கனடா .இப்போது அமெரிக்கா?

‘இந்திரா காந்தி பிறந்த நாளில் விளையாடியதால் தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி’-அசாம் முதல்வர் ஹிம்ந்த பிஸ்வா சர்மா.

சென்னையில் முதன்முதலாக omr சாலை இந்திரா நகர் சந்திப்பில் ரூ.18.15 கோடியில் ‘U’ வடிவ மேம்பாலம்.முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மேலும் தாமதம்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பஸ்சுடன் மானந்தவாடி ஆற்றில் தள்ளுவோம்’ கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல்.


மோடி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக அளித்த புகாரில் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பஞ்சாப் குருத்வாராவில் நிஹாங்க் பிரிவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவலர் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். 

மருத்துவப் படிப்புக்கு புதிய தகுதி.பிளஸ் 2வில் அறிவியல் பாடம் படிக்காதவர்களும் டாக்டர் ஆகலாம். தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பால் மாணவர்கள்,பெற்றோர்கள் அதிர்ச்சி.

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: தமிழ்நாட்டில் 3 நாள் மழை நீடிக்கும் 

மாதத்தில் ஒரு நாள் முழுவதும் ஒவ்வொரு பகுதி மக்களுடன் கலெக்டர்கள் தங்க வேண்டும். ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் குறைகளுக்கு உடனடி தீர்வு;- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 

கனடா .இப்போது அமெரிக்கா?

அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வாழும் ஒரு காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கொலை செய்வதற்கு இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அதை அமெரிக்கா முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதியில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் அமெரிக்காவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சதித் திட்டத்தின் இலக்கு குர்பத்வந்த் சிங் பன்னு. இவர் சீக்கிய தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதி. காலிஸ்தானை உருவாக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பின் வழக்கறிஞர். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார்.

இவர் 2020ஆம் ஆண்டு இந்தியாவால் 'பயங்கரவாதி' என்று அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் வான்கூவரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் மாதம், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்து 'நம்பகமான குற்றச்சாட்டுகள்' இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றது, அபத்தமானது’ என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த முறை, அமெரிக்காவில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்துக் கூறப்படும் செய்திகள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இந்தியா கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு, பன்னுவை கொல்ல நடந்த சதித் திட்டம் பற்றிய தகவல்களை அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது.

ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு பயணம் செய்த பிறகு, இது தொடர்பாக அமெரிக்கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

அமெரிக்கா, ராஜ்ஜீய மட்டத்தில் இந்தியாவை எச்சரித்தது. மேலும் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒருவர் மீது நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது, என்று அந்த செய்தித்தாள் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது.

தற்போது, இந்த வழக்கை பகிரங்கப்படுத்த வேண்டுமா அல்லது நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணையை கனடா முடிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை விவாதித்து வருவதாகவும் அந்தச் செய்தியறிக்கை கூறுகிறது.

வான்கூவரில் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனேடிய அதிபர் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அமெரிக்கா இது பற்றிய விரிவான தகவல்களை அதன் நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது. இந்த வழக்குகளின் ஒரே மாதிரியான வடிவம் குறித்து இந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கையின்படி, அமெரிக்க நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐ இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதோடு 'சட்ட விஷயங்கள்' மற்றும் 'ரகசிய இராஜதந்திர தகவல்தொடர்புகள்' குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதில்லை என்றும் கூறியது.

இந்தியா ஆட்சேபனை தெரிவித்த பிறகு சதித்திட்டம் தீட்டியவர்கள் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டார்களா, அல்லது எஃப்.பி.ஐ தலையிட்டு சதித்திட்டத்தை முறியடித்ததா என்பதை இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை என்றும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியறிக்கை கூறுகிறது.

குர்பத்வந்த் சிங் பன்னு காலிஸ்தான் ஆதரவாளரான அமெரிக்க வழக்கறிஞர். அவரது வயது 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

இவர் அமிர்தசரஸ் அருகே உள்ள கான்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மகிந்தர் சிங் பஞ்சாப் மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் பணிபுரிந்தவர்.

பன்னு 1990களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இப்போது அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ளார். கனடாவில் காலிஸ்தான் சார்பு நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அவர் அடிக்கடி காணப்படுகிறார்.

நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார்.

பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, அவரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து அமெரிக்க நிர்வாகம் அவருக்குத் தெரிவித்ததா இல்லையா என்பதைக் கூற பன்னு மறுத்துவிட்டார். அவர், “அமெரிக்க மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்தட்டும்,” என்றார்.

பன்னு மேலும், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். பைடன் நிர்வாகம் இதுபோன்ற சவால்களைச் சமாளிக்கும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன்," என்றார்.

கடந்த வாரம், பன்னு, ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று சீக்கியர்களுக்கு எச்சரித்திருந்தார். அவ்வாறு செய்வது ‘உயிருக்கு ஆபத்தானது’ என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை பன்னு மீது ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, குழுவாகச் செயல்படும் குற்றவாளிகள், சட்டவிரோத துப்பாக்கி வியாபாரிகள், பயங்கரவாதிகள், மற்றும் பலர் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது,’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், "இந்தத் தகவல் இரு நாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயம். இது குறித்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பையும் பாதிப்பதாகவும், அதனால் இந்தியா இதைத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்கா வழங்கிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது.

-----------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?