போர் முடிவு?
இஸ்ரேல் - – ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ளது. இனி அது தொடங்கக் கூடாது என்பது தான் உலக சமுதாயத்தின் வேண்டுகோள்!
இஸ்ரேல் -– ஹமாஸ் படையினர் இடையே கடந்த பதினைந்து மாதங்களாக நடைபெற்று வந்தது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் - – 7 முதல் தொடர்ச்சியாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரை ஆறு வார காலத்துக்கு நிறுத்த ஒப்பந்தம் ஜனவரி 19 முதல் தொடங்குகிறது.
பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் இந்தப் போர் தொடங்கியது. 1200 பேர் கொல்லப்பட்டதாகவும், 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றதாகவும் இஸ்ரேல் அப்போது கூறியது. இதனைக் காரணமாக வைத்து காசாவில் மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடங்கியது. அனைத்து வகையான தாக்குதலையும் காசா மீது தொடுத்தது இஸ்ரேல். ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு வாழும் பாலஸ்தீன பெண்கள் 90 விழுக்காடு பேர், தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறிவிட்டனர்.
இப்போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் பல முறை எடுக்கப்பட்டது. 2023 நவம்பர் மாதம் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. “நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தின் போது காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள். அந்த நாட்களில் மோதல் ஏற்படாது. தொடர்ந்து கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள். போர் நிறுத்தம் ஒவ்வொரு நாளாக நீட்டிக்கப்படும்” என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.
'இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தால் நாங்கள் எங்கள் வசம் இருக்கும் இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கத் தயார்' என்று ஹமாஸ் படையினர் சொன்னதால்தான் இந்த ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதை ஏற்று இஸ்ரேல் சிறையில் இருந்து 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 105 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸும் விடுவித்தது. இருதரப்பு நல்லெண்ணமும் தொடரவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'இஸ்ரேல் தாக்குதலால் ஹமாஸ் படையினருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது' என்று கிண்டல் அடித்தார். 'போரை நிரந்தரமாக நிறுத்தவில்லை. ஹமாஸ் படையினரை ஒழிக்கும் வரை போர் தொடரும்' என்றும் இஸ்ரேல் கூறியது.எனவே மீண்டும் போர் தொடங்கியது. ஓராண்டு காலம் மீண்டும் போர் நடந்தது.
இப்போது ஆறு வாரங்களுக்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கடந்த வாரம் ஒரு சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இஸ்ரேல் - – ஹமாஸ் ஆகியவை பங்கேற்றன. இதன்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
*காசாவில் மொத்தமுள்ள 100 பிணைக் கைதிகளில் 33 பேரும், இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களும் 6 வாரங்களில் விடுவிக்கப்படுவார்கள்.
*காசாவில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளும்.
*இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை பின்னர் தொடரும்.
-– என்பவையே இவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகும். ஆறு வார கால போர் நிறுத்தத்துக்கு இவை பயன்படுமே தவிர, நிரந்தரப் போர் நிறுத்தத்துக்கான கொள்கை முடிவுகள் இதில் இல்லை.
இஸ்ரேல் - – ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்பும் தனது அரசியல் கொள்கை நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வந்து விட்டது என்று சொல்வதற்கான எந்தச் செய்தியும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை.
இஸ்ரேலியப் படைகள் காசா பகுதியில் இருந்து வெளியேறும் வரை இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கப் போகிறது. அத்தகைய செய்தி ஏதும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. 'ஹமாஸ் அமைப்பு கலைக்கப்படும் வரை தாக்குதலைக் கைவிட மாட்டோம்' என்று வெளியில் சொல்லி வருகிறது இஸ்ரேல். இது அமைதி எண்ணங்களுக்கு மாறான நிலைப்பாடு ஆகும். அத்தகைய இஸ்ரேலை நம்பி ஹமாஸ் அமைப்பினர் அமைதியாகவும் மாட்டார்கள்.
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவும், அரபு ஊடகங்களும் தங்கள் விருப்பத்துக்கு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 'இஸ்ரேல் அடிபணிந்துவிட்டது' என்று ஒரு தரப்பும், 'ஹமாஸ் விட்டுக் கொடுத்துவிட்டது' என்று இன்னொரு தரப்பும் எழுதி வருகிறது. டிரம்ப் பதவியேற்கும் முன் சாதித்துவிட்டார் என்றும் சிலர் எழுதுகிறார்கள். இஸ்ரேல் பிரதமருக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறப் போகிறோம் என்று அங்குள்ள கூட்டணிக் கட்சியானது சொல்லி வருகிறது. இது போன்ற வெளிப்புற சக்திகள் அடுத்தடுத்து என்ன செய்யப்படுகின்றன என்பதை வைத்துத்தான் இந்த அமைதி ஒப்பந்தம் உயிர் வாழும்.
இதனை உணர்ந்து ஐ.நா. உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள் இதனை நிரந்தர போர் நிறுத்தமாக மாற்றுவதற்கு வழிவகை காண வேண்டும்.