காவியான நீதி(பதிகள்)?
காவியான நீதி(பதிகள்)?
அண்மைக்காலமாக, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் இந்துமதவெறி-இஸ்லாமிய வெறுப்பு தீர்ப்புகளும் நீதிபதிகளின் சொந்த கருத்துகளும் இந்திய நீதித்துறை ஏறக்குறைய காவிகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, இஸ்லாமிய வழிபாட்டுத்தளமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீராம்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேசியிருப்பது இதனை நிரூபிக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் ஐந்தூர் கிராமத்தில் உள்ள பத்ரியா ஜும்மா மசூதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கங்களை எழுப்பியதுடன் தங்களை மிரட்டியதாகவும் மசூதியின் தலைவர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மசூதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார் மற்றும் சச்சின் குமார் ஆகியோர்தான் அவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களின் மேல் இந்தியத் தண்டனை சட்டம் (Indian Penal Code) பிரிவு 295A-இன் கீழ் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் குற்றவாளிகள் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அக்டோபர் 13-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மசூதிக்குள் சென்று ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுவது மத உணர்வினை புண்படுத்தாது என்று நீதிபதி இஸ்லாமிய வெறுப்புணர்வினை வெளிப்படுத்தினார்.
மேலும், “மனுதாரரே தங்களுடைய பகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில் இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால் அது தவறான நீதிக்கு வழிவகுக்கும். எனவே இது இரு சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கு சமூக விரோதிகள் மேற்கொண்ட முயற்சி” என்று தெரிவித்து குற்றவாளிகள் மீதான வாழ்க்கை ரத்துசெய்து இந்துத்துவ குண்டர்களுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், காவி குண்டர்களுக்கு ஆதரவான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணை டிசம்பர் 16 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, “மசூதியின் உள்ளே அவர்கள் இருந்தால் அவர்கள் குற்றவாளிகளா?
குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் முன் சி.சி.டி.வி. போன்ற வேறு ஏதேனும் ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டதா? இல்லை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளியை நீங்களே உருவாக்கினீர்களா?” என்ற அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக மாற்றும் வகையில் நீதிபதிகள் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தினர்.
அதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், “சி.சி.டி.வி. காட்சிகள் மூலமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடத்துவது போலீசுத்துறையின் கடமையாகும். இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சி. பிரிவு 153-இன் கீழ் பிறர் மதவழிபாட்டுத் தளங்களில் மத ரீதியான முழக்கங்களை எழுப்புவது மதக்கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய குற்றமாகும்” என்றார்.
பின்னர் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதையடுத்து பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப இந்தியா ஆளப்பட வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவின் பேச்சு இந்தியா முழுவதும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், இவ்வழக்கின் மீதான கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் வாதங்களும் நீதித்துறை காவிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதையே எடுத்துரைக்கிறது.
அண்மையில், மத வழிபாட்டுத் தலங்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததை முன்னுதாரணமாகக் காட்டி பலரும் கொண்டாடிவரும் நிலையில், அத்தகைய உத்தரவுகள் எல்லாம் விதிவிலக்கானதும் தற்காலிகமானதும்தான் என்பதையே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வாதம் எடுத்துரைத்துள்ளது. இவற்றின் மூலம் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் தயாராகி வருகின்ற இக்கட்டமைப்பில் உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் செல்வதன் மூலம் இஸ்லாமிய மக்களுக்கான நீதியையும் பாதுகாப்பையும் பெற்றுவிட முடியாது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
ஆர்.எஸ்.எஸ் நீதியை காவியாக்கிவிட்டது.