அசிங்கப்பட்ட
அமலாக்கத்துறை
தற்சார்பு அமைப்புகளான சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களின் விருப்பப்படி செயல்படுவதும், ஆட்சியாளர்களின் எதிரிகள் மீது பாய்வதும், மாற்றுக் கட்சிகளைத் துண்டாடத் துணை போவதும் இந்திய அரசியல் வரலாற்றில் புதிதல்ல. ஆட்சிகளில் இருக்கக்கூடிய கட்சிகள் மாறினாலும், இந்த அமைப்புகளின் செயல்பாட்டுக் காட்சிகள் மாறுவதில்லை.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர மறுக்கும் கட்சிகளின் பிரமுகர்கள், தங்களை அம்பலப்படுத்தும் ஊடகங்கள், மதரீதியான அணுகுமுறையுடனான அச்சுறுத்தல்கள் என சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை குறிவைத்து தாக்குதல் நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியும், நீதிமன்றங்களை நாடியும் வருகின்றன.
எனினும், டெல்லியில் ஆம்ஆத்மி கட்சித் தலைவர்கள், மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைமை, தமிழ்நாட்டில் தி.மு.க, அத்துடன் அ.தி.மு.க, பொதுவாழ்க்கையில் நேர்மைக்குப் பெயர் பெற்ற பொதுவுடைமை இயக்கம் ஆட்சி செய்யும் கேரளா என எங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் இந்த மூன்று அமைப்புகளின் ரெய்டு நடவடிக்கைகள் தொடர்ந்தபடியே இருப்பதைக் காணலாம்.
இதில் அமலாக்கத்துறையின் செயல்பாடுதான் உச்சகட்டம்.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மாதக்கணக்கில் சிறைப்படுத்தப்பட்டார். அவருடைய அமைச்சரவையில் இருந்த மணீஷ் சிசோடியா ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தே ஜாமீன் பெற்றார்.
தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி நிலையும் அதுதான். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கிடைக்கப் போராடினார். அதே நேரத்தில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளின் முன்னாள் பிரமுகர்கள் பா.ஜ.க. ஆதரவு நிலை எடுத்ததும் அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு, கறை படியாதவர்களாகக் காட்டப்பட்டனர்.
இந்த பாரபட்சமான அணுகுமுறை தொடர்ந்து கேள்விக்குள்ளாவதுடன், நீதிமன்றத்திலும் வழக்குகளை எதிர்கொள்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மதுபான ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை சார்ந்த வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள அருண் பட்டி திரிபாதி என்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி தனக்கு சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 17 அன்று அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தை, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் மத்திய அரசின் வழக்கறிஞரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, “இது அரைவேக்காட்டுத்தனமான வாக்குமூலம். ’எங்களை கலந்தாலோசிக்காமலேயே, நாங்கள் ஆஜராவதற்கு முன்பே இப்படியொரு அரைவேக்காட்டுத்தனமான பதிலை வாக்குமூலமாக தாக்கல் செய்திருக்கிறார்கள்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்காக ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலே, அமலாக்கத்துறை தாக்கல் செய்த அஃபிடவிட்டை அரைவேக்காடு என்று உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக விமர்சித்த நிகழ்வு பா.ஜ.க ஆட்சியில்தான் அரங்கேறியுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம், “இது மிகவும் கவலைக்குரிய செயல்பாடு. என்னதான் நடக்கிறது இங்கே? அமலாக்கத்துறைக்கும் அதன் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கும் என்ன பொறுப்புணர்வு இருக்கிறது?’‘ என்று கேள்வி எழுப்பியது. அம்பலப்பட்டு நின்றது அமலாக்கத்துறை.“நீங்கள் (அமலாக்கத்துறை) பதிவு செய்த பதில் மனுவை நீங்களே மறுக்கிறீர்களா?” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலைப் பார்த்து உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியபோது, “நான் அதை மறுக்கவில்லை. முறையான ஆலோசனைகளுடன் தாக்கல் செய்யப்படாததால், அதை நான் கவனித்து உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தேன்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதிலளித்துள்ளார்.
அமலாக்கத்துறையும் வழக்கறிஞர்களும் உடன்பாடாக செயல்படாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் பதிலளித்தால் நாங்கள் எப்படி ஏற்பது என்று உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியையு வெளியிட்டுள்ளது.
மேலே இருந்து வரும் பாரபட்ச அணுகுமுறையிலான உத்தரவுகளின்படி அமலாக்கத்துறை செயல்படுவதால் உச்சநீதிமன்றத்தில் கூனிக்குறுகி அசிங்கப்பட்டு நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஆனால், மத்தியில் ஆட்சி செய்பவர்கள் இது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் கைது, மணீஷ் சிசோடியா சிறைவைப்பு, செந்தில் பாலாஜி சிறைவாசம் இவற்றுக்கு ஊடகங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அமலாக்கத்துறையின் செயல்பாட்டை உச்சநீதிமன்றம் கண்டித்ததற்கு கொடுக்கப்படவில்லையே.
அதனால் அசிங்கப்பட்டாலும் அத்துமீறல்கள் தொடரவே செய்யும்.