நோயில் விழும் இளம் வயதினர்.
இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரிடையே ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர், பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக இரவு- பகல் பாராமல் வேலைசெய்து வருகின்றனர். இதனால் அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்.
ஆனால், இரவு நேரம் கழித்து உறங்கச் செல்வதால் அவர்களுக்கு சரியான தூக்கம் கிடைப்பதில்லை. அதேபோல், தினசரி மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கவழக்கத்திலும்முறையற்ற தன்மையை கடைப்பிடிப்பது, நொறுக்குத் தீனி போன்றவற்றை உண்ணுவது, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணத்தால் அவர்களது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இளம் தலைமுறையினர் சீக்கிரம் நோய் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தில் பல்வேறு அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் 4 ல் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த நோயும், 10 ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இதில் உயர் ரத்த அழுத்தம் என்பது மனிதனை மெல்லக் கொல்லும் நோயாகும். இது இதயம் தொடர்பான நோய்களையும், கை, கால் போன்ற உடல் உறுப்புகளையும் செயலிழக்கச் செய்யும்.
பக்கவாதத்தையும் ஏற்படுத்தக்கூடியது. அதேபோல், நீரிழிவு நோய் மூளை முதல் பாதம் வரை பல்வேறு நோய்களை உருவாக்குகிறது. இதற்கு முக்கியமான காரணமாக இருப்பது முறையற்ற உணவுப் பழக்க வழக்கமே. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாததும், நொறுக்குத் தீனியை அதிகம் உட்கொள்வதாலும் இதுபோன்ற நோய்கள் உருவாகின்றன.இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 26 சதவிகிதத்தினர் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களில்பெரும்பாலானோர் இந்நோய்களில் சிக்கித்தவிப்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல், உலக அளவில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் ஏற்படும் மரணங்களில் 51 சதவிகித மரணங்கள் பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களினாலே ஏற்படுவதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, பெரும்பாலானோர் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், ஆண்களில் 23.1 சதவிகிதம் பேரும், பெண்களில் 22.6 சதவிகிதம் பேரும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், 11.1 சதவிகித ஆண்களும், 10.8 சதவிகித பெண்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரசவகால மரணங்களைப் பொறுத்தவரையில் ,கடந்த 20 ஆண்டுகளில் மரணங்கள் குறைந் துள்ளன. 1990ம் ஆண்டில் 5.4 லட்சமாக இருந்த பிரசவ கால மரணம், தற்போது 2.9 லட்சமாக குறைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.
ஸ்கிரீன் இண்டியா டுவின் எபிடெமிக் (சைட்) எனும் அமைப்பு இந்தியர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை செய்தது. அதில், இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் 3 ஆண்டுகள் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், 60 சதவிகிதம் பேர் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவு 7 சதவிகிதமாகவும், கெட்ட கொழுப்பின் அளவு 100 மில்லி கிராமாகவும் உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களில் பெரும்பாலானோருக்கு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த எட்டு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஒரு மாநிலத்தை மற்ற மாநிலத்தோடு ஒப்பிடுகையில், மகாராஷ்டிராவில் தான் நோய் பற்றிய விழிப்புணர்வு மிகக்குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.
அங்குள்ள 5 சதவிகிதம் பேர் நோய் பற்றிய அறியாமையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்தியா முழுவதும், 7 சதவிகிதம் பேர் நோய் பற்றிய எவ்வித விழிப்புணர்வும் இல்லா மல் உள்ளனர்.
தற்போதைய அவசர உலகில் மாறி வரும் உணவுப்பழக்க வழக்கம், பணிச் சூழல் போன்ற கார ணங்களாலே இது போன்ற நோய்கள் அதி கரிக்கின்றன. சரியான உணவுப் பழக்க வழக்கம், போது மான உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக கடைப்பிடிப்பதன் மூலமே இதுபோன்ற நோய்களிலிருந்து காத்துக் கொள்ள முடியும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.
________________________________________________________________________
இளமை ,இதோ,இதோ,,,,
இது இவ்வாறு இருக்க ,
இப்போது இளமைதரும் தங்க மூலத்தாலான மருந்து இப்போது இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
தங்க சாரத்தில் தயாரிக்கப்பட்ட இம்மருந்து நமது தோலினூடே சென்று சுருக்கங்களை உருவாக்கும் திசுக்களை வெளியேற்றி விடுகிறதாம்.
இதனால் சுருக்கங்கள் அற்ற இளமை உங்களுக்கு நிச்சயம் என்று சுருக்கமாக கூறுகிறார்கள்.
வெறும் பத்து நாளிலேயே அதை நாம் உணர முடியுமாம்.
இதை சில இங்கிலாந்து பிரபலங்கள் வாங்கி உண்டு நல்ல மருந்து என்று கூறியுள்ளார்கள்.
இதைத்தான் இந்தியாவில் தங்க பஷ்பம் என்று முந்தியே செஞ்சு பார்த்தாகி விட்டதே?
________________________________________________________________________