இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

அந்த மூன்றாவது கேள்வி?

உண்மையை மறைக்கும் ஆளுநர் உரை

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது.
ஆளுநர் உரைஎன்று பொதுவாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது தமிழக அரசின் உரைதான்.

 ‘‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்துத்தந்த திட்டங்களையும் கொள்கைகளையும் முனைப்போடு செயல்படுத்தி வரும்அரசு’’ என்று உரையின் தொடக்கத்தில் எடப்பாடிஅரசை ஆளுநர் பாராட்டியிருக்கிறார்.

ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைகளில் பல்வேறுகட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்தாலும் மத்திய மோடி அரசின் சரக்கு மற்றும் சேவைவரி, பெட்ரோல் டீசல்மீதான விலைக்கட்டுப்பாடு தளர்த்தல் உள்ளிட்ட பலமக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புதெரிவித்தவர் அவர்.

ஆனால் அவரது வழியில் ஆட்சிநடத்திக் கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் எடப்பாடி அரசு, மத்திய பாஜக அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை எதிர்க்க துணிவில்லாத, அப்பட்டமான கைப்பாவை அரசாக உள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளை ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அரசு காவு கொடுத்துவருவதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.


ஆனால் அதிமுக அரசு அஞ்சுகிறது. ஆளுநர் உரையில் வேளாண் நெருக்கடிக்கு எந்தத் தீர்வும் சொல்லப்படவில்லை. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன.
அவற்றைஉயிர்ப்பிக்க ஆளுநர் உரையில் எந்த யோசனையும் இல்லை.
 மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதற்கு ஈடுகொடுப்பதாக அரசின் நிதிநிலைமை இல்லை. மாநிலத்திற்கு தரவேண்டியநிதியை மத்திய அரசு குறைத்துக்கொண்டேவருவதால் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களைநிறைவேற்ற முடியாமல் அரசு நிர்வாகம் நிலைகுலைந்துள்ளது.

இதற்கெல்லாம் குரல் கொடுக்கஎடப்பாடி அரசு தயாராக இல்லை.மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி 8000 சத்துணவு மையங்களை மூட அதிமுக அரசுதிட்டமிட்டுள்ளது. இது ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தையே நாசமாக்கும்.
இதுகுறித்தும் ஆளுநர் உரையில் எந்தத்தெளிவும்இல்லை. ஊழல், பாலியல் பேரம்,கேள்வித்தாள்கசிவு போன்றவை புற்றுநோய்போல உயர்கல்வித்துறையை அரித்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றைத் தடுக்க எந்த ஏற்பாடும் இல்லை.கஜா புயல் பாதிப்பிலிருந்து டெல்டா மாவட்ட மக்கள் இன்னும் மீளவில்லை. பட்டினியும், பசியும், தற்கொலைகளும் தொடர் கதையாக உள்ளன.
அரசு அறிவித்த நிவாரணம் மக்களைமுழுமையாக சென்றடையவில்லை. தமிழக அரசு கோரிய ரூ.15ஆயிரம் கோடியில் 10 விழுக்காட்டை கூட மத்திய அரசு தரமறுக்கிறது.

 சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இவற்றைத் தடுக்க காவல்துறையை மேம்படுத்தவும் ஆணவக் கொலைகளை தடுக்கவும் ஒருயோசனையும் இல்லை.
 செயல்படாத அரசைப் பாராட்டும் வார்த்தைகள் நிறைந்த இந்த ஆளுநர்உரை, மாநிலத்தின் உண்மை நிலையை மூடி மறைக்கிறது.       
                                                                                                                                                                                                                                                                                                                                                                              -தீக்கதிர் தலையங்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த மூன்றாவது கேள்வி?
ரபேல் விவகாரம் தொடர்பான தனது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், பிரதமர் மோடி ஓடி ஒளிகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இப்பிரச்சனையில் 20 நிமிடம் மட்டும் பிரதமர் மோடி தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என்றும் ராகுல் கேட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் ஊழல் விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று காரசாரமான வாக்குவாதத்தை நடத்தினார்.
“இந்தியாவின் பல்வேறு போர் விமானங்களை தயாரித்த, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்குரபேல் ஒப்பந்தத்தை ஏன் வழங்கவில்லை?
ஒப்பந்தம் போடுவதற்கு பத்து நாட்களுக்குமுன்பு தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு, அதாவது தனது நண்பருக்கு இந்த ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர் கொடுத்தது ஏன்?” என்று கேள்விகளை எழுப்பினார்.


அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘தன் மீது தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை’ என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, “ரபேல் விவகாரத்தில் இந்த நாடே அவரிடம் நேரடியாக கேள்வி கேட்டுவரும் நிலையில் இப்படியொரு பொய்யை மோடி எப்படி கூறுகிறார்?”என்று சாடினார்.

மேலும், “எங்களின் (எதிர்க்கட்சிகளின்) குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமலும், எங்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவில்லாமலும்தான் அவைக்கே வராமல் பிரதமர் ஓடிக் கொண்டிருக்கிறார்;
பிரதமர் தனது அறையில் ஒளிந்துகொள்கிறார் என்றால், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மேகதாது பிரச்சனையை வைத்து அமளியில் ஈடுபடும் அதிமுக எம்.பி.க்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார்” என்றும் விளாசினார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் ரபேல்விவகாரத்தை ராகுல் விடுவதாக இல்லை. இப்பிரச்சனையில் பிரதமர் மோடி தன்னுடன்நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என்றுபகிரங்க சவால் விட்டார்.

“ரபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் எங்குமேகூறவில்லை; இதை நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் கூறியுள்ளனர்.
எனவே, ரபேல் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விட வேண்டும்;
அப்படிச் செய்தால், பிரதமர் மோடியும், தொழிலபதிபர் அனில் அம்பானியும் செய்த ஊழல் நிச்சயம் வெளிச்சத் திற்கு வரும்” என்றார்.

 “இப்பிரச்சனையில், பிரதமர் என்னுடன் 20 நிமிடம் மட்டும் விவாதித்தால் போதும்; தவறு யார் மீது என்று தெரிந்து விடும்” என்று கூறிய ராகுல் காந்தி, ஆனால், மோடிபேசுவதற்கு வர மாட்டார் என்றும், ஏனென்றால் ரபேல் விஷயத்தில் ஐந்து நிமிடத்திற்குமேல் அவர் பேசுவது கிடையாது என்றும் தெரிவித்தார்.

மக்களவை விவாதம், செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றோடும் ராகுல் காந்திநிற்கவில்லை. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வராமல், பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடச் சென்றிருப்பதை குறிப்பிட்டு, புதனன்று இரவு ட்விட்டரிலும் விவாதத்தைத் தொடர்ந்தார்.


ரபேல் ஒப்பந்தம் குறித்த கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியாகியும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் பஞ் சாப் பல்கலைக்கழகத்துக்கு தப்பித்துச் சென்று விட்டார் என்று ராகுல் காந்தி கிண்டலடித்தார்.

மேலும், “ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்குத் திறந்த புத்தகத் தேர்வுநடத்தப்படுகிறது;
கேள்விகள் முன்கூட்டியேகொடுக்கப்பட்டுள்ளன:

 முதல் கேள்வி “126 ரபேல் போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், அது ஏன் 36 விமானங்களாகக் குறைக்கப்பட்டது?

இரண்டு : “ரபேல் போர்விமானம் ஒன்றின் விலை ரூ. 560 கோடியாக முதலில்நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், பாஜகஅரசு ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலைரூ.1,600 கோடியாக மாற்றப்பட்டது ஏன்?” 

 நான்கு :“இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் பின்னர்ஏன் ஏஏ (அனில்அம்பானி) நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது?

இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பாரா? என்று கேட்டிருந்தார்.

 பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள் இதனை மோடியிடம் எழுப்பி பதில் கேட்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பாய்ந்து வந்த, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “ பள்ளிக்கூட வகுப்பறையில் தோல்வி அடைந்த மாணவர், வெளியே வந்துசவால் விடுகிறார்” என்று ஒரு உப்புச் சப்பில்லாத பதிலை ராகுலுக்கு அளித்தார்.
ராகுல் காந்தியோ அதனையும் பிடித்துக் கொண்டார்.

மீண்டும் ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, “ நான் மூன்றாவது  கேள்வியைப் பதிவிடவில்லை; 
ஏனென்றால், மக்களவை சபாநாயகர், கோவா ஒலிநாடா டேப் குறித்து பேசக்கூடாது எனத் தெரிவித்தார். எனினும் அந்த3-ஆவது கேள்வி என்பது ரபேல் விவகாரத்தில் மிகவும் சிக்கலான கேள்வி. ரபேல் விமானக் கொள்முதல் தொடர் பான ஆவணங்களை பாரிக்கர் ஏன் தனதுபடுக்கை அறையில் வைத்துள்ளார்; அதில்என்ன இருக்கிறது?
 என்பதுதான் அந்தக் கேள்வி.

எனது இந்த கேள்விக்கு தயவுகூர்ந்து மோடிஜிதான் பதிலளிக்க வேண்டும்” என்று அடுத்தடுத்த அஸ்திரங்களையும் வீசி, பாஜகவினரை பதற வைத்துள்ளார்.
நடிகர் சித்தார்த் கேள்வி?

sidhardh @goingfake 2 hours ago

தூத்துக்குடி பிரச்சனைல கலந்துகிட்டவங்களை சமூகவிரோத சக்தினு ஒப்பாரி வெச்சவங்க லைனில் வரவும். இவனுக தான் தேசபக்தர்களா? பெட்ரோல் குண்டு போட எப்படி தெரியும்னு கேட்டாங்கல்ல இப்ப இவனுக நாட்டு வெடிகுண்டு வீசி இருக்கானுக இதுக்கு என்ன சொல்லுறானுக?

=====================================================
ன்று,
ஜனவரி-04.
பர்மா விடுதலை தினம்(1948)

ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது(1884)

பிரிட்டன் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது(1912)

 அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம்(1643)

வில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்(1854)

"அறிவியலாளர்  ஐசக் நியூட்டன்"
இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த நியூட்டன் பள்ளி படிப்பை படிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார்.
சிறுவயதில் இருந்தே அறிவியல் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த நியூட்டன், தண்ணீரில் வேலை செய்யும் கடிகாரத்தை அப்போதே கண்டுபிடித்தார். விடாது துரத்திய ஏழ்மையின் காரணமாக 14 வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
 அப்போது அவருடைய மாமா நியூட்டனின் கல்வி ஆசை நிறைவேற உறுதுணையாக இருந்து உதவினார். அதன் மூலம் பள்ளி படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
 இளங்கலை பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது. நவீன கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை அவர் கண்டுபிடித்தார். பைனாமியல் தியரம் மற்றும் கால்க்குலஸ் எனும் நவீன கணிதத்தின் பிரிவுகளை கண்டறிந்தார்.
ஒரு முறை தோட்டத்தில் நடந்து செல்லும் போது ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து விழுவதை கண்டார். எல்லா காலகட்டத்திலும் வாழ்ந்த மனிதர்கள் பார்த்திருக்கும் காட்சிதான் அது.
ஆனால் அது இயற்கை என்று எண்ணிவிட்டு செல்வார்கள். ஆனால் நியூட்டனோ அதை பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழ செய்கிறது என்று கருதினார்.
 விளைவு, புவி ஈர்ப்பு சக்தி என்ற ஒன்று இருப்பதால் தான், பொருட்கள் அனைத்தும் கீழே விழுகிறது என்பதை கண்டுபிடித்தார்.
 இது அவருடைய கண்டுபிடிப்புகளில் மகத்தான சாதனையாகும்.
அதன் பிறகு நியூட்டனுக்கு டிரினிட்டி கல்லூரியில் கவுரவ பொறுப்பு வழங்கப்பட்டது. பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவு தொலைநோக்கிகளை கண்டுபிடித்தார்.
இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு நவீன தொலைநோக்கிகள் அனைத்துமே நியூட்டனின் தொலைநோக்கியை அடிப்படையாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும்போது உலக புகழ்பெற்ற ராயல் சொசைட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
 வண்ணங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணை பார்க்கும் போது திடீரென்று வண்ணங்கள் மாற தொடங்கின.

 அது மட்டுமல்ல, தனது ஆராய்ச்சிக்காக தன் கண்ணால் வண்ணங்களை பார்க்கும் போது மாற்றம் தெரிகிறதா? என்று அடிக்கடி சோதித்து கொண்டார்.
அதனால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு பல நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதை நிரூபித்தார். இது நியூட்டன் விதி என்று அழைக்கப்படுகிறது.
21 முதல் 27 வயது வரை நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். அதன் பிறகு 1703-ல் ராயல் சொசைட்டியின் தலைவராக நியூட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1705-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி, நியூட்டனின் ஆராய்ச்சிகளை அறிந்து வியந்தார்.
அவருக்கு, “சர்” பட்டம் வழங்கி கவுரவப்படுத்தினார்.
அதன் பிறகு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நியூட்டன், தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களால் அவதிப்பட்டார். 1727-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி நியூட்டன் இறந்தார். அவருக்கு போப் எழுதிய இரங்கில் குறிப்பு மிகவும் முக்கியமானது.
 அதில் ‘இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன. கடவுள் நியூட்டன் பிறக்கட்டும் என்றார். ஒளி பிறந்தது’ என குறிப்பிட்டு இருந்தார். இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் பொறிக்கப்பட்டுள்ளது.
நியூட்டன் பிறவியில் ஒரு மேதை.
அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டுபிடித்து சொல்ல முடிந்தது.
அத்தகைய மாமேதையின் சாதனைகள் மகத்தானவை, போற்றப்படக் கூடியவை என்றால் மிகையாகாது.
அவர் 4-1-1643 பிறந்தார்.
=====================================================

கஜா புகழ் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
மக்களவைத் தேர்தலில்,உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ளவதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார்.

அந்த இரண்டிலுமே அவர்வெற்றிபெற்றார்.பின்னர், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி தொகுதியை மட்டும் கையில் வைத்துக் கொண்டார்.
2019 தேர்தலிலும் இந்த தொகுதியிலேயே போட்டியிடுவது அவரது திட்டமாக இருந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், குஜராத்தில் விரட்டி விரட்டி தாக்கப்பட்டதும், அதனை பிரதமர் மோடி கண்டுகொள்ளாததும் பிரச்சனையாக உருவெடுத்தது.

 குஜராத்தியான மோடியை, உத்தரப்பிரதேச எம்.பி.யாக தேர்ந்தெடுத்ததற்கு அளிக்கப்பட்ட பரிசா? என்று வாரணாசி தொகுதி மக்கள் கொந்தளித்தனர்.
மோடிக்கு எதிராக வாரணாசி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்றும் விவாதங்கள் எழுந்தன.


இது மோடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அடுத்ததாக, “வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நானே போட்டியிடுவேன்” என்று பிரபல பாலிவுட்நடிகர் சத்ருகன் சின்ஹா அறிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக, சமாஜ்வாதி கட்சி சார்பில் அவர் நிறுத்தப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின.

அவ்வாறு நடந்தால், வாரணாசி தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் “சாயத்ஸ்” சமூக மக்களின் ஆதரவுடன் சத்ருகன் சின்ஹாவே வெற்றி பெறுவார் என்றுஅறிக்கை அளித்து, உளவுத்துறையும் கிலியை ஏற்படுத்தியது.

இதனால், அப்போதே தொகுதிமாறும் முடிவுக்கு வந்த பிரதமர் மோடி, புதிய தொகுதியைத் தேடத் துவங்கினார். ஒடிசா மாநிலத்தில் இந்துக்கள் அதிகம் நிறைந்த பூரி தொகுதி பாதுகாப்பாக இருக்கும்என்று பாஜகவினர் சிலர் ஆலோசனை கூறினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி 2019 தேர்தலில் ஒடிசா மாநிலம் பூரி தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ஒடிசா எம்எல்ஏவுமானபிரதீப் புரோஹித் உறுதிப்படுத்தியுள்ளார்.

“பிரதமர் மோடி கடந்தமுறை காசி விஸ்வநாதர் அருளுடன் வாரணாசியில் போட்டியிட்டு பிரதமரானார்.

இந்த முறை ஜெகநாதர் ஆசியுடன் பூரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்; அவர் பூரி தொகுதியில் போட்டியிடுவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

அதாவது, வாரணாசியிலும், பூரியிலுமாக இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
வாரணாசி கைவிட்டாலும், பூரியில் கரையேறுவது என்று திட்டம் இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

ஆனால், இங்கும் மோடி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் பூரி மக்களவைத் தொகுதி, பிஜூஜனதா தளம்வசம் உள்ளது.

இங்குள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5 பிஜூஜனதாதளம் வசமே உள்ளன.

ஒன்றுதான் பாஜக வசம் உள்ளது.

இதனை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 எப்படியோ, பிரதமர் மோடிக்கு இன்றைய நிலையில், தான் வெற்றிபெற பாதுகாப்பான தொகுதியை இந்தியாவில் தேடுவதே போராட்டமாக உள்ளது.

பேசாமல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடலாம்.

அவரை அனுப்பிவைக்க மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஆனால் அது மக்களவையா ,வீட்டுக்கா என்பதை கஜா புகழ் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------