மனிதர் உணர்ந்து கொள்ள இது இயற்கை தவறே அல்ல!
அ.தி.மு.க. அரசின் பதில் என்ன?
விலை மதிப்பில்லா உயிர்கள் எத்தனை பலியாகி உள்ளன?
வெள்ளத்தால் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை என்ன?
எவ்வளவு பெரிய பொருள் இழப்பு எத்தனை லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளது?
சொந்த வீடுகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறி ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளைப் போல் அலைக்கழிக்கப் பட்டதற்கு யார் காரணம்?
மதகுகளைத் திறப்பது பற்றி முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதமே, வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது!
9-12-2015 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழில், “மதகுகளைத் திறப்பது பற்றி முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதமே, வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது” (Delay in decision open sluice gates caused flood of trouble) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், “சென்னையை நாசம் செய்த வெள்ளம் இயற்கையான பேரழிவு அல்ல;
மாறாக, சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதை ஒழுங்குபடுத்துவதற்கு மாநில அதிகார வர்க்கம் தவறியதால் உருவாக்கப்பட்ட ஒன்றேயாகும்!
நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தவர் கள் இதுபற்றிக் கூறும்போது, “சர்வ தேச வானிலை ஆய்வு மையங்களில், வானிலை முன்னறிவிப்பில், சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் 500 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று கணித்திருந்த நிலையில், பொதுப்பணித் துறை அலுவலர்கள், பொதுப்பணித் துறைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளிடம், செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாகக் குறைத்து விடலாம்;
அப்போது அடுத்து வரும் 4 நாட்களில் பெய்யும் மழை நீரை ஏரி தாங்கிக் கொள்ளும் என்று அறிவுரை கூறியுள்ளனர்.
தண்ணீரைத் திறந்து விடு வதற்கான கோரிக்கை அதிகாரிகளின் சிவப்புநாடா முறைக்குள் சிக்கிக் கொண்டு விட்டது. இதுகுறித்துக் கூறிய பொதுப்பணித் துறை வட்டாரங்கள், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளைத் திறந்து விடுவதற்குத் தலைமைச் செயலாளரின் அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் தலைமைச் செயலாளர் யாருடைய அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருந்தார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது” என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” எழுதியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா” இன்று எழுதியுள்ள தலையங்கத்திற்கு தலைப்பே, “Man Made Calamity - Humanitarian crisis caused by floods in Chennai could have largely been prevented” (மனிதரால் ஏற்படுத்தப் பட்ட பேரழிவு - சென்னை மாநகரில் மக்களிடையே வெள்ளத்தினால் ஏற்பட்ட அவலத்தைப் பெருமளவுக்குத் தவிர்த்திருக்க முடியும்) என்பதாகும்.
“இந்து”, “டைம்ஸ் ஆப் இந்தியா” போன்ற ஆங்கில இதழ்கள் எந்தக் கட்சியையும் சாராதவை. சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி, அவைகளில் வெளிவந்துள்ள இந்தப் பெரிய குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. அரசின் பதில் என்ன?
விலை மதிப்பில்லா உயிர்கள் எத்தனை பலியாகி உள்ளன? வெள்ளத்தால் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை என்ன?
எவ்வளவு பெரிய பொருள் இழப்பு எத்தனை லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளது?
சொந்த வீடுகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறி ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளைப் போல் அலைக்கழிக்கப் பட்டதற்கு யார் காரணம்?
மாநில நிர்வாகத்தில் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
சென்னை மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் திரு. எஸ். ஜனக ராஜன் கூறும்போது, “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதைத் திறமையாகக் கையாண்டிருந்தால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதையும், இழப்பையும் தவிர்த்திருக்கலாம். செம்பரம்பாக்கத்தில் 33,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் கூட, அந்தத் தண்ணீர் சைதாப்பேட்டைக்கு வரும் போது வழியில் இருக்கும் பிற நீர் நிலைகளின் காரணமாக, அது 60,000 கன அடியாக அதிகரித்து விடும்.
இதைக் கணக்கிடுவதற்கு நிர்வாகம் தவறி விட்டது.
மாநில நிர்வாகம் செய்த தவறுக்கான விலையை துரதிருஷ்டவசமான மக்கள் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்திருப்பது புறக்கணிக்கக் கூடிய கருத்து அல்ல.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மழை பெய்வதற்கு ஒரு நாள் முன்னரே நீரை திறந்து விட்டிருக்க வேண்டும். அவ்வாறு விட்டிருந்தால், சென்னை மாநகர் வெள்ளக்காடாகியிருக்காது.
“இந்து” ஆங்கில நாளிதழில், முதல் பக்கத்தில், "A wrong call that sank the City”(சென்னை மாநகரை மூழ்கடித்த ஒரு தவறான முடிவு) என்ற தலைப்பில், முதல் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :-
“சென்னையில் வெள்ள நீர் வடிந்து வருகின்ற நிலையில், ஏரிகளை நிர்வாகம் செய்வதைப் பற்றிய சில கடுமையான ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.
வரலாறு காணாத இந்தப் பெரு வெள்ளத்திற்கும், அதனால் ஏற்பட்ட கொடும் பாதகங்களுக்கும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட வெள்ள நீரே காரணம். நவம்பர் 17ஆம் தேதியன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
ஆனால் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை மிகக் குறைந்த அளவு நீரே அந்த ஏரியிலிருந்து திறந்து விடப் பட்டுள்ளது. இந்தக் காலத்தில் மழையின் அளவு மிகவும் குறைவு.
இந்தக் காலக் கட்டத்தில் 85 முதல் 88 சதவிகிதம் வரை நீர்த் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 1ஆம் தேதியன்று 48 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்த போது, 29 ஆயிரம் கன அடி தண்ணீர், 12 மணி நேர கால அவகாசத்தில் திறந்து விடப்பட்டது. நீர்வளத் துறை வல்லுநர்கள், ஏன் இவ்வளவு அதிகமான நீரை, ஏரியிலே தேக்கி வைத்திருந்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
செம்பரம் பாக்கம் ஏரியில் 75 சதவிகிதத்திற்கும் குறைவாக நீர் இருந்திருந்தால், டிசம்பர் 1ஆம் தேதியன்று பெய்த பெருமழையில் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை ஒரேயடியாக திறந்து விட்டிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.
பொதுப்பணித் துறையில் பணி புரிந்த முன்னாள் அதிகாரிகள் இது சரியான முறையல்ல என்று தெரிவித்திருக்கிறார்கள்.
செம்பரம்பாக்கம் அணையின் மதகுகளைத் திறக்க யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தனர்?
தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும், பொதுப்பணித் துறைச் செயலாளரிடமிருந்தும் பின்வரும் கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுவதற்கு “தி டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை பயனளிக்காமல் விரயமாகி விட்டன.
அந்தக் கேள்விகள் -- அணையின் மதகுகளைத் திறக்க யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தனர்?
ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு யாரேனும் பொறுப்பாக்கப் பட்டுள்ளனரா?
குறைந்த பட்சம் இப்போதாவது ஏரிகளைப் பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்படுமா?
மதகுகள் திறக்கப்படுவதற்கு முன்பு ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்களை எச்சரிப்பதற்கான நல்லதொரு முறை உருவாக்கப்படுமா?
என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு இப்போதாவது அரசினர் பதில் கூறுவார்களா?
இன்னும் சொல்லப் போனால், “இஸ்ரோ” வி.எஸ்.எஸ்.சி. இயக்குனர் சிவன் அவர்கள் “சென்னையில் கனமழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து தமிழக அரசுக்குத் தகவல் கூறினோம். ஆனால் அரசு முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், அதாவது அக்டோபர் 16இல் மத்திய அரசின் இந்திய வானிலைத் துறை, இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும், குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட தமிழகத்தில் 112 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிக்கை விடுத்தும், ஆட்சியாளர்கள் அதற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. ஆனால் இதற்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டிய தமிழக அரசினரோ கேளாக் காதினராகவும், ஏதுமறியாதோர் போலவும் இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட இன்னல்கள் நிறைந்த நேரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்துக் கருத்துகளைக் கேட்கத் தவறிவிட்ட அ.தி.மு.க. அரசு, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூடக் கூட்டி, கலந்தாலோசனை நடத்திட முன் வரவில்லையே ஏன்?
இது போன்ற அரசு தவறுகளுக்கு யார் பொறுப்பு என்று விசாரணை ஆணையம் அமைக்க முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பி.எஸ் ,பத்தி கூறவில்லை.மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் "இயற்கை இன்னலுக்கு இயற்கை மீது விசாரணை அமைக்க முடியாது.இது கூட தெரியாத விவரம்கெட்டவர் ஸ்டாலின்."என்று நக்கலடித்துள்ளார்.
காலாய்த்து விட்டதாக அவர் நினைத்தாலும் உண்மையில் இப்போது சென்னை மூழ்க காரணம் இயற்கையோ, அதிகமாக பெய்த மழையோ காரணம் அல்ல.500 கோடிகளில் வடிகால்களை தூர் வாரி மழையை வரவேற்க தயாராக் இருக்கிறோம் என்று அறிக்கை விட்டாரே சன்னை மேயர் சைதை துரைசாமி அவரிடம் அந்த 500 கோடிகளை செலவிட்ட விபரம் பற்றி விசாரிக்க வேண்டும்.
15 நாட்களுக்கு முன்னரே காண மழை என்று இஸ்ரோ சொன்ன பிறகும் தடுப்பு,பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் கோட்ட நாட்டில் ஓய்விலிருந்த முதல்வரை விசாரிக்க வேண்டும் .
அதிகளவு தண்ணீரை திறந்து விடும் முன் மக்களை சரிவர எச்சரித்து வெளியேற்றாமல் இருந்த பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும்.
ஆக இவர்களை விசாரிக்கத்தான் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.அதுதான் பொதுமக்கள் கருத்தும் கூட.
பொறுப்பற்ற அதிகாரிகளை,அமைச்சர்களை கூண்டிலெற்றி விசாரித்தால்தான்.
இது இயற்கை இன்னல் அல்ல .
கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியாத ,எந்த செயலை செய்தாலும் ஓய்விலிருக்கும் முதல்வரின் ஆணைக்காக நாட்கணக்கில் காத்திருக்கும் செயலற்ற அரசால் உண்டான பேரிடர் என்று தெரிய வரும்.
அதற்கு கலாய்த்த நத்தம் விசுவநாதன் உட்பட அனைத்து மைச்சர்களும்,முதலமைச்சர் உட்பட தயாராக இருக்கிறார்களா?இருக்க வேண்டும் .!