் முழுக்கப் பரவலாகக் கிடைப்பது வடகிழக்குப் பருவமழைதான்.


இந்தியாவை பொருத்தவரை 1951-ல் தனி நபருக்கான நீர் இருப்பு ஆண்டுக்கு 5 ஆயிரத்து 200 க.மீ. ஆக இருந்தது.
 2010-ல் இது ஆயிரத்து 588 க.மீ ஆக குறைந்தது.
 ஆனால் தமிழகத்தில் வெறும் 700க.மீ மட்டுமே உள்ளது. ஆகவேதான் தமிழகம் ஒரு நீர் பற்றாக்குறை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை இன்னும் மோசமாவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறது புள்ளிவிவரம்.
அதனைத் தவிர்ப்பதற்கு நீர்நிலைகளைப் பராமரித்து நீரினைத் தேக்குதல் அவசியமாகும்.
ஆனால் நீர் மேலாண்மையில் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதுதான் கேள்வி.
 நீர்மேலாண்மை என்கிறபோது நீராதாரங்களை உருவாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது, நீரைச் சேமிப்பது, உபயோகமான முறையில் பயன்படுத்துவது குறித்துத்திட்டமிடுவது, நீரை விநியோகம் செய்வது, நீர் விரயத்தைக் குறைப்பது ஆகிய கொள்கைகளைக் கொண்டதாகும்.


நீர் மேலாண்மையில் பண்டைத் தமிழர்கள் நமக்கு முன்னோடிகளாக உள்ளனர்.
ஏரிகளுக்கு மதகு அமைப்பதை 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்தவர்கள் தமிழர்கள்தான். ஐரோப்பாவில் 19-ம் நூற்றாண்டில்தான் மதகுகள் அமைக்கப்பட்டன என்கிறார் ஆய்வறிஞர் பார்க்கர். ஏரிக்கரைகளை ஈரமான களிமண் கலவையில் அமைப்பது அவசியம் என்ற ஆங்கிலேய பொறியாளர் களின் கருத்துக்கு மாறாக பண்டைய தமிழர்கள் எல்லா விதமான விளைநிலங்களின் மண் எடுத்து பல்லாயிரக்கணக்கான ஏரிகளை மண் கரை கொண்டு கட்டியுள்ளனர் என்கிறார் நீரியல் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்.

கி.பி. 18-ம் நூற்றாண்டு வரை ‘ஊரார்’ என்ற கிராம சபைதான் ஏரியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தியது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊர் தலைவர் இருந்தார்.
 பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த இவரின் மேற்பார்வையில் பல்வேறு பணியாளர்கள் கிராமந்தோறும் நீர் நிலை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இவர் களுக்கான கூலியை விவசாயிகள் கொடுத்து வந்தனர்.
 மேலும் மடைதிறப்பு, மடை அடைப்பு, வெள்ளக்காலங்களில் நீர்வரத்தைக் கணித்து கரையினை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை எடுத்தல், கரையை கண்காணித்தல் போன்ற பணிகளில் கரைக்காவலர்கள் ஈடுபட்டனர்.
இவர்கள் நீர்நிலைகளைக் காத்து வந்தனர்.
 இப்பணிகளுக்காக அவர்களுக்கு நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன.  ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் அன்றைக்கு அனைத்து மக்களின் தேவைகளையும் நிறைவு செய்வதாக இருந்தது.
நீர்நிலைகளைப் பராமரிப்பதிலும், நிர்வகிப்பதிலும், சலவைத் தொழிலாளர் மீன் பிடிப்போர்  மற்றும் கால்நடை வளர்ப்போர் என நீரைப் பயன்படுத்து வோர் அனைவருக்கும் உரிமை இருந்தது.

சலவைத் தொழிலாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை எனவே விவசாயத்திற்கு வழங்கும்போதே குறிப்பிட்ட அளவு தண்ணீரை மீதம் வைக்கும் வழக்கமும் அப்போது இருந்தது.

ஜீரோவான நீரியல் நாகரிகம்

நீர் எதற்கு பயன்படுகிறது என்பதனை மையப்படுத்தி நீர் நிலைகளுக்குப் பெயர் சூட்டப்பட்டன. மக்கள் பருகும் நீர் நிலை ஊருணி என்றழைக்கப்பட்டது.
பூமிக்கடியிலிருந்து நீர் ஊறி வெளிவருவது ஊற்று, வேளாண்மைக்கானது பாசன நீர் என 50-க்கும் மேற்பட்ட பெயர்களில் நீராதாரங்கள் அழைக்கப்பட்டன.
விட்போகல் என்ற ஜெர்மானிய ஆய்வாளர் நாகரீகத்தின் வளர்ச்சிப்படிகளை மூன்று காலகட்டங்களில் காணலாம் என்கிறார்.
மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்த முதலாவது காலம். இது மழை நாகரீகம் எனப்பட்டது.
 மழை நீரை குளங்களில் தேக்கி வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தியது இரண்டாவது கட்டம். இது நீர்நிலை நாகரீகம். வளர்ச்சியடைந்த மூன்றாவது நிலையில் பாசனக் கட்டுமானங்கள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் வேளாண்மை நடைபெற்ற காலம், அது நீரியல் நாகரீக காலம் என்று அழைக்கப்பட்டது.

மூன்றாவது நிலையான நீரியல் நாகரீகத்தில் நாம் உலகிற்கு முன்னோடிகள் என மையப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைக்கு நாம் அதில் ஜீரோவாக உள்ளோம்.
 தமிழகத்துக்குக் கிடைத்த நூற்றாண்டுகால மழையளவைப் பார்த்தோமேயானால், மழைப் பொழிவில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. அப்படியென்றால் ஏன் நீர் தட்டுப்பாடு என்ற கேள்வி எழலாம்.
இதற்கு மக்கள் தொகை பெருக்கம்தான் என்று அரசு சொல்லும் காரணம் ஏற்கத்தக்கதல்ல.
 பெய்த மழையை தேக்கி வைக்கும் நீர்நிலைகளைக் காவுகொடுத்ததுதான் முக்கிய காரணம் என்பதை உறுதியாக சொல்லமுடியும். 1947-ல் தமிழகத்தில் 50ஆயிரம் நீர்நிலைகள் இருந்தன.

1970-80 காலகட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விவரப்படி தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 நீர்நிலைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இப்போதும் இந்தக் கணக்கைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஆக்கிரமிப்புகளால் பல ஏரி, குளங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் பேருந்து நிலையங்களாகவும், நீதி மன்றங்களாக வும், கார்ப்பரேட் சொகுசு மால்களாகவும், குடியிருப்புகளாக வும் மாறிவிட்டன.

 இதில் பெரும்பாலான குளங்கள் அரசுத்துறை சம்மந்தப்பட்ட அமைப்புகளால் ஆக்ரமிப்பு  செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற நீர்வள நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது


சர்வதேச மையத்தின் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் உள்ள 39 ஆயிரத்து 202 கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் 10 சதவீதம் அழிந்து போய்விட்டன என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை  மையத்தின் தகவல்.

ஆனால் இதற்கும் மேல் காணாமல் போயிருக்கும் என்கிறார்கள் தமிழக நீரியல் வல்லுநர்கள்.
1906-ம் ஆண்டு கணக்கீட்டின் படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி குளம், குட்டை,  தாங்கல் உட்பட) இருந்தன.
 1947-ல் சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மொத்தம் 124 பெரிய ஏரிகள் இருந்தன.
 1980-ம் ஆண்டு சென்னையில் சிறிதும் பெரிதுமாக 500-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி அது 43-ஆகச் சுருங்கி விட்டன.
96 சதவீதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை.
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 7.2 கோடி. இதில் 3.49 கோடி நகர்புறங்களில் வசிக்கிறார்கள்.

தமிழகத்தில் 84 நீர் தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுகளும் சுமார் 40 ஆயிரம் கண்மாய், குளங்களும் 18 லட்சம் கிணறுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
 தமிழகத்தில் பாசனத்தை பொறுத்தவரையில் கிணறுகளும், ஏரிகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
ஏரிகளிலும், குளங்களிலும் நீரை சேமிப்பதே பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை தடுப்பதற்கு உதவும் சிறந்த வழி. கோடைக்காலத்தில் வறட்சியை எதிர்கொள் வதற்கும் வாய்ப்பான வழி இது.
அதுமட்டுமல்ல, குடிநீர் உள்ளிட்ட நீர் தேவையை உள்ளூரிலேயே தீர்த்துக்கொள் வதற்கும் இது தான் சிறந்த வழி. மழைநீர்தான் நிலத்தடி நீராகமாறுகிறது.
 நீர்நிலைகள் அழிவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவது மட்டுமின்றி நிலத்தடி நீர் குடிப்பதற்கு லாயக்கற்றதாகவும் மாறுகிறது.
 தமிழகம் முழுவதிலுமுள்ள குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டால் பாசனங்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயம், குடிநீர். கால்நடைகளுக்கான குடிநீர், வீட்டுத் தேவைக்கான நீர் போன்றவை தடையின்றி கிடைப்பதோடு நிலத்தடி நீரும் அதிகரிக்கும்.

அரசு  செய்யுமா?

கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் வரத்துக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பாராமல் அகற்றிட வேண்டும்.
 நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டும்.
  நாகராஜன்.

கண்மாய்களின் சங்கிலித் தொடர் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அதாவது ஆறுகளில்  நீர் பெருகி ஓடும் காலங்களில் அந்த நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுக்கவும் அந்த உபரிநீரைச் சேமிக்கவும் பல்வேறு விதமான நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன.
நகர்ப்பகுதிகளில் இப்போது ஆக்கிரமிப்பில் இருக்கக்கூடிய கண்மாய்களை மீட்டெடுத்து அவற்றை மீண்டும் மழைநீர் வடிகாலாக மாற்ற வேண்டும்.
 நீர் நிலைகளை ஆக்கிரமிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளைப் பராமரிக்க வும் பாதுகாப்பதற்கும் தனியாக ஒரு தன்னாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.
நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் அதிகாரம் அந்த அமைப்புக்கு இருக்க வேண்டும்.
அந்த அமைப்பில் நீரியல் வல்லுநர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் சங்க அமைப்புகள் சுற்றுச்சூழலியலாளர்களும் இடம் பெறவேண்டும்.

அரசால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளில் எந்தவிதத்திலும் நீர்நிலைகளோ, விளைநிலங்களோ இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும், அதனைக் கண்காணிப்பதும் அவசியம்.
தண்ணீர் சேமிப்பு மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதில் தொண்டு நிறுவனங்கள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை இணைத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
  நாகராஜன்.
கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 உலக அங்கிகாரம்.
நூற்றாண்டைக் கடந்து தரமான வானிலை தரவுகளை வழங்கி சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது.

"இந்தியாவில் முதல்முறையாக 1792-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் புயல், கனமழை, குளிர் மற்றும் வெப்பநிலை பல்வேறு முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது.

இந்த மையம் சுமார் 140 ஆண்டுகளுக்கும் மேலாக, வானிலை விவரங்களை ஒரு நாள்கூட தவறாது பதிவு செய்து வருகிறது.

 இதன் நூற்றாண்டை கடந்த வானிலை சேவையை உலக வானிலை ஆய்வு நிறுவனம் அங்கீகரித்து, சான்றளித்து, கௌரவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த 18-ஆவது உலக வானிலை காங்கிரஸ் மாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பேரென்ன? "
"ஜெயமோகன்."!
 ஜெயமோகன்ங்குற பேருக்கெல்லாம் மாவு பாக்கெட் தர்ரதில்லை...

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?