புதன், 17 அக்டோபர், 2018

எழுபதை தாண்டிய நான்கு.!

காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை   பா.ஜ.க நான்காண்டுகளில் செய்துள்ளது உண்மையே!!
பேல் விமான ஊழல் விவகாரத்தில் தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள் எழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. 
ரபேல் விமான ஒப்பந்த ஷரத்துகளின் படி அந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் கூட்டுப் பங்கு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதற்கு தொழில்நுட்பங்களை மாற்றித் தர வேண்டும் எனவும், இந்திய நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து தான் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் சொல்கிறது. 
இதன்படி, மன்மோகன் அரசு போட்டிருந்த ஒப்பந்தத்தை அடுத்து ரபேல் நிறுவனம் இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உடன் இணைந்திருந்தது.
இந்நிலையில் மோடி தலைமையிலான அரசு பழைய 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது. அதன்படி முதல் கட்டமாக 36 விமானங்கள் வாங்குவது திட்டம். 
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் படி, விமானங்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதுடன் கூட்டுப் பங்கு நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் நுழைக்கப்பட்டது. 

இது குறித்து புகார்கள் எழுந்த போது “இது அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால், தஸ்ஸால்ட் தெரிவு செய்த கூட்டு நிறுவனம் குறித்து எமக்குத் தெரியாது” என்கிற பதிலை மத்திய அரசு – குறிப்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி வந்தார்.
இந்நிலையில் மீடியாபார்ட் என்கிற பிரெஞ்சு பத்திரிகை, தஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆவணங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை கூட்டு சேர்த்துக் கொண்டால்தான் ஒப்பந்தம் கிடைக்கும் என தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. 
மீடியாபார்ட்டில் வெளிவந்துள்ள கட்டுரையின் படி, தஸ்ஸால்ட்டின் மூத்த அதிகாரி லோயிக் செகாலென் தனது ஊழியர்களுடன் 2017 மே 11ம் தேதியன்று நடத்திய கலந்துரையாடலின் போது, ஒப்பந்தத்தை வெல்ல வேண்டுமெனில் ரிலையன்சை அனுசரித்துப் போக வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.
ரபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் விவகாரங்களை காங்கிரசு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் ஓரளவுக்கு சொரணை உள்ள ஊடகங்களும் தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கின்றன. 
அதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் பயணமாக பிரான்சு சென்றிருப்பதுடன் அங்கே தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ரபேல் ஒப்பந்த ஊழலை மிகப் பெரிய அளவில் கிளப்பும் திட்டத்துடன் காங்கிரசு கட்சி இருப்பது அதன் சமீபத்திய நடவடிக்கைகளில் இருந்து தெரிய வருகின்றது. 
கடந்த வாரம் பெங்களூரு வந்த காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, அங்கு ஹெச்.ஏ.எல். நிறுவன ஊழியர் சங்கங்களைச் சந்தித்துள்ளார். 
ஊழியர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தம் ஹெச்.ஏ.எல்-ன் உரிமை என்றும், அதைப் பெற்றுத் தருவது தனது கடமை என்றும் பேசியிருக்கிறார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, “தின்னவும் மாட்டேன், தின்ன விடவும் மாட்டேன்” என்கிற முழக்கத்தை முன் வைத்த மோடி, ஊழலை ஒழிப்பதே தனது முதன்மை லட்சியம் எனக் கூறியிருந்தார். மோடி அப்போது எடுத்த அதே ஆயுதத்தை இப்போது காங்கிரசும் கையிலெடுத்திருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமனின் திடீர் பிரான்சு விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. 

ரபேல் விவகாரத்தை இந்தியாவில் உள்ள மையநீரோட்ட ஊடகங்களில் விவாதமாகாமல் தடுப்பதில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று விட்டது.
எனினும், பிரான்சில் உள்ள ஊடகங்களோ தொடர்ச்சியாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
சில வாரங்களுக்கு முன் அனில் அம்பானியை எங்கள் தலையில் கட்டி விட்டார்கள் என முன்னாள் பிரான்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலாந்தே பிரான்சு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். 
அந்த தகவலை பிரான்சு அரசாங்கம், இந்திய அரசாங்கம், தஸ்ஸால்ட் நிறுவனம் என அனைவரும் மறுத்து வந்த நிலையில்தான் தற்போது தஸ்ஸால்டின் ஆவணங்களை மீடியாபோர்ட் அம்பலப்படுத்தியுள்ளது.
எனவே, முடிந்த வரை பிரான்சு / ஐரோப்பிய பத்திரிகைகளில் உண்மைகள் கசிவதைத் தடுக்கும் நோக்கத்தோடு தான் ஊறுகாய் மாமி சென்றிருப்பார் என்பதை ஊகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. 
எப்படிப் பார்த்தாலும், இந்திய அடிமை ஊடகங்களின் வாயை அடைத்ததைப் போல் ஐரோப்பிய ஊடகங்களின் வாயை அடைப்பது அத்தனை சுலபமில்லை என்பதோடு உண்மையை நிரந்தரமாக மூடி மறைப்பதும் சாத்தியமற்ற காரியம்.
காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று .
அது எதில் உண்மையோ இல்லையோ ஊழல் விவகாரத்தில் அசைக்க முடியாத உண்மை என்பதை ரபேல் விவகாரத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
=========================================================================================
மிடூ முதல் பலி.
 வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மீ டூ விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், எம்.ஜே.அக்பருடன் பணியாற்றிய 10க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணியும் ஒருவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அமைச்சர் அக்பரை விமர்சித்தன. அக்பர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, தன் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்கள் கையாள்வார்கள் என்றும் அதன் பிறகு எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் எம்.ஜே.அக்பர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஜே.அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கபூர் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.