திடீரென

அதிகரித்த மர்மம்?

மகாராஷ்டிராவில் கடைசி நேரத்தில் திடீரென வாக்குப்பதிவு அதிகரித்தது எப்படி என்று முன்னாள் தேர்தல் கமிஷனர் சந்தேகம் கிளப்பி இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ள அமோக வெற்றி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இத்தேர்தல் முடிவுகளில் சந்தேகம் கிளப்பி இருக்கின்றன.


இதனை நிரூபிக்கும் விதமாக 95 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம் இருந்ததை தேர்தல் கமிஷன் ஒப்புக்கொண்டுள்ளது.

பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்க்கையில் 5 லட்சம் வாக்குகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.


இது குறித்து தேர்தல் கமிஷன் விளக்கமளிக்க வேண்டும் என்று சிவசேனா(உத்தவ்) கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு தபால் வாக்குகள் சேர்க்கப்படாததுதான் காரணம் என்று தேர்தல் கமிஷன் விளக்கம் கொடுத்திருக்கிறது.


மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி வரை 55 சதவீதம் வரை தான் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.


ஆனால் மறுநாள் வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு தொடர்பான அறிக்கையில் 66 சதவீதம் வாக்கு பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. ஒரு மணி நேரத்தில் எப்படி இந்த அளவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, ''திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்தது கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது 17சி எனப்படும் விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரி பதிவு செய்வார். அதில் வாக்கு எத்தனை மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் இருக்கும்.

இத்தகவல்கள் தேர்தல் முடிந்தவுடன் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது மறுநாள் தேர்தல் வாக்கு சதவீதம் எப்படி திடீரென அதிகரிக்கும்.


என்னால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சந்தேகம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தேகத்திற்கு தேர்தல் கமிஷன் பதிலளிக்கவேண்டும். அப்படி பதிலளிக்காவிட்டால் ஒட்டுமொத்த தேர்தல் முறையும் சந்தேகத்திற்குள்ளாகிவிடும்'' என்றார்.

இது குறித்து மகாராஷ்டிரா தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம் கூறுகையில், ''தேர்தல் தினத்தன்று மாலை 5 மணி வரை 58 சதவீதம் பதிவாகி இருந்தது. ஆனால் இறுதி வாக்குப்பதிவு 8 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து 66 சதவீதமாக அதிகரித்தது. இது வழக்கமான ஒன்றுதான். கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதோடு வாக்களிக்க 6 மணி வரை நின்ற அனைவரும் 6 மணிக்கு பிறகும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.


நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் மாலையில் அதிகமானோர் வாக்களிக்க வந்தனர். அதோடு 5 மணி வரையிலான வாக்குப்பதிவு விபரங்கள் வாய்மொழியாக போன் மூலம் தெரிவிக்கப்படுபவை.

17 சி நம்பர் படிவம் கிடைத்த பிறகுதான் இறுதி வாக்குப்பதிவு விபரம் தெரிய வரும். 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கூட மாலை 5 மணி வரை 54.4 சதவீதம் தான் வாக்கு பதிவாகி இருந்தது. ஆனால் இறுதி வாக்குப்பதிவு 61.1 சதவீதமாக இருந்தது'' என்றார்.


ஆனால் ஜார்க்கண்டில் இந்த சதவீத பிரச்னை பெரிதாக இல்லையே என்று கேட்டதற்கு, ''ஜார்க்கண்டில் மக்கள் காலையிலேயே வாக்களித்துவிட்டனர். மாலையில் அதிகமாக மக்கள் வரிசையில் காத்திருக்கவில்லை.

அதோடு ஜார்க்கண்டில் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் இருக்கிறது'' என்றார்.


திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்தது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்துள்ளார்.


தேர்தல் தினத்தன்று மாலை 5 மணிக்கு 58.6 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் அதேநாள் இரவு 11.30 மணிக்கு 65.02 சதவீதமாக அதிகரித்தது.

அது மறுநாள் 66.05 சதவீதமாக அதிகரித்தை பட்டோலே சுட்டிக்காட்டினார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?