1919 ஏப்ரல் 13- இந்திய வரலாற்றில் ஒரு கறுப்புநாள், மனசாட்சி உள்ள அனைவரையும் நடுங்க வைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தை உலகம் கண்ணுற்ற நாள்!
காலனியாதிக்கம் எப்படியெல்லாம் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்களை புழுபூச்சிகளாய் சுரண்டல் வேட்டைக் காடாய் பயன்படுத்தியது என்பதை உலகவரலாற்றில் பதிவு செய்த நாள்!
அந்த நாளில் தான் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் தலைமை குருத்துவாரா அமைந்துள்ள பொற்கோவிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் எனும் மைதானத் தில் பிரிட்டிஷ் காவல்துறையினரால் நூற்றுக் கணக்கானோர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
1917 அக்டோபரில் ரஷ்ய நாட்டில் மகத் தான சோசலிஸ்ட் புரட்சி நடந்தது. உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசு மாமேதை லெனின் அவர்கள் தலைமையில் அமைந்தது. அதன் எதிரொலி இந்தியாவிலும் கேட்டது.
1918-19 ஆண்டுகளில் இந்தியாவில் காலனியாதிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் வெகுஜன எழுச்சி காலகட்டத்திற்குள் நுழைந் தது.
|
ஜெனரல் டயர் |
முதல் உலக யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினாலும், 1919 மாண் டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அறிவிப் பினால் நம்பிக்கைகள் சிதறிப் போனதாலும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
நாட்டின் அனைத்துத் தொழில் மையங் களிலும் வேலைநிறுத்தங்கள் நடந்தன. விவ சாயப் போராட்டங்களும் உருவெடுக்க ஆரம் பித்தன.
போராட்டங்களை அடக்கி ஒடுக்க பழைய சட்டங்கள் போதாது என்ற முடிவுக்கு வந்தது பிரிட்டிஷ் அரசு. புதிய அடக்குமுறை சட்டங் களை நிறைவேற்றத் துவங்கியது.
விடுதலை போராட்ட வீரர் என்று சந் தேகப்படும் யாரையும் பிடி ஆணை (வாரண்ட்) இன்றி கைது செய்யலாம்.
எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறை வைக்கலாம். காரணம் காட்டத் தேவை யில்லை. எந்த வீட்டையும் போலீஸ் வாரண்ட் இன்றி சோதனை போடலாம்.
வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவோ வாதாடவோ முடியாது. இப்படி பல ஷரத்துக் கள்... இந்தச் சட்டம் மக்களால் பொருத்த மாகவே, ரௌடி சட்டம், ஆள் தூக்கி சட்டம், கறுப்புச் சட்டம் என்றெல்லாம் அழைக்கப்ப ட்டது. சட்ட ஆட்சியின் அடிப்படையே நொறுக் கப்பட்டது.
“இந்தச் சட்டங்கள் தேவையற்றவை, மான முள்ள இந்தியர்களால் இவற்றை ஏற்கமுடி யாது” என்று காந்தி கூறினார். மக்களின் அடிப் படை உரிமைகள் மீதான இந்த தாக்குதலைக் கண்டித்து ஒரு புதிய வழியில் போராட வேண்டுமென்று காந்தி அறைகூவல் விடுத் தார். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்பதே அது.
1919 பிப்ரவரியில் அவர் சத்தியாகிரக சபை ஒன்றை நடத்தினார். நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நேரடி எதிர்ப்பு நடவடிக்கைகள் துவங் கியது, 1919 மார்ச் 30ல் ‘பந்த்’ நடத்த அறை கூவல் விடப்பட்டது. இது பின்னர் ஏப்ரல் 6க்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று நாடு முழுவதும் உண்ணாவிரதமும், பொதுக்கூட் டங்களும் நடத்தப்பட்டன. அந்த நாள் கறுப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. தேசத்தில் ஒரு புத்துணர்ச்சி பரவியது. ஒன்றுபட்ட மக் களின் உறுதிப்பாட்டை இந்தப் போராட்டம் முன்னெப்போதும் இல்லாதஅளவில் பறை சாற்றியது. மக்களின் போராட்ட உணர்வு கொழுந்துவிட்டெரிந்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது.
மகாத்மா காந்தி பஞ்சாப்பில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 10 அன்று அவர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களான சத்திய பால், டாக்டர் சைபுதீன் கிச்சலு ஆகியோர் கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்தில் சிறைவைக்கப்பட்டனர். பஞ்சாப்பில் கிளர்ச்சி பரவியது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. ராணுவச் சிப் பாய்கள் துப்பாக்கிகளுடன் பஞ்சாப் நகரங் களில் ரோந்துவந்தனர்.
பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் ஹர்த்தாலும் நடந்தன. அமிர்தசரஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து பல இடங்களிலும் கலவரம் வெடித்தது. அமிர்த சரஸ் நகரம் பிரிகேடியர் ஜெனரல் டயர் வசம் ஒப்படைக்கப்பட்டது. குடிதண்ணீர், மின் சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது. நகரம் இருளில் மூழ்கியது.
ஏப்ரல் 13 பைசாகி என்ற சீக்கிய புத் தாண்டு தினமாகும். அறுவடைத் திருநாளும் கூட. அன்று பிற்பகலில் அமிர்தசரஸ் பொற் கோவிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு கண்டன கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து சந்தைக்கு வந்த பெரும்பாலானோர், தடை உத்தரவு அமலில் இருப்பது தெரியாமல் தலைவர்கள் பேச்சை கேட்பதற்காக மைதானத்தில் அமைதியாக கூடினர்.
திடீரென்று தனது துருப்புகளுடன் அங்கு வந்த ஜெனரல் டயர் அமைதியாகக் கூடி யிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டான்.
அந்த மைதானம் நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல் வதற்கு ஒரு சிறிய சந்து மட்டுமே இருந்தது. அந்தச் சந்திலும் குண்டுகள் நிரப்பப்பட்ட பீரங்கி நிறுத்தப்பட்டிருந்தது.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்டது. மக்கள் தப்பி ஓட வழி யின்றி முட்டி மோதினர். அங்கிருந்த ஓர் கிணற்றில் குதித்தனர். 90 துப்பாக்கிகள் ஏக காலத்தில்.... குண்டுகளை கக்கின. 10 நிமி டத்தில் 1650 ரவுண்டுகள் சுடப்பட்டன. இறந் தவர்கள் சுமார் 800 பேர், படுகாயமடைந் தவர்கள் சுமார் 3000 பேர். முழுக்கணக்குத் தெரியவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் 209 பேர் இறந்ததாக வும், கிணற்றில் விழுந்து 150 பேர் இறந்த தாகவும், (மொத்தம் 359பேர்) பிரிட்டன் அரசு பொய்க்கணக்கு கூறியது. உலகின் கண் களை மூடி மறைக்க முயற்சி செய்தது. “சுட் டேன்” குண்டுகள் தீரும் வரை சுட்டேன் என்று கொக்கரித்தான் ஜெனரல் டயர். இந்த கொலைபாதகச் செயலைத் தொடர்ந்து அமிர்த சரஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.
பின்னர் கவர்னர் டயரும் ஜெனரல் டய ரும் பிரிட்டிஷ் அரசால் திரும்ப அழைக்கப் பட்டனர். மாமேதை லெனின் மூன்றாவது சர்வதேச அகிலத்தில் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளார். இந்திய மக்களின் எழுச் சியை பாராட்டியுள்ளார்.
ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைத் தேசமே கண்டித்தது. ஆனால் தமிழகத்தில் நீதிக்கட்சி ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டது என் பது குறிப்பிடத்தக்கது.
சாவின் தருவாயில் இருந்தவர்களுக்கு கடைசியாக தண்ணீர் கொடுத்த சிறுவன் - இந்தக் கொடுமையை அக்கினிக் குஞ்சாக தன் நெஞ்சில் அடைகாத்தான்.
பஞ்சாப் முழுவதும் ஒரு பயங்கர உணர்வை ஏற்படுத்தவே இந்தப் படு பாதகச் செயலை மேற்கொண்டதாக டயர் பின்னால் ஒத்துக்கொண்டான்.
இந்தக் கொடுஞ்செயல் இந்திய மக்களை உறைய வைத்தது. சுதந்திரப் போராட்ட வர லாற்றில் இந்தச் சம்பவம் ஒரு திருப்புமுனை யாக அமைந்தது. பஞ்சாப் முழுவதும் கண் டன அலை வீசியது.
1940 மார்ச் 13ல் உத்தம்சிங் (ராம் முகம்மது சிங் ஆசாத்) ஜாலியன் வாலாபாக் படுகொலை யின்போது பஞ்சாப் கவர்னராக இருந்த ஒ.டயர் என்பவரை சுட்டுக்கொன்றார். உத்தம்சிங் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு 1940 ஜூன் 12ல் தூக்கிலிடப்பட்டார்.
அவர் தனது அறிக்கையில் கூறியது:
“நான் அவன்மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு தண்டனை வேண்டும். அவன் தான் உண்மையான குற்ற வாளி. எனது மக்களின் உணர்வுகளை அவன் நசுக்க விரும்பினான். எனவே நான் அவனை நசுக்கிவிட்டேன். 21 ஆண்டுகள் நான் காத்திருந்தேன். என்னுடைய வேலையை முடித்துவிட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் சாவைப்பற்றி கவலைப்படவில்லை. எனது நாட்டிற்காக நான் எனது உயிரை விடு கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியில் எனது மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். நான் இதனை எதிர் த்துப் போராடியிருக்கிறேன். இது என்னு டைய கடமை. என்னுடைய தாய் நாட்டிற் காக சாவதைவிட வேறென்ன பெருமை கிடைக்க முடியும்? நான் இதனை எதிர்த்து போராடியிருக்கிறேன்.”
இந்த உத்தம்சிங் யார் தெரியுமா? குண்ட டிப்பட்டு உயிருக்காக போராடிக்கொண் டிருந்த அப்பாவி மக்களுக்கு ஓடி ஓடி தண் ணீர் கொடுத்தானே அந்தச் சிறுவன் தான்.
உத்தம்சிங் இன்ஜினியரிங் கல்லூரி மாணவராக லண்டன் போய்ச் சேர்ந்தார். அங்கு டயரை தேடி அலைந்தார்.
ஜெனரல் டயர் பக்கவாதம் தாக்கி உயிரி ழந்துவிட்டார். கவர்னர் டயர் மட்டுமே உயி ரோடு இருப்பதை அறிந்தார். ஒரு கூட்டத் தில் பேசிவிட்டு டயர் மேடையில் அமர்ந்தார். உத்தம்சிங் நேராக மேடைக்குச் சென்று டயரை ஆறுமுறை சுட்டார். பின் ஓடாமல் நின் றார் உத்தம்சிங்.
நீதிபதி முன்பு உத்தம்சிங் கூறியது: உன் பெயர் என்ன? ராம் முகம்மதுசிங் ஆசாத். நீ இந்து-வா? சீக்கியனா? முஸ்லிமா?- நான் இந்தியன். உன் முகவரி? -இந்தியா.
மக்கள் எதிர்ப்பு காரணமாக ரௌலட் சட் டத்தை அமல் நடத்த முடியவில்லை. ஆறே மாதங்களில் கைவிடப்பட்டது. இவை போன்ற எண்ணற்ற வீர காவியங்களும் தியா கங்களும் உள்ளடக்கியதுதான் இந்திய விடு தலைப் போராட்ட வரலாறு.
‘இறந்துபோனவர்களின் கண்களை உயி ரோடு இருப்பவர்கள் மூடுகின்றனர்.. உயி ரோடு இருப்பவர்களின் கண்களை இறந்து போனவர்கள் திறக்கின்றனர்.
நமது சோனியா-மன்மோகன் சிங் போன்ற[ ஆட்சியாளர்களின் ]அந்நிய அடிவருடிகள் கண்களையும் திறக்க இந்நாள் நினைவுகள் உதவட்டும்.