சொன்னதற்கு மாறாக

 இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.யன்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடிவு .

மத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் 74 சதவீத வாக்குகள் நடந்துள்ளது. சட்டீஸகர் மாநிலத்தில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டம்.7 பேர் மீது போடப்பட்ட குண்ட சட்டம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க. ஸ்டாலின்  நடவடிக்கை.

•20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த மிதிலி புயல், வங்கதேசம் அருகே . கரையைக் கடந்த மிதிலி புயல், வடக்கு வழகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

•பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலம ஏற்பட்டது. அந்நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள மண்டனொ தீவை மையமாக கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கும் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடும்போது கிடைக்கும் பணத்தில், தமிழ்நாட்டில் இலவச கழிவறைகள் கட்டலாம்” - தமிழ்நாடு அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றநீதிபதிமோகன்யோசனை

சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை .

பழைய டிக்கெட்களை மீண்டும் விற்று பண மோசடியில் ஈடுபட்ட அரசுப் பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம்.

திருநெல்வேலியில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு..! போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வாரிசு அரசியல்? 

 இது ஒன்றுதான் பா.ஜ.க. கையில் இருக்கும்,இருந்த ஒரே ஆயுதம். 

பிரதமர் மோடி –- உள்துறை அமைச்சர் அமித்ஷா –- பா.ஜ.க. தலைவர் நட்டா என யாராக இருந்தாலும் அவர்களுக்கு காங்கிரசு கட்சி முதல் தி.மு.க. வரை குறை சொல்வதற்காக வைத்திருக்கும் ஒரே ஒரு மொண்ணைக் கத்தி அது ஒன்றுதான்.

“இந்தியாவில் வாரிசு அரசியல் ஒரு நோய். இதில் இருந்து கட்சிகள் குணமாக வேண்டும்” என்று எல்லாக் கூட்டங்களிலும் கையைத் தூக்கிக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. 

இரண்டு நாட்களுக்கு முன்புகூட சட்டீஸ்கரில் பேசிய பிரதமர் மோடி, “வாரிசு அரசியலால் காங்கிரசு கட்சி மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்” என்று கண்டுபிடித்திருக்கிறார்.

கடந்த வாரம் போபாலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, “காங்கிரசுத் தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்காக மட்டுமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கர்ஜித்திருக்கிறார்.

 “மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசுத் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் போன்றவர்களுக்கு தங்கள் மகனை முதல்வராக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார். அவர்களின் அரசியல் இதனை நோக்கியே உள்ளது. 

ஆனால் பிரதமர் மோடி, நாட்டு மக்களின் நலனுக்காகப் பணியாற்றி வருகிறார். பா.ஜ.க. மக்களுக்கான கட்சியாக உள்ளது” என்று திருவாய் மலர்ந்தார். 

“இந்தியாவில் வாரிசு அரசியல்தான் ஆபத்தில் இருக்கிறது” என்று பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அமித்ஷா.

கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணகிரிக்கு வந்த பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, “தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடக்கிறது” என்றும், “வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி பா.ஜ.க.தான்” என்றும் சொல்லிச் சென்றார். இவை அனைத்தையும் படித்து விட்டு இந்தச் செய்தியையும் படியுங்கள்...

‘கர்நாடக பா.ஜ.க. தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம்” -– என்பதுதான் அந்தச் செய்தி. எடியூரப்பா மகனை கர்நாடக பா.ஜ.க. தலைவராக நியமித்தது யார்? 

வாரிசு அரசியல் வடை சுட்டுக் கொண்டு இருக்கும் அதே மோடி –- அமித்ஷா –- நட்டா கூட்டணிதான். 

இவர்கள் கட்டுப்பாட்டில்தானே கர்நாடக பா.ஜ.க. இருக்கிறது? 

அல்லது கர்நாடக பா.ஜ.க.வுக்கு வேறு பிரதமர், வேறு உள்துறை அமைச்சர், வேறு தேசியத் தலைவர் இருக்கிறார்களா? 

இந்த மூவருக்குமே தெரியாமல் நியமனம் நடந்துவிட்டதா?

‘வாரிசு அரசியலை’ எதிர்க்கும் இந்த மூவரும் நடத்திய வாரிசு நாடகத்தை எடியூரப்பாவே அம்பலப்படுத்திவிட்டார். 

“எனது மகனை மாநிலத் தலைவராக ஆக்கும்படி நான் மேலிடத்தில் எப்போதும் கோரிக்கை வைத்தது இல்லை” என்று பேட்டி தந்துள்ளார் எடியூரப்பா. அப்படியானால் யார் இதனைச் செய்தது? இதோ எடியூரப்பாவே சொல்கிறார்...

“எனது மகன் விஜயேந்திரா, கர்நாடக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

 இந்த முடிவை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டாவும்தான் எடுத்துள்ளார்கள். இதில் எனது தலையீடு எதுவுமில்லை.” என்று சொல்லி இருக்கிறார் எடியூரப்பா.

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை உச்சிமுகர்ந்து தலைவர் ஆக்கியவர் அமித்ஷாதான். கடந்த மார்ச் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

அப்போது அமித்ஷாவுக்கு எடியூரப்பா பூங்கொத்து வழங்கினார். அந்தப் பூங்கொத்தை விஜயேந்திராவிடம் கொடுக்கச் சொன்னார் அமித்ஷா. உடனே பூங்கொத்து எடியூரப்பாவிடம் இருந்து விஜயேந்திரா கைக்குப் போனது. விஜயேந்திரா அந்தப் பூங்கொத்தை அமித்ஷாவிடம் கொடுத்தார். 

அமித்ஷா அதனை வாங்கிக் கொண்டார். விஜயேந்திராவைத் தட்டிக் கொடுத்தார் அமித்ஷா. இதுதான் வாரிசு அரசியலுக்கு எதிராக மக்கள் அரசியல் நடத்துபவர்களின் லட்சணம்!

எடியூரப்பாவின் மகனைக் கொண்டுவருவதற்கான திட்டம் அப்போதே வந்துவிட்டது. 

ஆனால் அதனை கர்நாடக பா.ஜ.வி.னர் ஏற்க மாட்டார்கள் என்பதால் தயங்கியது பா.ஜ.க. தலைமை. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது பா.ஜ.க.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததால் அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த நளின்குமார் கட்டீல் கடந்த மே மாதம் தனது பதவியை விட்டு விலகினார்; 

இதையடுத்து தலைவர் பதவியைக் கைப்பற்ற மூத்த தலைவர்கள் சோமண்ணா, ஆர்.அசோகா, சுரேஷ்குமார், ரமேஷ் ஜிகாஜிநாகி, சி.டி.ரவி, ஷோபா கரந்தலாஜே உள்ளிட்டோர் போட்டிபோட்டனர்.

அதிலும் முன்னாள் அமைச்சர் சோமண்ணா, “எனக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கினால் சிறப்பாகச் செயல்படுவேன். கட்சி மேலிடத்தின் உத்தரவின்பேரிலே 2 தொகுதிகளில் போட்டியிட்டேன். 

நான் தோல்வி அடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம் ஆகும். கட்சி மேலிடம் எனக்கு வேறு பொறுப்புகளை வழங்கும் என நம்புகிறேன்” என வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவரையும் ஏமாற்றினார்கள் மோடி –- அமித்ஷா- – நட்டா அணி.

இதுகுறித்து சி.டி.ரவி, “கட்சி மேலிடத்தின் இந்த முடிவு குறித்து எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அவற்றை ஊடகங்களில் வெளிப்படையாக விவாதிக்க முடியாது” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜிகாஜிநாகி, “பா.ஜ.க.வில் தலித்துகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. செல்வந்தர்களுக்கும், சாதி செல்வாக்கு கொண்டவர்களுக்குமே வாய்ப்பு வழங்கப் படுகிறது. இந்த மோசமான நிலை என்றைக்கு மாறுமோ?” என விமர்சித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் சோமண்ணா, அதிருப்தி காரணமாக பா.ஜ.க.வை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து 7 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என முடிவு செய்ய முடியாத அளவுக்கு கர்நாடக பா.ஜ.க.வில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டமாக உள்ளது.

 இதேபோல சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நளீன் குமார் கட்டீல், பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஆறு மாதம் கழித்துதான் தலைவர் பதவிக்கு ஆளைப் போட வேண்டிய நிலைமையில் இருக்கிறது பா.ஜ.க.

 எடியூரப்பாவின் மகனைத்தான் அவர்களால் நியமிக்க முடிந்தது. விஜயேந்திராவின் பதவி ஏற்பு விழாவை பெரும்பாலான பா.ஜ.க. தலைவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

மாநில மக்கள் தொகையில் லிங்காயத்துகள் 17 சதவிகிதம். அவர்களைத் திருப்திப்படுத்தவே லிங்காயத்து இனத்தைச் சேர்ந்த விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். 

‘யாரையும் திருப்திப்படுத்தும் அரசியல் செய்ய மாட்டோம்’ என்று எல்லா மேடைகளிலும் சொல்லும் பிரதமர் மோடி, அதைத்தான் கர்நாடகாவில் செய்துள்ளார். வாரிசு அரசியல் செய்ய மாட்டோம் என்று சொல்லி வந்தார்கள். 

அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

சொன்னதற்கு மாறாகச் செய்தால்தானே அது பா.ஜ.க.?!

----------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?