திங்கள், 7 ஜனவரி, 2019

இதெல்லாம் உண்மையாங்க ?

பாவம் கேப்டன்!
2011 தேர்தலில் அ.தி.மு.க.வும், 2016 தேர்தலில் தி.மு.க.வும் விஜயகாந்த் உடனான கூட்டணிக்கு அலையாய் அலைந்ததை நாடறியும்.
 ஆனால் ஜஸ்ட் ரெண்டரை வருடங்களில் தன் ஒட்டுமொத்த செல்வாக்கையும் இழந்து, ஒரேடியாய் சரிந்துவிட்டது தே.மு.தி.க. என்பதற்கு இதோ இந்த விஷயம்தான் நேரடி சாட்சி...

உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்கிறார் விஜய்காந்த். இந்த முறை சிகிச்சைக்குப் பின் பெரியளவில் விஜயகாந்த் தேறி வருவார்! என்று பலமாய் நம்பிக் கொண்டிருக்கின்றனர் அவரது கட்சியின் தொண்டர்கள்.

 அதேவேளையில் அமெரிக்காவில் இருந்தபடியே கட்சியின் போக்கையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் கழக பொருளாளரான பிரேமலதா.
விஜயகாந்த் சென்னை திரும்பிய பின் ‘நாடாளுமன்ற தேர்தலில் யாரோடு கூட்டணி வைக்கலாம்? என்று நிர்வாகிகளிடம் எழுத்துப்பூர்வமாக கேட்டு முடிவு செய்யப்படும்.’ என்று அக்கட்சியிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், அப்படி கேள்வி கேட்கையில் நிர்வாகிகளின் பதில் என்னவாக இருக்கும்? என்று இன்ஃபார்மலாக ஒரு சர்வேயை நடத்தச் சொல்லி தம்பி சுதீஷூக்கு கட்டளையிட்டார் பிரேமா.

அதை அவர் செய்து முடித்து, ரிசல்ட்டைப் பார்த்தால் ‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்போம்.’ என்று கிட்டத்தட்ட 99% நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்களாம்.


தமிழகமெங்கும் தி.மு.க.வுக்கு ஆதரவான காற்று வீசுகிறது!
பிரபல செய்தி சேனல்களின் சர்வே கூட ஸ்டாலின் கை ஓங்கியிருப்பதாகவே சொல்கிறது!

 இந்த நிலையில் தங்கள் நிர்வாகிகள் இப்படி அ.தி.மு.க.வை தேர்ந்தெடுப்பது ஏன்?
 தோல்வி முகத்திலுள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு எந்த லாபமுமில்லையே, பின் ஏன்? என்று விசாரித்துள்ளார் பிரேமலதா.

அதற்கு சுதீஷ் சொன்ன விளக்கம்...”உனக்கு வந்த டவுட் எனக்கும் வந்துச்சுக்கா.
 நான் இதுபத்தி விசாரிச்சேன், அப்போ கிடைச்ச தகவல்...
தி.மு.க. கூட்டணி வெற்றிகரமான கூட்டணிதான். அங்கே போய் சேர்ந்தால் நிச்சயம் நாலு தொகுதிகளாச்சும் கிடைக்கும், அதில் அத்தனையுமோ அல்லது 75%மோ வெற்றி உறுதி.

ஆனால் அதன் மூலமா நம்ம கட்சியிலிருந்து ஒருத்தர் எம்.பி.யாவார், இது மூலமா கட்சி எழுந்து உட்காரும், அண்ணியாரும் தலைவரும் டெல்லிக்கு போயிட்டு வருவாங்க அவ்வளவுதான்.

ஆனால் அ.தி.மு.க. கூட கூட்டணி வெச்சால் நாலஞ்சு இடங்களை ஒதுக்குவாங்க.
அங்கே மட்டுமில்லாம அத்தனை தொகுதிகளிலும் அவங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்றதுக்காக பணத்தை அள்ளிக் கொடுப்பாங்க, எவ்வளவு வேணும்னாலும் டிமாண்ட் செஞ்சு தொகை வாங்கலாம்
, இதை வெச்சு கடனையும் அடைக்கலாம், செட்டிலும் ஆகலாம்!

தி.மு.க. பின்னாடி போனால் வெற்றி மட்டுமே கிடைக்கும் பணம் கிடைக்காது.’ன்னு பதில் வந்திருக்குது.

இதுதான் நம்ம கட்சியோட இன்னைய நிலை.” என்றாராம்.

அமெரிக்காவில் பிரேமலதாவுக்கு பேச்சே வரவில்லையாம் இதைக்கேட்டு. ‘பணத்துக்காக கேப்டனோட தன்மானத்தையே அடமானம் வைக்க துணிஞ்சுட்டாங்களே!

என்னால நம்ப முடியலையே சுதீஷ்!’ என்றாராம் உடைந்த குரலில். பாவம்யா கேப்டன்!

தகவல்:ஆசியாநெட்.

=====================================================

ன்று,
ஜனவரி-07.

உலகின் முதலாவது வர்த்தக வங்கிஅமெரிக்காவில்  திறக்கப்பட்டது(1782)
முதல் முறையாக அரசு தலைவர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெற்றது(1789)
வில்லியம் கென்னடி டிக்சன், அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்(1894)
புரூணை, ஆசியான் அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தது(1984)
=====================================================
அறிவியலை விட்டுவிடுங்கள்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில் விஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டு சிலர் முன்வைத்து வரும் கருத்துக்கள் அறிவியல்சிந்தனையை அழிப்பதாகவும், மூடநம்பிக்கை யை வளர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்திய அரசியல் சாசனம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது நாட்டின் அடிப்படை கடமை என்று வரையறுத்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக மூடநம்பிக்கைகளை தவிர்த்து அறிவியலை முன்னிறுத்த வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் கட்டளை.
அறிவியல் என்பது உண்மையையும், ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இதற்கு மாறாக புராணங்கள் என்பது கற்பனையை அடிப்படையாகக் கொண்டது.

 இந்தப் புராணத் தில் இந்த செய்தி உள்ளது என்று கூறுவதை உலக அறிவியலாளர்கள் ஏற்க மாட்டார்கள்.
ஆனால் இந்திய அறிவியல் மாநாடு புராண ஆராய்ச்சி மாநாடாகவே மாறியுள்ளது.
உலக அறிவியலுக்கு இந்தியா அளப்பரிய கொடைகளை வழங்கியுள்ளது.

 இந்தப் பாதையில் பயணித்து மனித குலத்தின் மேம்பாட்டிற்கும், பூவுலகின் இறுத்தலுக்கும், பிரபஞ்சம் குறித்த பேரறிவை வளர்ப்பதற்கும் அறிவியலாளர்கள் முயல வேண்டும். இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெகதளா கிருஷ்ணன் என்பவர் ஐன்ஸ்டின், நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரது கருத்துக்கள் தவறானது,
 இதையெல்லாம் மாற்றி அமைக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் முன்வைக்கப்பட்ட அறிவியல் கருத்து அடுத்த கண்டுபிடிப்பின் மூலம் மறுதலிக்கப்பட்ட வரலாறு உண்டு.
ஆனால் அவ்வாறு மறுக்கும்போது உரிய ஆதாரங்களை முன்வைத்து நிரூபிக்க வேண்டும்.
அதுதான் அறிவியல். ஆனால் இவர் ஐன்ஸ்டின், நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் என உலகம் ஒப்புக்கொண்டுள்ள அறிவியல் மேதைகளின் கருத்துக்களை தவறு என்று கூறுகிறாரே தவிர அதற்கான ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை.

புவிஈர்ப்பு விசை இருக்கிறது என்றால் தண்ணீரை பூமி ஏன் ஈர்க்கவில்லை என்றுஇவர் கேட்கிறார்.
 அதற்கு இவர் பதில் கூறுவார்என்று பார்த்தால் புராண வேதங்களில் இதற்கெல்லாம் விடை இருக்கிறது என்று ஒரே போடாக போடுகிறார்.

இவரது ஆய்வறிக்கை களை நாற்பது நாடுகளுக்கு அனுப்பியுள்ளாராம். இன்னும் பதில் வரவில்லையாம். இந்த ஆசாமியின் கருத்துக்களை உலக விஞ்ஞானிகள் படித்துவிட்டு ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவரின் கருத்து என்றுதான் புரிந்து கொண்டிருப்பார்கள்.
இவருடைய ஆய்வுகள் ஏற்கப்பட்டால் புவிஈர்ப்பு விசைக்கு நரேந்திர மோடி அலைகள் என்றும், ஈர்ப்பு விசை ஒளி விளைவுக்கு மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் விளைவு என்றும் பெயர் சூட்டுவாராம். இதிலிருந்தே இவர் எவ்வளவு ‘பெரிய விஞ்ஞானி’ என்று புரிந்து கொள்ள முடியும்.

ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஸ்வரராவ் ராவணிடம் 24 போர் விமானங்களும், விமானத்தளமும் இருந்தது என்றும் கவுரவர்கள்தான் சோதனைக்குழாய் குழந்தைகள் என்றும் புராண பிரசங்கம் நடத்தியுள்ளார்.

அய்யா அறிவாளிகளே!
 அறிவியலை விட்டுவிடுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------