லாபமா ?நட்டமா?

2016-17ல் லாபத்தில் இயங்கிய தமிழ்நாடு மின்சார வாரியம் 2017-18ஆம்  ஆண்டில் நட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டதாம்.

ரூ.7760 கோடி நட்டமாம்.
அது இந்த நிதியாண்டு முடிவதற்குள்  ரூ. 13,350 கோடியாக உயர்ந்து இதுவரை இல்லாத உச்சகட்ட நட்டமாம்.

மின் வாரியத்தின் நட்டத்தை ஈடுசெய்ய 30 சதவீத அளவிற்கு மின் கட்டணத்தை
உயர்த்த உள்ளார்களாம்.
மின்சாரத்தின் மூலம் மொத்த வருமானம் தற்போது ரூ.46,800 கோடியாம்.
அதை மின் கட்டண உயர்வின் மூலமாக ரூ.60,345 கோடியாக உயர்த்த உள்ளார்களாம்.
உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வின் மூலமாக ரூ.20,000 கோடியை  கூடுதல் வருவாயாக மாற்ற உள்ளார்களாம்.

 அதாவது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தற்போது ரூ.6.60 மின் கட்டணமாக செலுத்துபவர்கள் கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.8.40 செலுத்த வேண்டி வருமாம்.

உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வுப்படி ரூ.20,000 கோடி அளவிற்கு பொருளாதார சுமையை சாதாரண மக்கள் மீது சுமத்த அ.தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது.

 மின் கட்டண உயர்வுக்கு காரணம் 2018-19ம் ஆண்டுகளில் மின் வாரியத்தில் வருவாய் இடைவெளி ரூ.7,760 கோடி என்றும், அது இந்த ஆண்டு முடிவதற்குள் ரூ.13,350 கோடியாக உயரும் என்றும் அரசுத் தரப்பில் கூறுகிறார்கள்.
இந்த வாதமே உண்மைக்கு புறம்பானது.

 கடந்தாண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக  வரவுசெலவு அறிக்கையை அளிக்கின்ற போது மின் வாரியம்
நட்டத்திலிருந்து மீண்டுவிட்டது என்றும் ரூ.4000 கோடி இலாபம் அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்கள். 2018ம் ஆண்டில் ரூ.4000 கோடி லாபம் வந்தது என்று சொல்லிவிட்டு,
2019ம் ஆண்டில் ரூ.7760 கோடி ரூபாய் நட்டம்; அது இந்த ஆண்டு முடிவதற்குள் ரூ.13,350 கோடியாக உயரும் என்றும் அறிக்கை அளித்திருப்பது எப்படி?

2018ம் ஆண்டு வாரியம் அறிவித்த நான்கு கோடி ரூபாய் இலாபத்தை மேலும் அதிகமாக்க வாய்ப்புகள் இருந்த போதும் மின் வாரியத்தின் அசட்டைத் தனமான நடவடிக்கையால் அதை அடையாத நிலை ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

தமிழக மின்சார வாரியத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு லட்சம் முதல் எட்டு லட்சம் வரை மின் நுகர்வோர்கள் அதிகரித்து உள்ளதாக வாரியத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 ஆனால் மின் வாரியத்தில் 2016-17ம் ஆண்டுகளில் மின்சார விற்பனை மூலமாக கிடைத்த தொகை ரூ.43,964 கோடி என்றும்  2017-18ம் ஆண்டுகளில் மின்சார விற்பனை மூலம் கிடைத்த தொகை ரூ.43,687 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 2016-17ம் ஆண்டுக்கும் 2017-18ம் ஆண்டுக்கும் மின்சார விற்பனை மூலமாக கிடைக்கும் தொகை கூடுவதற்கு பதிலாக ரூ.277 கோடி குறைந்துள்ளதாக குறிப்பிடுவது விந்தையாக உள்ளது.

விந்தை மட்டுமல்ல, மின்வாரிய நிர்வாகம் எதை நோக்கிச் செல்கிறது என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்புக்கு கிடைத்த தகவல், மின்வாரியத்தின் வருமானத்தை உத்தரவாதப்படுத்தக்கூடிய உயர்அழுத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கையான 10,000த்தில் சரிபாதி மின் நுகர்வோர்கள் மின் வாரியத்திலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பதிலாக பொதுத்துறை மின் விநியோக கட்டமைப்பை பயன்படுத்தி தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெறுவதற்காக சென்றுவிட்டார்கள்;

அதனால் மின் வாரியத்திற்கு வர வேண்டிய வருமானத்தில் ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய நிர்வாகமே தெரிவித்தது என்பதுதான்.
 இந்நிலை நீடித்தால் மின் வாரியம் வெகுவிரைவில் சீரழிவை நோக்கி சென்றுவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மின்சார விற்பனை மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.2017-18 ஆம் ஆண்டுகளில் ரூ. 277 கோடி குறைகின்ற அதே நேரத்தில் மின்சார கொள் முதலுக்காக நாம் செலவு செய்த தொகை கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது.
அதாவது 2016-17ம் ஆண்டுகளில் மின்சார கொள்முதலுக்காக ரூ.37,385 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 2017-18ம் ஆண்டுகளில் மின்சார கொள்முதலுக்காக ரூ.41,072 கோடி ரூபாய் செலவு. ஒரே ஆண்டில் ரூ.3,687 கோடி கூடுதலாக செலவு செய்துள்ளோம்.

மேலே கூறிய புள்ளி விவரங்களை பார்க்கின்ற போது மின்சார விற்பனை மூலம் வருவாய் என்பது குறைந்தும் மின்சார கொள்முதலுக்காக அதிக தொகை செலவு செய்ததனால்தான் இந்த வருவாய்க்கும் செலவுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதும் கண்கூடாக தெரிய வருகிறது.
தமிழக மின்வாரிய வரவு செலவின் இந்த இடைவெளியைப் போக்க, தமிழக மின் நுகர்வோர்களின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு புதிய மின் நிலையங்களை அமைக்க திட்டமிடாத  மற்றும் திட்டமிட்ட மின் நிலையங்களையும் குறிப்பிட்டகாலத்தில் முடித்து மின் உற்பத்தியைத் துவங்கிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்த காரணத்தினால் தான் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடைவெளியும் இடைவெளியை எதிர்கொள்ள கூடுதலான விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதனால் கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது.
 இதை மாற்றிட போர்க்கால நடவடிக்கையை தமிழக அரசும் மின்வாரியமும் எடுத்தால் தான் தமிழக மின் வாரியத்தை காப்பாற்ற முடியும்.

மேலும், நட்டத்தை ஏற்படுத்தக் கூடிய மின்சார கொள்முதல் கொள்கையை மாற்றி அமைத்திடுவதற்கான நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.
 அதாவது காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்யும் போது எந்த மாநிலத்திலும் பின்பற்றாத ‘பேக்கிங் சிஸ்டத்தை’ பின்பற்றுவதனால் நிதி இழப்பீடு ஏற்படுகின்றது.
அதாவது காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்யும் போது கொள்முதலுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை அடிப்படையில் வழங்காமல் பல மாதங்கள் கழித்துமின்சார விற்பனை கட்டணம் உயர்ந்திருக்கின்ற போது காற்றாலை நிறுவனங்களின் மின்சாரத்தை பெறுவதனால் பலகோடி ரூபாய் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறதுஎன்று தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.

காற்றாலை மின்சார கொள்முதலுக்கு பேக்கிங் சிஸ்டத்தை பின்பற்றுவதனால் ஆண்டுக்கு ரூ.800 கோடி நிதி இழப்பீடு ஏற்படுவதாக தெரியவருகிறது.
காற்றாலை மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மின் கொள்முதல் விலை ரூ.3.39 பைசாவாக இருக்கின்ற போது மின் வாரியம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.60 ஆக நிர்ணயிக்கப்பட்டமின்சாரத்தை வழங்குகின்ற அவலநிலை உள்ளது.
புதிய மின் நிலையங்களை அமைக்கின்ற போது அதற்கு தகுதி உடைய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்காமல், தகுதியற்றவர்களுக்கு சுயஆதாயத்தை மனதில் கொண்டு ஒப்பந்தம் அளிப்பதனால் மின் நிலையத்தின் திட்டமதிப்பை விட பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கின்ற ஊதாரித்தனமான நிர்வாக நடவடிக்கையினால் பெரும் அளவுக்கு நிதி இழப்பீடு ஏற்படுகிறது.
 அதாவது ஒரு மின் நிலையத்தை அமைக்க ரூ.4000 கோடிக்கு ஒப்புதல் அளித்துவிட்டு அதே மின் நிலையத்தை அமைக்க ரூ.7100 கோடி மறு ஒப்புதல் அளிப்பதன் மூலமாக மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நட்டத்தை உருவாக்கியுள்ளது.

இவை போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக மின்வாரியத்தின் நட்டத்திற்கு ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்கப்பட்டதால்தான் இந்த வருவாய் இடைவெளி என்ற வாதத்தை வைப்பதானது ஒரு சிறுபிள்ளைத்தனமானது.
மனிதசக்தி இல்லாமல் மின்வாரியம் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியை கண்டு இருக்க முடியாது என்பதை உணராத நிலையில் மனித சக்திக்கு வழங்கும் தொகையில்தான் நட்டம் ஏற்பட்டது; வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல.
 மின்வாரிய பணிகளுக்கு மனித சக்தியை ஈடுபடுத்துவதும், அதற்காகும் செலவு என்பதும் ஏற்கனவே திட்ட ஒதுக்கீட்டில் இணைக்கப்பட்ட ஒன்று என்பதை மூடி மறைப்பது நியாயம் இல்லை.

வருவாய் இடைவெளிக்கு மின்வாரியம் கூறும் அடுத்த காரணம்,
 அதிகாரிகளுக்கு, பொறியாளர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதுதான் என்று திசை திருப்பப் பார்ப்பதும் சரியல்ல.
 மின்வாரிய ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ, பொறியாளர்களுக்கோ தனியான ஓய்வூதிய திட்டம் எதுவும் கிடையாது. மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கின்ற வகையில் தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வழங்குகின்ற ஓய்வூதியத் தினால் தான் தமிழக அரசின் கடன் தொகை அதிகரிக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான் மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியத்தினால் தான் நட்டம் என்று சொல்ல முடியாது.
வருவாய் இடைவெளிக்கு கூறும் காரணங்களில் ஒன்று, மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் விலையை உயர்த்திவிட்டார்கள்.
உள்நாட்டு நிலக்கரி விலை உயர்ந்துவிட்டது என்பதாகும். இதுவும் சொத்தையான வாதமே.
 தமிழக அரசு தனக்கு மத்திய அரசில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி விலை உயர்வின்றி மின்சாரத்தையும், நிலக்கரியையும்,  பெறுவதற்கு யார் தடுத்தார்கள்?

 எனவே, மின்வாரியத்திற்கு  ஏற்படாத நட்டத்தை, நட்டம் என்று சொல்லி அதை ஈடு
செய்ய பல ஆயிரம் கோடி ரூபாய் மின் கட்டணமாக உயர்த்த உத்தேசித்துள்ளதை கைவிட வேண்டும்.

சுப்பிரமணியன்
 தலைவர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)


-----------------------------------------------------------------------------------------------------------------------
முகிலன் .?
துப்பு கிடைத்துள்ளதாம்.!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்த வீடியோவை சமீபத்தில் முகிலன் வெளியிட்டிருந்தார்.

பின்னர், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் முகிலனை காணவில்லை. 

இதையடுத்து, முகிலனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, சிபிசிஐடி தரப்பில் சீலிடபட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் சிபிசிஐடி விசாரணை அதிகாரியை அழைத்த நீதிபதிகள் விசாரணை தொடர்பான விபரங்களை கேட்டனர்.
 இதற்கு விசாரணை அதிகாரி விளக்கம் அளித்தார்.

அப்போது முகிலன் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் மூன்று மாதங்களுக்கு மேல் இதுவரை எந்த ஒரு தகவலையும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனவும், தற்போது கூட சீலிடபட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் விசாரணை சரியான பாதையில் உள்ளதாகவும், விசாரணையில் நல்ல முன்னேற்றம் மட்டும், முக்கிய தகவல் கிடைத்துள்ளது. 
தற்போதை நிலையில் அது குறித்து வெளியிட்டால் அது விசாரணை பாதிப்பை ஏற்படுத்தும் எனவே விசாரணை அதிகாரிகளுக்கு கூடுதல் கால அளிக்கலாம் என தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கின் விசாரணை மூன்று வார காலத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் செயல் திறனை குறைக்கும் இணையம்.

அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்துபவர்களின்  நினைவாற்றல் அதிக அளவு பாதிக்கப்படும்  என  கண்டறிந்து உள்ளனர்.

அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்டவர்களின்  நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது.
 அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.  இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள்  உலக மனநல பத்திரிகையில் வெளியாகி உள்ளது.


இந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை  பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.

இன்டர்நெட்டிலிலுள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் உங்களின்  கவனத்தை தொடர்ந்து  திசைதிருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது.
 வேறு ஒரு பணியில்  கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும் என ஜோசப் பிர்த் கூறி உள்ளார்.

தேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன.
நமது மூளையில் சேர்த்து வைக்கவேண்டிய தேவை இல்லை. கூகுள் தேடலிலும் , விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன் அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என கூறினார்.
இது போன்ற தொடர் நிகழ்வுகளால் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களின் நினைவாற்றல் குறைந்து வரும் என குறிப்பிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
 காசிக்குப் போயும் தொலையாத துன்பம்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
 
தேனி தொகுதியில் போட்டியிட்ட எனக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டோம். 

ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, மந்தியாகவோ பதவியேற்க இடைக்கால தடை விதிக்கக்கோரி இன்னும் ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து போட்டியிட்ட இளங்கோவன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட வேட்பாளர்கள், ஆளும் கட்சியின் துணையுடன் பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றம் சாட்டினர்.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென இரவில் வந்து இறங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போதும் சில குற்றச்சாட்டுக்களை எழுப்பினர்.
இந்தநிலையில் வழக்கு தொடரப்போவதாக இளங்கோவன் கூறியிருப்பது ஓ.பி.எஸ். மற்றும் ரவீந்திரநாத்குமாருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காசிவரை சென்று திதி கொடுத்து,காலில் விழுந்து மகனை வெல்ல வைடர்த்தால் இப்படியா கர்மம் துரத்தணும் என்று நொந்துப் போயள்ளார் பன்னீர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------
 அணுக்கழிவு மையம் ஆபத்து
அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்திக் கழிவுகளை பாதுகாப்பாக வெகுதொலைவுக்குக் கொண்டுசென்று பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
 இதற்காக தற்காலிக அணுக்கழிவு மையமும் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையமும் அமைப்பது தற்போதுஉலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறையாக இருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை இதுவரை ஏன் ஏற்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேட்டபோது, அந்த அணு உலைகள் மென்நீரில் இயங்கக்கூடியவை என்பதால் அதற்கான தொழில்நுட்பம் மிகவும்சிக்கலானது என்று மத்திய அரசு பதில் அளித்தது.

முழுமையான தொழில்நுட்பமும் இல்லாமல், தெளிவான இலக்கும் இல்லாமல் அமைக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கப்போகிறதோ?

நாட்டில் நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ளசுரங்கங்களில் அமைக்கலாம் என 2012 ஆம் ஆண்டுதீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மிகக்கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. பொதுவாக அணுக் கழிவுகள், அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படும். அவ்வாறு சேமிக்கப்படும் அணுக் கழிவுகளைஎட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும்.
எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவு, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் என்று அணுசக்திக் கழகம் கூறுகிறது.

இந்த மையத்தில் நிரந்தரமாகக் கழிவுகள் சேமித்து வைக்கப்படாது.
 இது தற்காலிகமான ஓர்அணுக்கழிவு மையமே.
ஏனெனில் நிரந்தரமாகச்சேமித்து வைக்க பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில்பள்ளம் தோண்டவேண்டும். தற்காலிகமாக சேமிக்கும் மையத்தில் ஆழம் அதிகமாக இருக்காது.
ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் விளைவுகள் நினைத்துப்பார்க்கமுடியாத அளவிற்கு இருக்கும்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டால், ஜப்பானில் ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழகத்திலும் ஏற்படாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

 எந்த தொலைநோக்குப் பார்வையும்இல்லாமல், பாதுகாப்பான தொழில்நுட்பமும் இல்லாமல் பெயரளவில் தற்காலிக அணுக்கழிவு மையம்அமைப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஜப்பானின் புகுஷிமா அணு உலைகளேஇதற்கு சரியான உதாரணம்.
எனவே தற்காலிக அணுக்கழிவு மையத்தைபாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அமைப்பதையும் அணு உலை பூங்கா என்ற பெயரில் அடுத்தடுத்துகூடங்குளத்தில் ஒரே இடத்தில் அணு உலைகளைஅமைப்பதையும் மத்திய- மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.

தற்காலிக மற்றும் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்குப் பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்து, அதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?