இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 19 ஜனவரி, 2019

மோதியின் ஒப்பந்தத்தால் ரஃபேல் விமானத்தின் விலை ஏறியுள்ளது'

'நரேந்திர மோதியின் புதிய ஒப்பந்தத்தால் ரஃபேல் போர் விமானத்தின் விலை ஏறியுள்ளது' 


பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி எடுத்த முடிவு, ஒவ்வொரு போர் விமானத்தின் விலையும் 41% உயர காரணமாயிற்று என்று மூத்த ஊடகவியலாளரான 'தி இந்து' குழுமத்தின் சேர்மன் என்.ராமின் பிரத்யேக கட்டுரை தி ஹிந்து (ஆங்கிலம்) இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியானது.
இது பற்றி பிபிசி தமிழ் உடன் அவர் உரையாடினார். அவரது பேட்டியின் கருத்துகளை தொகுத்து வழங்குகின்றோம்.
126 ரஃபேல் போர் விமானங்களை வாங்காமல் 36 மட்டுமே வாங்க இந்திய பிரதமர் எடுத்த முடிவு ஒவ்வொரு விமானமும் 41 சதவீத விலை உயர வழிவகுத்தது என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, என். ராம் நீண்ட விளக்கமளித்தார்.

ஒப்பந்தத்தின் பின்னணி
முதலில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2007ம் ஆண்டு இந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
2011ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது, டஸ்ஸோ ஏவியேசன் (டஸ்ஸோ பிரான்ஸ் நிறுவனம்) மிகவும் குறைவான தொகையில் விண்ணப்பம் செய்திருந்ததால் அவர்களிடம் வேலையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தை முழுமை அடையவில்லை. ஹெச்.ஏ.எல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் 108 போர் விமானங்களை இந்தியாவின் பெங்களூருவில் தயாரிக்கும். 18 போர் விமானங்கள் பறக்கக்கூடிய அளவில் பிரான்சில் இருந்து நேரடியாக வழங்கப்படும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது. அதுவொரு வணிக ஒப்பந்தம் என்று கூறப்பட்டது.
இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தமாக மாற்றம்

2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதி பிரான்ஸ் சென்றபோது, திடீரென்று இந்தோ-பிரெஞ்ச் கூட்டறிக்கையில் ஒரு தகவல் வந்தது.
126 ரஃபேல் போர் விமானங்கள் அல்ல. 36 ரஃபேல் போர் விமானங்களை நேரடியாக பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்க போகிறது.
அடுத்ததாக, இதுவொரு வணிக ஒப்பந்தமாக டஸ்ஸோவோடு இல்லாமல், "அரசிடம் இருந்து அரசு" என்ற நிலையில் பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்தியா வாங்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றை தயாரிக்கப்போவது டஸ்ஸோ நிறுவனம்தான். அரசிடம் இருந்து வாங்கப்போவதால், ஹெ.ஏ.எல் நிறுவனத்திற்கு இதில் இடம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
விலை பற்றிய ரகசியம்
எமது புலனாய்வின் கவனம் என்னவென்றால், போர் விமானத்தின் விலை என்ன என்பதே என்று என்.ராம் குறிப்பிட்டார். அது பற்றிய முழு தகவல்களையும் கொடுக்க முடியாது என்று அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
ரஃபேல் சர்ச்சையின் பின்னணி என்ன?

நாடாளுமன்றத்திடம் இந்த தகவலை வழங்கவில்லை. நாடாளுமன்ற பிரிவின் குழுக்களிடம் வழங்கவில்லை. வெளிப்படையாகவும் சொல்லவில்லை. இதில் என்ன பெரிய ரகசியம் என்ற விவாதம் ஏற்பட்டது.
பிரான்ஸ் அரசிடம் ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதனால் இதனை கூற முடியாது என்று கூறிவிட்டார்கள்.
ஆனால், விலை தொடர்பான தகவல்கள் ஒப்பந்தத்தில் வராது. அவற்றை வெளிப்படுத்தலாம் என்ற பிரான்ஸ் அரசே தெளிவாக்கியது.
இந்தியாவுக்கான சிறப்பு வசதிகள்
வேறு எந்த நாட்டுக்கும் கொடுக்காத, இந்திய விமானப்படை வேண்டுமென தெரிவிக்கும் மென்பொருள் மற்றும் வன்பொருள் கொண்ட 13 மேம்பட்ட வசதிகளை (ஐ.எஸ்.இ) இந்த விமானங்களில் பொருத்தி வழங்க வேண்டுமென இந்தியா கோரிக்கை வைத்தது.

இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்த 13 மேம்பட்ட வசதிகளை வடிவமைத்து, பொருத்தி வழங்குவதற்கான கட்டணம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியவில்லை.
பிரான்ஸ் நிறுவனம் 1.4 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என்று கேட்டது. பேரம்பேசி 1.3 பில்லியனாக குறைத்து பின்னர் வழங்கியது.

13 மேம்பட்ட வசதிகளை வடிவமைத்து, பொருத்தி வழங்குவதற்கான கட்டணம் எத்தனை ரஃபேல் போர் விமானங்களை வாங்கினாலும் மாறாது என்றும் தெரிவித்துவிட்டார்கள்.

18 போர் விமானங்கள் வாங்கினாலும், 126 வாங்கினாலும் இந்த கட்டணம் குறையாது. இதுதான் இந்த ரஃபேல் போர் விமானத்தின் விலையை உயர செய்துவிட்டது.
இதனால், 2007ம் ஆண்டடோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு போர் விமானத்தின் விலையும் 41.42 சதவீதம் அதிகரிக்க இது காரணமாகிவிட்டது.
“அதிகரிப்பு அம்சம்” என்ற காரணி இந்த ஒப்பந்தத்தில் உள்ளது. அதனை பார்த்தாலும் 14 சதவீதத்திற்கு மேலாகவே விலை கொடுத்துள்ளனர் என்று என்.ராம் கூறினார்.
யூரோஃபைட்டர் டைஃபூன் கன்சார்டியம் அளித்த விலை
பிரிட்டன் விமான நிறுவனம், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் பன்னாட்டு ஒத்துழைப்போடு நடத்தப்படும் யூரோஃபைட்டர் டைஃபூன் கன்சார்டியம் ஜூலை 2014 ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தின் கடிதம் மூலம் நல்லொரு மலிவான விலையை இந்தியாவுக்கு வழங்கினார்கள்.
இந்த கடிதம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்கு வந்தது. இந்த கடிதத்தை வைத்து பேரம்பேசி இன்னும் விலையை குறைத்திருக்கலாம்.
புதிய ஒப்பந்தம் - ஏன்?

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த ஒப்பந்தத்தை புதியதொரு ஒப்பந்தமாக கருதலாம். காரணம் ஹெ.ஏ.எல்-க்கு இதில் பங்கில்லை. 126 போர் விமானங்களில் எதையும் இந்தியாவில் தயாரிக்க போவதில்லை. மேக் இன் இந்தியா கிடையாது.
பிரான்சிஸில் தயாரிக்கப்பட்டு நேரடியாக பிரான்சிடம் இருந்து 18 விமானங்களை வாங்குவதற்கு பதிலாக 36 போர் விமானங்களை வாங்குகிறார்கள்.
அதிக விலை என்றால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருக்கலாம். புதிய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கலாம்.

குறைந்தபட்சம் எங்களுக்கு இவ்வளவு மலிவாக செய்ய வழங்க யூரோஃபைட்டர் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று போர் விமான தயாரிப்பு செலவை குறைப்பதற்கான கருவியாக இந்த ஏர்பஸின் கடிதத்தை பயன்படுத்தி இருக்கலாம்.
அதுமட்டுமல்ல, 20 சதவீதம் விலை குறைவாக வழங்க யூரோஃபைட்டர் தயாராக இருந்தது. டஸ்ஸோ இந்த மாதிரியான சலுகை வழங்கவேயில்லை.
யூரோஃபைட்டருக்கு இந்த வாயப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் அதிக விலை குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.


ஆனால், புதிய சூழ்நிலையில், புதிய ஒப்பந்தம் வந்ததால், அதற்கேற்றவாறு தொடர்ந்திருக்கலாம். சட்ட காரணங்களால் அவ்வாறு முடியவில்லை என்றால் ஏர்பஸின் கடிதத்தை குறைந்தபட்சம் ஒவ்வொரு போர் விமான தயாரிப்புக்கு ஆகின்ற செலவை குறைக்கும் கருவியாக பயன்படுத்தியிருக்கலாம்.
1.3 பில்லியன் யூரோ என்பதில் இருந்து குறைக்க நீங்கள் தயாராயில்லை. 36 போர் விமானங்களை வாங்குவதால் எங்களுக்கு ஒவ்வொன்றின் விலை அதிகமாகிவிட்டது என்று பேரம்பேசி குறைத்திருக்க முடியும்.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விஷயத்திற்கு நாங்கள் செல்லவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மனுதாரரும் அங்கு வெற்றிபெறவில்லை. இந்த சர்ச்சைக்கு இது கடைசி வார்த்தை என்று எண்ணிவிட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தவிர்க்கப்பட்ட கட்டாயமான வழிமுறைகள்
இவ்வாறு ரஃபேல் விமானங்களின் போர் விமானங்களின் விலை உயர்வதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை தவிர்த்திருப்பதை காரணம் என்று கூறியிருக்கிறீர்களே. எவை சரியாக கடைபிடிக்கவில்ல என்ற கேள்விக்கும் என். ராம் பதிலளித்தார்.
இவ்வாறு வழிமுறைகள் கடைபிடிக்காமல் தவிர்த்தது பற்றி பல கட்டுரைகள், அரசியல் அறிக்கைகளில் வந்துள்ளன. உச்ச நீதிமன்றத்திற்கும் இந்த விஷயத்தை எடுத்து சென்றார்கள்.

இந்த கொள்முதலின் விலைகளை ஆராய்வது போன்ற மிகவும் ஆழமாக இதில் செல்ல விரும்பவில்லை. இது எங்களுடைய வேலையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
1. ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஒப்பந்தத்தை, அதன் கட்டமைப்பை, உள்ளடக்கத்தை மாற்றிவிட்டு இந்திய பிரதமர் மோதியும், பிரான்ஸ் அதிபரும் 2015 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டார்கள்.
ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு வழிமுறை உள்ளது. பாதுகாப்பு தேவை நடைமுறை (Defense Requirement Procedure) என்று அதற்கு பெயர். பாதுகாப்பு நிர்வாக கவுன்சில் ஒன்று உள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சர்தான் தலைவர். இந்த கவுன்சிலுக்கு இந்த பேச்சுவார்த்தையில் பங்குண்டு.
2. 7 பேரை உள்ளட்கிய இந்திய பேச்சுவார்த்தை அணி ஒன்று உள்ளது. இந்த 1.3 பில்லியன் யூரோ என்பது மிகவும் அதிகம். நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிமாக உள்ளது.

யூரோஃபைட்டர் வழங்கிய விலையை கவனத்தில் கொள்ளாதது சரியல்ல. அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 3 பேர் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.
ஆனால், ஏழு பேரில் நான்கு, மூன்று என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
3. பாதுகாப்பு நிர்வாக கவுன்சிலுக்கு (டி.ஏ.சி) இதில் பொறுப்புள்ளது. அதனை அவர்கள் செய்யவில்லை. ஏழு பேரில் நான்கு, மூன்று என்ற பெரும்பான்மை முடிவு நேரடியாக பாதுகாப்பு அமைச்சரவைக்கு சென்றுவிட்டது.
4. அதே நேரத்தில் சட்ட மற்றும் நீதி அமைச்சகம் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக இந்திய அரசின் இறையாண்மை உத்தரவாத்தை (sovereign guarantee) ஏற்றுக்கொள்ளவில்லை. பிரான்ஸ் அரசின் கடிதம் (Letter of comfort - கடன் உறுதிப்பாட்டை வழங்குவது) போதாது என்று சொன்னார்கள். ஆனால், இது தொடாபான பேச்சுவார்த்தையில் தோற்றுவிட்டார்கள்.
உயர் அதிகார நிலையில் எடுக்கப்பட்ட முடிவு, சரியான வழிமுறைப்படி வரவில்லை என்பதுதான் எங்களுடைய வாதம் என்று என். ராம் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு செலவீனத்தை வெளியிடுதல்
பாதுகாப்பு காரணங்களுக்காக செலவிடப்படுவதால் அதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என எதாவது விதி உள்ளதா என்று கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று ராம் தெரிவித்தார்.
பல ஒப்பந்தங்கள், போஃபர்ஸ் ஆகியவற்றை பார்த்தால் எல்லா விஷயங்களையும் வெளியில் கொண்டு வந்துவிட்டார்கள். எவ்வளவு விலை கொடுத்தார்கள், எப்போது வழங்கப்படும் என்கிற திட்டத்தை வழங்கினார்கள் குறிப்பாக விலையை மறைக்கவேயில்லை.
இவ்வாறான நேரங்களில் அதனுடைய தொழில்நுட்ப திறன்கள் அனைத்தையும் சொல்லமாட்டார்கள். சிலவற்றை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
இவ்வாறு வைத்திருப்பது கூட நல்லதல்ல. ராணுவ நிபுணர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். பல தளத்தில் இருந்து அவர்களுக்கு உடனே இந்த தகவல் போய்விடும்.
ஆனால், தொழில்நுட்ப திறன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. விலை விபரங்கள், எப்போது விநியோகம் செய்யப்படும் என்ற விவரங்களில் எல்லாம் ரகசியம் இல்லை என்கிறார் என்.ராம்.

9 சதவீத சலுகை - எவ்வாறு?
இந்த ஒப்பந்தத்தில் 9 சதவீத சலுகை கிடைத்திருப்பதாக சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது பொய்யா என கேட்டபோது, அது உண்மைதான். ஆனால் எதை மறைத்தார்கள் என்றால், இந்த 9 சதவீத சலுகை ஒட்டுமொத்த ரஃபேல் போர் விமான விலையில் அல்ல.

இந்தியாவிற்கு என்று சிறப்பாக பொருத்தப்படுகின்ற மேம்பாடுகள் வசதிகள் இல்லாத விமானத்தின் அடிப்படை விலையில் இந்த 9 சதவீத சலுகை கிடைத்துள்ளது.
இந்த தள்ளுபடி சலுகையைவிட ஒவ்வொரு விமானத்திலும் அதிகரித்த 41 சதவீத விலை உயர்வு அதிகமாக இருக்கிறது.
இதற்கு முன்னதாக நாட்டில் எழுந்த சில பிரச்சனைகள், கொள்முதல்கள், ஆட்சி புரிந்த கூட்டணிகளின் அடையாளமாக உள்ளன. குறிப்பிட்ட கொள்முதல் என்றவுடன் அந்த கூட்டணிதான் நினைவுக்கு வரும் நிலை உள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதல் ஆளும் கூட்டணியின் அடையாளமாக மாறுமா? என்று கேட்டபோது, இதுவொரு ஊழலாககூட மாறும் வாய்ப்பு உள்ளது என்று என். ராம் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாங்கள் இதற்கு அப்பால் செல்லவில்லை. போர்ஃபஸில் நிதி வழங்கியதை நாங்கள் உறுதி செய்தோம். வங்கியில் நிதி அளித்தது, கமிஷன் என்ற பெயரில் கையூட்டு வழங்கியுள்ளதாக நாங்கள் வெளியிட்டோம் என்று அவர் கூறினார்.
அது போன்றதொரு நிலை இந்த கொள்முதலில் இல்லாவிட்டாலும், மறைமுகமாக அதை நோக்கி சென்று கெண்டிருக்கிறது.
எதனால் இந்த முடிவு எடுத்தார்கள்? அனுபவம் இல்லாத பாட்னர்களை ஏன் கொண்டு வந்தார்கள்? ஹெச்ஏஎல்-யை ஏன் நிறுத்தினார்கள்? ஏன் இவ்வளவு அதிக தொகைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்? யூரோஃபைட்டர் கூறிய தொகையை ஏன் தொடரவில்லை?
இத்தகைய கேள்விகள் எல்லாம் இந்த பிரச்சனையை சுற்றியுள்ளன. போஃபர்ஸ் வேறுவிதமான ஊழல். இது வேறு விதமாக சர்ச்சை என்று சொல்லாம்.

ராஃபேல் விவகாரம் பற்றி நீங்கள் கேட்பது இத்தோடு முடிவு பெற போவது கிடையாது என்று கூறியுள்ளோம். கண்டுபிடிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நீண்டகாலமாக மறைத்துவிட முடியாது. அரசாங்கம் மாறலாம். புதிய அரசாங்கம் வரும்போது இந்த தகவலை எடுத்து அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று என்.ராம் குறிப்பிட்டார்.
இந்த பிரத்யேக கட்டுரையை இந்த நேரத்தில், குறிப்பாக மக்களவை தேர்தல் வருவதற்கு முன்னால் ஏன் எழுதினீாகள் என்று கேட்டபோது, தகவல் வரும்போதுதான் பயன்படுத்த முடியும். பல வாரங்களாக நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார்.
இதில் பல தகவல் இடைவெளிகள் இன்னும் உள்ளன. உண்மையை ஆய்ந்தறிய வேண்டியுள்ளது. இந்த தகவல் இப்போதுதான் வந்துள்ளது.
வேறு பத்திரிகைகள் கூட பல புதிய விஷயங்களை கொண்டு வந்துள்ளன. தி வயர், கேரவன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதிய விஷயங்களை வெளிகொண்டு வந்துள்ளன.
புகார் அளித்தவர்கள் புதிய விஷயங்களை கொண்டு வந்துள்ளனர். காங்கிரஸ் சில புதிய விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். பல சிறிய தகவல்கள் ஒன்றிணையும்போதுதான், ஒரு செய்திக்கு முழுமையான வடிவம் ஏற்படும் என்று சொல்வார்கள்.
இன்னும் நிறைய இடைவெளிகள் உள்ளன. பண பரிவர்த்தனையை கண்டுபிடிக்காத வரையும் ஊழலை உறுதிசெய்ய முடியாது. ஆனால், தன்னிச்சையாக முடிவு, முறையற்ற நடத்தை பற்றி எல்லாம் நீங்கள் விவாதம் செய்யலாம் என்கிறார் என்.ராம்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்
இந்த கட்டுரையின் அம்சங்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டபோது, மூத்த அதிகாரி ஒருவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
01. இந்த கட்டுரையிலுள்ள உண்மைகள் தெளிவற்றவை. இது புதிய விவாதங்களை தோற்றுவிக்கவில்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் பல்வேறான மன்றங்களில் விவரங்களோடு அரசு விடையளித்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார்.

02. முந்தைய ஒப்பந்த முன்மொழிவைவிட நல்ல விலை, சிறந்த விநியோக நேரம், மற்றும் நல்ல நிபந்தனைகள் ஆகிய நோக்கங்களோடுதான் 2016ம் ஆண்டு 36 ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

03. பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டியதும், இந்தோ-பிரெஞ்ச் பாதுகாப்பு ஒப்பந்தம் 2008-ல் உள்ளடங்கியதுமான விலை விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தோடு பகிரப்பட்டுள்ளது. இந்த விலை விவரங்களையும், வணிக பலன்களையும் உச்ச நீதிமன்றம் ஆய்ந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஆட்சேபனைக்குரிய எதையும் கண்டறியாத உச்ச நீதிமன்றம், புகார்தாரர்களால் கோரப்பட்ட புலனாய்வை நிராகரித்துள்ளது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளருக்கு (சிஏஜி) ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய கோப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிஏஜி போன்ற அதிகாரபூர்வ நிறுவனத்திடம் இருந்து அறிக்கை வரும் வரை காத்திருப்பது நல்லது.

04. பல ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் 2007ம் ஆண்டு அடிப்படை போர் விமானத்தின் விலையோடு 2015ம் ஆண்டு போர் விமானத்தின் ஒட்டுமொத்த விலையோடு ஒப்பிட்டு பார்க்கையில், 'படிப்படியான விலை அதிகரிப்பு' அம்சத்தை கவனத்தில் கொண்டு, 2007ம் ஆண்டு வழங்கப்பட்ட விலையை விட 2016ம் ஆண்டு அடிப்படை போர் விமானத்தின் விலையை விட நன்றாகவே உள்ளது என்று கட்டுரை எழுதிய ஆசிரியரே சுட்டிக்காட்டியுள்ளார்.
5. இந்தியாவுக்கென சிறப்பு தொழில்நுட்ப மேம்பாடுகளை பொருத்துவது என்பது எதிரிகளைவிட சிறந்த பலம் பெறும் வியூகமாகும். 2007ம் ஆண்டு ஒப்பந்தத்தின் இந்த பகுதி 2016ம் ஆண்டு ஒப்பந்தத்திலும் தொடர்கிறது. 2007ம் ஆண்டு மாறாமல் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்த அதே தொகை 2016ம் ஆண்டிலும் அப்படியே மாறாமல் இருக்கிறது. செயல்பாட்டுக்கு வராத நடுத்தர பன்முக போர் விமான (MMRCA) ஒப்பந்தத்தை 2016ம் ஆண்டு 36 விமானங்களோடு ஒப்பிடுவது தவறானது. 2007ம் ஆண்டு இந்தியாவுக்கென சிறப்பு தொழில்நுட்ப மேம்பாடுகளை பொருத்தும் செலவு 1.4 பில்லியன் யூரோ என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர், 2007 முதல் 2015ம் ஆண்டு வரையான கட்டுமானத்தில் ‘படிப்படியான விலை அதிகரிப்பை‘ உள்ளடக்க தவறிவிட்டார்.

06. விலை மதிப்பீட்டில் உள்ளடங்கியுள்ள படிப்படியாக விலை அதிகரிப்பதை கவனத்தில் எடுத்து கொள்ளாமல், 2007ம் ஆண்டின் தொகையை, 2016ம் ஆண்டு விலையோடு ஒப்பிட்டிருப்பது ஆசிரியரின் இந்த கட்டுரையின் தலைப்பாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது, இந்த கட்டுரையின் உள்ளே மறைவாக 14.2 சதவீதம் என்று ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார்,
07. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட 2016 ஒப்பந்தத்தில் கிடைத்த விலை நிபந்தனைகளின் முக்கிய பயன்களை ஆசிரியர் இந்த கட்டுரையில் விட்டுவிட்டார்.
08. ஐஜிஏ-யின் கீழ் இந்த ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் மட்டுமே நிறுவன மாற்றம் மற்றும் நிலையான விலையை மாற்றிக்கொள்வது ஆகியவை கைக்கூடியுள்ளது. இதனால்தான் 36 ரஃபேல் போர் விமானங்களின் விநியோக காலத்தில் கணிசமான வணிக ஆதாயம் பெற வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
09. இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியான ஓர் ஒப்பந்தம் இது. இதில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவது முக்கிய தேசிய பாதுகாப்பில் வெளிப்புற சக்திகள் பற்றிய சந்தேகத்தை உண்டாக்குகிறது. இது தொடர்ந்து பலமுறை அரசால் சுட்டிக்காட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
10. இந்திய பேச்சுவார்த்தை அணி எதிராக இருந்தது பற்றிய பிரச்சனை நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரால் விடையளிக்கப்பட்டுள்ளது, பொது சேவையின் உயரிய பாரம்பரியத்தோடு, எல்லா கருத்துகளும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு அத்தயை கருத்துகளை கவனத்தில் எடுதுதுகொண்ட பின்னர்தான் குழுவின் முடிவு எடுக்கப்படுகிறது. உள்-அமைச்சக ஆலோசனையின் உகந்த வழிமுறைக்கு பின்னர்தான் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
11. விலை வரையறை பிரச்சனையும், 20 சதவீத தள்ளுபடியும் தொடர்புடையவை. 2012ம் ஆண்டு வழங்கப்பட்ட 20 சதவீத தள்ளுபடியை விதிமுறை மீறல் என்று கூறி ஐக்கிய முற்போக்கு கூட்டணியே நிராகரித்துவிட்டது. இந்த சலுகையில் அடிப்படை விதிமீறல் குற்றச்சாட்டு எழும் என்று அரசு எண்ணியது. இந்திய விமானப்படையின் திறன்களை மோசமாக பாதிக்கின்ற 2012ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் ஒரு பெருநிறுவன போர் மோதலின் தீமைகளை தவிர்ப்பது நல்லது. தேசிய பாதுகாப்பின் பெயரில் இந்த சர்ச்சை முடிவு பெற வேண்டும்.

                                                   - என்.ராம்