கார்ப்ரேட் பிடியில் காங்கேயம் எண்ணெய்!
“ பாட்டில எடுத்துட்டுப்போய் ஒரு ரூபாய்க்குதேங்காய் எண்ணெய்!”
வாங்கிட்டு வந்தகாலம் போய்விட்டது.
இன்றைக்கு சாசேக்களிலும், பிளாஸ்டிக் கண்டெய்னர்களிலும் தேங்காய் எண்ணெய் வாங்கி வருகிறோம்.ஆனால், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள கொப்பரை விவசாயிகளின் வாழ்க்கை நைந்து, கிழிந்து கந்தலாகிப் போன துணியைப் போல மாறிவிட்டது.
இவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசோ திரும்பி பார்க்கக்கூட மறுக்கிறது.இந்தியாவிலேயே தென்னை விவசாயத்தில் முதலிடத்தில் இருப்பது கேரளம்.
இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழகம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகரம், காளைக்குமட்டுமல்ல, தேங்காய் எண்ணெக்கும் பெயர் பெற்றது.
காங்கயத்தில் கொப்பரை தேங்காய் உற்பத்தி பெருமளவு நடைபெறுகிறது.
இதிலிருந்து தேங்காய் எண்ணெய், பிஸ்கட் தயாரிப்பிற்கு தேவையான பவுடர், குளியல் சோப்பிற்கு தேவையான எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
காங்கயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 1,500 கொப்பரை உற்பத்தியாளர்கள் இருந்தனர். தற்போது அது மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது.
இதற்கு வறட்சி, கட்டுப்படியான விலை கிடைக்காதது, இடுபொருட்களின் விலை உயர்வு என விவசாயிகள் அவர்களுக்குத் தெரிந்த காரணங்களைக் கூறினாலும், தாராளமய பொருளாதாரக் கொள்கையும் ஆன்-லைன் வர்த்தகமும்தான் இதன் பின்புலமாக இருக்கிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு காங்கயத்தில் பெரும்பாலான வீடுகளில் எண்ணெய் செக்குகள் இருந்தன.
இன்றைக்கு 5 முதல் 10 பேரே செக்குகள் வைத்துள்ளனர்.
பெரும்நிறுவனங்கள் நவீன இயந்திரங்களைக் கொண்டுவந்து இறக்கியதே செக்குகள் காணாமல் போனதற்குக் காரணம்.
பாராசூட், மேரிகோ, டாடா, ரிலையன்ஸ் போன்ற பெரும்நிறுவனங்கள் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர்தேங்காய் எண்ணெயை இங்கிருந்து டேங்கர் லாரிகளில்சென்னை, கொல்கத்தா. ஐதராபாத், தில்லி உள்ளிட்ட பெரும்நகரங்களுக்கு ஏற்றிச் செல்கின்றன.
நாளொன்றுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் எண்ணெய் இங்கிருந்து செல்கிறது. பெருநிறுவனங்கள் கவர்ச்சிகரமான பிளாஸ்டிக் டப்பாக்களிலும், பிளாஸ்டிக் பவுச்சுகளிலும் இந்த எண்ணெயை அடைத்து கொழுத்த லாபத்துடன் நம் உள்ளூர் சந்தையிலேயே விற்கின்றனர்.
சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
அதேசமயம் கொப்பரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்பதே யதார்த்த உண்மை.ஒரு விவசாயி தரமான தேங்காயை கொண்டுவந்தால் ரூ.7 முதல் அதிகபட்சம் ரூ. 9 வரை கொடுக்கப்படுகிறது.
சாதாரணமாக ரூ.5 மட்டுமே கொடுக்கப்படுகிறது.
காங்கேயத்தில் கொப்பைரை தேங்காய் விலையை நிர்ணயிப்பது அரசாங்கம் அல்ல. (ஆனால் அதற்கென ஒரு வாரியம் இருப்பதாகத் தகவல்) மூன்று, நான்கு தனியார்பெரும் நிறுவனங்களே.இந்த பெரு நிறுவனங்களிடமும் எந்த விவசாயியும் நேடிரயாக தேங்காயை கொடுத்துவிட முடியாது. இதற்கும் இடைத்தரகர்கள் உள்ளனர். இடைத்தரகர்கள் இன்றி காங்கயத்தில் எதுவும் நடக்காது என்பதுதான் யதார்த்தம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) நிலவரப்படி ஒரு கிலோகொப்பரை தேங்காயின் விலை ரூ.60 என பெரு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ஆனால், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ கொப்பரை ரூ.55-க்கும் பெறப்படுகிறது. இது மூன்று, நான்கு பேரின் கை மாறி பெரு நிறுவனங்களைச் சென்றடைகிறது.(சிறு உற்பத்தியாளர்கள் சாதாரணமாக ஒரு களத்தில் நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரம் கிலோவிலிருந்து 10 ஆயிரம்கிலோ வரை கொப்பரை உற்பத்தி செய்கின்றனர்.)
பெரு நிறுவனங்கள் இதிலும் ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றன.
ஒரு களத்தில் 10 ஆயிரம் கிலொ வரை கொப்பரை இருப்பதாக நிறுவனங்களுக்குத் தெரிந்துவிட்டால், இடைத்தரகர்கள் மூலம் திடீரென கிலொவிற்கு ரூ.3 முதல் ரூ. 5 வரை விலையைக் குறைத்துவிடுவார்கள்.
சிறு கொப்பரை உற்பத்தியாளர்களும் வேறு வழியில்லாமல் சுமார் ரூ.30 ஆயிரம் நஷ்டத்திற்கு அந்த கொப்பரையை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.பெரு நிறுவனங்களின் கைகளில் இடைத்தரகர்கள் மூலம் சிக்கியுள்ள சிறு கொப்பரை உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் இவர்கள் பிடியில் இருந்து மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டுமெனஎழுப்பப்பட்ட கோரிக்கையை அடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கென தனி வாரியம் அமைக்கப்பட்டது.
ஆனால்அந்த வாரியம் இப்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை.தமிழக அரசு ஒரு கிலோ கொப்பரைக்கு ரூ.80 வழங்கவேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதனால், விவசாயிகளும், சிறு உற்பத்தியாளர்களும் கட்டுப்படியாகாத விலைக்கு பெருநிறுவனங்களிடம் விற்று வருகின்றனர். தினந்தோறும் ஒரு விலை என பங்குச்சந்தையைவிட மோசமாக உள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை அரசும் கொள்முதல் செய்தது.
தற்போது தனியாரை ஊக்குவிக்கும் வகையில் அரசு கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது. , கொப்பரை விவசாயியை தமிழக அரசு கண்டுகொள்ள மறுக்கிறது.
ஒரு காலத்தில் வெளிச்சந்தையில் குறைந்தபட்ச விலை ரூ.105 வரை இருந்தது. ஆனால் தற்போது இடைத்தரகர்கள், வர்த்தகச் சூதாடிகள், பெரும் நிறுவனங்களால் கொப்பரை விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.-
-அஜய்
============================================================================================இன்று,
டிசம்பர்-26,
- சுனாமி பேரிடர் தினம்(2004)
- ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
- ஆங் சான், பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார்(1944)
- பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது(1933)
- சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது(1991)
11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் , இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மையம் கொண்டு அன்றைய நாள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நில அடுக்கையும், பர்மா நில அடுக்கையும் உரச வைத்த இந்த நிலநடுக்கம் சுனாமி என்கிற அதி தீவிர ராட்சத பேரலைகள் எழும்ப காரணமாக அமைந்தன. கிட்டதட்ட 100 அடி உயரம் வரை எழுந்த அலைகள் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோரங்களை கபளீகரம் செய்தன.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மாலத்தீவுகள் என 14 நாடுகள் சுனாமி தாக்குதலுக்கு இலக்காகின. எங்கெங்கு பார்த்தாலும் தண்ணீரில் அடித்துச்செல்லப்படும் மனிதர்கள், மிதந்து போகும் நகரங்கள் என போர்க்காலத்தின் பேரழிவுக்காட்சிகளாக இருந்தன. கடல் சீற்றங்களை அடிக்கடி பார்த்திருந்தாலும், கடலே பொங்கி ஊருக்குள் புகுந்து ஆக்கிரமித்த காட்சிகள் இதுவரை காணாத இயற்கையின் கோரதாண்டவமாக இருந்தன.
இதில் சிக்கி கிட்டதட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் இதுவரை இல்லை. பத்து ஆண்டுகள் கடந்த பின்னும் சுனாமியின் வடுக்கள் மக்கள் மனதைவிட்டு நீங்கவில்லை.
2004 ல் சென்னையை கலங்கடித்த சுனாமி அலைகள் இன்றும் கடற்கரைப்பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தீய கனவாக இருக்கிறது.
அந்த நாள் தங்களை இன்றளவும் வாட்டிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
-சந்திரன் வீராசாமி.[முக நூலில் ]
தோழர் நல்லக்கண்ணு
பிறந்த நாள் -
"புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே வீட்டில் உண்டு. சமீபத்தில் படித்த புத்தகம், பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்’.
ஒருவரது எழுத்து பிடித்தால், உடனே அவருடன் தொலைபேசிப் பாராட்டுவார். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு உண்டு.
மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் மனம் திறந்து கேட்பார். அவருடைய கருத்தையும் நிதானமாக, மனம் நோகாமல்... ஆனால், ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். இவர் கோபப்பட்டு இதுவரை யாரும் பார்த்தது இல்லை.
வண்ணச் சட்டைகளையும் விரும்புவார். மோசமான சில அரசியல்வாதிகள் வெள்ளை உடை போட்டு, நாமும் போட வேண்டி இருக்கிறதே என்பது அடிக்கடி அவர் உதிர்க்கும் ஆதங்க வார்த்தைகள்.
நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். 'அன்பே சிவம்’, 'அங்காடித் தெரு’, 'உச்சிதனை முகர்ந்தால்’ - சமீபத்திய ஆண்டுகளில் இவர் பார்த்த படங்கள். பாரதிராஜா, கமல்ஹாசன், மனோரமா ஆகியோர் பிடித்தமான கலைஞர்கள்.
நல்லகண்ணுவுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் காசிபாரதி, கணவருடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் ஆண்டாள், வேலூரில் வசிக்கிறார். பேரன், பேத்திகளுடனான சந்திப்பில் 'குழந்தை’ நல்லகண்ணுவைக் காணலாம்.
தோழர்கள் இவரின் பிறந்த நாளை (டிசம்பர் 26) எளிமையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், அவர் எதையுமே பொருட்படுத்துவது இல்லை.
நாத்திகவாதி. ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார்.
காரில் செல்ல நேரும்போது கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிப்பது பிடிக்கும்.
ரஷ்யா, ஜெர்மனி, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்குக் கட்சி சார்பில் சென்றுள்ளார். அப்போது கட்சி சார்பில் கோட் தருவார்கள். அணிந்துகொள்வார். அதோடு, அந்த கோட்சூட் கதை முடிந்துபோகும்.
அரசுக் குடியிருப்பில் 6,000 வாடகையில் குடி இருக்கிறார். சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில்கூட சொந்த வீடு கிடையாது. மனைவியின் ஓய்வூதியம், கட்சியின் உதவித்தொகை 4,000-ல் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.
அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படாதவர், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஹரி மாரடைப்பால் இறந்தபோது, கேவிக் கேவி அழுதுவிட்டார். ஒரு மகனைப் போல அய்யாவிடம் பழகியவர் ஹரி.
பயணங்களில் தோழர்கள் வாங்கித் தருகிற உணவைத்தான் உட்கொள்வார். முன்பு விரும்பிச் சாப்பிட்ட கத்தரிக்காய், மீன், கருவாடு ஆகியவற்றை இப்போது தள்ளிவைத்து இருக்கிறார்.
இணையத்தில் ஈடுபாடு இல்லை. ஃபேஸ்புக்கில் உறுப்பினர் இல்லை. ஏன்? செல்போன்கூட முழுமையான பரிச்சயம் கிடையாது. அழைப்பு வந்தால் பேசுவார். அவ்வளவுதான் தெரியும்.
இன்டர்மீடியட் படிப்பை முழுவதுமாக முடிக்காமல் கட்சியில் நுழைந்தவர் நல்லகண்ணு. ஹோசிமின்தான் இவரது ரோல் மாடல். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லி உள்ளார்.
எல்லோருக்கும் 'தோழர் நல்லகண்ணு’. தோழர்களுக்கு 'ஆர்.என்.கே.’
யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேச மாட்டார். எந்தக் கட்சித் தலைவர் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது.
ஒருமுறை சிறையில் இருந்தபோது 'அன்னமே, ரஞ்சிதமே’ என்று எதார்த்தமாக கவிதை எழுதி இருக்கிறார். ரஞ்சிதம் அம்மாளுடன் நல்லகண்ணு அவர்களின் திருமணம், கட்சி பார்த்து நடத்திவைத்தது. அம்மையாரை அவர்கள் வீட்டில் செல்லமாக அழைப்பதும் 'அன்னம்’ என்றுதான்.
============================================================================================
பயணங்கள்.