இதுவரை வரிபோடலை!






நின்னா வரி!படுத்தா வரி!!

மட்டும் இதுவரை  வரிபோடலை!

°அன்றாடவாழ்க்கையில்தொட்டதற்கெல்லாம் வரி, நடுத்தர வர்க்கத்தினரை அழிக்கும் ஒன்றிய அரசு

* சிறு, குறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தும் அபாயம், தொழிலதிபர்களுக்கு மட்டும் சலுகை.

ஒன்றிய பாஜ அரசு 2017ல் ஜிஎஸ்டி வரியினை அமல்படுத்தியது. முதலில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே வரி என்றவர்கள் அடுத்தடுத்து திருத்தங்களை கொண்டு வந்து மக்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 மருத்துவமனையில் குழந்தை பிறப்பில் இருந்து ஆரம்பிக்கும் ஜிஎஸ்டி வரி, அடுத்தடுத்த நிலைகளிலும் தொடர்ந்து கல்லறை வரை ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது. 

இப்படி நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசயமாக அத்தனை துறையிலும் வரி விதிக்கப்படுகிறது. சமீபத்தில் ஆயுத்த ஆடைகளுக்கும் 28% ஜிஎஸ்டிவிதிக்கபரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தால் ஏழை, எளிய மக்களின் ஆடை கனவு, கனவாகவே போய்விடும். பாப்கார்னுக்கும் 5% முதல் 18% வரை ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பணம்படைத்த தொழிலதிபர்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

 இப்படி கந்துவட்டி போல மக்களிடம் ஜிஎஸ்டி வரி என்ற வழிப்பறியால் சிறு, குறு தொழில்கள் அழிந்து வருகிறது. இப்போது கூடுதலாக வாடகை கட்டிடத்தில் தொழில் நடத்தினாலும், பழைய வண்டி வாங்கினால், விற்றாலும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது முதலே உற்பத்தி சார்ந்த தொழில் மிகப் பெரும் சரிவை சந்தித்தது. குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி தொழில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் நலிவடைந்தது. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், சில்லரை வர்த்தகங்கள் பாதிப்பை சந்தித்தது. தற்போது ஒருபடி மேலாக வணிக பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது தொழில்துறையினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியை பொறுத்தவரை பருத்தியிலிருந்து பஞ்சு பிரித்து எடுத்து நூல் உற்பத்தி செய்து அதன் பிறகு ஸ்பின்னிங், நிப்ட்டிங், டைலரிங், காம்பேக்ட்டிங், எம்பிராய்டிங், பிரிண்டிங், அயர்னிங், பேக்கிங் என பல்வேறு படிநிலைகளை கடந்து வருகிறது. 

இதன் ஒவ்வொரு படிநிலைகளிலும் உற்பத்திக்கு ஏற்றவாறு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையிலான ஜிஎஸ்டி ஏற்கனவே அமலில் உள்ளது. இதனை ஒட்டுமொத்தமாக 5 சதவீதம் என குறைகும்படி பல வருடங்களாக உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அதற்கு செவி சாய்க்காத ஒன்றிய அரசு 5 முதல் 18 சதவீதம் வரை உள்ள ஜிஎஸ்டி வரிகளை 5 முதல் 28 சதவீதமாக உயர்த்த பரிசீலனை செய்து வருகிறது. இது உற்பத்தியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள நிலையில் கடந்த மாதம் முதல் வணிக பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இது சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்துபவராக இருந்தால், அவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்படும்.

வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் உரிமையாளர்களே வாடகைக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 90 சதவீத சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்கள் வணிக பயன்பாட்டிற்கு வாடகை கட்டிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

 பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு படிநிலைகளில் ஜிஎஸ்டி செலுத்தி வரும் உற்பத்தியாளர்கள் தற்போது வாடகை கட்டிடங்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்பது தொழிலை நடத்த முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியினை குறைக்கும் ஒன்றிய அரசு, குடிசைத்தொழில், சிறு குறு நடுத்தர உற்பத்தி தொழில்களுக்கு வரியை அதிகப்படுத்துவது வேதனை அளிக்கிறது. இதிலும் குறைந்தபட்ச வாடகை கட்டணங்களுக்கு ஐடிசியில் ஜிஎஸ்டியை திரும்ப பெற முடியாது என்பது பெரும் வேதனை. இதேபோல், வாடகை பணத்தை நம்பி உள்ள முதியவர்களுக்கும் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பால் திருப்பூரில் 50 சதவீதம் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் வாடகை கட்டிடங்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பது தொழிலை முழுவதுமாக நாசம் செய்யும்’’ என தெரிவித்தார். 

கோவை குறுந்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், ‘கடை வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி, ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இது சிறு வியாபாரிகள், குறுந்தொழில் முனைவோர் மீது ஒன்றிய அரசு நடத்தும் மிக மோசமான தாக்குதல்.

ஒன்றிய அரசின் இந்த விபரீத முடிவு, கடும் எதிர்வினையை உருவாக்கும். ஒன்றிய அரசின் இந்த செயல், வாடகை இடத்தில் வணிகம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்களை நசுக்கும் செயல் ஆகும்.

 ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்துவிட்டு, ஏழை மக்கள் மீது கடும் சுமையை ஏற்றியுள்ளது. இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். 

ஏற்கனவே, அபரிமிதமான ஜிஎஸ்டி வரி விதிப்பால், கோவை மண்டலத்தில் 40 சதவீத தொழில்கள் நசிந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தாக்குதல் என்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. ஒன்றிய அரசு, உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்’ என்றார்.

* ஜிஎஸ்டி வரி சட்டத்தில் இதுவரை 907 திருத்தம்

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் சிவக்குமார் கூறுகையில், ‘ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய நாளில் இருந்தே குறுந்தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் வாடகை மீதான ஜிஎஸ்டி சேவை வரி அறிவிப்பு பேரிடியாக விழுந்துள்ளது.  ஜிஎஸ்டி வரி சட்டத்தில் இதுவரை 907 திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் இருந்தே இந்த வரி விதிப்பில் எண்ணற்ற குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த மோசமான முடிவு, வாடகை இடத்தில் தொழில்செய்யும் மக்களை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும். கோவை மாவட்டத்தில் கிடத்தட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் வாடகை இடத்தில்தான் தொழில் செய்து வருகிறார்கள். 

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை குறுந்தொழில் நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். எனவே, ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்’ என்றார்.

பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் கடைகளும் நிறைய உள்ளன. அதேபோல் பெரும்பாலனான நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. 

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் ‘செகண்ட் ஹேண்ட்’ எனப்படும் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனால் பழைய வாகனங்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம் என்ற நிலையில், அதனை தற்போது 18 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

 அதேபோல் தற்போது மின்சார வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பின்படி மேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் மறுவிற்பனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், அது மின்சார வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையை குறைக்கும். செகண்ட் ஹேண்ட் வாகனங்களை பழுது பார்ப்பதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் மீது ஏற்கனவே 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது, பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் 1200 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட நீளம் கொண்ட வாகனங்களுக்கு 18 சதவீதமும், 1500 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கு 18 சதவீதமும், 1500 சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்களுக்கு (எஸ்யூவி) 18 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலில் உள்ளன.

தற்போது புதிய வரி விதிப்பால் அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டால், மோட்டார் வாகனத் துறையில் செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் விற்பனைக்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். 

இதனால் வாகனங்களுக்கான தேவை குறையும். இதுகுறித்து கோவை இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்க செயலாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது: புதிய இருசக்கர வாகனங்கள் வாங்கும்போது 28 சதவீதம் வரியை கட்டித்தான் வாங்குகிறோம்.

அதனை மீண்டும் விற்கும்போது, வரி செலுத்த வேண்டுமென்றால் ஒரு வண்டிக்கு எத்தனை முறை வரி செலுத்துவது? உதாரணமாக ஒரு லட்ச ரூபாய் வாகனத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டியிருக்கும். நாங்கள் உற்பத்தியாளர்கள் கிடையாது. 

கமிசன் அடிப்படையில் வாகனங்களை வாங்கி விற்கிறோம். பழைய வாகனங்கள் விற்பனைக்கு இதுவரை வரிகள் இல்லை.

தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தால், விலை அதிகரிக்கும். பழைய வாகனங்களின் விற்பனை குறையும். ஏற்கனவே பழைய மின்சார வாகனங்களின் மார்க்கெட் விலை குறைவு. 

அதற்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தால் யாரும் விற்பனை செய்ய முன்வரமாட்டார்கள். இதனால் எங்களது தொழில் நலிவடைந்து இதனை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த வரி விதிப்பை கைவிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* தொழிலாளர்களின் குடியிருப்புக்கும் ஜிஎஸ்டி
திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வீடு எடுத்து தங்க வைத்து வருகின்றனர். 

இவை தற்போது வணிக பயன்பாடு என கருத்தில் கொண்டு அவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

* ஒரு வாகனத்திற்கு எத்தனை முறை வரி?
புதிய இருசக்கர வாகனங்கள் வாங்கும்போது 28 சதவீதம் வரி கட்ட வேண்டியுள்ளது. அந்த வாகனத்தை செகண்ட் ஹண்ட் விற்பனை செய்யும் போது, வரி செலுத்த வேண்டும். அதே வாகனத்தை மீண்டும் விற்பனை செய்தாலும் வரி செலுத்த வேண்டுமென்றால், ஒரு வாகனத்திற்க்கு எத்தனை முறை வரி செலுத்துவது என பழைய வாகன வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

* அபராத தொகையுடன் ஜிஎஸ்டி
கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தும்போது, வாடகை தொகையில் 18 சதவீதத்தை ஜிஎஸ்டியாக செலுத்தியாக வேண்டும். தவறினால் அபராத தொகையுடன் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதாவது ஒருவர், கடைக்கு ரூ.10 ஆயிரம் மாத வாடகை செலுத்தினால், இனி அவர் ரூ.1,800 அரசுக்கு வரியாக செலுத்தியாக வேண்டும். வாடகை செலுத்தும்போது, அந்தந்த மாதமே 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இல்லையேல், வாடகை தொகைக்கு ஏற்ப, அபராத தொகையும் மாறுபடும்.

* பிரியாணியையும் விட்டு வைக்கல
ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடும் போதும் மக்கள் தலையில் பேரிடி விழுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சமீபத்தில் நடந்த கூட்டங்களில், மக்கள் பசியை போக்கும் அன்றாட உணவு பொருட்களுக்கு ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதித்து உள்ளது. விலை மதிப்பு உள்ள தங்கத்துக்கு 3% ஜிஎஸ்டியும், சாதாரண மதிப்புள்ள பிஸ்கட்டுக்கு ரூ.18% ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. தற்போது பல கோடி மக்களின் பேவரைட்டான பிரியாணிக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* உணவு ஜிஎஸ்டி
குஸ்கா பிரியாணி 5 %
மட்டன் பிரியாணி 12%
மட்டன் பிரியாணி
முட்டையுடன் 18%
மட்டன் முகலாய்
பிரியாணி 28%
தயிர்பச்சடி, சால்னா 5%
ஒரு முட்டை 6 ரூபாய், ஆறரை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த முட்டை சேர்ந்த பிரியாணிக்கு ஜிஎஸ்டி அதிகரித்திருப்பதை நெட்டிசன்கள், முட்டை இல்லைன்னா 12% முட்டை சேர்த்தா 18%, இது என்ன நியாயம்? என்று வாதிடுகிறார்கள். 

சில மாதங்களுக்கு முன்பு கோவையில் அன்னபூரணா ஓட்டல் அதிபர், ஒன்றிய நிதி அமைச்சரிடம் சாதாரண பன்னுக்கு ஜிஎஸ்டி 5% , கிரீம் வைத்த பன்னுக்கு 18% வரி விதிப்பதா? என்று கேட்டு அது பெரும் பிரச்னையானதை இப்போது மட்டன் பிரியாணிக்கு 12 %, முட்டை சேர்த்தா 18% ஆ என ஒப்பிட்டும் நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?