பொறுத்திருந்து பார்ப்போம்
20,00,231.நன்றிகள்!
உங்கள்"சுரன்" வலைத்தளத்தை பார்வையிட்டோர் எண்ணிக்கை. 20,00,231
நாம் வலைப்பூ நடத்தினால் எப்படி வரவேற்பிருக்கும்? என்ற ஆர்வத்தினால் துவக்கப்பட்டது "சுரன்".
இத்தனை ஆண்டுகள் நடத்துவோம்,இவ்வளவு ஆர்வலர்கள் பார்வையிடுவார்கள் என்ற எண்ணமே இல்லாத காலம் அது.
இவ்வளவு நாள எனக் கூற காரணம்.
" சுரன்"துவக்கத்திற்கு முன்னரே கோலோச்சிய வலைப்பூக்கள்,பின்னர் துவக்கப்பட்டு பிரபலமானவை என ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள் இன்று தொடரவில்லை என்ற நிலைதான்.
வலைப்பூ அலை தமிழில் குறைந்து,மறைய யூடியூப் பக்கம் பலரும் மாறிவிட்டதும் ஒரு காரணம்.
தொடர்ந்து நான் தொடர உங்கள் ஆதரவுதான் ஊக்கம்.
தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
என்றும்அன்புடன்
சீ.அ.சுகுமாரன்.
(S.A.Sukumaran.)
----------------------------------------
இதுவரை இல்லாத வகையில் 2022ம் ஆண்டில் உலகளவில் 75 லட்சம் பேருக்கு காசநோய்: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை.
அமெரிக்க அரசு நிதி நிறுவனம் பெயரில் அதானிக்கு 4,600 கோடி நிதியுதவி.
இஸ்ரேல் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட வடக்கு காசாவில் இருந்து 3 நாட்களில் 22,000 பாலஸ்தீனர்கள் வெளியேறினர்: ஐ.நா. தகவல்.
வயநாட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள்-போலீஸ் இடையே துப்பாக்கி சண்டை: பெண் உள்பட 2 பேர் கைது.2 பேர் தப்பி ஓட்டம்.
அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. ஓபிஎஸ் மேல்முறையீடு - அவசர வழக்காக விசாரணை.
சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் அறநிலையத்துறையை கலைக்க முடியாது.இந்துத்துவாவினர் கோவிலை கொள்ளையடித்துவிடுவார்கள்.அதானியிடம் நிர்வாகத்தை ரெயில்வே பிளாட்பாரம்,விமான நிலையங்கள்,துறைமுகங களைப் போல் விற்றுவிடுவார்கள்.- செல்லூர் ராஜூ..
மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்ததில் தகுதியான நபர்களுக்கு வரவு வைக்கும் பணி தொடங்கியது .
கோவை பி.எஸ்.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவருக்கு மொட்டையடித்து ஆபாச வீடியோ எடுத்து ராகிங் என்ற பெயரில் கொட்டைப்.7 மாணவர்கள் கைது.
தொடர் கனமழை எதிரொலி... மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
---------------------------------
பொறுத்திருந்து பார்ப்போம்!
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளின் சார்பில் அந்தந்த மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல நீங்கள் என்பதை உணருங்கள்’ என்று ஆளுநர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம்.
இதை விட நெத்தியடி இருக்க முடியாது. ‘ரொம்ப ஆடாதீர்கள், அடங்குங்கள்’ என்பதுதான் இதன் உள்ளடக்கம் ஆகும்.
பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறது.
எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் ஆளுநர்களாக வருவதால், அவர்கள் எஜமானர்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுச் செயல்படுகிறார்கள்.
தங்களுக்கு ஏதோ தகுதிகள் வந்து விட்டதைப் போல நினைத்து ஆட்டங்கள் போடுகிறார்கள். ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக வந்துவிட்டதாலேயே, அந்த மாநிலமே தங்களுக்குச் சொந்தம் என நினைத்துக் கொள்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது என்பதையே மறந்துவிட்டு, தாங்கள் ஏதோ மக்கள் தலைவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
அதுவும் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் என்பவை அத்துமீறியதாக மட்டுமல்ல, அருவெறுப்பானவையாகவும் இருக்கின்றன.
மாநிலத்தின் நன்மைக்காகத் துரும்பைக் கூட நகர்த்தாத அவர், தமிழ்நாட்டுக்கான கெடுதல்களை வரிசையாகச் செய்து வருகிறார். தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் பெருமைகளைச் சிதைப்பது ஒன்றையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளார்.
எதையாவது சொல்லி, மாநிலத்தில் குழப்பம் ஏற்படுத்துவதே அவரது வேலையாக இருக்கிறது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலைக்கும் அவருக்கும் தான் இப்போது போட்டி என்று சொல்லத்தக்க வகையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
அதேநேரத்தில், மாநில நிர்வாகம் அனுப்பும் கோப்புகளை தாமதப்படுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கு அனுமதி தராமலும் தனது அரசியல் சட்டக் கடமைகளைக் கூடச் செய்யாமல் சதி செய்கிறார்.
எத்தனையோ முறை -–- எவ்வளவோ வகை உணர்த்திய பிறகும் ஆளுநர் ரவி, உணர்வதாகத் தெரியவில்லை. திருந்துவதற்கான அறிகுறி இல்லை.
இதன் இறுதிக் கட்டமாகத்தான் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு.
இதே போலத் தான் கேரளாவின் நிலைமையும், பஞ்சாப் மாநிலத்தின் நிலைமையும்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. மாண்புமிகு பகவந்த் மான், முதலமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தான், இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார்.
பஞ்சாப் மாநில அரசு அனுப்பி வைக்கும் சட்டமுன் வடிவுகளுக்கு அனுமதி தராமல் நிறுத்தி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்.
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டிய மூன்று நிதி மசோதாக்களை நிறுத்தி வைத்து விட்டார் ஆளுநர். சட்டசபை கூடுவதற்கு முந்தைய நாள் –- அதாவது அக்டோபர் 19 ஆம் தேதியன்று, மாநில அரசுக்கு ஆளுநர் ஒரு கடிதம் எழுதுகிறார்.
அந்த மசோதாக்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்று அதில் குறிப்பிட்டு இருந்தார் ஆளுநர்.
சட்டசபையைக் கூட்டக் கூடாது என்றும் ஆளுநர் தடை போட்டார். அதனால் சபை கூடிய சில மணிநேரங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டது.
இப்படி பல்வேறு குழப்பங்கள் நடக்கிறது பஞ்சாப் மாநிலத்தில். இதனைத் தடுக்கவே உச்சநீதிமன்றத்துக்கு போனது பஞ்சாப் அரசு. “சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியது பஞ்சாப் அரசு. உடனே, ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா?
நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று நிதிமசோதாக் களில் இரண்டைக் கையெழுத்துப் போட்டு அனுப்பி விட்டார்.
இதையே உச்சநீதிமன்றம் கேள்வியாகக் கேட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் மாட்டிக் கொண்டார் பஞ்சாப் ஆளுநர். “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
இப்பிரச்சினை உச்சநீதி மன்றத்துக்கு வந்த பிறகு தான் ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். இதே போலத்தான் முன்பு தெலுங்கானா ஆளுநரும் நடந்து கொண்டார்.
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை ஆய்வு செய்யலாம். ஆனால் வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாக ஒப்புதல் தர வேண்டும்” என்று சொன்ன நீதிபதிகள்...
“தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது” என்று எச்சரிக்கையாகவும் கிண்டலாகவும் சொல்லி இருக்கிறார்கள். மாநில ஆளுநர்களுக்கு முதலில் அறிவுறுத்த வேண்டியது இதுதான்.
இது ஒரு நியமனப் பதவி. தங்களை அண்டி இருப்பவர்களை திருப்திப்படுத்து வதற்காகத் தரப்படும் டம்மி பதவி. ‘இது ஒரு வேஸ்ட்டான பதவி’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள். அதுதான் உண்மை.
‘நீயே அயிரை மீன், உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை?’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதனை ஆளுநர்களாக வருபவர்கள் உணர்வது இல்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைப்பட்ட 14 சட்டமுன் வடிவுகளுக்கு அனுமதி தராமல் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ரவி. இதுபோல் 8 மசோதாக்களுக்கு அனுமதி தராமல் கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் அனுமதி தரவில்லை. மேலும் எல்லா மசோதாக்களையும் முதலமைச்சர் நேரில் கொண்டுவர வேண்டும் எனத் திமிராகவும் கூறியிருக்கிறார்.
இதற்கும் கேரள அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
வழக்கு போட்ட பிறகு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் செயல்படத் தொடங்கி இருக்கிறார். இந்த வழக்குகள் அனைத்தும் மொத்தமாக வரும் 10 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றன. இதன்பிறகாவது தமிழ்நாடு ஆளுநர் திருந்துவாரா?இல்லை.சங்கியாகவேத் தொடருவாரா??
பொறுத்திருந்து பார்ப்போம்!
---------------------------------------