பன்றி எச்சரிக்கை
மிரட்டும் பன்றிக் காய்ச்சல்
காய்ச்சல் வந்தா மருந்து கடைக்கு போய் ஒரு மாத்திரை வாங்கி சாப்பிட்டால் சரியாயிடுச்சு என்ற நிலை தற்போது இல்லை.காய்ச்சல் இன்று சாதாரண காய்ச்சல், சளிக் காய்ச்சல், சிக்குன் குனியா, எலி காய்ச்சல், பறவை காய்ச்சல் என பலவிதங்களில் மனிதரை தாக்க தொடங்கிவிட்டது. கோழி வாத்து உள்ளிட்ட பறவையினங்களுக்கு பரவக்கூடியாதாக இருந்த பறவைக்காய்ச்சலுக்கு காரணமான நச்சுயிரி தற்போது மனிதர்களிடமும் பரவுவதாக மாறியுள்ளது. இந்த நச்சுயிரி மரபணு மாற்றம் பெற்று தனது தனது இயல்பை மாற்றிக்கொள்வதால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நச்சுயிரியை கட்டுப்படுத்தி தடுப்பதற்கான தடுப்பூசியை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.
புதிதாக இந்த பட்டியலில் சேர்ந்துள்ள பன்றி காய்ச்சலும் தற்போது உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. உலகையே மிரட்டுகின்ற பன்றி காய்ச்சல் உருவானதெப்படி? பரவுவது எப்படி?
பன்றி காய்ச்சல் பன்றிகளுக்கு ஏற்படும் ஒருவகை சளி காய்ச்சல் நோயாகும். இது மிக எளிதில் பரவக்கூடிய நச்சுயிரியால் ஏற்படுகிறது. இந்த நோய் பன்றிகளுக்கே வழக்கமாக ஏற்படும். மக்களுக்கு அதிகமாக ஏற்படாது. ஆனால் மக்களுக்கு பரவாது என்றில்லை. பன்றிகளை வளர்த்துவரும் மற்றும் பன்றிகள் தொடர்பான பணிகளில் ஈடுபடுவோருக்கு இக்காய்ச்சல் பரவியுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இப்போது இந்த காய்ச்சல் மனிதர்களிடையே பரவும் தன்மை கொண்டதாக மாறியுள்ளதே உலகு தழுவிய அச்சுறுத்தாலாக இன்று எல்லா நாடுகளும் பீதியடைய காரணமாகும். ஆனால் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பரவியுள்ள இந்த புதியவகை காய்ச்சல், பன்றி, மனிதர் மற்றும் பறவைகளுக்கு இடையே பரவக்கூடிய தனித்தனியான சளிக் காய்ச்சல் நச்சுயிரிகளின் கலப்பு என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை காய்ச்சல் தொற்றாய் பரவக்கூடியது எனவும் மனிதரிடரிடையே ஒருவரிடமிருந்து பிறருக்கு பரவுகிறது என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் முடிவு செய்துள்ளன. ஆனால் மக்களிடையில் இது எவ்வளவு விரைவாக பரவுகிறது என்று இதுவரை தெரியவில்லை.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல நோய்க்கு முன்னால் சில அறிகுறிகள் நமது உடலில் தென்படுகின்றன. பொதுவாக, சாதாரண காய்ச்சலுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படுமோ அவையே பன்றி காய்ச்சலுக்கும் ஏற்படுகின்றன. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி, குளிர் காய்ச்சல், சோர்வு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. பன்றி காய்ச்சலால் உண்டாகும் நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சுக்குழல் நோய்களால் கடந்த காலத்தில் சிலர் இறந்தும் உள்ளனர். சாதாரண காய்ச்சல் பலருக்கு வந்துவிட்டாலே மருத்துவ துறை பாதிப்புக்குள்ளாகுகிறது. மக்களிடையில் பீதியை உருவாகுகிறது. அதுபோல பன்றி காய்ச்சலும் மருத்துவ சிகிச்சை தொடர்பான சூழ்நிலைகளில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
இனிமேல் காய்ச்சல் வந்துவிட்டால் சாதாரண காய்ச்சல் தானே. ஓய்வெடுத்து ஒரு மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. இந்த பன்றி காய்ச்சலும் கூட மிதமாகவோ அல்லது கடுமையாகவோ தாக்கக்கூடியது. இதுவரை பெரியளவில் உயிரிழப்பு ஏற்படுத்தாத இந்த பன்றிக்காய்ச்சல் இவ்வாண்டு உலகையே நடுங்கவைக்கும் அளவுக்கு உயிரிழப்பு ஏற்படுத்தி வருகிறது. இது இரண்டு விதங்களில் பரவுகிறதாம். பன்றிகளுடன் அதிக தொடர்பு கொண்டு பணிபுரியும் பன்றி பண்ணை தொழிலாளர்கள் அல்லது பன்றிக் காய்ச்சல் நச்சுயிரியால் கேடுற்ற சுற்றுப்புற சூழ்நிலைகளால் பரவுகிறது. அடுத்ததாக பன்றிச்காய்ச்சல் தொற்றியுள்ள நபரிடமிருந்து பிறருக்கு பரவுகிறது. சாதாரண காய்ச்சல் பரவுவதைபோல, குறிப்பாக இருமல் மற்றும் தும்மல் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இது ஒரு தொற்றுநோய்.
|