இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 21 ஜனவரி, 2019

சிறையில் கூட சிறப்பு


"கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு "என்பது பழமொழி.
சில்லறை வெட்டுபவர்களுக்கு சிறையில் கூட சிறப்பு.
இதுதான் சரி.

'பெங்களூரு சிறையில், சசிகலா சலுகை அனுபவித்தது உண்மை தான்' என, உயர்மட்ட அதிகாரிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. சிறையில் சகல வசதிகளுடன், சொகுசாக இருந்த பகீர் தகவல், விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதால், சசிகலா வேறு சிறைக்கு விரைவில் துாக்கியடிக்கப்படுவார். 

சசிகலாவுக்கு துணை போன ஜெயிலர்களை, கூண்டோடு மாற்றவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கர்நாடக அரசு தயாராகி வருகிறது.

மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவரும், அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

 சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களில், அதிகாரிகள் பணம் பெற்று, சசிகலாவுக்கும், இளவரசிக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கியதாக, அப்போதைய சிறைத்துறை, பெண் அதிகாரி, டி.ஐ.ஜி., ரூபா புகார் தெரிவித்தார்.

 இதற்காக, சிறைத்துறை, டி.ஜி.பி., சத்தியநாராயண ராவ் தரப்பில், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும்,குற்றச்சாட்டு எழுந்தது.இந்த குற்றச்சாட்டு, கர்நாடகா அரசியலில், அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ரூபாவின் குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட சிறைத்துறை உயர் அதிகாரிகள் மறுத்தனர். இது குறித்து விசாரணை நடத்த, அப்போதைய கர்நாடக முதல்வர், சித்தராமையா உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி., ரூபா, வேறு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். 
 இந்நிலையில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையில், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 

 இந்தக் குழு, சிறையில் ஆய்வு நடத்தியது. 

அப்போது, சிறையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட அறிக்கையை, இந்தக் குழு, 2018 நவம்பரில், கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தது.

தற்போது, அந்த அறிக்கையில் இடம் பெற்ற, பகீர் தகவல்கள் அம்பலமாகிஉள்ளன. சசிகலாவுக்கும், இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி, ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. 
சிறை வளாகத்தில் உள்ள, 28 அறைகளில், 100 பெண்கள் இருந்தனர்.

அறைக்கு நான்கு பேர் வீதம் தங்க வைப்பதற்குபதிலாக, சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கியது போக, மீதமிருந்த, 20 அறைகளில், 98 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். சசிகலா தங்கியிருந்த அறையில், திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. 

'அறைக்குள் பூனைகள் நுழைவதை தடுக்க, திரைச்சீலைகள் போடப்பட்டன' என, சிறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். 

'குக்கர் உள்ளிட்ட பொருட்கள், சசிகலா அறையில் உள்ளன' என, ரூபா கூறியிருந்தார்.'ஆய்வின் போது, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் இல்லை; ஆனால், அறையில் சமையலுக்கான மஞ்சள் துாள் காணப்பட்டது. 

இதன் வாயிலாக, சிறை அறையில், சசிகலாவுக்கு, தனியாக சமையல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என, விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும், சசிகலாவும், இளவரசியும் வெளியே சென்று வந்த, 'வீடியோ' குறித்தும், உயர்மட்டக் குழு விசாரணை நடத்தியது.
இருவரும் பார்வையாளர்களை சந்திக்கச் சென்றதாக கூறப்பட்டிருந்தாலும், 'சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும், 'சிசிடிவி' காட்சிகளில் பதிவான நேரத்திற்கும், வேறுபாடு உள்ளது' என, விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


நீதிமன்றம் உத்தரவிட்டதாக கருதி, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியதாக, சிறைத் துறையினர் கூறிய தாகவும், அக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறை வளாகத்தில், சொந்த  உடை அணிய, சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள தாகவும், அக்குழு தெரிவித்து உள்ளது.இந்தக் குழுவின் அறிக்கையில், சிறை விதிகளை மீறி, சசிகலாவுக்கு பல்வேறு சொகுசு வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்தது உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. 

இதனால், வேறு சிறைக்கு சசிகலா மாற்றப்படலாம் என, தெரிகிறது.

மேலும், சசிகலாவுக்கு வசதிகள் கிடைக்க துணை போன, ஜெயிலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை, விரைவில் கூண்டோடு மாற்றவும், கர்நாடக அரசு தயாராகி வருகிறது.


வினய்குமார் குழு அறிக்கையை, டி.ஐ.ஜி., ரூபா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
'2018 டிச., 28க்குள், ரூபாவிற்கு, விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, நவ., 28ல், நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜன., 1ல், ரூபாவுக்கு, வினய்குமார் அறிக்கை, 'விரைவு தபால்' வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, ரூபா கூறியதாவது:நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என, உயர்மட்ட விசாரணை அறிக்கையில் நிரூபணமாகி உள்ளது.

 ஆனாலும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள், விசாரணையை மெத்தன மாக நடத்தி வருகின்றனர். விசாரணையை விரைவாக முடித்து, தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும். தவறு செய்தவர் கள் யாராக இருந்தாலும்,சட்டப்படி தண்டிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

சிறை அதிகாரிகளுக்கு, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 

இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா, சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணை இன்னும் முடியவில்லை. 
இறுதி கட்டமாக, சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள, சில முக்கிய அரசியல் புள்ளிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. 

அப்போது, அவர்கள் போலீசில் வசமாக சிக்குவர் என, கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 விசாரணை அறிக்கை:

* சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு அறைகளில், ஒரு அறையில், சொகுசு கட்டில் மற்றும் படுக்கை விரிப்புகள் போடப்பட்டு இருந்தன


* சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில், 'ஏசி' வசதியும் செய்யப்பட்டு இருந்தது


 

* பார்வையாளர்களை சந்திக்க, சசிகலாவுக்கு, ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது பயன்படுத்தப்படாத ஒரு அறையை, அவருக்காக அலங்கரித்து, ஒதுக்கி கொடுத்துள்ளனர்

* கைதிகள், பார்வையாளர்களை சந்திக்க, குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆனால், சசிகலாவுக்கு, அதிக அளவில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டது* சசிகலா, இளவரசி ஆகியோர் தங்கி இருந்த பகுதிகளில், ஆண் காவலர்கள் யாரும் பணி யமர்த்தப்பட வில்லை; பெண் காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்* சிறையில் ஆய்வு நடத்திய போது, சில ஆதாரங்களை அழிக்க, அதிகாரிகள் முயற்சி செய்தது தெளிவானது* கண்காணிப்பு கேமராக்களை இயங்க விடாமல், அதிகாரிகள், 'சுவிட்ச் ஆப்' செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது பழைய மொழி.
சில்லறை வெட்டுபவர்களுக்கு சிறையில் கூட சிறப்பு.
இதுதான் சரி.
====================================================
ன்று,
ஜனவரி-21.

 லெனின் நினைவுதினம்.

க்யூபெக் கொடி நாள்

அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது(1925)

உலகின் முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது(1954)

 இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன தனி மாநிலங்களாக்கப்பட்டன(1972)

====================================================
 லெனின் வாழ்கிறார்!
1930 ஜனவரி 21 அன்று லாகூர் சிறை அதிகாரிகளை சந்தித்து ஒரு தந்தியடிக்க வேண்டும் என்கிறார் பகத்சிங்.

அன்று .
 பகத்சிங் தூக்கிலிடப்பட நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த நேரமது.

 ஆகவே அதிகாரிகள் ஆச்சரியத்தில் யாருக்கு தந்தி, என்ன விஷயம் என்று கேட்கிறார்கள்.
ரஷ்யாவுக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்கிறார் பகத்சிங். வாசகம் என்ன என வினவுகின்றனர்.
“மகா லெனினுக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள்” என்கிறார் பகத்சிங்.

 இன்று லெனின் நினைவுதினம். அவருக்கு இந்திய புரட்சியாளர்களின் மரியாதையை தெரிவிக்க இந்த தந்தி வாசகத்தை உடனே மாஸ்கோவிற்கு அனுப்புங்கள் என்கிறார்.
மூன்று மாதங்கள் கழித்து தூக்கிலிடப்பட வேண்டிய நாளில் நேரம் நெருங்கிவிட்டது.

பகத்சிங்கின் சிறைக் கொட்டடிக்கு அதிகாரிகள் வருகின்றனர். உங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது; கடைசி ஆசை என்ன என்று - சிறை விதிகளின்படி கேட்கிறார்கள் அதிகாரிகள். கொஞ்சம் பொறுங்கள், நான் ஒரு முக்கியமான புரட்சியாளரோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

அதை முடித்துவிட்டு தூக்கு மேடைக்கு நானே வருகிறேன் என்கிறார் பகத்சிங்.
லெனின் எழுதிய இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் குறித்த நூலை தான் படித்துக் கொண்டிருப்பதைத் தான் பகத்சிங் இப்படிக் குறிப்பிடுகிறார்.
உலக முதலாளித்துவம் அதிர்கிறது1917 இல் ரஷ்யாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்டோபர் புரட்சி லெனின் தலைமையில் நடைபெற்றது.

உழைப்பாளர்கள் - கூலிப் பாட்டாளிகள் கையில் அரசு ஆட்சி அதிகாரம் என போல்ஷ்விக்குகள் லெனின் தலைமையில் பிரகடனம் செய்கின்றனர்.
முதல் உலகப் போரால் அழிவின் விளிம்பில் இந்த பூவுலகமே தொங்கிக் கொண்டிருந்த நேரம், ரஷ்யாவில் கொடுங்கோலன் ஜார் மன்னன் ஆட்சி வீழ்த்தப்பட்டு “அமைதியும் ரொட்டியும்” வேண்டுமென நகர்ப்புறத்து தொழிலாளி வர்க்கமும், கிராமப்புறத்து விவசாயிகளும் ராணுவ வீரர்களும் செங்கொடியேந்தி, பவனி வருகின்றனர். உலக முதலாளித்துவம் அதிர்கிறது.
இது உலகத்தின் சாபக் கேடு என சித்தரிக்கிறது.

இப்போது மாதிரி அப்போது செய்தித் தொடர்பு நிறுவனங்கள் இல்லாத காலம். நமது மகாகவி பாரதி, பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்த நேரம்.
அவர் ராய்ட்டர் செய்தி நிறுவனம் மூலமாக லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி குறித்த ஏகாதிபத்திய ஏகவசனத்தை கேட்கிறார்.
 உண்மையை அறிந்த பாரதி, இதை “யுகப் புரட்சி” என வர்ணித்து ஆனந்தக் கூத்தாடுகிறார்.

பொதுவுடைமை சித்தாந்தத்தின் மேன்மையை கொண்டாடிக் களிக்கிறார்.
 பாரதி மட்டுமல்ல; கவிஞர் இக்பால், ஹஸ்ரத் மேகானி, பிரேம்சந்த் என இந்தியாவின் தலைசிறந்த இலக்கிய பிதாமகன்கள், கலைஞர்கள் அக்டோபர் புரட்சியை, லெனினைப் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள்.
இப்படியாக இந்திய தேச பக்தர்களை, விடுதலைப் போராளிகளை உற்சாகமூட்டிய அக்டோபர் புரட்சிக்கும், லெனினுக்கும், இந்தியாவிற்கும் என்ன தொடர்பு; அந்த அந்நியருக்கு இங்கே சிலை எதற்கு என திரிபுராவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் லெனின் சிலையை உடைத்து தரைமட்டமாக்கினார்கள்.

ஐயோ பாவம், அவர்களுக்கு ஏது இந்த இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு?
 அவர்களது தத்துவ ஆசான் வீரசவர்க்கார், சாம்ஜி வர்மா ஆகியோரின் சகாவான லாலா ஹர்தயாள், காரல் மார்க்சை “நவீன ரிஷி” என வர்ணித்த வரலாறு அறியாத கூட்டம் இது. அது அவர்களது மடத்தனம்.

பகத்சிங் - திலகர் - லெனின்
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் படையின் பிரதிநிதியாக ரஷ்யாவின் ஆயுதப் பயிற்சி எடுக்க பகத்சிங் செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சாண்டர்ஸ் கொலையை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் பகத்சிங் சார்பாக ஹயா பிரசாத் கத்தியா, ரஷ்யாவில் ஆயுதப் பயிற்சி எடுக்க அனுப்பி வைக்கப்பட்டார்.
1905 இல் ஒன்றுபட்ட வங்காளத்தை கிழக்கு வங்காளம் (இன்றைய வங்கதேசம்), மேற்குவங்காளம் என பிரிவினையை கர்சன் பிரபு பிரகடனம் செய்தான். வங்காள ராஜதானி மட்டுமின்றி நாடே கொதிந்தெழுந்தது. பல்வேறு புரட்சியாளர் குழுக்கள் இந்த கொடுமைக்கு முடிவு கட்ட தீர்மானித்தனர்.
1908 இல் பிரபுல் சஹி, குதிராம் போஸ் ஆகிய புரட்சியாளர்கள் பீகார் மாநிலம் முசாபுர் நகரில் ரயிலுக்கு குண்டு வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 காரியம் முடிந்தவுடன் பிரபுல் சகி தற்கொலை செய்து கொண்டார்.
 குதிராம் போஸ் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்ட செய்தி கேட்டு, பம்பாயில் திலகர் தனது ‘கேசரி’ இதழில் கண்டித்து எழுதுகிறார்.
 புரட்சியாளர்களை நியாயப்படுத்துகிறார்.
இன்று மோடி அடிக்கடி பயன்படுத்தும் தேசவிரோத சட்டத்தை ஆங்கில அரசாங்கம் திலகரை கைது செய்ய பயன்படுத்துகிறது.
 “தேசவிரோதம்” நிரூபிக்கப்பட்டு திலகர் 6 ஆண்டுகள் பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த காலத்தில் ரஷ்யாவில் லெனின் தலைமறைவாக இருக்கிறார்.
திலகருக்கு வழங்கப்பட்ட இந்த அநீதியை அறிந்து கொதிந்தெழுந்த லெனின், இந்த தண்டனையை கடுமையாக சாடுகிறார்.
 “உலக அரசியலில் பற்றியெரியும் பிரச்சனை” என்ற தனது ஆய்வில் திலகர் கைது செய்யப்பட்ட அக்கிரமத்தை விரிவாக விவரிக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த ஜனநாயகவாதி திலகர் எனவும், அவரது கைதால் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் தரைமட்டமாகும் எனவும் லெனின் அதில் குறிப்பிடுகிறார்.
அப்போது பம்பாயில் திலகருக்கு ஆதரவாக தொழிலாளி வர்க்கம் களத்தில் இறங்கிப் போராடியதை பாராட்டி “இந்தியாவின் உணர்வுப்பூர்வமான அரசியல் போராட்டங்களை நடத்த பாட்டாளி வர்க்கம் தயாராகிவிட்டது” என்கிறார் லெனின்.

இந்திய தேசியவாதிகளுக்கு லெனின் வரவேற்பு
1915 இல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தேசியவாதிகள் சுதந்திர இந்தியாவின் தற்கால அரசாங்கத்தை அமைக்கிறார்கள்.
 ராஜா மகேந்திர பிரதாப் சிங் ஜனாதிபதியாகவும் பர்க்கத்துல்லா பிரதம அமைச்சராகவும் உபயதுல்லா சிந்தி உள்ளிட்டோரை கொண்ட அமைச்சரவையும் அமைக்கப்படுகிறது.
 1919 இல் மகேந்திர பிரதாப் சிங், லெனினை கிரெம்ளின் மாளிகையில் சந்திக்கிறார். அப்பொழுது, ஒரு தேசத்தின் தலைவருக்கு என்ன ராஜீய மரியாதை கொடுக்கப்படுமோ அதை, தனக்கு கொடுத்து கௌரவித்ததாக மகேந்திர பிரதாப் சிங் கூறுகிறார்.
 இந்திய விடுதலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக லெனின் உறுதி செய்கிறார்.


1920 இல் தாஸ்கண்டில் சந்தித்த இந்தியப் புரட்சியாளர்கள் - எம்.என்.ராய், அபானி முகர்ஜி போன்றோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அங்கே ஆரம்பிக்கின்றனர்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் - தொழிலாளிகள், விவசாயிகள் இயக்கம் மற்றும் விடுதலைப் போராட்ட இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியில் லெனின் மிகுந்த அக்கறையையும் ஈடுபாட்டையும் தொடர்ந்து காட்டினார். பிரிட்டிஷ் அரசாங்கம் 1765 இலிருந்து 1938 வரை கொள்ளையடித்த மொத்த செல்வத்தின் மதிப்பு 45 டிரில்லியன் டாலர்கள்.
இதுபோன்ற சுரண்டலால் கொடூரமான பஞ்சங்கள் நிலவின.
 இந்தியர்களின் சம்மதம் இல்லாமல் முதல் உலக யுத்தத்தில் 15 லட்சம் இந்திய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 75 ஆயிரம் பேர் மாண்டனர். இந்தக் காலகட்டத்தில் தான் லெனின் தலைமையிலான அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் நடைபெறுகிறது.

1920 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமாவதற்கு முன்பு ஜூலை-ஆகஸ்ட்டில் மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின்போது லெனினைச் சந்தித்த எம்.என்.ராய் போன்றவர்கள் காந்தியின் தலைமையை விமர்சிக்கிற பொழுது,
 லெனின் தலையிட்டு காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது உண்மைதானே என எம்.என்.ராயிடம் கேட்கிறார்.

அது ஆம் எனில் காந்தியோடு சேர்ந்து இந்திய புரட்சியாளர்கள் பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். காந்தியும் லெனினைப் பற்றியும் அக்டோபர் புரட்சியை பற்றியும் மிகுந்த மரியாதையோடு எப்போதுமே பார்த்தார்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராம் மனோகர் லோகியா, ஜெயபிரகாஷ் நாராயணன் என இந்தியாவில் உருவான பல்வேறு சோசலிஸ்ட்டுகள் லெனினால் உத்வேகம் பெற்று களமாடியவர்கள்.
காலனிய நாடுகளின் விடுதலை குறித்த லெனினது பங்களிப்பு உலக அரசியல் அறிவியலில் முக்கியமான ஒரு அத்தியாயமாகும். இந்திய விடுதலையையும், அதன் வரலாற்றையும் அக்டோபர் புரட்சியையும் அதன் தளபதி லெனினையும் பிரிக்க முடியாது.

இதன் பொருத்தப்பாட்டை புரியாத - ஏன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து துரோகம் செய்த ஒரு கூட்டத்தின் கையில் இந்த தேசம் மாட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த கும்பல்தான் லெனின் சிலையை அகற்றியது. 1887 முதல் 1947 வரையும் அதற்குப் பிந்தைய இந்திய வரலாற்றையும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. இந்திய வரலாறு தனித்தீவானது அல்ல.
 தனிநீரோட்டமும் அல்ல. மானுடத்தின் பொதுவான எழுச்சியின் ஒருங்கிணைந்த பகுதியே நவீன இந்தியா. அப்படி ஒரு உலக வரலாற்றின் மாபெரும் அத்தியாயம் தான் லெனின்.

இந்திய விடுதலையும், இந்திய மக்களின் வளர்ச்சியும் லெனினது பயணமும் ஒன்றே. 
ஆகவே இந்தியாவில் லெனின் வாழ்வார்; வாழ்கிறார்.
லெனின் சிலையை அகற்றலாம் .லெனின் பெயரை அழிக்கமுடியாது..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------