10 மில்லியன் டாலர் பரிசு,,.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தயிபா அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் முகமது சயீதை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
லஷ்கர் இ தயிபா அமைப்பின் முகம் என்று பரந்துபட்ட அளவில் பார்க்கப்படும் ஜமாத் உத் தாவா அமைப்புக்கு தற்போது அவர் தலைவராக இருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தயிபா அமைப்பே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சயீதின் மைத்துனர் மற்றும் லஷ்கர் அமைப்பின் இணை நிறுவனருமான அப்துல் ரஹ்மான் மக்கியின் தலைக்கு இரண்டு மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜமாத் உத் தாவா மற்றும் லஷ்கர் இ தயிபா அமைப்புகள் அமெரிக்க அரசால் தீவிரவாத அமைப்புகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரையும் பிடிக்கவோ அல்லது பிடிக்கப்படுவதற்கான தகவல்களை அளிப்பவர்களுக்கோ இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர். எதிர்தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் தாக்குதலை நடத்திய ஒரு பாகிஸ்தானியப் பிரஜையான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டார்.
"மிகவும் தேடப்படுபவர்"
இந்தியாவால் “மிகவும் தேடப்படுபவர்கள்” என்று பாகிஸ்தானிடம் கையளிக்கப்பட்டுள்ள பட்டியிலில் சயீதின் பெயர் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.
ஆனால் தீவிரவாதத்தை முன்னெடுக்கும் ஒரு அமைப்பாக தாங்கள் செயல்படுவதாக கூறப்படுவதை ஜமாத் உத் தாவா மறுக்கிறது.
மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானால் ஹஃபீஸ் முகமது சயீது கைது செய்யப்பட்டாலும், குற்றச்சாட்டு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார்.அவர் அரபு மொழி மற்றும் பொறியியல் துறையில் பேராசிரியராக இருந்தார் என்றும், கடும்போக்கு தியோபந்தி இஸ்லாமிய அமைப்பான ஜமாத் உத் தாவா அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் என்றும் அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த தியோபந்தி இஸ்லாமிய அமைப்பான ஜமாத் உத் தாவா தன்னை அர்பணித்துள்ளது என்றும், அதன் இராணுவப் பிரிவே லஷ்கர் இ தயிபா என்றும் அந்த இணையதளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா வரவேற்பு
சயீதையும் அவரது மைத்துனரையும் பிடித்துக் கொடுப்பதற்கு அமெரிக்க அரசு பரிசை அறிவித்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குள்ள அர்பணிப்பையே இது வெளிக்காட்டுகிறது எனவும், தொடர்ந்து தீவிரவாதத்தை எதிர்த்து போராட இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
லஷ்கர் இ தயிபா மற்றும் அதன் உறுப்பினர்கள், போஷகர்களுக்கு ஒரு கடுமையான சமிஞ்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், தீவிரவாதத்தை எதிர்ப்பதில் சர்வதேச சமூகம் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருக்கிறது என்பதையும் அமெரிக்காவின் நிலைப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போலும் மும்பை தாக்குதல்கள் தொடர்பில் சயீதுக்கு எதிராக பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த 2010 ஆம் அண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ராஜதந்திர தகவல் பரிமாற்றங்களில், ஹஃபீஸ் சயீத் மற்றும் லஷ்கர் இ தயிபா அமைப்பின் தலைவர் ரஹ்மான் லக்வி ஆகியோர் தொடர்ந்து அந்த அமைப்பை நடத்துவதாகவும், மும்பைத் தாக்குதலுக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்ததாகவும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்கூறியது.
தெற்காசியாவில் லஷ்கர் இ தயிபாவின் தாக்குதல்களை லக்வி மற்றும் சயீத் ஆகியோர் திட்டமிட்டு, முன்னிருந்து நிறைவேற்றினார்கள் என்று அந்த விக்கிலீக்ஸ் தகவலில் தெரிவிக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க அச்சுறுத்தல்
இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது.
கோக்கோஸ் தீவிலிருந்து நவீன வேவுவிமானங்களை அமெரிக்கா பறக்கவிட திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா பல வகையான ஆளில்லா வேவு விமானங்களை வடிவத்திலும் திறனிலும் தம் வசம் வைத்துள்ளது. 40 ஆயிரம் அடி உயரத்தில் 20 மணிநேரம் தொடர்ந்து பறந்து வேவு பார்க்கக் கூடிய இஸ்ரேலிய தயாரிப்பான ஈடன் ஆளில்லா வேவு விமானமும் இதில் அடக்கம்.
நானோ ஹம்மிங்பேர்டு என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் பார்ப்பதற்கு உண்மையான ஹம்மிங்பேர்ட் பறவையைப் போலவே இருக்கும். 6.5 இஞ்ச் இறக்கை கொண்ட இந்த விமானம் பேட்டரி உதவியுடன் 8 நிமிடங்கள் வானில் பறந்து திரும்பும்.
பிரிடேடர் பி ஆளில்லா வேவு விமானங்களானது 66 அடி நீள இறக்கைகளைக் கொண்டது. இவை 50 ஆயிரம் அடி உயரத்தில் 30 மணிநேரம் தொடர்ந்து இயங்கி வேவு தகவல்களை சேகரிக்கும்.
இவை தவிர ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படக் கூடிய வழக்கமான ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா வேவு விமானங்களும் உண்டு. ஆப்கானிஸ்தானில் 289 தாக்குதல்களை இதுவரை நடத்தி 2224 தலிபான், அல்குவைதா தலைவர்களை படுகொலை செய்ய இவையே பயன்படுத்தப்பட்டன.
இவை அனைத்தையும் கோக்கோஸ் தீவில் களமிறக்கினால் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதுமே அமெரிக்காவின் கண்காணிப்பில்தான் இருக்கும்.
இந்தியப் பெருங்கடலில் டிகாகோ கார்சியோ தீவில் அமெரிக்கா கடற்படைத் தளத்தை ஏற்கெனவே அமைத்திருக்கிறது. இத்தீவுக்கான குத்தகை உரிமையை 50 ஆண்டுகாலத்துக்கு இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா பெற்றிருந்தது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.
இதனால் இந்தியப் பெருங்கடலில் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கண்காணிக்கக் கூடிய வகையில் சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கோக்கோஸ் தீவுக்கு டிகாகோ கார்சியோ தீவு கடற்படை தளத்தை ஒட்டுமொத்தமாக இடம்பெயரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒபாமா பயணத்தின் போது அமெரிக்க படைகள் ஆஸ்திரேலியாவில் குவிக்கப்படும் என்ற நிலைப்பாட்டுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சீனா உரிமைகோரி வரும் எண்ணெய்வளம் மிக்க தென்சீனக் கடலை எளிதில் கண்காணிக்கக் கூடிய கோக்கோஸ் தீவில் கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்திருப்பது சீனாவிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்சீனக் கடலில் ஏராளமான தீவுகளுக்கு ஆசியான் நாடுகளான புருனே, பிலிப்பைன்ஸ், மலேசியா,வியட்நாம் போன்றவை உரிமை கொண்டாடி வருகின்றன.
வியட்நம் அரசின் ஒத்துழைப்புடன் தென்சீனக் கடலில் இந்தியா எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபட தொடர்ந்து சீனா எச்சரித்து வரும் நிலையில் அமெரிக்காவும் தென்சீனக் கடலை முற்றுகையிட்டு நிற்க உள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள் கொண்டுவரப்படும் மிக முக்கியமான மலாக்கா ஜலசந்தியை கோக்கோஸ் தீவிலிருந்து போர்க் கப்பல்கள் எளிதில் சென்றுவிட முடியும்.
எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே ஒரு போர் அல்லது பதற்ற நிலை உருவானால் மலாக்கா ஜலசந்தியை போர்க்கப்பல்கள் வழிமறித்தாலே சீனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் வகையில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திய நிலை ?
சர்வதேச அரங்கில் இந்தியா இனி அமெரிக்காவின் நட்புநாடாகத்தான் திகழவேண்டிய நிலை உருவாகிவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அமைப்பில் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தை அமெரிக்கா தொடங்கி வைத்திருக்கிறது.
நேட்டோ அமைப்பில் இந்தியா இணைந்தால் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் சீனாவுக்கு கடும் சவாலாக இரண்டு நாட்டு படைகளும் இணைந்து நிற்க வேண்டிய நிலைமை உருவாகும்.
அமெரிக்கா தற்போது முகாமிட உள்ள கோக்கோஸ் தீவு அந்தமான் தீவுகளுக்கு சற்று கீழே உள்ளவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கோக்கோஸ் தீவில் முகாமிடுவதன் மூலம் இந்தியா,சீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா வேவு பார்க்கும்.
வளைகுடா பிரதேசத்தில் ஈரானுக்குச் சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியைத்தாண்டிதான் அரபிக் கடலுக்கோ பெர்சிய வளைகுடாவுக்கோ செங்கடலுக்கு எண்ணெய் எரிபொருள் கப்பல்கள் செல்ல முடியும்.
இதேபோல் தென்கிழக்காசிய நாடுகளும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான மலாக்கா ஜலசந்தியைத்தாண்டித்தான் எண்ணெய் எரிபொருள் கப்பல்களை நகர்த்த முடியும்.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டி வருவதால் அங்கு போர்மேகம் சூழ்ந்து அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிற்கின்றன. இங்கிலாந்தும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்பப் போவதாக அறிவித்துள்ளன.
மலாக்கா ஜலசந்தி ஒட்டிய தென்சீனக் கடலில் சுற்றியிருக்கும் வியட்நாம் போன்ற சிறுசிறு நாடுகள் சீனாவை எதிர்த்து நிற்கின்றன. இப்பொழுது தம் பங்குக்கு அமெரிக்காவும் களமிறங்கி நிற்கிறது.
3-ம் உலகப் போர் மூளுமேயானால் அது ஹோர்முஸ் ஜலசந்தியிலோ அல்லது மலாக்கா ஜலசந்தியை அடுத்த தென்சீனக்கடலிலோதான் என்பது இப்போதைய நிலை.
____________________________________________________________________________________________