செவ்வாய், 18 ஜூன், 2019

ஆபத்தை கலைவதே.....

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறி யுள்ளார்.
அணு மின்சாரம் குறித்தோ, அணுக் கழிவு ஏற்படுத்தக்கூடிய அழிவு குறித்தோ எவ்வித நிபுணத்துவமும் இல்லாத இவர் இவ்வாறு கூறி யிருப்பது தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை ஆதரிக்க வேண்டும் என்ற பாஜகவின் செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன் திட்டம் என தமிழ்நாட்டிற்கு எதிரான, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படக்கூடிய திட்டங்களை பாஜக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறது.


இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆய்வு நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே அணுக் கழிவு மையம் அமைவதால் ஆபத்து இல்லை என்று கண்டு பிடித்ததாகவும் தமிழிசை கூறியுள்ளார்.

இதுகுறித்து உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழிசை, செல்ல வேண்டிய இடங்கள் ரஷ்யாவின் செர்னோபைல் மற்றும் ஜப்பானின் புகுஷிமா போன்ற இடங்கள்தான்.
ஜப்பானில் 2011ஆம் ஆண்டு புகுஷிமா அணுமின் நிலையத்தை நிலநடுக்கம் தாக்கிய போது, மிகப் பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டது.
 லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு காரணம் புகுஷிமா வில் அமைக்கப்பட்டிருந்த அணுசக்தி கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாதது தான் என்று கண்டறியப்பட்டது.

 இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென் றால் கூடங்குளம் அணுமின் உலைகளில் தேங்கும் அணுக்கழிவுகளை மட்டுமின்றி, இந்தி யாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 22 அணுமின் நிலையங்களில் தேங்கும் கழிவு களை கூடங்குளத்தில் கொண்டுவந்து சேமிக்க திட்டமிடுவதுதான்.
கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலை யில், அணுக்கழிவு அபாயத்தை ஏற்படுத்துவ தற்கு கூடங்குளத்தை தேர்வு செய்துள்ளனர்.
கூடங்குளத்தில் முதலாவது அணுமின் நிலையத்தோடு இத்திட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இரண்டாவது, மூன்றாவது என அணு உலை பூங்கா அமைக்கக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அந்தப் பகுதி பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் வலி யுறுத்துகின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடிய மீனவர்கள் உட்பட பொதுமக்கள் மீது பொய் வழக்கு போட்டு இழுத்தடிக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில், அணுமின் கழிவுகளை கொண்டு வந்து கூடங்குளத்தில் சேமித்து வைக்கும் திட்டம் என்பது தென் மாவட்டங்க ளுக்கு ஆபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கு சமமாகும்.
ஆபத்தை முன்னுணர்ந்து கலைவதே நல்ல நிர்வாகம்.
 நாட்டில் என்ன நடக்கிறது என அறியாமல் "தண்ணீர் தட்டுப்பாடு என்பது திமுகவும்,சில ஊடகங்களும் கூறும் பொய் 'என்று கூறிய அமைச்சர் வேலுமணி அவர்கள் தலைமை பாஜகவால் நடத்தப்படும் ரெயில்வே கழிப்பறையில் உள்ள இந்த அறிவிப்புக்கு என்ன சொல்லப்போகிறார்.
அமைச்சர் என்பவர் குறைகளைக் களைபவராக இருக்க வேண்டும்.மூடி மறைப்பவர் அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கக்கன் !
பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் என்று போற்றப்பட்ட திரு. கக்கன் அவர்களாவார்.

எதிர்க்கட்சியினராலும் போற்றப்பட்டவரான திரு. கக்கன் 1957&இல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, தாழ்த்தப் பட்டோர் நலம், பொதுப்பணி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்
.
1962 இல் மீண்டும் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். காமராஜர் பதவி விலகியபின் திரு. பக்தவத்சலம் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலையத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பல துறைகளின் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
 பத்தாண்டுக் காலம் மாநில அமைச்சராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவராயினும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக் காரராகவே செயல்பட்டதால், இறுதிவரை எளிய வாழ்க்கையே வாழ்ந்த சிறப்புக்குரியவர் கக்கன் அவர்கள்.

இவரது வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஈடுபட விரும்புவோருக்கும் ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 18.6.1909&இல் பிறந்தவர் திரு. கக்கன். இவரது தந்தையார் பூசாரிக்கக்கன். தாயார் குப்பி அம்மையார்.
இளமையிலேயே தன் தாயை இழந்தார் கக்கன். தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப் பட்டார்.

தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையில் ஏழ்மை, தீண்டாமைக் கொடுமை ஆகிய இடர்ப்பாடுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மதுரை திருமங்கலத்திலும், மேலூரிலும், பசுமலையிலும் படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார்.
 மீண்டும் படித்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
கல்வி பயின்ற காலத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்ததால், அவருக்குக் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு ஏற்படவில்லை.
.
1934-இல் மதுரைக்கு வந்த காந்தியடிகள் கக்கனின் பொதுத் தொண்டுகளை அறிந்தார். அந்தச் சந்திப்பின்போது, காந்தியடிகளுடன் சுற்றுப்பயணம் செய்த கக்கன் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இதன் காரணமாக, 1939&ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மூலம் காங்கிரசில் இணைந்து பொதுத்தொண்டுகளுடன் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

அவர் போகுமிடமெல்லாம் வந்தே மாதரம் முழக்கமிட்டதற்காக 1940&இல் ஆங்கில அரசால் 15 நாள்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த 1940-இல்தான் அவர் மேலூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியால்  தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர் கக்கன்தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்தப் போராட்டத்திற்காகவும் ஒரு மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.

1942&இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கக்கன், வெள்ளையக் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார்.
செய்யாத குற்றங்களையெல்லாம் அவர்மீது சுமத்தி விசாரணை ஏதுமின்றிக் கடுங்காவல் தண்டனை வழங்கியது ஆங்கில அரசு.
 ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனையை ஆந்திர மாநிலத்திலுள்ள அலிப்பூர் சிறையில் அனுபவித்தார்.
அவரது அரசியல் வாழ்வில் பல பதவிகள் அவரைத் தேடி வந்தன.
முதலில் 1941-&42-இல் நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1946-இல் அரசியலமைப்புச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
நாட்டு விடுதலைக்குப்பின் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பேற்றுப் பல நற்பணிகளைச் செய்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றினார்.
 இவர் தலைவராக இருந்த போதுதான் 1955-இல் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார்.
 1963&இல் காமராஜர் கட்சிப்பணிக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த முதல்வராகக் கக்கனையே கொண்டுவர விரும்பினார் என்று கூறப்படுகிறது.
ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் நிதி, உள்துறை, கல்வி, சிறை, அறநிலையத்துறை, தொழிலாளர் நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் முதலிய பல பெரும் பொறுப்புகள் கொண்ட அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார் கக்கன்.
1967-இல் தி.மு.க. ஆட்சியமைத்த போது கக்கன் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அத்துடன் அவரது அரசுப் பணிகள் முடிவுக்கு வந்தன.
ஆனால், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
பத்தாண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தபோதும், அவருக்கென்று சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ வைத்திருக்கவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காகத் தமக்குக் கிடைத்த சிறு நிலத்தையும் வினோபாவின் பூதான இயக்கத்திற்குக் கொடுத்து விட்டார்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக ஊர்தி ஏதுமில்லாததால், ஒரு முன்னாள் அமைச்சர் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததையும், வாடகை வீடு தேடி அலைந்ததையும், இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும், அதையறிந்த அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தததையும் தமிழக மக்களில் பெரும்பாலோர் அறிவர். அதனால்தான் கக்கன் என்றாலே அவர் தூய்மையின் அடையாளமாக மதிக்கப் படுகிறார்.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

இவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
அவற்றில் குறிப்பிடத் தக்கவை மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தது, வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றியது,
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான பணிகளைக் கூறலாம்.
 அவர் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றிய போது அவை நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்பது இவருடைய சிறந்த பழக்கமாக இருந்தது.
 நேரம் தாழ்த்தாமல் அலுவலகத்திற்கு வருவதும், மக்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதும் இவருடைய பண்பு நலன்களில் குறிப்பிடத்தக்கவை.
தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன் அதற்காகப் பல்வேறு செயல்களைச் செய்துள்ளார். அவரது ஊரான தும்பைப் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க ஒரு குளமும், பிற வகுப்பார் நீரெடுக்க ஒரு குளமும் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பார் நீரெடுக்கும் குளம் மக்கள் அசுத்தங்களைக் கழுவவும், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்தப்பட்ட குளமாகும்.
இந்த இழிநிலையை எதிர்த்து ஒத்த கருத்துடைய பிற வகுப்பாருடன் இணைந்து போராடி, அனைவரும் ஒரே குளத்தில் குடி நீரெடுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939&இல் நடத்தித் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
 கக்கன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சொர்ணம் பார்வதி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.
அதுவும் 1932&இலேயே சீர்திருத்தத் திருமணம் செய்தார்.
இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பா. ஜீவானந்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
 நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை.
 அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அனுமதித்ததில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த ஊர்தியில் தன் குடும்பத்தார் பயணம் செய்யவும் அனுமதித்ததில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

4 மாதத்தில் 808  தற்கொலை!


"பாஜக - சிவசேனா கூட்டணி நடக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 4 மாதங்களில் மட்டும் 808 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது."

இவற்றில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் சொந்தப் பிராந்தியமான விதர்பாவில்தான், மாநிலத்திலேயே அதிகபட்சமாக 344 தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாக புள்ளி
விவரங்கள் தெரிவித்துள்ளன.


கடந்த பல ஆண்டுகளாகவே, மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை உச்சத்தில் இருக்கிறது.

போதிய மழையின்மை, வறட்சி, விவசாயப் பொருட்களுக்கான விலையின்மை போன்றவற்றுடன், ஆட்சியாளர்களின் பாராமுகத்தாலும், மகாராஷ்டிர விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

வாழவழி தெரியாமலும், வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும் தொடர்ந்து தற் கொலை செய்து வருகின்றனர்.
அந்த வகையிலேயே, 2019-ஆம்ஆண்டில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் மட்டும் 808 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர்.

 இதில் விதர்பா பகுதியில் 344 விவசாயிகளும், மரத்வாடா பகுதியில் 269 விவசாயிகளும், வடக்கு மகாராஷ்டிராவில் 161 விவசாயிகளும், மேற்கு மகாராஷ்டிரத்தில் 34 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொங்கன் பகுதியில் மட்டும் தற்கொலைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
2018-19 காலகட்டம், மகாராஷ்டிர விவசாயிகளுக்கு துயரமானதாகும்.

 இந்த காலத்தில், மாநிலத்தின் 42 சதவிகித பகுதிகள் மோசமான வறட்சிக்கு ஆளாகியுள்ளன.

சுமார் 60 சதவிகித விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் பயிர்களும் கருகிப் போயிருக்கின்றன.
இவ்வளவு கொடுமையிலும் விவசாயிகள் தங்களுக்குள் கூறி ஆறுதல்பட்டுக் கொள்ளும் செய்தி என்னவென் றால், கடந்த 2018-ஆம் ஆண்டின் தற் கொலைகளை விட, தற்போதைய தற் கொலைகள் குறைவு என்பதுதான்.
கடந்த 2018-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தற்கொலை செய்தவிவசாயிகள் எண்ணிக்கை 896 எனும் போது, 2019-

ஆண்டின் நான்கு மாதங்களிலோ 88 தற்கொலைகள் குறைந்து 808 என்ற எண்ணிக்கையில் நின்றுவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
  முதல் உலகப்போர்  தொடக்கப்புள்ளி.
 1887 - ஜெர்மனி, ரஷ்யா இடையே ‘மறுகாப்பீட்டு ஒப்பந்தம்( ரீ இன்சூரன்ஸ் ட்ரீட்டி)’ என்னும் பரம ரகசிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதன்படி, ரஷ்யாவோ, ஜெர்மனியோ மற்றொரு பெரும்சக்தியுடன் போரிட நேர்ந்தால், ஒப்பந்தத்திலுள்ள மற்றொரு நாடு நடுநிலை வகிக்கவேண்டும்.

பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, ரஷ்யா, ஜெர்மனி ஆகியவை ஐம்பெரும் சக்திகளாக அப்போது விளங்கின.  ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளை, டென்மார்க், ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகியவற்றுடனான தனித்தனிப் போர்களில் கைப்பற்றி, ஒருங்கிணைத்து, ஜெர்மனியை உருவாக்கிய பிஸ்மார்க், அதன் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் இடையூறாக இருந்த போர்களைத் தவிர்க்க மிகச்சிறந்த அயலுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார்.
பிஸ்மார்க்

பிஸ்மார்க்கின் சாதுரியமே 1870, 90களில் ஐரோப்பாவில்  அமைதியைப் பேணியது.

 இருபெரும் அணிகளுக்கிடையேயான போரொன்று உருவாகிவிடாமலிருக்க முக்கியச் சக்தியான பிரான்சைத் தனிமைப்படுத்தினார் பிஸ்மார்க்.

 ஆஸ்திரியா, ரஷ்யா, ஜெர்மனி அடங்கிய, முப்பேரரசர் அணியை 1873இல் உருவாக்கினார்.

 பால்கன் பகுதியை அடையும் நோக்கத்தில் ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் எதிரிகளாக இருந்த நிலையில், அப்பிரச்சனைகளின் அடிப்படையில் ரஷ்யா விலக, அவர்களுக்கிடையில் தான் நேர்மையான தரகராக இருப்பதாக உறுதியளித்து, 1878இல் பெர்லின் பாராளுமன்றம் என்ற பேச்சுவார்த்தையை நடத்தினார்.

ரஷ்யா ஒத்துவராத நிலையில், 1879இல் ஆஸ்திரியாவுடன் அவர் உருவாக்கிய இருநாட்டுக்கூட்டு, ஜெர்மன் அயலுறவுக்கொள்கையின் அடிக்கல் என்று புகழப்படுவதுண்டு.
பெருமுயற்சியெடுத்து, 1881இல் முப்பேரரசர் அணியை மறுவுருவாக்கம் செய்தாலும், 1885-87இல் ஏற்பட்ட பல்கேரியச் சிக்கல், ரஷ்ய-ஆஸ்திரிய விரோதத்தை தீவிரப்படுத்தியது.

 பிரான்ஸ் ஆதரவு நிலையை ரஷ்யா மேற்கொண்டுவிடக்கூடிய நிலையில் பிஸ்மார்க் உருவாக்கிய இந்த ரகசிய ஒப்பந்தம், அந்நிய உறவுகளைக் கையாள்வதில் அவருக்கிருந்த திறமையின் ‘தலைசிறந்த வெளிப்பாடு (மாஸ்டர்பீஸ்)’ என்று வருணிக்கப்படுகிறது.

1890இல் ஆட்சிக்குவந்த இரண்டாம் கெய்சர் வில்லெம் அரசர் தொடக்கத்திலேயே இந்த ஒப்பந்தத்தை மீறி, பிஸ்மார்க் பதவி விலகினார்.
 இந்த ஒப்பந்தத்தின் முடிவே, அதுவரை ஐரோப்பியக் கண்டத்தில் பிஸ்மார்க் கட்டிக் காத்த அதிகாரச் சமநிலை முடிவுக்கு வருவதற்குக் காரணமாக மட்டுமின்றி, பின்னாளில் முதல் உலகப்போர் ஏற்படுமளவுக்கான பிரச்சனைகளுக்குமான தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------