இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 9 ஜூன், 2019

எட்டு வழிகளிலும் எழும் சிக்கல்கள்.

பால் புட்டிகளால் புற்றுநோய்?
 "குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தும் புட்டிகளில், தடை செய்யப்பட்ட, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உடைய பிஸ்பினால்-ஏ என்ற மூலப்பொருள் பயன்படுத்தப்படுவது ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டுள்ளது"
பிஸ்பினால்-ஏ என்பது, பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்க இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தயாரிக்கப்படும் பால் புட்டிகளில் இந்த வேதிப்பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என இந்திய தர நிர்ணய துறை, 2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

குழந்தைகளுக்கு பிஸ்பினால்-ஏ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் வழியாக உணவூட்டும்போது, அந்த உணவில் இந்த வேதிப்பொருள் நுண்ணிய வடிவில் கசிந்து உடலுக்குள் செல்வதால் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என அறிய வந்துள்ளதால் இந்த உத்தரவிவை இந்திய தர நிர்ணய அமைப்பு பிறப்பித்தது.
உலக நாடுகள் பலவும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புட்டிகளில் அடைத்து வைப்பதை தடை செய்துள்ளது.

ஆனால், இன்னும் இந்தியாவில் விற்கப்படும் பால் புட்டிகள் சிலவற்றில் பிஸ்பினால்-ஏ பயன்படுத்தப்படுவது தங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சமீபத்தில் டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது.
பிஸ்பினால்-ஏ நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும் வேதிப்பொருள். குழந்தைகள் உடலினுள் செல்லும் இந்த வேதிப்பொருள், உடலில் உள்ள ஒரு சில ஹார்மோன்களை தூண்டிவிடுவதன் வாயிலாக புற்றுநோய் செல்களை தோற்றுவிக்கின்றது.
 குறிப்பாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, மேலும் இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குஜராத், ராஜஸ்தான், கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து, பல நிறுவனங்களில் உற்பத்தியாகும் பால் பாட்டில்களில் 20 மாதிரிகளை எடுத்து கவுகாத்தி ஐ.ஐ.டி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, பாட்டில்களில் இருந்து உணவின் வழியாக பிஸ்பினால்-ஏ மூலக்கூறுகள் கசிந்து வெளியேறுவது உறுதியானது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 20 மாதிரிகளில், அனைத்திலும் முதல் கட்ட சோதனையில் உணவின் வழியாக பிஸ்பினால்-ஏ மூலக்கூறுகள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டது.
 இரண்டாம் கட்ட சோதனையில் ஒரு மாதிரியினைத் தவிர அனைத்திலும் இந்த கசிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் மூலமாக இன்னும் இந்தியாவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான பால் பாட்டில்களில் பிஸ்பினால்-ஏ பயன்படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

 ஆனால், இது ஆபத்தானது. புற்றுநோய், இனப்பெருக்க மண்டல பாதிப்பு, இதய நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் என பல பாதிப்புகள் இதன் மூலம் ஏற்படலாம்.
 தடை செய்யப்பட்ட பின்பும் , சந்தையில் இவைகள் விற்பனைக்கு உள்ளது கவலைக்குரியது.
 அரசு தீவிரமாக இதனை கண்காணிக்க வேண்டும், நுகர்வோர்களுக்கும் தகுந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
முன்பு சங்கு,கெண்டி போன்றவற்றில் குழந்தைகளுக்கு பால் ,மருந்து போன்றவற்றை கொடுத்து வந்தனர்.
ஆனால் மேலைநாட்டு கலாச்சாரம் புகுந்து குழந்தைகளுக்கான  முகப்பவுடர் ,சோப்,ஷாம்பு ,எண்ணை என்று மாறிவிட்டன.ஜான்சன் &ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரித்து விட்டன.
குழந்தைகளுக்குமான நோய்களும் பெருகிவிட்டன.
ஆயிரங்கோடிகள் சந்தையாகிவிட்டன.
----------------------------------------------------------------------------------------------------------------------
 பாம்பு விஷ முறிவு மருந்து 
தயாரிப்பு முறை பழசாகிவிட்டதாம்.
உலக நாடுகளில் ஓராண்டில் பாம்பு கடிக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை 81,000 முதல் 1,38,000 வரை உள்ளது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், பாம்பு கடியால் சுமார் நான்கு லட்சம் பேர் நிரந்தரமாக மாற்றுத்திறனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது. 

இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில்தான் பாம்பு கடி இறப்புகள் அதிகம் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் பாம்பு கடிக்கு பலியாகும் 1.30 லட்சத்தில் சுமார் 50,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிகரிக்கும் மரணங்களை கருத்தில் கொண்டு, கடந்த மே மாத இறுதியில், பாம்பு கடி இறப்புகளுக்கு கவனம் தேவை என்று கூறிய உலக சுகாதார நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த வெல்கம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஓர் ஆய்வை நடத்தவுள்ளது. 

இதில், பாம்பு கடிக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சையை மேலும் தரமானதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை எளிதில் கிடைக்கும் வகையில் விஷமுறிவு மருந்து தயாரிக்கவுள்ளதாக லான்சென்ட் மருத்துவ சஞ்சிகையின் தலையங்கம் கூறுகிறது. இந்த ஆய்வில் இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர்களும் பங்குபெறவுள்ளனர்.  

உலகளவில் 60 சதவீத விஷபாம்புகளுக்கு மட்டுமே விஷமுறிவு மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், தயாரிக்கப்பட்ட விஷமுறிவு மருந்துகளில் பாதிக்கும் குறைவான மருந்துகள் பயனற்றவை, அதிக விலையுள்ளவை, எளிதில் கிடைக்க முடியாதவை அல்லது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளாக உள்ளன என்றும் தெரியவந்துள்ளது என்கிறது லான்சென்ட்.
பாம்பு கடி மரணங்களை தடுக்க தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்து எத்தகையது, அதன் தரத்தை உயர்த்துவது குறித்து ஆய்வாளர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றும் கார்த்திக், விஷமுறிவு தொடர்பாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
''இந்தியாவில் நான்கு விதமான பாம்புகளில் இருந்துதான் பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த நான்கு பாம்பு இனங்களை தாண்டி, அதிக விஷமுள்ள பாம்புகளும் இந்தியாவில் உள்ளன. அந்த பாம்புகள் கடித்தால், தற்போது நம்மிடம் உள்ள விஷ முறிவு மருந்து பலனளிப்பது சந்தேகம்தான்.
அதேபோல தற்போது தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளின் தரத்தை கேள்விக்கு உட்படுத்தவேண்டியுள்ளது. 
 கடந்த 100 ஆண்டுகளில் விஷ முறிவு மருந்து தயாரிக்கும் முறையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
 இதன் காரணமாக நமக்கு கிடைக்கும் மருந்தின் தரம் உயர்ந்ததாக இல்லை. 
அதனால், தற்போது விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் முறையில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம். தற்போதுள்ள முறைப்படி, பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், குதிரைகளில் செலுத்தப்பட்டு, பின்னர் குதிரைகளின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பொருள் (anti-body) விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தபடுகிறது. 
இந்த தயாரிப்பு முறையில் மாற்றம் தேவை. 
'குறிப்பாக குதிரைகளின் உடலில் செலுத்தப்பட்டு, பின்னர் அவற்றில் உருவாகும் நோய் எதிர்ப்பொருளை எடுக்கும்போது, சில தேவையற்ற பொருட்களும் (foreign objects, toxins) அதனுடன் சேர்ந்திருக்கும். இதன்காரணமாக, விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டாலும், அதன் தரம் காரணமாக, அதிக அளவில் விஷமுறிவு மருந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். சிலவேளைகளில் பக்கவிளைவுகள் ஏற்படும். 
 இந்தியாவின் பாம்பு மனிதர் என்று அறியப்படும் ரோமில்ஸ் விட்டேகருடன் இணைந்து பணியாற்றும் நிபுணர் ஞானேஸ்வர், தமிழகத்தை போல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விஷமுறிவுக்கான பாம்பு விஷம் சேகரிப்பு அதிகரிக்க வேண்டும் என்கிறார்.
தமிழகத்தில் வனத்துறையின் அனுமதியுடன் 1982 முதல் இருளர் மக்களின் கூட்டுறவு பண்ணை மூலம் விஷம் சேகரிக்கபட்டு, மருந்து தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. 

 இந்தியாவின் பிற மாநிலங்களில் இதுபோன்ற முயற்சி உடனடியாக மேற்கொள்ளபட வேண்டிய தேவை தற்போது உள்ளது. 
இந்தியாவின் மற்ற இடங்களில் இருந்தும் சேகரித்தால்தான், புவியியல் ரீதியாக வித்தியசமான குடும்பங்களைச் சேர்ந்த பாம்புகளின் திரவம் மூலம் மருந்து தயாரிக்கமுடியும்.
உலகளவில் இந்தியாவில்தான் விஷமுறிவு மருந்து மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்து ஒரு குப்பி ரூ.500-க்கு கிடைக்கிறது.
 இதே அளவு அமெரிக்காவில் கிடைக்க ஒரு லட்சம் ரூபாய் தேவை. 
இந்தியாவில் உள்ள மருந்தின் தரத்தை உயர்த்த வேண்டும். 
அந்த மருந்தால் ஒவ்வாமை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் அந்த மருந்தை அதிக செயல்திறன் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும். 
----------------------------------------------------------------------------------------------------------------------
 வெற்றியின் ரகசியம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்களின் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதே, பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்று ஓய்வுபெற்ற நீதிபதியும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான கோல்சே பாடில் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ‘ரேலாப்ஸ் டெக்னாலஜீஸ்’ எனும் நிறுவனம், ‘மிஸ்ஸிங் வோட்டர்ஸ் ஆப்’எனும் செயலியை உருவாக்கியுள் ளது.
 இதன்மூலம், மக்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?

என்பதைக் கண்டறிய முடியும்.அத்துடன் பெயர் விடுபட்டவர்களை, மீண்டும் இணைக்கவும் முடியும்.
புதிய வாக்காளர்களும், தங்கள் பெயரை இந்த செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் இரண்டு நிமிடங்களில் இணைத்துக் கொள்ள முடியும்.

இதனிடையே, ‘ரேலாப்ஸ் டெக் னாலஜீஸ்’ நிறுவனம் அண்மையில் ‘மிஸ்ஸிங் வோட்டர்ஸ் ஆப்’ செயலிமூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது.
அந்த ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே, மும்பைஉயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் செயலாளருமான கோல்சேபாடில், இஸ்லாமியர்கள், தலித்துக்கள் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட் டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“மகாராஷ்டிராவில் மட்டும் 39 லட்சத்து 27 ஆயிரத்து 882 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மகாராஷ்டிர மாநில மொத்த வாக்காளர் களில் 4.6 சதவிகிதம் பேர்கள் ஆவர்.
மேலும் இவ்வாறு நீக்கப்பட்டவர் களில் தலித்துக்கள் மட்டும் 17 லட்சம் பேர்.
இஸ்லாமியர்கள் எண்ணிக்கை10 லட்சம்.

 இந்த வாக்காளர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அடிப்படையிலேயே பெயர் களை நீக்கியிருக்கிறார்கள்.
 இதேபோல பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள் நாடெங்கும் நீக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என்று கோல்சே பாடில் கூறியுள்ளார்.

உண்மைதான் குமரி மாவட்டத்தில் 40000மீனவர்கள்,முஸ்லிம்கள்,தலித்துகள் வாக்குகள் நீக்கப்பட்டது அனைவர்க்கும் தெரிந்ததுதானே.
                             நீக்கப்பட்ட குமரி வாக்காளர்கள் சாலை மறியல் 
--------------------------------------------------------------------------------------------------------------------
 எட்டு வழிகளிலும் எழும் சிக்கல்கள்.
ராஜன் செல்லப்பா திடீரென இப்படி அதிமுக.வில் திரியை கொளுத்திப் போடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் கையில் கட்சி நிர்வாகத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்த ஆரம்பித்திருப்பதன் பின்னணி பரபரப்பாக அதிமுக வட்டாரத்தில் அலசப்படுகிறது.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா, ‘அதிமுக.வில் வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும்.
முடிவு எடுக்கிற பொதுச்செயலாளர் பதவியும் அதிகாரமும் அவருக்கு வேண்டும். அம்மாவால் அதிகமாக அங்கீகரிக்கப்பட்டவரை அந்தப் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும்.

பொதுக்குழுவில் இதை எழுப்ப இருக்கிறோம். பொதுக்குழு கூடுவது தொடர்பான அறிவிப்பு இல்லாத காரணத்தால் மீடியா மூலமாக இதை முன் வைக்கிறேன்’ என்றார்.
 இதன் மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்க வேண்டும் என உணர்த்தியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.

ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட்டார்.
அவருக்கு பவர்ஃபுல் அமைச்சர்களின் ஆதரவு தேர்தல் களத்தில் கிடைக்காதது இந்த கொந்தளிப்புக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அதைத் தாண்டி கொங்கு பகுதி அமைச்சர்களுக்கு எதிராக முக்குலத்து சமூக அமைச்சர்கள் சிலரின் குரலாக ராஜன் செல்லப்பா பேசியதாகவும் இந்த விவகாரத்தை சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்குலத்தோர் சமூக செல்வாக்கு கடந்த பல ஆண்டுகளாகவே தூக்கலாக இருந்து வருகிறது.

ஜெயலலிதா பின்னணியில் இருந்து இயங்கிய வி.கே.சசிகலா இதற்கு முக்கிய காரணம்.
ஜெயலலிதா முதல்வர் பொறுப்பு ஏற்க முடியாத காலங்களில் அதே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அந்தப் பொறுப்பை ஏற்றதிலும் சசிகலா பின்னணி இருந்தே வந்திருக்கிறது.
 ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதே சசிகலா தரப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதும், அதிகாரம் எடப்பாடி பழனிசாமி பக்கம் நகர்ந்தது.
எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன் என கொங்கு பகுதியினரே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை, சுற்றுச்சூழல் துறை என முக்கிய இலாகாக்களை வைத்திருக்கிறார்கள்.

முக்குலத்தோர் சமூகத்தினரான ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரிடம் அவ்வளவு வலுவான துறைகள் இல்லை.
இந்தச் சூழலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் அதிமுக.வுக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லை.
அதேசமயம் தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஜெயித்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரம் கொங்கு வேளாளர் சமூகத்தினர் கையில் இருந்தால், கட்சி அதிகாரம் முக்குலத்தோர் சமூக கையில் இருக்கட்டும் என்கிற கோரிக்கை கட்சி வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது.

அதிமுக.வுக்கு வலுவான பின்னணியாக இருக்கும் இந்த இரு சமூகங்களும் இப்படி பகிர்வதுதான் முறை என முக்குலத்து சமூக அதிமுக பிரமுகர்கள் வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதைத்தான் ராஜன் செல்லப்பா அழுத்தமான வார்த்தைகளில், ‘பொதுச்செயலாளர் பதவியில் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்’ என ஓபிஎஸ்.ஸுக்காக குரல் கொடுக்கிறார்.

ஆனால் சேலத்தில் இதற்கு பதில் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக.வில் தலைவர்கள் யாரும் இல்லை. இங்கு தொண்டர்கள்தான் தலைவர்கள்’ என ஒற்றைத் தலைமை கோரிக்கையை அடியோடு நிராகரித்திருக்கிறார்.

டெல்லியில் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க விடாமல் விழுந்த முட்டுக்கட்டைகளும் ஓபிஎஸ் தரப்பின் கொந்தளிப்புகளுக்கு காரணம் என்கிறார்கள்.
டெல்லியில் இருந்து திரும்பிய ஓ.பி.எஸ் தனது மகனை மட்டும் அழைத்துக்கொண்டு ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
 ஓபிஎஸ் ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கும் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே அவருடன் சென்றார்.
 வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏ.க்களை ஓபிஎஸ் தரப்பு அழைத்தும், அவர்கள் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து டெல்லி செல்வாக்கு உள்ள முக்கிய பத்திரிகையாளர் ஒருவரை ஓபிஎஸ் சந்தித்ததாகவும் தகவல் உலவுகிறது.
 இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் இப்படி திரள்வது அரசியல் திருப்பங்களுக்கு வித்திடலாம் என்றே தெரிகிறது.

அதிமுகவைக்க கைப்பற்ற தினகரன் எடுத்த முயற்சிகளையெல்லாம் முறியடித்த,திமுகவால் ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து  என்று அஞ்சிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிக்குள்ளேயே  எழும் பூசல்கள் என எட்டு வழிகளிலும் எழும் சிக்கல்களை எப்படி சமாளிக்கப் போகிறாரோ?

எட்டுவழிச் சாலையை எப்படி அமைக்கப் போகிறாரோ?
-----------------------------------------------------------------------------------------------------------------------