70 மணி நேர வேலையும் கார்பரேட் நலனும்.
172 லட்சம் கோடியாக அதிகரித்தது இந்திய ஒன்றிய அரசின் கடன்.
70 மணி நேர வேலையும் கார்பரேட் நலனும்.
சமீபத்தில், இன்போசிஸ் இணை நிறுவனரான பில்லி யனர் நாராயணமூர்த்தி, வாரத்திற்கு 70 மணி வேலை நேரத்தை முன்மொழிந்து, வேகமாக வளர்ந்து வரும் வளர்ச்சியை ஈடுகட்டக்கூடிய விதத் தில் இந்தியாவின் வேலை கலாச்சாரத் தில் மாற்றம் தேவை என்று இந்திய இளை ஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
வேலை நேரம் குறித்து சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று நவீன தாராளமயக் கொள்கையை நியாயப்படுத்தி இவர் கூறியிருப்பது புதிது அல்ல.
2020இலேயே அவர் வாரத்திற்கு 60 மணி நேர வேலையை முன்மொழிந்தார்.
தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறித்து தன் சொந்த அடிப்படையற்ற பகுத்தறிவற்ற தன்மையை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியிருப்பதோடு, உல களவில் போட்டியிட்டு தேசிய பொரு ளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இது அவசியம் என்கிற முறையில் அவர் திருவாய்மலர்ந்திருக்கிறார்.
இது மோடி ஆட்சியின் மதிப்பிழந்த கருத்துக்களை எதிரொலிப்பதைத் தவிர வேறல்ல. அவருடைய பகுத்தறிவற்ற கூற்றுகளை ஆராய்ந்திடுவோம்
‘இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும்’ என்று நாராயணமூர்த்தி கூறியி ருக்கிறார். மேலும் அவர், இந்தியர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும், தங்களு டைய வேலை உற்பத்தித்திறனை மேம் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார்.
இவருடைய அறிவுரைகள் வைரலாகப் பரவிக் கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இவர் இவ்வாறு கூறி யதை உடனடியாக, ஓலா கேப்ஸ் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் சரியான கருத்து என்று கூறி ஏற்றுக்கொண்டிருக்கி றார்.
இதேபோன்றே, ஜேஎஸ்டபிள்யு குழு மத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், மூர்த்தியின் கூற்றை ஏற்றுக்கொண்டு தன் வர்க்க பாசத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை மற்றும் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை யுடன் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று வரையறுத்திருப்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.
அதிக வேலை செய்பவர்கள் இந்தியர்களே!
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டி லும் உள்ள வேலை நேரத்துடன் ஒப்பிட்டோமானால் இந்தியாவில் உள்ள நிலைமை மிகவும் மோசம் என்ப தையே உலக அளவிலான தரவுகள் காட்டு கின்றன.
நம் உழைக்கும் மக்கள் மிகவும் அதிகம் வேலை செய்பவர்களாவார்கள். உலகில் மிகவும் கடினமாக உழைக்கும் தொழிலாளர்களில் இந்தியத் தொழிலா ளர்கள் ஏற்கனவே இடம் பெற்றிருக்கி றார்கள்.
தரவின்படி 2023இல் மேம்படுத் தப்பட்ட சர்வதேச தொழிலாளர் ஸ்தாப னத்தின் இந்தியத் தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு 47.7 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்தில் 36.4 மணி நேரமும், தென் கொரியத் தொழிலாளர்கள் 37.9 மணி நேரமும், ரஷ்யத் தொழிலாளர்கள் 37.6 மணி நேரமும், இங்கிலாந்து தொழிலா ளர்கள் 36 மணி நேரமும், ஜெர்மனித் தொழிலாளர்கள் 37 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) அறிக்கை, உலகில் மிகவும் மோச மானமுறையில் வேலை நேரம் இருக்கும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றிருப்பதாக கூறியுள்ளது.
நம்மைவிட மோசமாக உள்ள நாடுகள் காம்பியா, மங்கோலியா, மாலத்தீவு கள் மற்றும் கத்தார் ஆகியவையேயா கும்.
இங்கேயுள்ள தொழிலாளர்க ளில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவிலிருந்து பிழைப்புதேடி அந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றி ருப்பவர்களேயாகும். இவர்களின் சராசரி வேலை நேரம் இந்தியாவில் இருப்பதைவிட அதிகமாகும்.
மறுபக்கத் தில், 2020-21 உலக ஊதிய அறிக்கை (Global Wage Report), ஆசிய-பசிபிக் நாடுகளில் வங்க தேசத்தைத் தவிர்த்து விட்டோமானால், மிகவும் குறைந்த ஊதியம் பெறுபவர்கள் இந்தியர்களே என்று தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
குறைந்த ஊதியம் பெறுவது இந்தியர்களே
மேற்கண்ட நாடுகளின் தொழில்மயம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தோ மானால் அவற்றுடன் இந்தியாவை ஒப்பி டுவது அர்த்தமற்றது என்ற போதிலும், நாராயணமூர்த்தி நம் இளைஞர்களை வசைபாடும் அளவுக்கு இந்தியத் தொழி லாளி, ஜப்பான் தொழிலாளியைவிட அல்லது ஜெர்மன் தொழிலாளியைவிட கடந்த காலத்திலோ அல்லது இப்போ தோ குறைவாக வேலை செய்கிறார் என்பதற்கு எந்தவிதமான சாட்சியமும் கிடையாது.
1970இல் இந்தியத் தொழிலாளி சரா சரியாக ஆண்டு ஒன்றிற்கு சுமார் 2,077 மணி நேரம் வேலை செய்திருக்கிறார்.
இந்த இலக்கம் இதுநாள்வரையில் ஸ்திரமானதாகவே இருக்கிறது. 1970இல் ஜெர்மன் தொழிலாளி சராசரியாக 1941 மணி நேரமும், ஜப்பானிய தொழிலாளி 2,137 மணி நேரமும் வேலை செய்தி ருக்கிறார்.
உண்மையில் 1960களிலிருந்து 1980 வரையிலும் ஜப்பான் வேகமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களைப் பெற்ற அதே சமயத்தில், அங்கே வரு டாந்திர வேலை நேரம் என்பது இந்தியா வில் இருந்ததைப் போலவே இருந்தது.
2017இல் வருடாந்திர வேலை நேரம் இந்தி யாவில் 2,117 மணி நேரமாக இருந்த போது, அது ஜப்பானில் 1,354 மணி நேரமா கவும், ஜெர்மனியில் 1,354 மணி நேரமாக வும் முறையே இருந்தது.
இந்திய அரசாங்கத்தால் வெளியிடப் பட்டுள்ள 2019-இந்தியாவில் நேரப் பயன்பாடு (Time Use in India - 2019) என்னும் அறிக்கையின் திடுக்கிடும் வெளிப்பாடுகளை திருவாளர் நாராயண மூர்த்தியின் பார்வைக்குக் கொண்டு வருவது இங்கே பொருத்தமாக இருந்தி டும்.
அது, தற்காலிக முதலாளித்துவத்தின் ஆக்ரோஷமான கட்டுக்கடங்காத மோகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.
மார்க்சின் வார்த்தைகளில் சொல்வ தென்றால், “மூலதனமானது, இரவு முழுவதும் ஓநாயாக வடிவமெடுத்து மனி தர்களை வேட்டையாடி, ரத்தம் குடித்து, பிணங்களை தின்று, பகலில் மனிதனாக மாறிக் கொள்கிற வெறிபிடித்த மிருகம் போல வேட்கை தணிவுபெறாததாக உபரி உழைப்பை உறிஞ்சிக்கொள்ளும் ஆர்வத்தில் நெறியெல்லையை மீறு வதுடன் நில்லாமல் பாட்டாளியின் பொருள்நிலை, உடல் ரிதியாக உழைக்கும் உச்சபட்ச அளவையும் மீறுகின்றது.
உடல் வளர்ச்சிக்கும் நலப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத நேரத்தையும் விழுங்கி விடுகின்றது. சாப்பாட்டு நேரத்தையும் கள வாடுகின்றது.” (மூலதனம், காரல்மார்க்ஸ். -க.ரா. ஜமதக்னி மொழியாக்கம், பக்கம் 346.)
மேற்படி அறிக்கையில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் வரையறை யையெல்லாம் மீறி, இந்திய நகர்ப்புற ஆண் தொழிலாளி 15-59 வயதுக்கு இடைப் பட்ட நிலையில் உள்ள ஒருவர், நாள்தோ றும் 521 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 60 மணி – 47 நிமிடங்கள் நேரடி வேலையி லும் மற்றும் அது தொடர்பான நடவடிக்கை களிலும் ஈடுபடுகிறார்.
இது, வாரத்தில் 48 மணி நேரம் என்கிற சட்டப்பூர்வ மாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வேலை நேரத்தை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது.
அரசாங்கமே அளித்துள்ள இந்தத் தகவல்களே இந்தியாவில் உழைக் கும் மக்கள் மீது ஆளும் வர்க்கங்கள் மேற்கொண்டுள்ள காட்டுமிராண்டித் தனமான அட்டூழியங்களை சித்தரிப்ப தற்கு போதுமானவையாகும்.
உற்பத்தித் திறன் சம்பந்தமா கவும்கூட, நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்ட அரசாங்கத்தின் தரவு, திரு வாளர் மூர்த்தியின் கூற்றை ஆதரித்திட வில்லை.
அரசாங்கத்தின் தரவு கூறுவ தாவது: “ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு, 2000 முதல் 2013 வரையிலுமான தன்னுடைய உறுப்பு நாடுகளுடைய தொழிலாளர் உற்பத்தித்திறன் வளர்ச்சி யை ஒப்பிட்டு, சீனாவில் தொழிலாளர் உற்பத்தித் திறன் மிகவும் உச்சத்தில் (9.0%) இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மங்கோலியா (5.5%), இந்தியா (5.2%),லாவோஸ் பிடிஆர் (4.6%), வியட்நாம் (4.4%), கம்போடியா (4.5%), இலங்கை (4.1%) மற்றும் இந்தோனேஷியா(3.5%) என்றும் காட்டுகிறது. இவ்வாறு இந்த அறிக்கையின்படி, தொழிலாளர் உற்பத்தித் திறனில் ஆசியாவில் உள்ள 20 நாடுகளுக்கு மத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மூர்த்தி திருவாய்மலர்ந்திருக்கும் வாரத்தில் 70 மணி நேர வேலை என்பதில் மற்றொரு மிக முக்கியமான கேள்வி ஒளிந்திருக்கிறது.
இவ்வாறு வேலை செய்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் மற்றும் அவர்களின் உடல்நலம் எந்த அளவிற்குப் பாதிக்கப் படும் என்பது குறித்து எவரும் கண்டுகொள்வதே இல்லை. இதனைப் பிரதான கார்ப்பரேட் ஊடகங்கள் தங்கள் வசதி கருதி ஒதுக்கித்தள்ளிவிடும். மூர்த்தி போன்று நவீன தாராளமயக் கொள்கை களுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டிருப்பவர்களும் எதுவும் கூறுவது கிடையாது.
நீண்ட வேலையால் ஏற்படும் மரணங்கள்
2016இல் நீண்ட வேலை நேரம் காரண மாக பக்கவாதம் (stroke) மற்றும் மார டைப்பு ஏற்பட்டு 7,45,000 மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இது 2000க்குப்பின் 29 விழுக்காடு அதிகம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் கூறுகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனமும், சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனமும் தொழி லாளர்களின் வேலை நேரம் அதிகரித்த தால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சுகாதாரப் பாதிப்பு குறித்து உலக அளவில் ஆய்வு செய்து அளித்த மதிப்பீட்டில், 2016இல் 398000 பேர் பக்கவாதத்தால் இறந்துள்ளார்கள் என்றும், 3,47,000 பேர் மாரடைப்பால் இறந்துள்ளார்கள் என்றும், இவர்கள் வாரத்திற்கு 55 மணி நேரம் வேலை செய்ததால் இறந்துள்ளார்கள் என்றும் கூறியிருக்கின்றன.
2000க்கும் 2016க்கும் இடையே வேலை நேரம் அதிகரித்ததன் காரணமாக 42% மாரடைப்புக்கு ஆளா யினர் என்றும், 19% பக்கவாதத்திற்கு ஆளா யினர் என்றும் மதிப்பிட்டிருக்கின்றன.
தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நோய்க ளில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் வேலை நேரம் அதிகமாக்கப்பட்டதால் ஏற்பட்டவையேயாகும்.
மேலும் இப்போது நீண்ட நேரம் வேலை செய்யும் மக்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கி றது.
தற்போது உலக அளவில் மொத்த மக்கள் தொகையில் 9% அதிக வேலை நேரத்தில் வேலை செய்துகொண்டி ருக்கிறார்கள். இதன் விளைவாக வேலை சம்பந்தப்பட்ட ஊனம் மற்றும் விரைவில் சாவை நோக்கித் தள்ளப்படும் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
மார்க்சின் வார்த்தைகள் நிரூபணம்
மேலே கூறிய தரவுகள் அனைத்தும் முதலாளித்துவ பாணி உற்பத்தி (குறிப் பாக உற்பத்தி மற்றும் உபரி மதிப்பை உறிஞ்சுதல்) வேலை நேரத்தை அதிகரிப் பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
மனிதனின் உழைப்பு சக்தி சீர்கேடு அடை வது மட்டுமல்ல, உழைப்பு சக்தியின் சோர்வு அகால மரணத்தையும் ஏற்படுத்து கிறது. இவ்வாறு, மேலே கூறியஅனைத்து தரவுகளும் காரல் மார்க்சின் வார்த்தை களை தெளிவாக நிரூபிக்கின்றன.
மோடி, வேலை நேரம் தங்குதடை யின்றி நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்கி னார். தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டு, லேபர் கோடுகள் (Labour Codes) என்ற பெயரில் புதிதாக நான்கு தொழிலாளர் விரோத சட்டங்கள் கொண்டுவந்தார்.
இவை தொழி லாளர்களின் வேலை நேரத்தை நீட்டிப்ப தற்கு எவ்விதத் தடையும் விதித்திட வில்லை. இந்தச் சட்டப்பிரிவுகள் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் முதல் விதி யாக விளங்கும் எட்டு மணி நேர வேலை யுடன் அடிப்படை மனிதாபிமான வேலை நிலைமைகள் இருக்க வேண்டும் என்ப தைக்கூட நிர்ணயித்திடவில்லை. முத லாளிகள் தங்கள் இஷ்டம்போல் வேலை நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று இவை கூறுகின்றன.
இதற்கெ திராக தொழிற்சங்கங்கள் உறுதியுடன் தலையிட்டதன் காரணமாக அரசாங்கம் முகச்சுளிப்புடன் வேலை நேரம் குறித்து சில ஷரத்துக்களை சேர்த்திருக்கிறது.
பாசிசபாணி நிகழ்ச்சி நிரல்
தொழிற்சாலைகள் சட்டத்தில் வேலை நேரம், ஓவர்-டைமுடன் சேர்த்தால் அதிக பட்சம் பத்தரை மணி நேரம் என்று இருந்தது, இப்போது 12 மணி நேரம் என்று அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
வாரத்தின் முதல் நாளான ஞாயிறு வார விடுமுறை நாள் என்றிருந்ததை மோடி ஒழித்துக்கட்டிவிட்டார்.
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020இல் கொண்டுவரப்பட்டுள்ள தொழில் பாது காப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை கள் சட்டம் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிப்பதை மறுப்பதற்குக்கூட அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தி ருக்கிறது.
மேலும் அவர்கள் வேலை நேரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டித்துக்கொள்ளலாம். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் பல மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலத்தில் வேலை நேரத்தை 12 மணி நேரம் வரை விரிவுபடுத்தி இருக்கின்றன.
குறிப்பாக மிகவும் கொடுமையான கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்கூட இவ்வாறு செய்தன. இதற்கெதிராக தொழிலா ளர்கள் கிளர்ந்தெழுந்தபின் அர சாங்கங்கள் பின்வாங்கியிருக்கின்றன.
கர்நாடகாவில் ஆட்சி செய்துவந்த பாஜக அரசாங்கம், சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குச் சற்று முன்னதாக, தங்கள் எஜமானர்கள் நாராயண மூர்த்தி போன்றவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி சட்டம் நிறை வேற்றியது. அதேபோன்றே தமிழ்நாடு அரசும் 8 மணி நேர வேலையை விரிவு படுத்தி ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
இதற்கு மாநிலம் முழுவதுமிருந்து எதிர்க்கட்சியினர் ஒன்றுபட்டு கிளர்ந்தெ ழுந்ததன் பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது.
மதவெறி பிடித்த வலதுசாரி சித்தாந்தத் துடன் ஆட்சி செய்திடும் மோடி வகைய றாக்கள் வரவிருக்கும் தேர்தல் குறித்து சுறுசுறுப்பாகி இருப்பதால், நாராயண மூர்த்தி போன்ற தங்களுடைய கார்ப்பரேட் எஜமானர்களை, தங்களுடைய பாசிச பாணி நிகழ்ச்சிநிரலை முன்னெடு த்துச் செல்வதற்காக முடுக்கி விட்டி ுக்கின்றனர்.
மார்க்ஸ் கூறியதைப்போன்று, மூல தனம் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது.
அதன் கவலையெல்லாம் உழைப்புச் சக்தியை அதிகபட்ச அளவு பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பது மட்டும்தான்.
தொழிலாளர்கள் இறந்தாலும் கூட கவலைப்படாது, தன் லாபத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதே அதன் குறிக்கோள்.
---------------------------------------------------