முடிவில்லா விவசாயிகள் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் மோடி, அதானி வேடமிட்டு எம்பிக்கள் ஆர்ப்பாட்டம். நேர்காணல் நடத்திய ராகுல்காந்தி
தலைநகர் டெல்லியை நோக்கி மீண்டும் வீறு கொள்ளும் போராட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள் விவசாயிகள்!
பஞ்சாப் - அரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி நேற்றைய முன்தினம் விவசாயிகள் மாபெரும் பேரணியாகப் புறப்பட்டார்கள். இரும்புத் தடுப்புகள் அமைத்து அவர்களைத் தடுத்தது காவல் துறை. மீறிச் சென்றவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
வேளாண் பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான உறுதிமொழி தேவை என்பதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் பஞ்சாப் - அரியானா எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது 300 ஆவது நாளை எட்டி உள்ளது.
இதில் 181 பேர் கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லியை நோக்கி பேரணி யாகச் சென்றார்கள். அவர்கள் மீது காவல் துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. ஒரு நாள் போராட்டத்தை தள்ளி வைத்த விவசாயிகள், மீண்டும் நேற்றைய தினம் டெல்லியை நோக்கிச் சென்றார்கள். மீண்டும் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. கண்ணீர் புகைக் குண்டு கள் வீசப்படுவதால் தங்கள் முகங்களை துணியாலும், ஈர சாக்குப் பை களாலும் மூடிக் கொண்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்தார்கள்.
காவல் துறையிடம் 101 பேரின் பெயர்களைக் கொடுத்துள்ளோம், அவர்கள்தான் ஊர்வலமாக வருகிறார்கள் என்று விவசாயிகள் சொல்லி இருக்கிறார்கள். இல்லை, பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் வருகிறார்கள் என்று சொல்கிறது காவல் துறை. இதுதான் பிரச்சினையை அதிகப்படுத்தி வருகிறது.
300 நாட்களாகப் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்போராட்டத்தை நடத்தும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு அரசியல் கட்சிகள் சார்பற்றது. அரசியல் கட்சிகள் எதுவும் தங்களது போராட்டத்தில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்- றும் இந்த அமைப்பு சொல்லி இருக்கிறது. 50க்கும் மேற்பட்ட சங்கங்கள் இப்போராட்டத்தைச் சேர்ந்து நடத்துகின்றன. பங்கெடுக்காத விவசாயச் சங்கங்களும் வெளியில் இருந்து ஆதரவைத் தருகின்றன.
ஆனாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.”இதன் மூலமாக பா.ஜ.க.வின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது” என்று இந்த அமைப்பின் தலைவர் சார்வான் சிங் பந்தர் பேட்டி அளித்துள்ளார். போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, பா.ஜ.க. ஆதரவு சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து மனு வாங்கிக் கொண்டுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளின் அனைத்து உரிமைகளையும் பறிக்கத் திட்டமிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதற்கு எதிராக 2020-21 ஆம் ஆண்டுகளில் வீறுகொண்ட போராட்டத்தை தலைநகர் டெல்லியில் நடத்தினார்கள் விவசாயிகள். ஒன்றரை ஆண்டுகள் இந்த போராட்டம் தொடர்ந்தது. இறுதியாக அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றது பா.ஜ.க. அரசு. அப்போது சில வாக்குறுதிகளை அந்த அரசு கொடுத்தது. ஆனால் அதனை செய்து தரவில்லை. எனவேதான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் போராட்டம் தொடங்கினார்கள் விவசாயிகள்.
"13 மாதங்களுக்கு முன்பு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது. குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் இயற்றப்படும் என்று சொன்னது. அதை இதுவரை செய்யவில்லை. போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குற்றவழக்குகளை திரும்பப் பெறுவோம் என்று சொன்னது. ஆனால் திரும்பப் பெறவில்லை. போராட்டத்தின் போது மரணம் அடைந்த, கொல்லப்பட்ட விவசாயிகளது குடும்பங்களுக்கு இழப்பீடு தரப்படும் என்று சொன்னார்கள். இதுவரை செய்யவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த அறிக்கை அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. 13 மாதங்களாக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் போராடுகிறோம்” என்று விவசாயிகள் சொல்கிறார்கள்.
கடந்த முறை விவசாயிகள் போராடிய போது அதனைத் தடுக்க முள்வேலி கம்பிகள் போடப்பட்டது. முள் ஆணி தடுப்புகள் வைக்கப்பட்டன. டயர் கில்லர்கள் வைக்கப்பட்டன. ட்ரோன்கள் மூலமாக கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இணையச் சேவைகள் முடக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இவை போன்றவை மீண்டும் திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைகளில்தான் இருக்கிறது.
குறைந்தபட்ச ஆதார விலையை சரியான முறையில் தீர்மானித்து அதை சட்டமாக்குவது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது, வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது, போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது, உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேறுவது ஆகிய கோரிக்கைகளைத்தான் இப்போது விவசாயிகள் வைத்துள்ளார்கள். அவர்களோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு நேரடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.