வைக்கம் போராட்டம்!
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்.
"வைக்கம் விருது"
யார் இந்த தேவநூர மஹாதேவா?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 30.03.2023 அன்று சட்டமன்றப் பேரவையில், எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-இன்கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, 2024-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவா அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
வைக்கம் வீரர்!.
வைக்கம் போராட்டம் என்பது 1924 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இது நூற்றாண்டு விழா ஆண்டு. நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய தமிழ்நாடு அரசு, வைக்கத்தில் உள்ள நினைவுச் சின்னத்தை மறுசீரமைப்பு செய்யவும் திட்டமிட்டது. எட்டு கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று திறப்பு விழாக் காண்கிறது வைக்கம். வெற்றி விழா காணப்போகிறது பெரியாரின் போராட்டம்.
30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் ‘வைக்கம் போராட்டம்’ ஆகும்.
குன்னப்பி (புலையர்), பாஹுலயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்நோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
மறுநாள், ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்செய்தியானது அண்ணல் காந்தியடிகளுக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தைச் சிறிது காலம் தள்ளி வைக்கலாம் என்று அவர் தந்தி அனுப்புகிறார். ஆனால் அதனை கே.பி.கேசவ மேனன் ஏற்கவில்லை. கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ஏ.கே.பிள்ளை, கே.வேலாயுத மேனன், கே.கேளப்பன், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றனர். அடுத்து வழிநடத்த தந்தை பெரியாரை அழைக்கிறார்கள். அவர் ஏப்ரல் 13 அன்று வைக்கம் வருகிறார்.
கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார்.
கோவை அய்யாமுத்து உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அகாலிகள் வருகிறார்கள். போராட்டம் மிகத் தீவிரமாகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தி கட்டுப்பாடுகள் விதிக்கிறார்.
ஆனால் அதனை போராட்டக் களத்தில் நின்றவர்கள் ஏற்கவில்லை.
கோட்டயம் மாவட்டத்துக்கு நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப் பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார்.
மே 22 ஆம் தேதி கைதான பெரியார் ஜூன் 21 விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31 விடுதலை செய்யப்பட்டார்.
1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகள் வைக்கம் வந்தார். சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச்சந்தித்துப் பேசினார்.
1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது.
இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.
வைக்கம் போராட்ட ( 1924- – 25) காலத்தில் 114 நாட்கள் பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம் 74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துச் சாலைகளும் திறந்து விடப்பட்டதால், போராட்டங்களை நிறுத்துவது என்று முடிவெடுக் கப்பட்ட 17.11.1925 அன்றும் பெரியார் வைக்கத்தில் இருந்தார்.வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். ஆனாலும் இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று சொல்லிக் கொண்டவர் அல்ல பெரியார்!
1933 ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் பெரியார் பங்கெடுத்தார். அப்போது பெரியாருக்கு முன் பேசிய சிலர், வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு பெரியார்தான் காரணம் என்று பேசினார்கள்.
இறுதியாகப் பேசிய பெரியார் சொன்னார்:
“என்னைப் பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதை நடக்கவித்ததும், அது வெற்றியாய் முடிவு பெறக் காரணமாய் இருந்ததும் நானே ஆவேன் என்று பேசினார்கள்.
அதையும் ஒப்புக் கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன். வைக்கம் சத்தியாகிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும், அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத் தன்மையும் கட்டுப்பாடுமே காரணமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”( ‘குடிஅரசு’ 1.10.1933) என்று பேசினார் பெரியார்.
அதனால்தான் அவர் பெரியார்! (நாளை)