ஒரே நாடு,ஒரே......?
"ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும்"
-மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான
பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு, ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவிற்கு காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கியது. இந்நிலையில் இந்த ஆய்வு குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"கொடூரமான ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஜனநாயத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த கொடூர தாக்குதலை முழுபலத்துடன் எதிர்ப்போம்! போராடி தடுத்து நிறுத்துவோம்” எனதெரிவித்துள்ளார்.
வைக்கம் வீரர்.
அன்றைய காங்கிரசு கமிட்டித் தலைவரான பெரியார், இராஜாஜிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் வைக்கம் சென்றார். ‘நான் திரும்பி வரும் வரையில் கமிட்டி வேலைகளைப் பார்த்துக் கொள்ளவும்’ என்று சொல்லி விட்டுத் தான் சென்றார். இராஜாஜியும் வழி அனுப்பி வைத்தார்.
கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் சித்திரவதைக்கு உள்ளானதைக் கண்டு, ‘தீரரைத் தமிழ்நாடு போற்றுகிறது’ என்றும் இராஜாஜி அறிக்கை வெளியிட்டார்.
அவரது தியாகத்தை முதலில் பாராட்டிய இராஜாஜியே, பின்னர் கடுமையாகக் கண்டித்து அவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார்.
ஆனால் பெரியார் அதனை ஏற்கவில்லை. இறுதி வரை உறுதியாகப் போராடினார். முடிவில் பேச்சுவார்த்தை நடக்கும் போது பெரியாரை கழட்டி விட்டார்கள். முழுப் பெருமையும் அவருக்கு போய்விடக் கூடாது என்பதில் சிலர் எச்சரிக்கையாக இருந்தார்கள்.
ஆனாலும் வைக்கம் வெற்றி விழா கூட்டத்தை பெரியார், நாகம்மையாரை வைத்தே கேரள சீர்திருத்தவாதிகள் நடத்தினார்கள்.
அப்போது என்ன நடந்தது என்பதை இதோ பெரியாரே சொல்கிறார்...
“திருவிதாங்கூர் ராணியோடு காந்தி பேசினார். அப்போது ராணி, ‘நாங்கள் ரோடுகளைத் திறந்துவிட்டு விடுகிறோம். ஆனால், அதைத் திறந்து விட்டவுடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது?
அதுதான் தயங்குகிறோம்’ என்று கேட்டுள்ளார்.
உடனே, காந்தி, அரசாங்க விடுதியில் தங்கியிருந்த என்னை வந்து சந்தித்தார். ராணி சொன்னதைச் சொல்லி ‘என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது’ என்றார். நான் சொன்னேன், “Public ரோடு திறந்து விடுவது சரி!
ஆனால், அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று நாம் எப்படி உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் –- எனது இலட்சியம் அதுதானே, கோயிலை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?
வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்; ‘இப்போதைக்கு இது மாதிரி கிளர்ச்சி எதுவும் இருக்காது. கொஞ்ச நாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படும், என்று சொல்லுங்கள்’ என்று நான் சொன்னேன்.
அதை, காந்தி ராணியிடம் சொன்னவுடன் ராணியார், ‘ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம்’ என்று உத்தரவு போட்டுப் பொது ரோடாக ஆக்கினார்கள்.” என்று பெரியார் அவர்களே அன்று நடைபெற்ற நிகழ்வைச் சொல்லி இருக்கிறார்கள்.
அந்தளவுக்கு அந்தப் போராட்டத்தின் அனைத்துக் காலக்கட்டங்களிலும் தொடர்ந்து பங்களித்து வந்தவர்தான் பெரியார்.
வைக்கம் போராட்டமானது இந்தியப் பொதுவெளியில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகப் பெரியது. இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் 1927ஆம் ஆண்டு மகத் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நடத்துகிறார்கள். தனக்கு வைக்கம் போராட்டம்தான் தூண்டுதலாக இருந்ததாக அம்பேத்கர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
“தீண்டத்தகாத மக்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். இம்மாற்றம் 1920களில் தொடங்கியது.
இந்தச் சமூக அமைப்புக்கு எதிராக, தீண்டத்தகாத மக்கள் எவ்வாறு கிளர்ந்தெழுந்து நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிட முடியும்.
இதில் பொதுச் சாலையைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற எடுக்கப்பட்ட முயற்சி, மிகவும் குறிப்பிடத் தகுந்தது. இந்த ரீதியில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு முயற்சி 1924 இல் திருவிதாங்கூர் மாநிலத்தில் தீண்டத்தகாத மக்கள் செய்ததாகும். அது, வைக்கம் என்ற ஊரில் உள்ள கோயிலுக்குச் செல்லும் வழியைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையாகும்.
கோயிலுக்குச் செல்லும் சாலை பொதுவான சாலையாகும். இதை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் அரசுதான் பராமரித்து வருகிறது.
ஆனால், சாலை, கோயில் கட்டிடத்திற்கு அருகில் இருப்பதால் தீண்டத்தகாத மக்கள் இதன் ஒரு பகுதியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இறுதியில் அங்கு நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் விளைவாக கோயில் சுற்றுப்புறச் சுவர் விரிவாக்கப்பட்டு அந்தச் சாலை மாற்றிய மைக்கப்பட்டது. எனவே, தீண்டத்தகாத மக்கள் பயன்படுத்தினாலும் அது கோயிலை மாசுபடுத்தாத தூரத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.” (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுதி 5, பக். 247) என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்கள்.
வட மாநிலங்களில் இது போன்ற போராட்டங்கள் தொடங்கியது.
தென் மாநிலங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் பல்வேறு கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தவும் வைக்கம்தான் தூண்டுதலாக இருந்தது. ஒவ்வொரு கோவில் அறங்காவலர்களிடமும் சுயமரியாதை இயக்கத்தவர்கள் தனித்தனியாக மனு கொடுத்தார்கள்.
இவை அனைத்தும் இணைந்துதான் ‘யாருக்கும் தடையில்லை’ என்ற சட்டமாக வந்தது. கோவிலுக்குள் நுழைவது மட்டுமல்ல, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்உருவாக்கிக் காட்டி விட்டார்கள்.
1926 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பேசிய பெரியார், “என்னோடு வாருங்கள்! பஞ்சமர்களுக்கு சாப்பாடு தரப்பட மாட்டாது, சூத்திரர்கள் தண்ணீர் மொள்ளக் கூடாது என்ற போர்டுகளைக் காட்டுகிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.
இவை எல்லாம் நொறுக்கப்பட்டு இருப்பதுதான்
திராவிட இயக்கத்தின் சாதனையாகும்.
ஒரு சீர்திருத்த இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியதைத்தான் ஆதிக்கசக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல்வேறு அவதாரங்களை எடுத்து வீழ்த்தப் பார்க்கிறார்கள்.
வைக்கம் வீரர் வாழ்க!