நித்தியானந்தா....?யாரானந்தா?
நித்தியானந்தா என்கின்ற ராஜசேகர் 1978ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி திருவண்ணாமலையில் பிறந்தபோது, வானத்தில் எந்த நட்சத்திரமும் தோன்றியதாகச் செய்தியில்லை. எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிடவில்லை.
அவரது குடும்பம் சாதாரண விவசாயக்குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராஜசேகருக்குஜாதகம் கணிக்கப்பட்டபோது ஜோதிடர், ராஜசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாகத் திகழ்வார் என்று கூறினாராம்.
தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா அன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக இவர் அடைந்ததாக அறிவித்தார். பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அதன்பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். அங்கு சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே, மற்றவர்களை முந்திக் கொண்டு தனக்கு முன்னுரிமை தந்து, ‘தத்கல்’ முறையில் தீட்சை தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். ‘அப்படி ஒரு வழக்கம் இங்கு இல்லை’ என்று பதில் கிடைக்கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர், பின்னர் இமயமலைக்குப் புறப்பட்டார். அங்கு பல கடுமையான தவ நிலைக்குப் பிறகு, ‘ஞானஅனுபூதி முக்தி’ என்னும் நிலையினை 2000ம் ஆண்டு ஜனவரி 1 அன்று அடைந்ததாகக் கூறிய இவர், தியானபீடம் என்ற சேவைநிறுவனத்தினை அதே நாளில் ஆரம்பித்தும் வைத்தார். இன்று இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் பரந்து விரிந்துள்ளது (இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்தியானந்தா என்று பெயரிட்டதாக தியானபீடத்தின் இணையதளம் கூறுகிறது).
நித்தியானந்தா எந்த விஷயத்திலும் ஹைடெக் சமாச்சாரங்களைத்தான்
விரும்புவார். மைக் முதல் லேப்டாப் வரை ஹைடெக் சாமியாராக
வலம் வந்த நித்தியானந்தா கார் விஷயத்திலும் ஹைடெக்
அம்சங்களைக் கொண்ட ஃபோர்டு எண்டெவர் பிரிமியம் எஸ்யூவி
காரை பயன்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு ஒரு புதிய காரை மாற்றிவிடுவது நித்தியானந்தாவின் வாடிக்கையாம்.
இன்றைய நிலையில் நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள். தென் இந்தியாவில் ஆன்மிகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, கோடீஸ்வர தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகளின் நம்பிக்கை நட்சத்திரமானார். தியான பீடத்தில் ஆன்மிகப் பயிற்சியில் சேர விரும்புபவர்களிடம் 2,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா கையைத் தூக்கி ஆசி வழங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் கட்டணம், தலையைத் தொட்டு ஆசி வழங்க 10 ஆயிரம் ரூபாய் கட்டணம், தொட்டு அரவணைத்து ஆசி வழங்க 25 ஆயிரம் ரூபாய், பாதபூஜைக்குப் பல்லாயிரம் என வசூல் வேட்டை நடந்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 5,000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கட்டி ஆசி பெற்றுள்ளனர்.
கிட்டதட்ட 25000 கோடிகளை தனது சொந்த கருவூலத்தில் வைத்திருக்கும் நித்தியானந்தா தன்னை துறவி என்று சொல்லிக்கொள்ள தகுதி இருக்கிறதா?
மதுரை ஆதினமாகும் தகுதிதான் இருக்கிறதா?
இப்படியெல்லாம் ஜெகஜோதியாகச் சென்று கொண்டிருந்த நித்தியானந்தா வாழ்க்கையில் ஒரு வீடியோ படம் மூலம் சறுக்கல் ஆரம்பித்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து மதுரை ஆதீன வாரிசானது
, பெங்களூரில் செக்ஸ் புகார் வழக்கு, தலைமறைவு, சரண், ஜாமீன் என்றுசர்ச்சைகள் மேல் சர்ச்சை. எதற்கும் அசராத நித்தியானந்தா தொடர்ந்து தனது ‘ஆன்மிகப் பணிகளில்’[?]இன்னமும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இது அவர் மீதான நம்பிக்கை அல்ல. மக்களின்மடத்தனமான பக்தி மீது அவர் வைத்திருக்கும் ‘அபாரமான நம்பிக்கை’. இந்த அபார மட நம்பிக்கைதான் இன்னும் இன்னும் புற்றீசல்போல் சாமியார்கள் இங்கு புறப்பட்டுக் கொண்டிருக்க காரணமாயிருக்கிறது.
பிரமானந்தாவுக்குப்பின் ஒரு நித்தியானந்தாவை இந்த மக்களின் பக்தி[?]வெறிதான் உருவாக்கியுள்ளது.
இவருடன் போலியானந்தா சாமியார்களின் கதை முடியப்போவதும் இல்லை.
இந்த ஆன்ந்தாக்களால் விவேகானந்தர் போன்ற உண்மை வீரத்துறவிகள் பெயர் அல்லவா கெட்டுப்போகிறது.
நன்றி:புதிய தலைமுறை