உலகம் போற போக்கைப் பாரு...
புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 242 பேரை எச்சரித்து அனுப்பிய காவல்துறை.
2024ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானத்தால் 1,500 பேருக்கு மறுவாழ்வு.சென்னை உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம்.13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம்.
இந்தியாவில் 1901 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பதிவுகளின் அடிப்படையில் தற்போது விடைப்பெற்ற 2024 ஆம் ஆண்டுதான் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்தாண்டு வெப்பநிலை, இயல்பை விட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 0.90 டிகிரியாக உள்ளது. ஐரோப்பிய வானிலை மையத்தின் தகவலின்படி கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு உலகிலேயே 41 நாட்கள் மிக ஆபத்தான வெப்பம் இருந்தது. உலகில் சராசரியாக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஆண்டு இதுவாகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த வெப்பநிலையை 2024 ஆம் ஆண்டு பதிவானது முறியடித்துள்ளது. உலகம் முழுவதுமே அதிக அளவு வெப்பம் பதிவான நாட்கள் அதிகமாகவே உள்ளன . இது காலநிலை மாற்றத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது.
வழக்கு தொடரும்!
பத்திரிகையாளர் இ. ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரது நற்பெயருக்கு அவதூறு செய்யும் வகையில் செயல்பட்டதற்காகவும், டிரம்புக்கு 5 மில்லியன் டாலர் அபராதம் விதித்து ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புக்கு சட்டரீதியான பின்னடைவு என தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள இரண்டாவது அமெரிக்க சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, புதிய விசாரணைக்கான டிரம்பின் மேல்முறையீட்டை நிராகரித்தனர்.
டிரம்பால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளான மற்ற பெண்களின் சாட்சியங்கள் மற்றும் பெண்கள் குறித்து டிரம்ப் தவறாக பேசுவது தொடர்பான டேப்பும் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், 1990-களில், நியூயார்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தை வன்கொடுமை என நீதிபதிகள் தெரிவிக்கவில்லை. டிரம்புக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 2.02 மில்லியன் டாலர் பாலியல் துன்புறுத்தலுக்காகவும், 2.98 மில்லிடன் டாலர் அவதூறான சமூக வலைதள பதிவிற்காக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் கரோலின் குற்றச்சாட்டுகளை வெறும் வதந்தி என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெஸ்ஸிகா லீட்ஸ் மற்றும் நடாஷா ஸ்டோய்னாஃப் என்ற இரு பெண்களின் சாட்சியங்கள்முக்கியமானதாக கருதப்பட்டன.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக கரோலின் வழக்கறிஞர் ராபர்ட்டா கப்லான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், கரோல் குற்றச்சாட்டுகளை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
டிரம்ப் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னரும் இது தொடர்பான வழக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் போற போக்கைப் பாரு...
இந்தியாவின் அண்டைய நாடுகளில் தொடங்கி உலக நாடுகளில் 2024ஆம் ஆண்டு நடந்த முக்கியமான தேர்தல்கள் குறித்து பார்க்கலாம்.
வங்கதேசம்:
2024ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், இந்த தேர்தல் நேர்மையற்றாக, எல்லோரையும் உள்ளடக்கியதாக இல்லை. ஜனநாயக ஒற்றுமைக்கு உரியதாக இல்லை என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் போடடியிட்டு 224 தொகுதிகளில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சியமைத்தது. வங்கதேச தேசிய கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தேர்தல் முறையாக நடைபெறவில்லை.
சமமான போட்டியை எதிர்கொள்வதற்கு பதில், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாக ஷேக் ஹசீனா ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஷேக் ஹசீனா (Image credits-AP)
தேர்தலுக்குப் பின்னர் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் வங்கதேசத்தின் ஜனநாயக நம்பிக்கை தன்மை குறித்து கேள்வி எழுப்பின. 2024ஆம் ஆண்டின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர் இயக்கம் போராட்டத்தை முன்னெடுத்தது. இது மாபெரும் எழுச்சியாக மாறி ஷேக் ஹசீனாவை பதவியை விட்டு விலகும் வரை தொடர்ந்தது.இதனால் அந்த நாட்டின் 12ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனூஸை தலைமை ஆலோசகராக கொண்ட இடைக்கால அரசு பதவி ஏற்றது. இந்தியாவின் கிழக்குப்பகுதி அண்டை நாடான வங்கதேசத்தில் விரைவில் தேர்தல்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூட்டான்:
இமாலய அரசான பூட்டானில் தேசிய அவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதன்மை தேர்தல்கள் 2023ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றன. இரண்டாவது கட்ட தேர்தல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்றது. பூட்டான் ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னர் நான்காவது முறையாக அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
முதன்மை கட்டத் தேர்தலில் வெற்றி பெறற மக்கள் ஜனநாயக கட்சி, பூட்டான் டெண்ட்ரல் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளுக்கு இடையே இறுதி கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 47 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஷெரிங் டோப்கே இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார்.
பாகிஸ்தான்:
இந்தியாவின் மற்றும் ஒரு அண்டை நாடான பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஓரம்கட்டப்பட்டது. அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டது. எனவே அவரது கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாக களம் இறங்கினர். இம்ரான் ஆதரவாளர்கள் 100 தொகுதிகளைக் கைப்பற்றினர்.
நாடாளுமன்றத்தில் பெரிய ஒரே குழுவை சேர்ந்தவர்கள் என்ற நிலை ஏற்பட்டது.
எனினும், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சூழல் இம்ரான் கானுக்கு ஆதரவாக இல்லை. நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி அதிக பட்சமாக 75 இடங்களை பெற்ற கட்சியாக இருந்தது.
இந்த கட்சி 54 இடங்களைப் பெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி அரசு பதவி ஏற்றது.
இலங்கை:
இலங்கையில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. அனுரா குமார திசநாயகேயின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இலங்கையில் அண்மை ஆண்டுகளில் நேரிட்ட அரசியல், பொருளாதார வீழ்ச்சி காரணமாக முந்தைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதிலும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை கைப்பற்றியது.
இதன் மூலம் அரசியலமப்பு சட்டத்தில் மாற்றம், பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்தல் போன்ற முக்கிய முடிவுகளை மேற்கொள்ள திசநாயகே திட்டமிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 21 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியா:
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன. இதில் பிரபோவோ சுபியாண்டோ வெற்றி பெற்றார். 'ஆன்வார்ட் இந்தோனேசியா கூட்டணி' மற்றும் ஜிப்ரான் ரகாபுமிங் ரக்காவுடன் கூட்டு சேர்ந்து அவர் வெற்றி பெற்றார்.
பிரபோவோ சுபியாண்டோ 58 சதவிகித வாக்குகளை கைப்பற்றினார். முக்கிய எதிர்கட்சி தலைவர்களான கஞ்சர் பிரனோவோ மற்றும் அனிஸ் பஸ்வேடன் ஆகியோரை தோற்கடித்தார்.
தேசிய ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி, ஆகியவற்றை முன்னுறுத்தி அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தைவான்:
கிழக்கு ஆசிய நாடான தைவானில் அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை 2024ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்றன. ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங்-தே 40 சதவித வாக்குகளை் பெற்று வென்றார்.
கோமிண்டாங்கின் ஹூ யு-இஹ் மற்றும் தைவான் மக்கள் கட்சியின் கோ வென்-ஜே ஆகியோரை தோற்கடித்தார்.
லாய் சிங்-தேயின் வெற்றியின் மூலம் ஜனநாயக முன்னேற்ற கட்சி மூன்றாவது முறையாக அதிபர் பதவியை கைப்பற்றியது. இது வரலாற்று ரீதியிலான முக்கியமான மைல்கல்லாகும். தைவானின் இறையாண்மை, சீனாவின் ஒரே நாடு இரண்டு முறை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு,குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் கூட்டணி ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் முந்தைய அதிபரின் தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள் விஷயத்தில் அதே நிலைப்பாட்டை இவரும் கொண்டிருந்தார்.
ஜப்பான்:
இன்னொரு கிழக்கு ஆசிய நாடான ஜப்பானிலும் 2024ஆம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் ஷிகெரு இஷிபாவால் பிரதிநிதிகள் அவை, கீழ் அவை ஆகியவை முன் கூட்டியே கலைத்தார். ஷிகெரு இஷிபா பதவி ஏற்ற ஒரு மாதம் கழித்து தேர்தல்கள் நடைபெற்றன.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் போட்டியில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்றது.
ஆட்சியைக் கைப்பற்றியபோதிலும் கோமிட்டோ தலைமையிலான எல்டிபி கட்சி பெரும் பின்னடவை சந்தித்தது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை. 233 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் 215 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. ஊழல் முறைகேடு காரணமாக எல்டிபி கட்சி பின்னடவை சந்தித்தது.
இதனால் முக்கிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயக கட்சி முந்தைய 98 தொகுதிகளில் இருந்து 148 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸில் 2024ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவீன் ராம்கூலம் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான அலையன்ஸ் டு சேஞ்ச்மென்ட் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் 60 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றியது.
அந்நாட்டின் அரசியல் பரப்பில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இதனால், பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத் தலைமையிலான மக்கள் கூட்டணியின் பதவி காலம் முடிவுக்கு வந்தது. வாழ்வாதார செலவுகள் அதிகரிப்பு, முறைகேடுகள், பொருளாதார சரிவு ஆகியவற்றால் பிரவிந்த் ஜூக்நாத் கட்சி தோல்வியை சந்தித்தது.
ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது.
பிரான்ஸ்:
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் தமது தலைமையிலான கூட்டணி பெரும் இழப்பை சந்தித்ததையடுத்து அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவையை கலைத்தார்.
எனவே,பிரான்சில் 2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், ஜூலை 7ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது. மெக்ரானின் அரசு சார்பு குழு, இடதுசாரி புதிய பாப்புலர் ஃப்ரண்ட் , மற்றும் தீவிர வலதுசாரி தேசிய பேரணி ஆகியவை களத்தில் இருந்தன. தேர்தல் முடிவில் தொங்கு நாடாளுமன்ற அமைந்தது.
தேசிய பேரணி கட்சி அதிக இடங்களை பெற்றபோதிலும், பெரும்பான்மை பெறவில்லை. மெக்ரான் கட்சியின் ஆதரவுடன் பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு அமைந்தது. பட்ஜெட்டில் நிதி குறைப்பு மேற்கொண்டதால், அவரது ஆட்சிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றார்.
எனவே தமது கூட்டணி கட்சியை சேர்ந்த ஃபிராங்கோயிஸ் பெய்ரூவை மெக்ரான் பிரதமராக நியமித்தார்.
இங்கிலாந்து:
இங்கிலாந்திலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு பெரும் அரசியல் மாற்றம் நேரிட்டது. ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் அரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 400 தொகுதிகளை லேபர் கட்சி வென்று மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து கீர் ஸ்டார்மர் பிரதமர் ஆனார். கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை காரணமாகவும், குறிப்பாக பொருளாதார நிலையற்ற தன்மை, உட்கட்சி மோதல் ஆகியவற்றால் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது.
முந்தைய தேர்தலில் 244 தொகுதிகளை கைப்பற்றி இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி இந்த முறை 121 தொகுதிகளை மட்டுமே பெற்றது.
அமெரிக்கா:
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். துணை அதிபராக ஓஹியோவைச் சேர்ந்த ஜூனியர் அமெரிக்க செனட்டர் ஜேடி வான்ஸும் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப்பும், துணை அதிபராக ஜேடி வான்ஸும் வரும் 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.