நான் தயார்..!நீங்கள் தயாரா,,,,,?
'அந்த பக்கம் போகாதீங்க.ஏதோ ஆர்ப்பாட்டம் நடக்கிறது."
ஆனால் அந்த பக்கம் போனால்தான் வீடுக்கு சீக்கிரம் போகலாம்.இது சுற்று வழி.
எப்படியோ ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து சமாளித்துப்போய் விட வேண்டியதுதான்.எதிர் வந்தவர் கூறியதை காற்றில் பறக்க விட்டேன்.
வேகமாக நடை போட்டேன்.
ஒரே பெண்கள் கூட்டம்.ஆவேசமாக கூக்குரல்[ அவர்கள் மொழியில் கோசம்] போட்டுக்கொண்டிருந்தனர்.
ஏதாவது மாதர் சங்கமாக இருக்கும்.எங்காவது பெண் பாலியல் பலாத்காரம் விவகாரமாக இருக்கலாம்.
ஆனால் கோசங்கள் சற்று வேறுமாதிரி இருந்தது.கவனித்தேன்.
"வெறும் சம்பளம் மட்டும் போதாது.விலைவாசிப் புள்ளிகளுக்கேற்ப அகவிலைப்படி வேண்டும்,,வேண்டும்,
ஆண்டுக்கொருமுறை மிகை ஊதியம் போனஸ் வேண்டும்,,வேண்டும்."
அடடா.சத்துணவு பெண்களாக இருக்காலாம்.அல்லது அங்கன்வாடி இனத்தவர்களாக இருக்கலாம்.மகளிர் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொன்டிருப்பது பார்வையில் பட்டது.
அது யார் .?
ஒரு ஓரமாக.காசி போல் தெரிகிறதே.
அது நண்பன் காசியேதான்.
ஏன் ஒரு ஓரமாக ஒளிந்து நிற்பது போல் இருக்கிறான்.என்னைப் பார்த்து விட்டான்.
கையை அசைத்து ரகசியமாக அல்லது பயத்துடன் கூப்பிடுவது தெரிந்தது.
வேகமாக அதே நேரம் அவனின் ரகசியத்துக்கு ஈடு கொடுத்து கள்ளக்காதலியை நெருங்கும் காதலன் போல் சென்றேன்.
"பேசாமல் அந்தவழியில் போயிருக்கலாம்லே"?
ஏன்?என்ன விசயம்.?
"இந்த ஆர்ப்படத்தில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதில்லையா?
"என்ன ஆர்ப்பாட்டம்.சத்துணவா,மகளிர் சங்கமா?இதில் நாம் மாட்டி என்ன ஆகப்போகிறது?"
"அங்கே பாருடா மடையா?"
நானும் மடையன்போல் பார்த்தேன்.அட எனது மனைவி.அருகில் காசியின் பத்தினி.அருகில் பார்க்க பார்க்க திகைப்பு.
தெருவில் உள்ள அத்தனை மனைவிகளும்.அங்கு இருந்து கோசமிட்டனர்.
என்ன இழவு போராட்டம்.?
"மனைவிகளுக்கு மாதா,மாதம் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டு விட்டது அல்லவா?
இவங்களுக்கு சம்பளம் மட்டும் போதாதாம்.அகவிலைப்படி.மிகை ஊதியம்,கொடுபடா ஊதியம்.இன்னமும் எத்தனைவகை ஊதியம் உள்ளதோ அத்தனையும் வேண்டுமாம்.அதான் இந்த ஆர்ப்பாட்டம்.' காசி கிசு,சிசுத்தான்.எனக்கோ தலையை சுற்றிவந்தது.கீழே விழுந்து விடும் அபாயம் தெரிந்தது.
ஆனால் விழும் இடம் சாலை போட பல ஆண்டுகளுக்குமுன்பே கொட்டி வைத்த கற்குவியல்.
அதில் விழாமல் இருக்கவும் ,அதன் மீது அமர்ந்து சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளும் எண்ணத்திடன் அருகில் போனேன்.
கால் செருப்பில் சிறு கல்.உறுத்தியது.
ஆர்ப்பாட்டத்தை சோகத்துடன் பார்த்துக்கொண்டே ,செருப்பினூடே புகுந்த சுண்டைக்காய் அளவு கல்லை எடுக்க முயற்சித்தேன்.செருப்பு கீழே கழன்று விழுந்து விட்டது.செருப்பை எடுத்தேன்.
"ஆர்ப்பாட்டத்தில் செருப்பையா வீசுகிறாய்?'
கழுத்தில் கை விழ திரும்பினேன்.பெண் காவலர்.சும்மா சொல்லக்கூடாது பார்த்தாலே பயம் வரும் தடித்த உருவம்.
'நான்.செருப்பு,கல்லு,"
போலிசை பார்த்தாலே பயம்.
அதிலும் இது பெண் போலீசு.வார்த்தைகள் தடுமாற ஒருகையில் செருப்பும்-மறுகையில் கல்லுமாக கையும் -களவுமாக,
மாட்டிக்கொண்ட நிலை.காசியைப்பார்த்தேன்.பாவி பறந்து போய் பத்து நிமிடம் ஆகியிருக்கும் போல் தெரிந்தது.
செருப்பு கையோடே ஏதோ கசாப்பை பிடித்து விட்ட பெருமிதத்துடன்.தர,தர வென காலரை பிடித்து இழுக்க
'நான் சும்மா,நான்,செருப்பு,நான் கல் .நான் இல்லை"
என தொடர்புகளே அற்ற வார்த்தை உளறல்களுடன் இழுபட்டு சென்றேன்.
சாதாரண பெண்ணை விட்டு தப்பிக்க இயலா அளவு பயம்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கல் ஒரு கண்ணாடிஅளவுக்கு என்னைப் பார்த்து கோபத்துடன் முன்னேற, அதிலும் எனது பத்தினி முகம் அதிகோரமாக தெரிய
"நான் இல்லை.நான் கல்.நான் செருப்பு " என்ற உளறல் அதிகரித்தது.
'நான் ஈ 'என்று கூட சொன்ன ஞாபகம்.
----------------------------------------------------
"என்ன.சொல்றீங்க .நீங்க இல்லீனா யாரிந்த நூறு ரூபாயை எடுத்தாங்க."
மனைவி உலுக்க தூக்கம் கலைந்தது.
"என்ன.நூறு ரூபாய்?"
"உங்க சம்பளத்தை இந்த மாதம் எடுக்க ஏடிஎம் போய் பார்த்தால்.சம்பளத்தில் வழக்கத்தை விட நூறு ரூபாய் குறையா கணக்கு சீட்டு வருகிறதே"
அட தூக்கத்தில் என்னவோ கெட்ட கனவு.
"ஆபீசிலே ஒருத்தர் வீட்டு கல்யாணம்.எல்லோரும் நூறு ரூபாய் மொய் ஒரு ஆள்கிட்டே கொடுத்து விட்டோம்.அதான்.
உங்கிட்டே சொல்லனும்னு இருந்தேன் மறந்துட்டு."அசடு வழிந்தேன்.
"வர,வர வெட்டி செலவு அதிகமாயிட்டு.பஸ்-காபி செலவுக்கு கொடுக்கிறதை குறைச்சாத்தான் சரி வருவீங்க."
கோபம் வர தூக்கி எறிந்தேன்.தலயணையைத்தான்.
அதுவும் அவள் போய் விட்டாள் என்று நிச்சயம் ஆன பின்புதான்.
யாராவது மாதமானால் சம்பளத்தை அல்லது ஏடிஎம் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு நம் மாத செலவுக்கு பணம்தர மறுக்கும் பெண்சாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டீர்களா?
நான் முழு ஒத்துழைப்பு தர தயார்.
மனதளவில் தான்.
ஒன்று படுவோம்,
-போராடுங்கள்-
வெற்றி பெறுவோம்.