கலெக்டருக்கும் கையூட்டு?....
இது யாரோ அரசியல் வாதியின் பேச்சல்ல.நமது முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியரும்,இப்போதைய கோ-ஆப் டெக்ஸ் இயக்குனருமான சகாயம் இ.ஆ.ப,பேசியதின் சுருக்கம்.
"எதிர்காலத்தில் ஊழலுக்கு எதிராக புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது. என்னுடைய 21 ஆண்டு கால அரசுப் பணியில் 19 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யலாம். ஆனால் என் நேர்மை இடம் மாறாது.
நான் கடந்த 2009-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த போது ராசிபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தேன். என் காருக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் நேராக செல்லாமல் வளைந்து வளைந்து சென்றனர். அவர்கள் ஏன் அப்படி வாகனத்தை ஓட்டுகிறார்கள் என்று சந்தேகப்பட்டு அவர்ளை மடக்கி நிறுத்துமாறு என் கார் டிரைவரிடம் கூறினேன். அதே போன்று அந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டது.
உடனே நான் அவர்கள் 2 பேரையும் அழைத்து உங்களிடம் டிரைவிங் லைசென்சு இருக்கிறதா? என்று சோதித்த போது அவர்களிடம் டிரைவிங் லைசென்சு இல்லை என்பது தெரியவந்தது. அடுத்து அவர்கள் மது குடித்து இருந்தார்கள். உடனே எனக்கு கோபமாக வந்தது. லைசென்சு இல்லாமல் ஓட்டுவதே தவறு. அதிலும் குடித்து விட்டு ஓட்டுவதால் நீங்கள் விபத்தில் சிக்குவதோடு மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் விபத்தில் சிக்க வைக்கிறீர்களே என்று கோபமாக கூறி விட்டு உடனே ஆர்.டி.ஒ.வுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து அந்த இளைஞர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள் என்று கூறினேன். உடனே 2 பேரில் ஒருவர் என்னை பார்த்து சார் எங்கள் மீது இரக்கம் காட்டி விட்டு விடுங்கள் என்று கூறினார்.
உடனே நான் ஏழைகளுக்கு தான் இரக்கம் காட்டுவேன். உங்களை போன்று குற்றம் செய்தவர்கள் மீது இரக்கம் காட்ட மாட்டேன் என்று கூறினேன். அப்போது தான் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அவர்களில் ஒருவன் தனது பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து இதை வைத்துக் கொண்டு எங்களை எப்படியாவது விட்டு விடுங்கள் என்று கூறினார்.
நான் நொந்து போனேன். நான் ஒரு மாவட்ட கலெக்டர் என்று தெரிந்திருந்தும் என்னிடமே லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தனர். நமது சமுதாயம் எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? மது குடித்தவர்களுக்கு எதில் தெளிவிருக்கிறதோ இல்லையோ, லஞ்சம் கொடுத்தால் தவறிலிருந்து தப்பி விடலாம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
அந்த அளவுக்கு சமுதாயத்தில் புரையோடியிருக்கிற லஞ்சத்தை அப்புறப்படுத்தும் வல்லமை மாணவர்களிடம் தான் உள்ளது.
புரட்சி புள்ளியாக தான் தொடங்கும்
நத்தையை விழுங்கியதும் ஜெல்லி மீனின் வயிற்றுக்குள் சென்ற நத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஜெல்லி மீனின் வயிற்றை அறுத்துக் கொண்டு எப்படி வெளியே வருமோ அதுபோன்று சமுதாயத்தை லஞ்சம் என்ற நத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து விடும்.
சமுதாயத்திலிருந்து லஞ்சம், ஊழலை அப்புறப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. அபாயகரமான செயலும் கூட. இதற்கு லஞ்சத்துக்கு எதிரான கருத்துக்களை மாணவர்களிடம் பரப்ப ஊழலுக்கு எதிரான இயக்கம் பாடுபட வேண்டும். தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை முதலில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய புரட்சியும் ஒரு புள்ளியாக தான் தொடங்கியது. அதை போல லஞ்சத்துக்கு எதிரான புரட்சியும் முதலில் புள்ளியாக தான் தொடங்கும்."
இவ்வளவுதான் அவரின் பேச்சு.ஆனால் அதில் இன்றைய பாமரா மக்களின் எதிர்பார்ப்பு அடங்கியுள்ளது.ஊழல் எதிர்ப்பு மக்களிடம் இருந்தாலும்.அதை வெறு வழியின்றி ஊழலுக்கு துணை போக வேண்டிய நிலை உள்ளது.
சாதி சான்று பெற கி.நி.அலுவலரிடம் ஆரம்பிக்கும் லஞ்சம் அவன் படித்து பணிக்கு செல்லும் வரை ஒவ்வொரு சமயமும் வோடோபோன் நாய் மாதிரி கூட வருகிறது.
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைக்கூட இந்த பிசாசு விட்டு வைக்கவில்லையே?
_________________________________________________________________________________
சமையல் வாயு
மாத வருமானம் ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் பெறுபவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவதை நிறுத்த வேண்டும் என பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த வருமானத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் நான்கு சிலிண்டர்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு மிகவும் உயர்ந்து வருவதே இதற்கு காரணமாகும். ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு விலையும் ரூ.50-100 உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
முயற்சிக்கு தோல்வி கிடையாது.
------------------------------------------------------------------------------------------------------------
முயற்சிக்கு தோல்வி கிடையாது.