செவ்வாய், 25 ஜூன், 2019

விரால் ஆச்சார்யா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் முற்றியதன் காரணமாகவே, விரால் ஆச்சார்யா ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவே உண்மை என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையில், மத்திய பாஜக அரசுதலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை முதன்முதலில் மக்கள் முன்பு வைத்தவர் விரால் ஆச்சார்யா ஆவார்.

“மத்தியில் ஆளும் மோடி அரசானது,பொருளாதாரத்தில் ‘டி-20’ கிரிக்கெட் ஆடமுயற்சிப்பதாகவும், இது நீண்டகாலம் நிலைக்காது” என்றும் கடந்த 2018 அக்டோபரிலேயே பொதுநிகழ்ச்சி ஒன்றில் விரால் ஆச்சார்யா பேசியிருந்தார்.
“சர்வதேச முதலீட்டாளர்களின் (பெருமுதலாளிகளின்) அன்பைப் பெறுவதற்காக, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை, மத்திய அரசு காவுகொடுக்க முயற்சிக்கிறது; கடன் வழங்குவதில் சிலவங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர்.
விரால் ஆச்சார்யா

நாட்டின் பரிவர்த்தனை அமைப்புக்கு புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதன் வாயிலாக ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகாரங்களை குறைக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித் தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும்” என்று அவர் கூறியிருந்தார்.

“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள், நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு ஆளாகி, பொருளாதாரத் தீயை மூட்டி, ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை குறைத்ததற்காக ஒரு
நாள் வருத்தப்படும். சட்டத்தை மீறிசெயல்படும் செயல்களுக்கு மத்திய அரசு உரிய விலை கொடுக்க வேண்டியதுஇருக்கும்” என்றும் விரால் ஆச்சார்யா பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதி ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கோடியைக் கேட்டு, மத்திய அரசு நிர்ப்பந்தம் அளித்துவந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே விரால் ஆச்சார்யா
இவ்வாறு கூறியிருந்தார்.
 அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாமல் இருந்தபோது, அவருக்குப் பதில்விரால் ஆச்சார்யா துணிந்து உண்மைகளை போட்டுடைத்தார்.
அப்போதே விரால் ஆச்சார்யாவுக்கு, மத்திய பாஜக அரசின் நெருக் கடி ஆரம்பித்து விட்டது.

“ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலும், அவரது சக அதிகாரிகளும் மத்தியஅரசு கூறுவதைத்தான் கேட்க வேண்டும்;இல்லாவிட்டால் தாராளமாக வேலையை விட்டுச் செல்லலாம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான அஸ்வினி மகாஜன் தெரிவித்தார்.
“உர்ஜித் படேல், தனக்கு கீழுள்ள அதி
காரிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்” என்றும் அவர் மிரட்டல் விடுத்தார்.
அதேகாலகட்டத்தில், ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ்-காரர்கள், ரிசர்வ் வங்கியின் இயக்கு
நர்களாக மத்திய அரசால் நியமிக்கப் பட்டனர்.

 உர்ஜித் படேல், விரால் ஆச் சார்யா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதற்காக இந்த நியமனங்கள் செய்யப்பட்டன.

 மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், கடந்த 2018 டிசம்பர் 10-ஆம் தேதி, தனதுபதவிக்காலம் முடிவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்தொடர்ச்சியாகவே, உர்ஜித்படேல் ராஜினாமா செய்து, சரியாக 6 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில்,ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரானவிரால் ஆச்சார்யாவும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.


மத்தியில் கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பதவிநீட்டிப்பு தரப்படாமல் கடந்த 2016 செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியேற் றப்பட்டார். ரகுராம் ராஜனுக்குப் பதில் நியமிக்கப்பட்ட உர்ஜித் படேல் 2018 டிசம்பரில் அவராகவே பதவியைராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறிய மறுநாளே,பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சுர்ஜித் பல்லா, ஓட்டம் பிடித்தார்.
முன்னதாக 2017 ஆகஸ்டில், நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியாவும், 2018 ஜூனில், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தஅரவிந்த் சுப்பிரமணியனும் பதவியைராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர்.

 இந்த வரிசையிலேயே தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜெய் கொலைராம் ?
பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், முஸ்லிம் இளைஞர் ஒருவர்,இந்துத்துவா வெறிக்கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்துக் கடவுள்களைப் புகழ்ந்து,‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’ என்று கூறுமாறு மிரட்டி, விடிய விடிய அடித்துத் துன்புறுத்தியதில், முஸ்லிம் இளைஞர் இறந்து போயுள்ளார்.

ஜாம்ஷெட்பூர் அருகே சீரேய் கேலா-கர்சாவன் பகுதியைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் தப்ரிஸ் (22).
இந்தமுஸ்லிம் இளைஞனை, வெறிக் கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ கூறுமாறு மிரட்டியுள்ளது.

 தப்ரிஸ் அவர்களின் மிரட்டலுக்கு இணங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றதாக தப்ரிஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி, அருகிலிருந்த மின்கம்பத்தில் கட்டிப் போட்டு, விடிய விடிய சுமார் 7 மணிநேரம் அடித்துத் துன்புறுத்தி கொடூரசித்ரவதை செய்துள்ளது.
இதை பலரும் வீடியோ எடுத்து,சமூக ஊடகங்களில் வெளியிடவே, தகவலறிந்த போலீசார், தப்ரிஸை அந்த கும்பலிடம் இருந்து புதன் கிழமை காலையில் மீட்டுள்ளனர்.
அப்போது, இளைஞன் தப்ரிஸ் சுயநினைவில்லாமல் இருந்துள்ளார்.

அவரை ஜாம்ஷெட்பூரில் உள்ள சதார் மருத்துவமனையிலும், பின்னர்டாடா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, தப்ரிஸ் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் ஜாம்ஷெட்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்ரிஸின் சாவுக்கு காரணமான, இந்துத்துவா வெறிக்கும்பல் மீது போலீசார் ‘ஐ.பி.சி. 302’ மற்றும் ‘295ஏ’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பணம் என்றால் வரும்  என்றால் மட்டுமே அரசு இயங்கும்.?
மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் அவர்களின் குடிநீர் தேவையை தனியார் பள்ளி நிர்வாகங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அமைச்சர் கூறுவது முற்றிலும் சரியே. ஆனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்க ளுக்குத் தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவது ஊருக்குத்தான் உபதேசம் என்கிற கதைபோல உள்ளது.
 தனியார் பள்ளிகளுக்கு சொல்லப்படும் அறிவுரை அரசு பள்ளிகளுக்கு பொருந்தாதா என்ன?
மே மாத இறுதியிலேயே பள்ளிக் கூடங்கள் திறக்கும் தேதி பற்றிய குழப்பநிலை உருவானது.
 கடும் வெயில் சூழல் நிலவுவதால் ஜூன் மாதம் 3ஆம் தேதி திறக்கவிருந்த பள்ளிக் கூடங்கள் ஜூன் 10ஆம் தேதியன்று திறக்கப் படும் என்று தகவல் வெளியானது.
மீணவர்கள் என்பதை மாணவர்கள் என படிக்கவும்.


ஆனால் அமைச்சர் செங்கோட்டையனோ இல்லை, இல்லை.
3ஆம் தேதியே பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என்றும் குடிநீர் பற்றாக் குறை ஏதுமில்லை என்றும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவசர அவசர மாக மறுத்தார். 
அத்துடன் பள்ளிகளின் அடிப் படை வசதிகள் கட்டாயம் பூர்த்தி செய்யப்படும் என்றும் ஓங்கியடித்தார். 
ஆனால் நிலைமை இன்னும் சீரானபாடில்லை. அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் 10 அன்று திறக்கப்படும் என்று காலநிலை கருதி அறிவிக்கப்பட்டது. 

ஆனால் செங்கோட்டையனோ பிடிவாதமாக ஜூன் 3 அன்றே பள்ளிகளை திறக்க உத்தர விட்டார். 
அதன் விளைவையே இன்று மாண வர்கள் அனுபவித்து வருகின்றனர்.
 வழக்கமாக பள்ளிக்கூடங்கள் துவங்கிய தும் புத்தகங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு விடும். 
ஆனால் இந்த முறை 2,3,4,5 வகுப்பு மாண வர்களுக்கு இன்னும் புதிய பாடத்திட்ட புத்த கங்கள் வழங்கப்படவில்லை. 
இன்னும் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் ஏற்கெனவே பாடப்புத்த கங்களை தயார்ப்படுத்துவதில் அக்கறை காட்டா ததும் தீவிர தயாரிப்புப் பணிகளில் ஈடுபடாததுமே இப்போது வரை புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் இருக்கக் காரணம்.

  இதுதவிர கடந்த 2017- 18 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அதற்கே இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்கிறார் அமைச்சர்.
அப்படி யானால், 2018-19ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கொடுப்பார்கள்?
தமிழக ஆட்சியா ளர்கள் தங்களின் பதவியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள காட்டிய அக்கறையில் சிறிதும் பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்து வதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் போனதில் ஆச்சரியமில்லை.

 தமிழக அமைச்சர்கள் நிறைய பேசுகிறார்கள். ஆனால் மிக,மிகக் குறையாகவே செயல்படுகிறார்கள். பணம் வரும் பணிகளை மட்டுமே உடனுக்குடன் செய்கிறார்கள்.மக்கள் நலன் பணியென்றால் திமுக செய்யலாமே.ஏன் முன்பு செய்யவில்லை என்றுதான் சொல்லி குறட்டை விடுகிறார்கள்.அல்லது டெல்லி போய் விடுகிறார்கள்.
அதனால் பள்ளி வளாகங்கள் கவலையில் இருப்பதுதான் இன்றைய சோகம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தோழர் அசோக் .
எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற அச்சத்துடனும், கனத்த இதயத்துடனும் அசோக் வீட்டுக்கு புறப்பட்டோம் நானும் கற்பகமும் ராஜகுருவும். வீட்டு வேலியில் பறந்து கொண்டிருந்த செங்கொடியே அவனது வீட்டின் அடையாளம்.
 எங்களது வாகன சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து அசோக் அம்மாவின் அழுகுரல் பீரிட்டது, நிலை குலைந்து போனோம். அருகில் அமர்ந்து தோளில் தலை சாய்த்து அந்த அழுகுரல் உச்சத்தை அடைந்தது. தாமிரபரணியாக கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆறுதல் பகிர எங்களிடமும் அத்தருணத்தில் கண்ணீர் மட்டுமே இருந்தது. அம்மாவின் அழுகையை நிறுத்த முயற்சித்தோம். முடியவில்லை. ஆனால் அவரே ஏதோ முடிவெடுத்தவராக சட்டென்று அழுகையை நிறுத்தி கம்பீரமானார். வார்த்தைகள் அம்பென தெறித்தன. எங்கள் கிராமத்தில் இதுவரை 6 தலித்துக்களை சாதி வெறியர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இந்த பாழாய் போன சாதி வெறிக்கு என் மகன் அசோக்கே கடைசி பலியாக இருக்கட்டும்.
 அதற்காக கட்சி எத்தனை போராட்டம் நடத்தினாலும் நானும் கலந்து கொள்கிறேன்.

 துயரத்தைக் கடந்து சாதி வெறிக்கெதிராக அவரது கோபம் கொப்பளித்தது.
ஏதோ போராட்டத்திற்குப் போகிறான், கட்சி கொடி ஏற்றுகிறான், மாநாட்டுக்குப் போகிறான் என நான் நினைத்திருந்தேன்.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் என் மகன் இவ்வளவு பெரிய தலைவனாக இருந்திருக்கிறான் என்பதை அவன் இறந்த பின் தெரிந்து கொண்ட அம்மாவாயிருந்திருக்கிறேனே...
என் மகன் வயதில் எத்தனை பிள்ளைங்க, எத்தனை தலைவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். என் மகனுக்காக இத்தனை பேரா?
 மீளா துயரிலும் முகத்தில் பெருமிதம் தோன்றி மறைந்தது.

புத்தகம், புத்தகம், புத்தகம். புத்தகமே அவன் உயிர்மூச்சு. வீட்டில் புத்தகத்துடன் தான் அவனை பார்க்க  முடியும்.
கம்பெனியில் வேலை முடிந்து கட்சி ஆபீஸ் போய், போராட்டம் ஒன்ன முடிச்சு எவ்வளவு சோர்வா வந்தாலும் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்காமல் தூங்க மாட்டான்.
 காலேஜ் படிக்கும் போது கூட கண் முழித்து படிக்கவில்லையே மகனே என்று கேட்டால், கல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு என்பான், என சொல்லிக் கொண்டே அவன் படித்து முடித்த புத்தகங்களை கட்டுக்கட்டாக, அள்ளி வந்து எங்கள் கண் முன்னால்  குவித்தார்.

  அவன் சம்பளத்தின் ஒரு பகுதியை புத்தகம் வாங்கவே செலவு செய்வான்.
ஏதோ அம்பேத்கர் புத்தகமாமே. 37 இருக்காம். அதில கொஞ்சம் தான் வாங்கீருக்கேன். மிச்சமெல்லாம் வாங்கனும்மா. கொஞ்சம் என் சம்பளத்தை எதிர்பார்க்காம சமாளிச்சுக்கோம்மா என்றான், என்றவர் புத்தக அலமாரியை காட்டினார்.
 டாக்டர் அம்பேத்கரின் நூல் தொகுப்பு ஆறு புத்தகங்கள் அசோக்கின் அலமாரியை அலங்கரித்தன.
பேச்சினூடே
"மகனே அசோக்கு! இந்த புத்தகங்களையெல்லாம் உன் கண்கள் இனி எப்போது படிக்கும்? என்னைப் போலவே இந்த புத்தகங்களும் உன்னைத் தேடுமடா" என கதறினார்.

அசோக் உடல் அடக்கத்திற்கு பெட்டிக்குள் வைக்கப்பட்ட போது அவளது தம்பி ஓடிச் சென்று அம்பேத்கர் தொகுப்பு புத்தகம் ஒன்றை எடுத்து வந்து பெட்டி க்குள் அசோக்கில் தலைமாட்டில் வைத்ததை தோழர் கே.ஜி.பாஸ்கரன் நினைவு கூர்ந்தார்.

 என் மகன் என்னிடம் வாஞ்சையாய் சமையல் கற்றுக் கொண்டான்.
நானும் கற்றுக் கொடுத்தேன்.
எங்கு மாநாடு, பேரணி, பொதுக் கூட்டம் என்றாலும் அவனே 20 பேருக்கு புளிச்சாதம் செய்வான்.
 வேனில் ஏற்றுவான். பறந்து விடுவான்.
இனி என் மகன் எந்த மாநாட்டுக்கு செல்லப் போறான்?
 மகனின் வாழ்க்கை குறித்து எத்தனை பெருமிதம் அசோக்கின் அம்மா ஆவுடையம்மாவுக்கு.

 இன்று ஆவுடையம்மாவுக்கு சாதி, மதம், இனம், மொழி, புவியியல் எல்லை கடந்து எத்தனை, எத்தனை பிள்ளைகள். தோழமை உறவுகள்.
 மீண்டும் வருகிறோம் என்றவாறு தற்காலிகமாக விடைபெற்று புறப்பட்டோம்.

கட்சியின் பிள்ளையை இழந்த நமக்கு யார் ஆறுதல் தெரிவிப்பது?
எல்லையற்ற கலக்கத்துடன் வீதியில் கால் வைத்தோம். கால்கள் தடுமாறின.
 மண்ணின் மீதும், மக்களின் மீதும் அளவற்ற பிரியம் கொண்டு இளம் வயதிலேயே, வீரச்சமரில் உயிர்நீத்த சே, பகத்சிங்... என அத்தனை ஆதர்சங்களும் கண்முன் வந்து எங்கள் தோள்களைத் தொட்டு, கலங்காதீர் தோழர்களே!

இதோ நாங்கள் காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எங்களோடு தான் இருக்கிறான் அசோக். உங்கள் செயல்களில் இனி அவனும் வாழ்ந்து கொண்டேயிருப்பான் என்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------