ஆபத்தானவர்கள் கைகளில்




மக்களவைத் தேர்தல்கள் அனைத்தும் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக,மே 17 அன்று இந்தியப் பத்திரிகையாளர்களிடையே ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது.


 கடந்த ஐந்தாண்டுகளாக பிரதமராக இருந்த நரேந்திர மோடி முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் என்கிற செய்தியைக் கேட்டுத் தான் அத்தகைய பரபரப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.
ஏனெனில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்வி எதையும் விரும்பாத ஒரு பிரதமர் இருந்தார் என்றால் அது நரேந்திர மோடி மட்டும்தான்.

அதற்குப் பதிலாக அவர் மட்டும் பேசி நடிக்கும் காட்சி மட்டும் ஒளிபரப்பாகும். ஒரு சமயம்,  கேள்விகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தபோது, அவர் தன் அருகே இடது பக்கம் அமர்ந்திருந்த, பாஜகவின் தலைவராக இருந்த, அமித் ஷாவைப் பார்த்து, அனைத்துக் கேள்விகளுக்கும் அமித் ஷா பதிலளிப்பார் என்று மோடி கூறினார்.
 அமித்ஷாவும் முன்வந்து பதில்களைக் கூறினார்.


உண்மையில் கடந்த சில ஆண்டுகளாக மோடிக்காக அதை அவர் செய்து வந்தவர்தான்.

 இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் அதிகாரம் படைத்த இரண்டாவது நபராக அவர் திகழ்கிறார்.
பாஜகவில் பலர், அமித் ஷாவை, கண்ணுக்குப் புலனாகாத பிரதமர் என்றே அழைக்கிறார்கள்.
அமித் ஷா, மோடியின் நிழல், விசுவாசி, செய்தித் தொடர்பாளர் மற்றும் பிரச்சார வல்லுநர்.

இப்போது அவர் மோடி-2 அரசாங்கத்தின் அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிகுந்த உள்துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

 அமித் ஷா (வயது 54), 1990களிலிருந்தே மோடியின் விசுவாசியாக இருந்து வருகிறார்.
 குஜராத்தில் மோடி தமது ஆரம்ப நாட்களில், கட்சியின் பொதுச் செயலாளராக மட்டும் இருந்தார்.
மோடி, இதில் திருப்தி அடையவில்லை.
 தனக்கு அதிகாரம் தேவை என்று அவர் விரும்பினார்.

 குஜராத்திற்கு வந்து சில ஆண்டுகள் கழித்து, மோடி, 2001இல் அமித் ஷாவின் உதவியுடன் குஜராத்தின் முதலமைச்சராக மாறினார்.
 மோடியின் மாநில அமைச்சரவையில் அமித் ஷா உள்துறை உட்பட பல்வேறு துறைகளைக் கவனித்து வந்தார்.
அமித் ஷாவின் கவனம் முழுவதும், மோடி தன்னுடைய வழியில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுவது என்பதேயாகும்.
இதன்காரணமாக இவரது துறைக்கு அலுவலர்கள் மத்தியில் முதலமைச்சரின் “அசிங்கமான சூழ்ச்சிகள் நிறைந்த துறை” (‘dirty tricks department”) என்றே பெயரிட்டு அழைத்தனர்.

அப்போதிருந்தே அமித் ஷா மிகவும் வல்லமை பொருந்திய நபராக வளர்ந்தார்.


 இந்தியாவில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கும் அரசியல்வாதிகளில் மிகவும் சக்தி படைத்தவராக விளங்கினார்.
கூட்டங்களில் அவர் உரையாற்றுகையில், பாஜகவிற்கு எதிராக விழும் வாக்கு, பாகிஸ்தானில் கொண்டாடப்படும் என்று கூறியிருக்கிறார்.
 நாட்டிலுள்ள முஸ்லிம்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில், “கரையான்கள்” “termites”)என்று முத்திரை குத்துவதுடன் அவர்களை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டும் என்று பேசுவார்.

 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்திருப்பவர்களில் முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை அளித்திடும் சட்டமுன்வடிவு, அவரது மூளையில் உதித்ததேயாகும்.
எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய சங்கதி என்ன வெனில் மனித உரிமை கள் மீது அவருடைய கடந்தகால தாக்குதல்களாகும்.

முஸ்லிம்களை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப் பட்டவராக அமித் ஷா இருந்திருக்கிறார்.
2010இல், இவ்வாறு நடைபெற்ற கொலைகள் குறித்து நான் செய்திகள் பதிவு செய்திருந்தேன். பாதிப்புக்குள்ளாகியிருக்கிறவர்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள் என்கிற ரீதியில் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களையும் குஜராத் மாநில உளவுப் பிரிவினரின் உள் குறிப்புகளையும் நான் தாக்கல் செய்திருந்தேன்.

என்னுடைய புலனாய்வு வெளியான பின்னர் இரு வாரங்கள் கழித்து அமித் ஷா கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
 அக்குற்றச்சாட்டுகள் “ஜோடிக்கப்பட்டவை” என்றும் “அரசியல் நோக்கம் கொண்டவை” என்றும் கூறினார்.


மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ), சொராபுதீன் ஷேக் என்கிற முஸ்லிம் நபர் ஒருவரும் அவரது மனைவி கவுசர் பீவி என்பவரும் கொல்லப்பட்ட வழக்கில் அமித் ஷாவின் பங்கு குறித்து புலனாய்வு மேற்கொண்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் புலனாய்வை மேற்கொண்ட மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், அமித் ஷாவை இவ்வழக்கின் மிக முக்கிய சந்தேக நபர் என்றும் இக்குற்றத்தின் பின் உள்ள சதிகாரர் என்றும் குறிப்பிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், நிழல் உலக குண்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பணம் பறித்திடும் கும்பலுக்குத் தலைவனாக இருந்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தது.
உச்சநீதிமன்றம், அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் ஆழமானவைகளாக இருந்ததால்,  சாட்சிகள் மீது செல்வாக்கு அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர் குஜராத் மாநிலத்திற்குள் நுழைவதற்குத் தடை விதித்தது.
மேலும், இஸ்ரத் ஜஹான் என்றும் 19 வயது பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கிலும் அமித் ஷாவின் பங்கு குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இஷ்ரத் ஜஹான் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

அமித் ஷா அதிக நாட்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் செலவழித்ததில்லை.
விரைவிலேயே அவர் பிணையில் வெளி வந்து விட்டார்.
அந்த சமயத்தில் அமித் ஷாவின் இறங்குமுகம், மோடியின் இறங்குமுகமாகவும் மாறிவிடும் என ஊகிக்கப்பட்டது.
ஆனால், 2013இல் மோடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டார்.
அமித் ஷா பாஜகவின் தலைவராக்கப்பட்டார்.
 எண்ணற்ற கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒரு நபர், பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால், அமித் ஷா மீதான வழக்கில் சாட்சிகள் பிறழ் சாட்சிகளானார்கள். நீதிபதிகள் வழக்கை விசாரிப்பதிலிருந்து தங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள்.
ஒருசில மாதங்களிலேயே அமித் ஷா, அவர்மீது சாட்டப்பட்டிருந்த அனைத்துக் கிரிமினல்  குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.
2013இல் அமித் ஷா, ஓர் இளம்பெண் மீது சட்டவிரோத மாக வேவு பார்த்த வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
அமித் ஷா, மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் அப்பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்படி கேட்டுக்கொண்ட உரையாடல் பதிவுகளின் ஒலி நாடாக்களைஇரு இதழியல் நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்தன.

இது தொடர்பாக பாஜக அளித்த விளக்கம் என்னவென்றால், அப்பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணைக் கண்காணிக்குமாறும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள் என்பதாகும். ஆனால்  இது தொடர்பாக காவல்துறையினர் எவ்விதமான சான்றாவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.

இவ்வாறு முற்றிலும் பிரச்சனைக்குரிய கடந்தகாலத்தை அமித் ஷா பெற்றிருந்தபோதிலும், இன்றையதினம் மோடியின் நெருங்கிய நம்பகமான நபராகவும் அவரது எண்ணங்களை அமல்படுத்துபவராகவும் மாறியிருக்கிறார்.
 பிரதமரின் ஒப்புதல் பெறாமல்கூட கொள்கை முடிவுகளை அவர் எடுக்க முடியும்.


2014இல், காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்ட சமயத்திலேயே, அமித் ஷா 2019 தேர்தலுக்கான பணிகளைத் தயார் செய்திடத் தொடங்கிவிட்டார்.
பாஜகவிற்கு அதிகமான அளவில் உறுப்பினர்களைச் சேர்க்கும் இயக்கத்தை அவர் மீண்டும் துவக்கினார்.
இரு ஆண்டு காலங்களுக்குள்ளாகவே, சரிபார்க்கப்பட்ட பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 3 கோடியே 50 லட்சத்திலிருந்து (35 மில்லியன்), 11 கோடியைத் தாண்டியது. (110 மில்லியன்).

 நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுடன் இதர கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்தார்.
இவை அனைத்தும் பாஜகவிற்கு சமீபத்திய தேர்தலில்  அபரிமிதமான வெற்றியை ஈட்டுவதற்கு உதவின.
அமித் ஷா, வரும் 2024இல் பிரதமர் நாற்காலியில் உட்காருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று சிலர் ஊகிக்கிறார்கள்.
இப்போதே அவர், இந்திய நாடாளுமன்ற அமைப்புமுறையில் மிகவும் சக்தி வாய்ந்த  உள்துறை அமைச்சகத்தின் தலைவர் என்ற முறையில், நீதித்துறை முடிவுகள் மற்றும் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுதல் போன்ற பொறுப்புகளை தன் கட்டுக்குள் கொண்டுவருவார்.
அமித்ஷா தன் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யத் தயங்கியதே கிடையாது.

இந்தியாவில் மக்கள் தற்சமயம் அரசியல்ரீதியாகவும், சமூக ரீதியாகவும்பல்வேறுவிதமான வெறிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறார்கள்.
இத்தகைய வெறிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
ஆனால், மோடி – ஷா வகையறாக்கள் தங்கள் வசம் அதிகாரம் குவிதல் குறித்தே கவனம் செலுத்துவார்கள்.

இதற்காக அவர்கள் நாட்டிலுள்ள அரசமைப்புச்சட்ட நிறுவனங்களைப் பலவீனப்படுத்துவது குறித்தோ, மனிதஉரிமைகளை மீறுவது குறித்தோ, சட்டத்தின் ஆட்சியில் அரிப்பு ஏற்படுத்துவது குறித்தோ கவலைப்பட மாட்டார்கள்.

இந்தியா மிகவும் ஆபத்தானவர்கள் கைகளில் இருக்கிறது.
இது தொடரக்கூடாது.

நன்றி: தி வாஷிங்டன்போஸ்ட்
தமிழில்: ச. வீரமணி

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலைஞர் கருணாநிதி-96.

முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 96வது பிறந்தநாள் இன்று(ஜூன்.3) கொண்டாடப்படுகிறது.
 அவரது மறைவுக்கு பிறகான முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் இசை சார்ந்த எளிய குடும்பத்தில் 1924, ஜூன் 3-ம் தேதி பிறந்தார்.


கலைஞர் கருணாநிதி.

தந்தை, முத்துவேலர் நாட்டு வைத்தியர். தாய் – அஞ்சுகம். உடன் பிறந்தவர்கள் பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரண்டு சகோதரிகள்.

திருக்குவளை தொடக்கப்பள்ளியிலும், திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியிலும் படித்த கருணாநிதி, பள்ளிப்பருவத்திலேயே நாடகம், கவிதை, பேச்சில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

 விளையாட்டிலும் தீவிர ஆர்வம் இருந்தது.
 ஹாக்கி விளையாட்டு மிகவும் பிடிக்கும்.
 திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளி ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார்.


சிறு வயதிலேயே தன்னம்பிக்கை மிக்கவராகவும், மன உறுதி உடையவராகவும் இருந்தார்.
நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் இயங்கியிருக்கிறார் கருணாநிதி.

`பழனியப்பன்’ என்ற நாடகமே கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். ‘தூக்குமேடை’, ‘பரபிரம்மம்’, சிலப்பதிகாரம்’ உள்பட 17 நாடகங்களை எழுதியுள்ளார்.
 `தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, `கலைஞர்’ என்ற அடைமொழியை கருணாநிதிக்கு வழங்கினார். அதன்பிறகே இவர், `கலைஞர் கருணாநிதி’ என்று அழைக்கப்பட்டார்.

‘நளாயினி’, ‘பழக்கூடை’, ‘பதினாறு கதையினிலே’ உள்பட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய ‘தென்பாண்டிச் சிங்கம்’ நாவல், 1989-ம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ‘ராஜராஜன்’ விருதைப் பெற்றது.
எளிய நடையில் திருக்குறளை ஆய்ந்து எழுதிய `குறளோவியம்’, கருணாநிதியின் முக்கிய இலக்கியப் பங்களிப்பாகும். `நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மூன்று தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.
1946-ல் `ராஜகுமாரி’ திரைப்படத்தில் இருந்து கருணாநிதியின் திரைப்பயணம் தொடங்குகிறது. 1952-ல் வெளிவந்த `பராசக்தி’ திரைப்படம் தமிழ்த்திரையுலகை வியந்து பார்க்க வைத்தது. 1950-ல் சேலம் மாடர்ன் தியேட்டரில் 500 ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்து சில திரைப்படங்களுக்கு பணியாற்றினார்.
 ‘மந்திரி குமாரி’, ‘பூம்புகார்’, ‘மனோகரா’, உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். பொன்னர் சங்கர் என்ற கருணாநிதியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
 அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கருணாநிதி, “1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும்,
1962-ல் தஞ்சாவூர் தொகுதியிலும்,

 1967, 1971-தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியிலும்,
1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும்,
1989, 1991 தேர்தல்களில் துறைமுகம் தொகுதியிலும்
1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ருணாநிதி.

2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டு ஜெயித்தார்.
2016 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இது மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசமாகும்.

90 வயதுகளைக் கடந்தபிறகும், சிறிதும் உற்சாகம் குறையாமல் தன் அன்றாட அலுவல்களில் தீவிரமாக இருந்தார் கருணாநிதி.
 2016, அக்டோபரில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் எடுத்துக்கொண்ட மாத்திரைகளாலேயே ஒவ்வாமை ஏற்பட்டு ‘ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம்’ என்ற நோய்த்தாக்கமும் ஏற்பட்டது.

 தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் வயது முதிர்வின் விளைவாக அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.ஆகஸ்ட் 7 2018ல் அவரது இன்னுயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தினமணி ஏ.என்.சிவராமன் 
நெல்லைச் சீமையில் பிறந்து நாட்டின் விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட தியாகியாகவும், மிகச்சிறந்த பத்திரிகையாளருமான ஏ.என். சிவராமன் திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் நகருக்கு அருகேயுள்ள ஆம்பூர் என்ற கிராமத்தில் 1904ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்ததார்.
சிவராமன் ஆரம்பக் கல்வியை கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும், உயர் கல்வியை நெல்லை அம்பாசமுத்திரம் பள்ளியிலும் பயின்றார்.

1921ம் ஆண்டு நெல்லை இந்து கல்லூரியில் ஏ.என். சிவராமன் படித்துக் கொண்டிருந்தபோது மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து, அதில் கலந்து கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் மீதும், விடுதலை போரட்டத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், காந்திஜியின் அழைப்பை ஏற்று போராட்டத்தில் பங்கேற்றார்.
இதனால் 18மாத சிறைத்தண்டனை கிடைத்தது.
இதனால் அவரது கல்லூரி படிப்பு தடைப்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டார்.
 அப்போது, எழுத்துத் துறையில் அவருக்கு ஈடுபாடு இருந்ததால், பிரபல பத்திரிகையாளரான டி.எஸ். சொக்கலிங்கம் நடத்தி வந்த ‘காந்தி’ என்ற பத்திரிகையில் சேர்ந்தார்.
சில ஆண்டுகள் ‘காந்தி’ பத்திரிகையின் செய்தி பிரிவில் பணியாற்றிய சிவராமன், காந்திஜி அறிவித்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, அந்த பத்திரிகையிலிருந்து விலகினார்.

 ராஜாஜி தலைமையில் நடைபெற வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருபது மாதங்கள் சிறைத்தண்டனை  அனுபவித்தார்.
விடுதலையான பின்னர் மீண்டும் ‘காந்தி’ பத்திரிகையில் சேர்ந்து துணை ஆசிரியராக பணியாற்றினார்.

1934ம் அண்டு தினமணி நாளிதழ் தொடங்கபட்டபோது, அதில் ஆசிரியராக டி.எஸ். சொக்கலிங்கமும், உதவி ஆசிரியராக ஏ.என். சிவராமனும் சேர்ந்தார்கள்.

1944–ம் ஆண்டு சொக்கலிங்கம் தினமணி பத்திரிகையிலிருந்து விலகிய பிறகு, சிவராமன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றினார். ஒரே பத்திரிகையில் 50 ஆண்டுகள் அதிலும் 40 ஆண்டுகள் ஆசிரியராக பொறுப்பேற்றுப் பணியாற்றி சாதனை படைத்தவர் அவர்.

சுதந்திர போராட்ட காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை, தேசப்பற்றை ஊட்டும் பல்வேறு எழுச்சிமிகு கட்டுரைகளை ‘கணக்கன்’ ‘ஒண்ணே கால் ஏக்கர் பேர்வழி’ குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் ஆகிய புனைப்பெயர்களில் ஏ.என். சிவராமன் எழுதுவார்.

காந்திஜி மீதும், காமராஜ் மீதும் தீவிர பற்றுக்கொண்ட சிவராமன், காங்கிரஸ் கட்சியிலும் இணைந்து செயலாற்றினார்.
ஆனாலும், 1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சியினருக்கு எதிராக ஏ.என். சிவராமன் எழுதிய கட்டுரைகள் ஆட்சி மாற்றத்துக்கு உதவியதாக, அப்போது ஆட்சியை கைப்பற்றிய திமுக தலைவர் அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார்.
தேசப்பற்று, தெய்வீகப்பற்றுக் கொண்டவராக இருந்த சிவராமன், புத்தக வாசிப்பிலும், பிற மொழிகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

குறிப்பாக, தமது 93–வது வயதில் சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் உதவியுடன் அராபிய மொழியையும் அவர் கற்றுள்ளார் என்பதை அறியும்போதே, அவரது பிறமொழி ஆர்வத்தை நாம் அறியலாம்.

என்றும்,எதிலும், எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள ஏ.என்.சிவராமன் விரும்பியதில்லை. விழாக்கள், விருதுகள் என்றால் ஒப்புக்கொள்ளவே மாட்டார்.
ஏ.என். சிவராமனின் தியாகத்தை போற்றியும், அவரது நீண்ட நாள் பத்திரிகை பணியினை பராட்டியும், மத்திய அரசு அவருக்கு வழங்க முன் வந்த பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட மிக உயரிய விருதுகளை கூட அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
பத்திரிகையாளனாக இருப்பதற்கு அரசு வழங்கும் விருதுகள் இடையூறாக, தடையாக இருந்துவிடக் கூடாது என எண்ணிய சிவராமன் சமூக நல அமைப்புகள், மனமுவந்து வழங்கிய விருதுளை ஏற்றார்.
 அந்த வகையில் திருக்கோவிலூரில் வழங்கப்பட்ட ‘கபிலர்’ விருது, பத்திரிகை பணியை பாராட்டி 1988–ம் ஆண்டு வழங்கப்பட்ட ‘பி.டி.கோயங்கா’ விருதையும், அண்ணா பல்கலை கழக வளர்தமிழ் மன்ற விருதையும் அவர் பெற்றுக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக் கழகத்தின் அறிவியல் தமிழ் ஆக்கப்பணி விருதையும் ஏ.என். சிவராமன் பெற்றுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம், ரஷ்யப் புரட்சி 17 ஆண்டு அனுபவம், இந்தியாவின் வறுமை பற்றி கனிக்கன் ஆராய்ச்சி, அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம், சுதந்திரப் போராட்ட வரலாறு உள்ளிட்ட நூல்களை சிவராமன் எழுதியுள்ளார்.

நெல்லை அம்பா சமுத்திரம் பகுதியில் பிறந்த ஆம்பூர் நாணு அய்யர் சிவராமன் என்கிற ஏ.என். சிவராமன் பள்ளி, கல்லூரி காலங்களில் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனைகளை ஏற்றதுடன், தலைநகர் சென்னைக்கு வந்து சுமார் 50 ஆண்டுகள் பத்திரிகை துறையிலும் சாதனை படைத்துள்ளார்.

அனைத்து தரப்பினரின் அன்பையும், பாராட்டையும்  பெற்ற ஏ.என்.சிவராமன் தமது 97வது வயதில், 2001–ம் ஆண்டு மார்ச் 1–ம் தேதி  இயற்கை எய்தினார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் வளர்ந்து வரும் நாடு என்ற பெயரை இழந்தது இந்தியா


2014 வரை வேகமாக வளர்ந்த வந்த இந்தியாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட கடந்த ஐந்தாண்டுகளாக மிக மெதுவாக வளர்ந்து வருவது சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இவை சென்ற ஆட்சிக்காலத்தில் மோடி,அருண்ஜெட்லீ எடுத்த தவறான ,பிற்போக்கான பொருளாதார முடிவுகளினால்தான் உண்டானது என்பதால் மோடியால் நேரு மீதோ ,ராஜிவ் காந்தி மீதோ பழி போடமுடியவில்லை.மன்மோகன் ஆட்சிக்காலம் வரை இந்திய பொருளாதாரம் வளர்ச்சி மேல்நோக்கித்தான் இறந்தது ஆவணங்கள் கூறுகிறது.

2018 ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 6.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

 அதே வேளையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் வெறும் 5.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்த இந்தியாவை சீனா முந்தியது.
இதன் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் முதல் முறையாக, இந்தியாவை முந்திய சீனா, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொரு ளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றது.

உலக அரங்கில் எதிரொலிக்க தொடங்கியுள்ள இந்த மாற்றம், சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு, இரண்டாவது பெண் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்
.“குறுகிய காலம் மற்றும் நீண்டகாலம் அடிப்படையில் முன்னுரிமை அளித்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறுகிறார் பொருளாதார வல்லுநர் தர்மகீர்த்தி ஜோஷி.
     மோடியின் முந்தைய அரசு, சரிவர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்ட தாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

ஏனெனில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2017 முதல் 2018 வரையிலான நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தது.
அதிகளவிலான தொழிலாளர்களை கொண்ட கட்டுமானம் மற்றும் ஜவுளித்துறை போன்றவற்றில் உடனடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஜோஷி கூறுகிறார்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய மத்திய அரசின் சமீபத்திய தரவுகளை பார்க்கும்போது, நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது தெரிகிறது.சீனாவை போன்றில்லாமல், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வை மையமாக கொண்டே வளர்ச்சியடைந்து வருகிறது.
 ஆனால், சமீபத்திய மாதங்களில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவுகளை பார்க்கும்போது, நுகர்வோரின் பணம் செலவிடும் வீதம் வீழ்ச்சியடைந்து வருவது புலனாகிறது.
குறிப்பாக பார்த்தோமானால், எஸ்யுவி ரக கார்களின் விற்பனை கடந்த ஏழாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, டிராக்டர், இருசக்கர வாகனங்களின் விற்பனையும் சரிவை கண்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவரின் வளர்ச்சி கடந்த காலாண்டில் இறக்கமடைந்துள்ளது.
முன்னதாக, நுகர்வோரின் வாங்கும் வீதத்தை அதிகரிக்கும் வகையில், தனது கட்சி தலைமையிலான அரசு வருமான வரி வீதத்தை குறைக்கும் என்று உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட வுள்ள மோடி தலைமையிலான இரண்டாவது அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியையும் குறைக்க வேண்டுமென்று கூறுகிறார் தரகு நிறுவனமொன்றின் துணை தலைவர் கவுரங் ஷெட்டி.

“வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.இந்தியாவின் நிதிநிலையில் நிலவும் 3.4 சதவீத பற்றாக்குறை, பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு குறைவான தெரிவுகளையே மோடிக்கு கொடுக்கும்.

நரேந்திர தலைமையிலான முதலாவது அரசுக்கு விவசாயத்துறையை கையாள்வதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. பயிர்களுக்கு அதிக விலை, கடன் தள்ளுபடி போன்றவற்றை வலியுறுத்தி நாடுமுழு வதும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், அனைத்துவித விவசாயிகளுக்கும் வருமான ஆதரவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்து வோம் என்று முன்னதாக பாஜக உறுதியளித்திருந்தது.“விவசாயிகளுக்கு வருமான ஆதரவு வழங்கும் திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் எவ்வித பலனையும் தராது” என்று கூறுகிறார் ஜோஷி.

நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் மாநில அரசு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையில் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்யும் சூழல் இருந்து வருகிறது.
அந்நிலையை மாற்றி, விவசாயிகள் நேரடியாக சந்தைகளுக்கு பொருட்களை எடுத்துச்சென்று விற்பனை செய்யும் போக்கை உண்டாக்கினால் அது குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கக் கூடும் என்று கூறுகிறார் ஜோஷி.

இந்தியாவின் முதுகெலும்பாக திகழும், விவசாய த்துறையை நிலைநிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தனியார்மயமாக்கல்
சாலை கட்டமைப்பு, ரயில்வே வளர்ச்சி மற்றும் பிற கட்டமைப்பு துறைகளை 1.44 டிரில்லியன் (100 கோடி) டாலர்களை செலவு செய்வோம் என்பதே பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கிய உறுதிமொழிகளில் ஒன்று.
ஆனால், அந்த தொகையின் பெரும்பாலான அளவு தனியார் துறையிடமிருந்தே பெறப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தில் மோடியின் அரசு ஓரளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

தற்போது இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, நாட்டில் தனியார்மய மாக்கத்தை முழுவீச்சில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார் கவுரங் ஷெட்டி.
“கடந்த சில வாரங்களாக முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்கண்டு வருகின்றன.
 இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சரிவிலுள்ள நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்யலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாட்டின் கொள்கைகளை வலுப்படுத்துவதன் மூலம், மென்மேலும் அந்நிய முதலீடுகளை கவர முடியுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் தனியார் துறை எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியை காணவில்லை.

கார்பரேட்களுக்கு ஆதரவாகதான் இந்த ஐந்தாண்டுகள் மோடி செயல்பட்டார்.வரக்கடன்கள் இருக்கையிலும் கர்ப்பரேட்களுக்கு மக்களின் வாங்கிப்பணத்தை கடனாக அள்ளிக்கொடுத்தார்.கார்ப்பரேட் வரியை ஆண்ட தோறும் கரைத்துக்கொண்டே வந்தார்.விவசாயிகள் சிக்கல்களை காது கொடுத்துக்கேட்காமல்,அவர்கள் தற்கொலை செய்வதையும் வேடிக்கைப்பார்த்து வந்தார்.விவசாயநிலங்களை சாலை அமைக்க,மீத்தேன் எடுக்க கட்டிடங்கள் அமைக்க வலுக்கட்டாயமாக புடுங்கினார்.
 மோடி ஆட்சிக்காலத்தில் பங்குச்சந்தைதான் வளர்ந்தது.
ஆனால் தொழிற்துறை,வேலைவாய்ப்புகள்,விவசாயம் அடியோடு சரிந்தது. சீனாவுடன் போட்டிப்போட்டு வளர்ந்த இந்தியா இப்போது இலங்கையைக்கூட வெல்ல வெகு முயற்சி செய்யவேண்டும்.
பின் எப்படி இந்தியா வளரும்.வல்லரசாகும்.
 
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே, நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தின் தலையெழுத்தை நிர்ண யிக்கும் என்று வல்லுநர்கள்  தெரிவிக்கின்றனர்.
ஆனால் இன்னம் வரும் ஐந்தாண்டுகளில் சோமாலியாவிட்டான் போட்டி போடும் வாய்ப்புகள்தான் இருக்கின்றன.மோடியின் முறைகேடான வெற்றியும்,பிற்போக்கான வலது சாரி பொருளாதாரக் கொள்கைகளும் அப்படித்தான் செய்தி தெரிவிக்கின்றன.

நன்றி : சமீர் யாஸ்மி,
        பிபிசி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?