குடிமகன்களின் வருத்தம்
- இப்படி செய்யலாமா? கவலையில் குடிமக்கள்.....?
விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாயும், ஆஃப் பாட்டிலுக்கு 10 ரூபாயும், முழு பாட்டிலுக்கு 20 ரூபாய் வீதமும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விலையேற்றம் இரவு 10 மணிக்கு அறிவிக்கப்பட்டு, மறுநாள் காலையில் இருந்து புதிய விலை அமல்படுத்தப்படும். ஆனால் சில மாவட்டங்களில் புதிய விலை பிற்பகல் 4 மணிக்குபேக்ஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. காலையில் ஏற்கனவே விற்ற சரக்குகளுக்கும் புதிய விலையிலேயே கணக்கு தரும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பாட்டில் விற்பனை செய்து, புதிய விலையில் கணக்கு கொடுத்தால் 2 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார்கள். இதனால் விலையேற்றத்தை விடவும் அதிக விலைக்கு இரவில் சரக்கு விற்கப்படுகின்றன.
இது போன்ற செயலால் கடை ஊழியர்கள் மட்டுமின்றி குடிமகன்களும் குழப்பமும் -அவதியும் அடைந்தனர்.
ஜெயலலிதா குடிமக்களுக்கு நன்மை செய்வார் என்று வாக்களித்தால் இப்படி செய்து விட்டாரே என புலம்பியபடியே ஒருகுடிமகன் ‘ஆப்’க்கு பதில் ‘குவார்டர்’மட்டும் வாங்கி சென்றார்.
=========================================================================
கபில் சிபில் அடுத்த கல்மாடி
கபில்சிபல் முதலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தபோது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொழில் மற்றும் அவர்களது நிலையை அறிய கனவுத்திட்டம் என்று ஒன்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விவரங்களை சேகரிப்பதற்காக அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் போனிக்ஸ் ரோஸ் எல்.எல்.சி., என்ற கம்பெனிக்கு பணியை கொடுத்து உத்தரவிட்டுள்ளார். இந்த பணிக்கென ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் என தொகை ஒப்பந்தம் ஆனது . ஆனால் இந்த பணி தொடர்பான முதல்கட்டம் துவங்கியதும் 3 தவணையாக ஏறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேலாக பணம் வழங்கப்பட்டு விட்டது .இந்த கம்பெனி 16 சதவீத பணிகள் மட்டும் முடித்துள்ள நிலையில் பணம் இவ்வளவு அவசரமாக வழங்கப்பட்டது ஏன் என தணிக்கைகுழு தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 5 லட்சம் பேர் நிலவரம் குறித்த விவரத்தில் முதல்கட்டத்தில் 20 ஆயிரம் பேர் குறித்த விவரமாவது தயாரித்திருக்க வேண்டும், ஆனால் 3 ஆயிரத்து 300 பேர் தகவல் மட்டும் ரெடியானது. இந்த நிலையில் 2 வது கட்ட பணிக்கும் பணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற செலவீனம் என்றும் இது மத்திய அரசுக்கு இழப்பு என்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள தணிக்கை குழு நிர்வாகி கூறியிருக்கிறார்.
மத்திய அமைச்சரவையில் ( 2007 ம் ஆண்டு ) முதலில் பொறுப்பேற்றபோது கபில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட மாற்றத்தில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டது. ஆ.ராசா வகித்து வந்த தொலைதொடர்பு துறை தற்போது இவரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றதும் ஆ.ராசா அரசுக்கு ஏற்படுத்திய நஷ்டம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அல்ல, மிக சொற்றபமான 30 ஆயிரம் கோடிதான் என்று நியாயப்படுத்தினார்.
இந்நிலையில் லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் கபில்சிபலுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த மசோதா உருவாக்குவதில் மக்கள் சார்பில் நியமிக்கப்பட்ட சமூக ஆர்வலகளுடன் கருத்து வேறுபாடு எழுந்தது. இவரது அணுகுமுறை சரியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ரிலையன்ஸ் நிர்வாகம் யூனிபைடு அக்சஸ் சர்வீஸ் முறைகேடு தொடர்பாக தொலை தொடர்பு ஆணையம் ரிலையன்ஸ் நிர்வாகத்துக்கு ரூ. 650 கோடியை அபராதமாக விதித்தது. ஆனால் கபில் சிபல் இதை ரூ. 5 கோடியாக குறைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணையின் போது” இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை எனவும், உத்தரவு ஏதும் பிறப்பிக்க விரும்பவில்லை” எனவும் சுப்ரீம்கோர்ட் கூறிவிட்டது.
இது போன்ற ஊழல் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பொறுப்பின்றி விலகிக்கொள்வது சரியானதாகத் தெரியவில்லை.
இது போன்ற ஊழல்வாதிகளை பற்றி முறையிட உயர் அதிகார மையம் இல்லையே.
ஊழல் செய்வோருக்கு இது போன்ற விலகல்கள் சாதமாகிவிடும்.2ஜி முறைகேட்டில் மட்டும் அப்படி என்ன ஆவல் உச்ச நீதி மன்றத்திற்கு?
இது போன்ற கேள்விகள் கிளம்பிவிடக்கூடாது.
=========================================================================
சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணீயம் விலகல் ஏன்?
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் விடுத்த கோரிக்கைகளை அவர் நிராகரித்து விட்டார். தனது கைப்பேசியையும் அவர் சுவிட்ச் ஓப் செய்து விட்டார். கோபால் சுப்ரமணியத்தின் ராஜினாமா முடிவால் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில், 2ஜி ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கோபால் சுப்ரமணியத்தின் இந்த முடிவால் அரசுக்கு பெரும் சரிவு ஏற்படும். . 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் சார்பில் கோபால் சுப்ரமணியம் தான் வாதாடி வருகிறார். தற்போது ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கில் கோபால் சுப்பிரமணியம் ஆஜராவதை விரும்பாத சிபல், தனக்காக வாதாட ரோஹின்டன் நரிமன் என்ற தனியார் வக்கீலை ஏற்பாடு செய்தார். இதற்கு மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் ஒப்புதல் அளித்து நரிமனை வக்கீலாக ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். இதனால் கோபமடந்த கோபால் சுப்ரமணியம் தனது பதவியை விலகுவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும் நேரில் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக்கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது”, 2ஜி வழக்கில் நான் தான் ஆஜராகி வருகிறேன். இந்த நிலையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனியார் வக்கீலை நாடியது எனது அலுவலகத்தை களங்கப்படுத்துவதாக நான் கருதினேன். ராஜினாமா செய்தேன். எனது நிலை குறித்து குடியரசுத் தலைவரிடம் விவரித்தேன். அரசு எனக்கு இந்த சொலிசிட்டர் ஜெனரல் பணியை வழங்கியதற்காக நன்றியும் தெரிவித்தேன்” என்றார்.
கோபால் சுப்ரமணியம் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடமே அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொறுமை காக்குமாறும், ராஜினாமா முடிவைக் கைவிடுமாறும் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார் என்று தெரிகிறது. ஆனால் தனது முடிவில் உறுதியுடன் இருப்பதாக கோபால் சுப்ரமணியம் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளார். அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கும், கோபால் சுப்ரமணியம் தனது முடிவை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதையும் கோபால் சுப்ரமணியம் நிராகரித்து விட்டார். நேற்று தனது கைப்பேசிகளை ஆப் செய்து விட்டார்.
, கபில் சிபலுக்கு ஆதரவாக செயல்பட்டு மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, கோபால் சுப்ரமணியத்தை சமாதானம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
”கோபால் சுப்ரமணியம் எடுத்த முடிவு மிகச் சரியானது” என முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறியுள்ளார்.” தன்னை கவுரவத்துடன் அரசு நடத்தவில்லை என்று கருதி, உடனடியாக தனது பதவியைவிட்டு விலகியுள்ளார் கோபால் சுப்ரமணியம். அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது. மேலும் கபில் சிபல் தொடர்பான கோப்புகளை அவருடைய அனுமதி கூட பெறாமல் அரசு எடுத்துச் சென்றது கோபால் சுப்பிரமணியத்தை அவமதிப்பது போலாகும். இதை உணர்ந்து தான் அவர் தனது பதவியை உதறியுள்ளார்.”
-என வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆக கபில் சிபில் ஒரு பிரச்னைகளை உருவாக்கும் மனிதராகவேயுள்ளார்.