அச்சுறுத்தும்
மலேரியா கிருமிகள்.
மலேரியா நோய்க் கிருமிகள் மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த வகையான நோய்க்கிருமிகள் முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் அப்பால் பர்மா தாய்லாந்து எல்லைப் பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேரியா நோயை முற்றுமாக ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நடந்துவருகின்ற முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் இது என இந்த புதிய வலுவுடன் பரவ ஆரம்பித்துள்ள மலேரியா நோய்க் கிருமிகளை ஆராய்ந்துவருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் இவர்களது ஆராய்ச்சி பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர்.
மலேரியா நோய்க் கிருமியானது கொசுக்கடி மூலம் பரவுகிறது.
இந்த கிருமிக்கு எதிராக பலகாலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்து தற்போது இக்கிருமியை கட்டுப்படுத்தமுடியாமல் போகின்ற உண்மையை மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் தடவையாக கம்போடியாவில் விஞ்ஞானிகள் கண்டு அதிர்ந்து போயினர்.
அந்த நோய்க்கிருமி மற்ற மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும் முதலில் காணப்பட்ட இடத்திலிருந்து 800 கிலோமீட்டருக்கு அப்பால் பர்மீய எல்லைவரை இப்போது இவ்வகை கிருமி காணப்படுகிறது.
ஏற்கனவே இந்தப் பகுதி அதிகம் பேருக்கு மலேரியா பரவுகின்ற ஒரு இடம் ஆகும்.
அர்டெமிஸினின் என்ற இரசாயனக் கலவையை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் மலேரியா நோய்க் கிருமிகளை அழிக்க பயன்பட்டுவந்தன.
ஆனால் மலேரியா கிருமிகளில் தற்போது ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள், அந்தக் மருந்துக்கும் அழியாமல் போகின்ற ஒரு வல்லமையை அக்கிருமிகளுக்குத் தந்துள்ளது.
இது பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்சுவா நோஸ்டன், மலேரியாவை ஒழிக்கும் நோக்கில் உலக அளவில் நடந்துவரும் முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவைத் தரலாம் என கூறினார்.
கொசுக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரவுவதனால் மருந்துக்குக்கு கட்டுப்படாத நோய்க்கிருமி பரவுகிறதா அல்லது ஆங்காங்கே இருக்கும் நோய்க்கிருமிகளிலேயே மருந்துக்கு கட்டுப்படாத இந்த தன்மை உருவாகிறதா என்று இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அது எப்படியிருந்தாலும் இது நிச்சயம் கவலையளிக்ககூடிய ஒரு விஷயம்தான்.
இந்த மாதிரியான மலேரியா கிருமி இந்தியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தென்பட ஆரிம்பித்தால், அரசாங்கங்கள், உதவியமைப்புகள் போன்றவை என்னதான் முயன்றாலும் மலேரியாவை முற்றுமாக ஒழிப்பதென்பது இயலாத காரியமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
_________________________________________________________________________________
குற்ற பரம்பரை உண்டானது எப்படி?
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட குற்றப்பழங்குடியினர் சட்டம் 19ம் நூற்றாண்டில் முதலில் கொண்டுவரப்பட்டாலும், அதன் வலுப்படுத்தப்பட்ட சட்டம் 1911ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் தென் தமிழ் நாட்டின் கள்ளர் , பிறமலைக்கள்ளர் போன்ற சமூகங்கள் சேர்க்கப்பட்டு பல தொல்லைகளுக்கு உள்ளாகியதாக வரலாறு உண்டு.
இந்த சட்டத்தினால் இந்த சமூகத்தினருக்கு ஏற்பட்ட பாதகமான விளைவுகள் ஏற்பட்டன.இந்த சட்டத்தின் கீழ், இந்த சமுதாயங்களைச் சேர்ந்த ஆண்கள் தினமும் காவல் நிலையங்களுக்கு வந்து கைரேகையை பதிக்குமாறு வலியுறுத்தபட்டனர். இதனால் அவர்கள் ஒரு வித உடல்ரீதியான அடக்குமுறைக்கு உள்ளானதாகக் கருதலாம். இந்த உடல் ரீதியான அடக்கு முறையால் , அவர்கள் அன்றாட வேலைகளைச் செய்யமுடியாமல் போனது என்றார்.
மேலும் இந்த மாதிரியான ஒரு ஒடுக்குமுறை சட்டம் அவர்கள் மீது பாய்வதற்கு ஏதாவது சமூகக் காரணிகள் இருந்தனவா , அவர்கள் உண்மையில் அந்தமாதிரியான சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தார்களா என்றால்சட்ட விரோதச் செயல்களில் அந்த சமூகத்தினர் ஈடுபட்டதற்கான வாய்மொழியாகவோ அல்லது வரலாற்று ரீதியான சான்றுகளோ ஏதும் கிடையாது. ஆனால், பொதுவாக அவர்கள் வெள்ளையரசுக்கு அடங்காமல் தன்னிச்சையாக அதிகாரம் செய்ய நினைத்தவர்கள், பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணியாத ஒரு நிலையை எடுத்தவர்கள், கலகம் செய்தவர்கள், அதனால்தான்இவர்களை ஒடுக்கி வைக்க இந்த குற்ற பரம்பரையினர் வழியை பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், 1948ம் ஆண்டில் இந்த சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.இதன் பின்னர்தான்இச் சமூகத்தினர், சமூகம், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டனர்.
_________________________________________________________________________________
_________________________________________________________________________________