எங்கள் ஜெயகாந்தன்!

ஜெயகாந்தன் இன்று நம்மோடு இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.அவர் எழுதுவதை நிறுத்திப் பல காலம் ஆயிருந்தாலும், இலக்கியபயணத்தில் ஏதோ அவர் நம்மோடு எந்நேரமும் கூடவே இருப்பதான உணர்வு இருந்துகொண்டேதான் இருந்தது.

இந்த ‘விட்டகலா’நினைவு எழுத்தாளனுக்கு மட்டுமல்ல வாசகருக்கும் இருந்தது.இத்தனைக்கும் அவர் கருத்துக்களோடு நாம் முரண்பட்டு நின்ற சந்தர்ப்பங்கள் பல உண்டு.
 என்றாலும் இந்த மன நெருக்கம் அவரோடு நம் எல்லோருக்கும் ஏற்படக்காரணம் அவரது எழுத்து.
ஒரு எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பி(வேறு தொழில் ஏதும் பார்க்காமல்) வாழ்ந்துவிட முடியும் என முதன் முறையாக தமிழில் சாதித்துக் காட்டியவர் ஜெயகாந்தன்.

சந்தை எழுத்தாளர்களின் வணிக எழுத்துக்களைப்பற்றி நாம் இங்கு பேசவில்லை. ஒரு சமூக அக்கறையோடும் சமூகப்பொறுப்போடும் எழுதும் எழுத்தாளன் நின்று சாதிக்க முடியும் எனக் காட்டியது அவர்தான். பத்திரிகைகளை அண்டிப்பிழைக்கும் வாழ்வை முற்றிலுமாக உதறித்தள்ளித் தனித்து நடந்தவர் ஜெயகாந்தன்.
பத்திரிகைகள் அவர் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கும் நிலையை உருவாக்கி கம்பீரமான ஓர் எழுத்தாளனாக உயர்ந்து நின்ற ஆளுமை அவர்.
எழுத்தாளன்னா சும்மாவா என்கிற பெருமித உணர்வை எழுத்தாளர் சமூகத்துக்குப் பெற்றுத்தந்தவர் அவர்தான்.கல்லூரி நாட்களில் என் போன்ற பல இளைஞர்களை - எங்களின் அன்றாட வாழ்வின் பல தருணங்களை-எங்களின் சிந்தனைப்போக்கை வழிநடத்திய ஆளுமையாக, தீர்மானிக்கும் சக்தியாக ஜெயகாந்தனே விளங்கினார்.
வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வழியில் சைக்கிள் மிதித்தபடி நாங்கள் ஜெயகாந்தனை விவாதித்துச் செல் வோம். ஆகவே, எனக்கு எப்போதும் ஜெயகாந்தனின் நினைவுகளோடு ஒரு சைக்கிளும் தவறாமல் கூட உருண்டு வந்துவிடும்.
முதன் முதலாக நான் அவருடைய `கோகிலா என்ன செய்துவிட்டாள்’ என்கிற குறுநாவலைத்தான் வாசித்தேன்.பிரிகிற முடிவெடுத்துப் பிரியும் அந்த ஒரு நொடியில் மனம் மாறி மீண்டும் ஒன்று சேரும் தம்பதிகளின் மனப்போராட்டம்தான் கதை
.மனதுக்குள்ளும் அவர்களுக்கிடையில் வெளிப்படையாகவும் நடக்கும் முடிவற்ற விவாதங்கள்தாம் கதையின் மைய அச்சு. 
‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ கதையில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுடன் ஓடி வரும் கோகிலாவை அவளது கணவன் தாவி உள்ளே இழுத்துக் கொள்ளும் அந்தக் காட்சி கணக்கிலடங்காத தமிழ்ப்படங்களில் பின்னர் தொடர்ந்து இடம் பெற்றது அக்காட்சியின் வலுவைச் சொல்லும் சாட்சியாகும்.
ஜேகேயின் தனிச்சிறப்பு என்பதே கதைகளுக்குள் அவர் இடையறாது நிகழ்த்தும் தத்துவ விசாரமும் விவாதமும்தாம்.
 ’பாரிசுக்குப்போ’ என்கிற நாவலில் கலையின் சாரம் குறித்தும் கலையின் அவசியம் குறித்தும் அவருடைய கதாபாத்திரங்களின் வழியே அவர் நடத்தும் விவாதங்கள் ஆழமானவை. வசீகரமானவை.
ஒரு சமூக அக்கறையோடும் சமூகப்பொறுப்போடும் எழுதும் எழுத்தாளன் நின்று சாதிக்க முடியும் எனக் காட்டியது ஜெயகாந்தன் தான்.ஒடுக்கப்பட்ட, சேரிவாழ் மக்களின் வாழ்வைத் தமிழ்க் கதைப்பரப்புக்குள் கொண்டுவந்தவரும் அவரே.
அன்றைய நாட்களிலேயே இவ்வளவு துணிச்சலாக தத்துவ விசாரணையை நாவலுக்குள் கொண்டுவர முடிந்திருப்பது இன்றைக்கும் வியப்பளிக்கிறது.
சமூகம் என்ன நினைக்கும் என்பது பற்றிக் கவலைப் படாமல் (சமூகம் என்பது நாலு பேர் என்றொரு குறுநாவலும் எழுதிவிட்டார்) தனக்குச் சரியென்று பட்ட கருத்தை வெளிப் படையாக முன்வைப்பது ஜெயகாந்தனின் அடையாளம். மற்றவர்கள் அவரை அப்படியே அன்று ஏற்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.
 அவரைப்போன்ற சாயலுடன் அவர் படைத்த எழுத்தாளர் ஆர்.கே.வி. பற்றி அவருடைய தாயார் கூறுவதாக அமைந்த வார்த்தைகளில் அவர் இவ்விமர்சனத்தை வைத்து எழுதியிருக்கிறார்: “இவன் எழுதற கதைகளைப் பத்தியா பேசிண்டிருக்கேள்?
 உன்னை மாதிரி இருக்கறவாதான் ஒரேயடியாப் புகழறேள்.
இவன் என்ன எழுதறான்?
எல்லாத்துக்கும் ஒரு கோணக்கட்சி பேசுவான். நேக்கு ஒண்ணும் பிடிக்கறதில்லேடிம்மா. ஆனா, அவனோட பேசி யாரும் ஜெயிச்சுட முடியாது. நியாயத்தை அநியாயம்பான். அநியாயத்தை நியாயம்பான்”( `கங்கை எங்கே போகிறாள்’ நாவலில்).
ஜெயகாந்தனின் சிறுகதைகளில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை அக்கினிப்பிரவேசம்.ஆனந்த விகடன் இதழில் 1968ல் வந்த அக்கதை பெரும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தின. பணக்கார இளைஞன் ஒருவனால் பாலியல் ஏமாற்றுக்கு ஆளான தன் மகளை தலை வழியே தண்ணீரைக்கொட்டி எல்லாம் சரியாப்போச்சு நடந் ததை மறந்துடு என்று சொல்லும் தாயின் கதை அது.
அச்சிறுகதையின் தொடர்ச்சியாக, அது விட்ட இடத்திலிருந்து தொட்ட கதையாக சில நேரங்களில் சில மனிதர்கள் என்கிற நாவலை அவர் 1970இல் எழுதினார். கங்காவும் பிரபுவும் அறிவார்ந்த இரு ஆண்-பெண்ணாக எல்லோருடைய மனங்களிலும் இடம் பிடித்தனர்.
மீண்டும் பத்தாண்டுகள் கழித்து சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் தொடர்ச்சியை கங்கை எங்கே போகிறாள் என்கிற நாவலாகப் படைத்தார். தன் கதாபாத்திரங்களின் வாழ்க்கையோடு இத்தனை அழுத்தமான பிடிமானமும் அவர்களோடு இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்கிற விழைவும் எழுதுகிற துணிவும் தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் ஜெயகாந்தனுக்குத்தான் முதலில் வந்தது.
ஒடுக்கப்பட்ட, சேரிவாழ் மக்களின் வாழ்வைத் தமிழ்க் கதைப்பரப்புக்குள் கொண்டுவந்தவரும் அவரே. ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ கதையில் முற்றிலும் அப்பகுதி வாழ்வைச்சொன்னார்.சினிமாவின் மீதான விமர்சனமாகவும் நாயக பிம்பத்தை கட்டுடைக்கும் பிரதியாகவும் அந்நாவல் அமைந்தது. 
ஜெயகாந்தனின் எழுத்துக்களில்தான் தமிழில் முதன் முறையாக பெண்கள் அழுத்தமான கருத்துக்கள் உள்ளவர்களாக ,ஆண்களை லேசான கேலிச்சிரிப்பால் கீழே விழ வைப்பவர்களாக கம்பீரமாக எழுந்து வந்தார்கள்.
தமிழ்சினிமாவுக்கு ஜெயகாந்தனின் கதைகள் வந்து சேர்ந்தபோது அவருடைய கதைகளுக்கு அன்று சினிமா உலகில் `அறிவாளி பிம்பம் ’ அல்லது அறிவாளி முகத்தோற்றம் பெற்றிருந்த நடிகை லட்சுமி மட்டுமே பொருத்தமானவராக மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.சத்யஜித்ரே போல இந்த மண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் ஒரு தமிழ் சினிமாவைத் தன்னால் எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு அவர் `உன்னைப்போல் ஒருவன்’ படத்தை இயக்க முன் வந்தார்.
சினிமா குறித்து அவருக்கு ஆழமான அறிவும் கருத்தும் இருந்தது” “நல்ல சினிமா என்பது நல்ல புத்தகம் போல என்பது என் கருத்து! நல்ல படங்களைப் பார்த்துத்தான் படம் சம்பந்தப்பட்ட என் அறிவை வளர்த்துக் கொண்டேன். 
எனது அறிவு புத்தகங்கள் படித்து வந்தது இல்லை. எனது இளமைக் காலம் படங்களின் யுகமாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமா அன்றும் இன்றும் அதே கீழ்நிலையிலேயே இருக்கிறது.
 நமது சரித்திரப் பெருமையையோ, நமது மண்ணின் கலாச்சாரப் பெருமையையோ அவை எடுத்துச்சொல்ல முன் வந்தது இல்லை. அதைப் பற்றி நமது தமிழ் சினிமா ஏதாவது பேசியிருக்குமேயானாலும், அவை வெற்றுப் பம்மாத்துக்களாகவே இருக்கின்றன” என்றார் அவர்.உன்னைப்போல் ஒருவன்,யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் ஆகிய படங்களை அவரே இயக்கினார்.
சினிமாவில் அவர் வெற்றி பெறவில்லை.ஆனாலும் அவரது முயற்சி மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தின.
இலக்கிய ரசனையும் வாசிப்பும் கொண்ட பலரை சினிமா எடுப்பவர்களாக மாற்றிய வித்தையை விந்தையை தொடங்கி வைத்ததும் ஜெயகாந்தன்தான்.
அவருடைய இந்த சினிமா முயற்சி பற்றி அவர் கூறிய வார்த்தைகள் ‘இந்த சமுத்திரத்தில் நமது கட்டு மரத்தில் போன பயணம் மறுபடியும் நாம் கரையேறி வருகிற பட்சத்தில் வெற்றிகரமான பயணம் என்றே சொல்லவேண்டும்.
’ஜெயகாந்தனின் எழுத்துக்கள் மீது வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனம் அவர் தன் கதாபாத்திரங்களை சுதந்திரமாக வாழ விடுவதில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் இவரே ஏறி நின்று பேசுகிறார்.
அமைதி என்பது இல்லாத சத்தமான எழுத்துக்கு சொந்தக்காரர் ஜேகே என்பார்கள்.
எனக்கும் சில காலம் அப்படியான விமர்சனம் அவர் படைப்புக்கள் மீது இருந்தது. ஆனால் ஜேகே என்கிறஅவ்வளவு பெரிய ஆகிருதியின் மீது விமர்சனம் வைக்கிற அளவுக்கு... என்று ஒரு வரி உடனே மனசில் ஓடும்.எழுந்தவிமர்சனமெல்லாம் சுக்கு நூறாக உடைந்து விழும். ஜேகேயால் உந்துதல் பெறாத எழுத்தாளர் என யாரும் எங்கள்தலைமுறையில் இருக்க வாய்ப்பில்லை.
பேசாப்பொருளை யெல்லாம் பேச வந்த ஜேகேயின் குரல் சற்று ஓங்கித்தன் ஒலித்துவிட்டுப்போகட்டுமே. கலை அமைதியை ஏன் அவரிடம் வற்புறுத்த வேண்டும் என சமாதானம் கொள்ளலாம். ஆனால் சமீபத்தில் தமிழ் இந்து நாளிதழில் சமஸ் அவரை சந்தித்து வெளியிட்ட நேர்காணலில் ஒரு பதிலை வாசித்து அப்படியே பல நிமிடங்கள் உறைந்து நின்றேன்.
அவருடைய 80ஆவது வயதில் அவர் இப்படிப்பேசியிருக்கிறார்.
இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்? 
என்ன காரணம்?
இன்றைக்கும் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் மௌனி.நான் மொழியை ஆர்ப்பாட்டமாகப் பயன்படுத்தினேன் என்றால் அவர் ரகசியமாகப் பயன்படுத்தியவர்.அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.மௌனியை அவருக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னது அதிர்ச்சியில்லை. புதுமைப்பித்தனே மௌனியைத்தான் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லிச்சென்றார்.
 ஆனாலும் எனக்கு என் வாசிப்பில் - மௌனி ஒரு போதும் என் மனதைத்தொட்ட எழுத்தாளராக இருந்ததில்லை. ஜெயகாந்தன் மௌனியைத் தனக்குப் பிடிக்கக் காரணம் தன் மொழி நடைக்கு நேர் மாறாக அவர் ரகசியமான தன்மையுடன் எழுதியது என்று குறிப்பிட்டதுதான். தன் ஆர்ப்பாட்ட எழுத்து குறித்த தன்னுணர்வு ஜேகே என்கிற மகாகலைஞனுக்கு இருந்திருக்கிறதே என்கிற புள்ளியில் ஒரு எழுத்தாளனாக என் மனம் நடுங்கிவிட்டது
.நம்மில் எத்தனை பேருக்கு இந்தத் தன்னுணர்வு இருக்கிறது? நீண்டகாலம் தமிழின் புதிய எழுத்தாளர்களின் படைப்புக்கள் எதையும் வாசிக்காமல் போன தன் செயல் சரியல்ல என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அவரது பதிலும் மிக முக்கியமானது.
உங்கள் வெற்றிக்குப் பின்னால் உள்ள சூட்சுமம் என்ன என்கிற இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது “சாமானிய மக்களுடைய வாழ்க்கையை எழுதியதும், அந்த எழுத்தோடு ஒட்டி வாழ்ந்ததும் காரணம் என்று நினைக்கிறேன்.
என் எழுத்தினால் நின்றேன்.என் எழுத்தின் மீது நிற்கிறேன்.இதுதான் ஒரே சூட்சுமம்.யாரிடமும் நான் மண்டியிட்டுக்கை கூப்புவது கிடையாது.” என்றார்.இதுதான் நம் படைப்பாளிகளுக்காக ஜேகே விட்டுச்செல்லும் மிக முக்கியமான வாசகம்.வழிகாட்டுதல் என்று கருதுகிறேன்.கம்யூனிஸ்ட் கட்சியால் வளர்க்கப்பட்ட குழந்தையான அவர் பின்னர் காங்கிரசுக்குப் போனதும் ஜனசக்தியின் குழந்தையான அவர் நவசக்தியில் பணியாற்றியதும் சோவியத்தை இரண்டாம் தாயகம் என்று சொன்ன பொதுவுடமைவாதியான அவர் ஜய ஜய சங்கர என்று நாவல் எழுதியதும் போன்ற பல சங்கடங்களை அவர் நமக்குத் தந்தபோதிலும் கூட அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அவற்றையெல்லாம் பெரிதாக மனதில் எடுத்துக்கொள்ளாமல் அவர் எங்கள் ஜெயகாந்தன் என உரிமை கொண்டாடவும் நெருக்கம் கொள்ளவும் வைப்பது இந்த எழுத்துத்தான்.
பிரம்ம ராட்சஷமாக எழுந்து நிற்கும் அவருடைய எழுத்துத்தான்.அவரோடு கிட்ட நின்று பேச முடியுமா என்கிற சந்தேகம் எவருக்கும் எழுவது இயல்பு.எனக்கும் அப்படி ஒரு தூரத்தில் வைத்துப்பார்க்கும் மனநிலைதான் நீண்டகாலம் இருந்தது. 
ஆனால் ஒருமுறை கிட்டப்போய்த் தொட்டுப்பார்த்து விட்டால் அடடா இது குழந்தையல்லவா என்கிற குதூகலம் வந்துவிடும்.தமிழ்ச்சமூகத்தை ஒட்டுமொத்தமாகக் கட்டிப்போட்ட எழுத்தாளன் ஒருவன் வாழ்ந்தான் என்றால் அது எங்கள் ஜேகே மட்டும்தான்.இதை ஜேகே பாணியில் சத்தமாக உலகுக்குச் சொல்லுவோம்.மரணங்கள் குறித்து ஜேகே சொன்னார், “அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். 
அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டாம். ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்“ஆகவே நாம் சம்பிரதாயமாக அவருக்கு அஞ்சலிக் குறிப்புகள் எழுத வேண்டாம். அவருடைய எழுத்தின் வழி வெளிப்பட்ட இந்த மண்ணின் இந்த மக்கள் வாழ்வின் உயிர்ப்பை தொட்டுத் தரிசிப்போம்.
அவர் எழுத்தின் வழி நின்று கலை இலக்கியப்பயணம் தொடர்வோம்.
                                                                        -ச.தமிழ்ச் செல்வன்.
நன்றி:தீக்கதிர்.

==================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?