இலக்கு எது?

 தினைந்து ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிறது நாம் தமிழர் கட்சி.  தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களையும் எதிர்கொண்டு, குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தையும் எட்டி இன்றைக்கு மாநில கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது.  

பிரபாகரன் சந்திப்பு, பெரியார் – அம்பேத்கர் விவகாரம் உள்பட சீமானின் பல பேச்சுக்கள் ‘அதிர்ச்சி நகைச்சுவை’ அளிப்பவையாகவே உள்ளன.  இன்றைக்கு ‘’தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும்’’ என்று பேசும் சீமானின் தொடக்க கால அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே திராவிட இயக்க மேடைகள்தான். 

தன் தந்தை தீவிர காங்கிரஸ் தொண்டராக இருந்தாலும் கூட, நோட்டு புத்தகங்களில் ‘உதயசூரியன்’ படத்தினை வரைந்து வைக்கும் அளவிற்கு பள்ளி, கல்லூரி காலங்களில் திராவிட இயக்க  சிந்தனையில் தீவிரமாகவே இருந்தேன் என்று  சீமானே சொல்லி இருக்கிறார்.  

சாதி ஒழிப்பையும், பெரியாரிய கொள்கைகளையும் மேடைகளில் முழங்கி வந்த சீமான் கலைஞரின் அன்புக்குரியவராக மாறினார்.  இலங்கை இறுதிப்போர் வரையிலும் கலைஞரை நேரில் சந்திக்கும் அளவிற்கு செல்வாக்கானவராகவும் இருந்தார்.  2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்து பேசிய சீமான், 2008 இலங்கை இறுதிப்போருக்கு பின்னர் தன் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டார். திராவிட இயக்க கொள்கைகளை விட்டு,  ஈழ விவகாரத்தினை முன்னிலைப்படுத்தி பேசி வந்தார்.  ‘’இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என்று 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் அளவிற்கு முற்றிலும் மாறிப்போனார்.  

2009இல் தனிக்கட்சி தொடங்கிய சீமான், ’’தமிழ்நாட்டில் எந்த இனத்தவரும் வாழலாம். ஆனால், ஆள்கின்ற உரிமை எங்களுக்கு மட்டுமே’’ என்ற கருத்தை முன்வைத்து தேர்தல் அரசியலுக்கு வந்தார்.  அதனால்தான் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியபோது, அவரின் அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்தார் சீமான்.

தமிழ்தேசியவாதியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் சீமான், விஜய்யையும் அந்த வட்டத்திற்குள் இழுக்க நினைத்து ஏமாந்து போயிருக்கிறார்.  

பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தவர்கள்.  ஆனால் அவர்களைக் காட்டிலும், ஆண்டுக்கணக்கில் பழகியது மாதிரி பிரபாகரனை பற்றி அதிகம் பேசி வருவதும், ஈழத்தமிழர்கள் நலனிற்காக சிறு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்ற விமர்சனம் உள்ள நிலையில், ஈழத்தமிழர்களை காக்க வந்த காவலன் மாதிரி சீமான் பேசி வருவதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.  குறிப்பாக, பிரபாகரன் தனக்கு ஆமைக்கறி சமைத்து பரிமாறினார் என்று பேசுவதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை என்று பிரபாகரனை சந்தித்து பல மணி நேரம் பேசியவர்களே அம்பலப்படுத்தி வந்தனர்.  

இலங்கை இறுதிப்போரில் போரிடும் பணிகளை பார்த்திருப்பாரா பிரபாகரன், இல்லை சீமான் சொல்லுவது போல் சமைத்து பரிமாறியிருப்பாரா? என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.

’வெறும் 8 நிமிடங்கள்தான் பிரபாகரனை சந்தித்தார் சீமான்.  அப்போதும் கூட  தன்னுடன் போட்டோ எடுக்க சம்மதிக்கவில்லை பிரபாகரன்’ என்று வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் போட்டு உடைத்தனர்.  பிரபாகரன் தனக்கு ஏகே-64 ரக துப்பாக்கி பயிற்சிகள் அளித்ததாக சீமான் சொல்லுவதையும் மறுத்தவர் வைகோ. துப்பாக்கி பயிற்சி தனக்கு மட்டுமே அளித்தார் பிரபாகரன் என்று சொன்ன வைகோ, பிரபாகரனும் சீமானும் இருப்பது போன்ற போட்டோ ‘ஒட்டுவேலை’ என்று அம்பலப்படுத்தினார்.

அதன்பின்னரும் கூட, தான் பிரபாகரனை பல நாட்கள் சந்தித்து பேசியது போலவே சீமான் பேசி வந்த நிலையில், ‘’பாரதிராஜா, மகேந்திரன், சீமான் எல்லாம் பிரபாகரனை சந்தித்தது வெறும் 10 நிமிடம்தான்’’ என்று போட்டு உடைத்தார் நடிகர் ராஜ்கிரண். இதையும் மறுத்து சீமான் பேசி வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி காளியம்மாளே அதுவும் சீமானை வைத்துக்கொண்டே, ’இலங்கை சென்று சீமான் பேசிய அந்த 10 நிமிட பேச்சுதான் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது’ பேசியது சீமானை அதிரவைத்தது.  

சொந்த கட்சி நிர்வாகியே இப்படி போட்டு உடைத்ததில் ரொம்பவே தடுமாறிப்போன சீமான்,  ”தங்கை காளியம்மாளுக்கு நான் எவ்வளவு நேரம் சந்தித்து பேசினேன் என்பது தெரியாது.  அது எனக்கும் என் தலைவர் பிரபாகரனுக்கும் மட்டும்தான் தெரியும்” என்று சொல்லி சமாளித்தார்.

வைகோ, திருமாவளவன், ராஜ்கிரண், காளியம்மாள் போன்றோர் சொன்னதற் கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது ‘வெங்காயம்’ படம் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் தற்போதைய வாக்குமூலம். பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுக்கவில்லை. பிரபாகரனுடன் சீமான் இருப்பது மாதிரி இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே தான் தான் என்று சொல்லி இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். 

மக்கள் தொலைக்காட்சியில் தான் ‘வெங்காயம்’ சீரியல் செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கே வேலை செய்து கொண்டிருந்த செங்கோட்டையன் என்பவர், ஒரு டிவிடி கொடுத்து அதில் தனித்தனியாக இருந்த பிரபாகரனையும் சீமானையும் இணைத்து தரச்சொன்னதாகவும், அவ்வாறே தான் எடிட் செய்து கொடுத்ததாகவும் சொல்கிறார்.

பின்னர், ‘பிரபாகரனை நேரில் சந்தித்த சீமான்’ என்று அந்த படம் பகிரப்பட்டு வந்ததைக் கண்டு அதிர்ந்த ராஜ்குமாரிடம், ’’அரசியல் தேவைக்காக சீமான் இப்படி பயன்படுத்துகிறார்.  இதை பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன்.

தீவிர பெரியாரிஸ்ட் ஆன சங்ககிரி ராஜ்குமாரும் இத்தனை நாளும் இந்த உண்மையை மறைத்து வைத்திருந்தார்.  தற்போது பெரியாரை தொடர்ந்து சீமான் இழிவுபடுத்தி வரும் நிலையில், அந்த போட்டோ எடிட் வேலையை அம்பலப்படுத்தி இருக்கிறார். இதற்கு மேலும்   சீமான் சமாளிக்க வாய்ப்பே இல்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.  

திராவிட இயக்க கொள்கைகளில் மூழ்கியிருந்த சீமான் இப்போது திடீரென்று திராவிட இயக்கத்தை முற்றாக எதிர்ப்பதும் பெரியாரை அவதூறாக பேசி வருவதும் ‘அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அசைன்மெண்ட்’ என்று சொல்லும் விசிக வன்னிஅரசு, ‘ஓம் தமிழர்’ என்றும்  நாம் தமிழரை கடுமையாக விமர்சிக்கிறார்.  அதற்கேற்றார் போல்தான், பாஜக போல் பிரிவினை வாதம் பேசி வருகிறார் சீமான். ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிராகவே இருக்கின்றன சீமானின் கருத்துக்கள்.

ஒடுக்கப்பட்டோரில் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியினருக்கு கொடுத்த 3% உள் இட ஒதுக்கீடு என்பது அந்த சமூகத்தினருக்கு மாபெரும் வளர்ச்சியை கொடுத்திருக்கிறது.  ஆனால், இதை சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தெலுங்கு பேசுகிறார்கள் என்பதற்காகவே அருந்ததியினரை சீமான் பழித்துப்பேசி வருவது அபத்தம்.

இந்திய ஜனநாயகத்தில் கூட்டாட்சி முறைதான் உள்ளது.  பெரும்பாலான நாடுகளிலும் கூட்டாட்சி முறைதான் உள்ளது.  அப்படி இருக்கும் போது கூட்டணியே வேண்டாம் என்று சீமான் சொல்லுவது,   ஓட்டுக்களை பிரிப்பது மற்றும் திராவிடத்தை வீழ்த்துவது மட்டும்தான் சீமானின் இலக்கு என்பதை உறுதிப்படுத்துகிறது என்கிற விமர்சனங்கள் எழ காரணமாகின்றன.

’இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்’ என்கிற சீமானிஸத்தால் கட்சியினரே கொத்து கொத்தாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.  

ஆனால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத சீமான், கூடுதலாக  கட்சியினர் மேலும் வெளியேறும் எல்லா  வேலைகளையும் செய்து வருகிறார் என்றே விமர்சனங்கள் எழுகின்றன.

ஒரு அரசியல்வாதிக்குரிய பண்பாடு இல்லாமல், சிலைகளை உடைப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என்று அடியாளைப்போல சீமான் பேசுவதாகவும் கடும் விமர்சனம் இருக்கிறது.  

இத்தனை பேர் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியும் கூட பிரபாகரனுடன் இருப்பது போன்ற போட்டோ உண்மை என்றே ஒற்றைக்காலில் பிடிவாதமாக நிற்பது போன்றுதான், பெரியார் அப்படிப்பேசினார் இப்படிப்பேசினார் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசி உண்மை என்று நம்பவைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது சீமானை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

ஒரு  விரக்தியின் மனநிலையில் இருந்து சீமான் இப்படி தொடர்ந்து பல விசயங்களை பேசி வருவது,  ’இது என்ன வகையான அரசியல்?’ என்ற கேள்வி எழக் காரணமாகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?