இந்தியாவுக்கு ஒரே முகம்தான்- ஒரே நாக்குதான்
“இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு இரட்டை முகம்- இரட்டை நாக்கு என்று உங்கள் தமிழக அரசியல்வாதிகள் விமர்சிக்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு ஒரே முகம்தான்- ஒரே நாக்குதான். அது எப்போதும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்’
அவர்களே மேலும், “பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படம் இந்திய நாடாளுமன்றம் வரை அதிர்வை ஏற்படுத்தியபிறகும், கொடுங்கோலன் ராஜபக்சேவிடமிருந்து பேட்டி என்ற பெயரில் திமிர்த்தனமான வார்த்தைகள் வெளிப்படுகிறதென்றால் அதன் பின்னணி என்ன’ என்றும் கேட்கிறார்கள்.
“அப்படி ஒன்று (பாலச்சந்திரன் படுகொலை) நடந்திருந்தால் அது எனக்குத் தெரிந்திருக்கும். ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அதை செய்திருப்பார்களேயானால் நான் அதற்கு பொறுப்பேற்றுக்கொள்வேன். ஆனால், அப்படி ஒன்று நடக்கவேயில்லை. நாங்கள் அதை முழுமையாக மறுக்கிறோம்’ என்று இந்தியாவின் பிரபல ஆங்கில நாளேட்டிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டி, தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.
அந்தப் பேட்டியிலேயே, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியாவின் நிலை பற்றி கருத்து கூறியிருக்கும் ராஜபக்சே, “இலங்கைக்கு அருகில் உள்ள நாடு, நட்புநாடு என்ற அடிப்படையில், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியா உணர்ந்தே இருக்கிறது. நான் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது’ என்றும் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் தமிழுணர்வு அமைப்புகளும், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று குரல் கொடுத்து வரும் நிலையில், நட்பு நாடான இந்தியா தங்கள் பக்கம்தான் நிற்கும் என்று ராஜபக்சேவால் எப்படிப் பேச முடிகிறது, அதுவும் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகையிலேயே எப்படி அதனை முன்பக்க செய்தியாக வெளியிடச் செய்ய முடிகிறது என்பதே டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்களிடையே நடைபெறும் விவாதமாகும். அவர்கள் இது குறித்து, வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசும்போது பல தகவல்கள் கிடைத்துள்ளன.
மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 4ம் திகதியன்று அமெரிக்காவின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கு முதல்நாளே (மார்ச் 3) அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும், இந்திய அதிகாரிகளிடமும் கசியத் தொடங்கின. போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்க ஐ.நா சார்பில் சுய அதிகாரமுள்ள ஓர் அமைப்பை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்பதும், இலங்கை அரசே நியமித்த எல்.எல்.ஆர்.சி எனப்படும் போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல் வாழ்வுக்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து இலங்கை அரசாங்கம் செயல்படவேண்டும் என்றும் அந்தத் தீர்மானங்கள் வரைவு செய்யப்பட்டிருப்பதாக, கடந்த ஞாயிறு அன்று கசிந்த தகவல்களின் தொடர்ச்சியாக, இவற்றுக்கு ஒத்துழைக்கவோ பொறுப்பேற்கவோ இலங்கை அரசாங்கம் தவறினால், ஈரானைப் போல இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க ஐ.நா. சபை மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கடுமையான வாசகங்கள் அந்தத் தீர்மானத்தில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள 47 நாடுகளில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய நாடுகள் உள்பட 30 நாடுகளின் ஆதரவு உறுதியாகிவிட்டது. மேலும் சில நாடுகளும் ஆதரிக்க முன்வந்துள்ளன. இந்த ஆணையத்தில் இலங்கையின் கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும் இல்லை. இந்தியா மட்டும்தான் இருக்கிறது. அதனால், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது மிக முக்கியமானது என்பதை தமிழகக் கட்சிகள் மட்டுமல்ல, உலக நாடுகளும் எதிர்பார்க்கின்றன. ஆனால், இந்தியா திங்கள் இரவு வரை (மார்ச் 4) இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் நிலையில் இல்லை.
தமிழகத்திற்கு வந்த மத்திய இணையமைச்சர் நாராயணசாமியும், இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவெடுக்கவிலை என்ற உண்மையைச் சொல்லிவிட்டு, பத்திரிகையாளர்களையும் தமிழர்களின் உணர்வையும் சமாளிக்கும் விதத்தில், “கடந்த முறை என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டதோ அதுவே இப்போதும் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
“கடந்த முறை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைத் தி.மு.க உள்ளிட்ட தமிழகக் கட்சிகளின் தொடர் அழுத்தத்தால் இந்தியா ஆதரித்தது என்றாலும், அதன் சாரத்தைக் குறைக்கும் வேலையையும் செய்தது’ என்கின்ற டெல்லி அதிகாரிகள், “இந்த முறையும் எப்படியாவது அமெரிக்கத் தீர்மானத்தின் வலிமையைக் குறைக்கும் வேலைகளில் இந்தியாவும் இலங்கையும் முழு மூச்சாக உள்ளன’ என்கிறார்கள். அவர்களிடம் மேலும் விரிவாகப் பேசினோம்.
இந்த முறை தீர்மானம் நிறை வேற்றப்படுவது உறுதி. 47 நாடுகளின் முழு ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என வல்லரசான அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஒரு மனதாக நிறைவேற்றும்போது வாக்கெடுப்புக்கு அவசியமிருக்காது. அதுதான் தனக்கு நல்லது என இந்திய அரசும் நினைக்கிறது. வாக்கெடுப்பு இல்லாத தீர்மானம் என்றால், ஆதரவா எதிர்ப்பா என்ற தனது நிலையை இந்தியா வெளிப்படுத்த வேண்டிய தில்லை. ஆனால், வாக்கெடுப்பு இல்லாத தீர்மானமாக இது நிறை வேறுவது, இலங்கையின் கையில்தான் உள்ளது. கடந்த முறை, தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கும்படி பல நாடுகளிடமும் இலங்கை லாபி செய்து தோல்வியடைந்தது. இந்த முறை, அப்படி லாபி செய்யவேண்டியதில்லை என்றும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற அனுமதிப்பதே இப்போது தன்னைச் சூழ்ந்துள்ள அழுத்தத்தை எதிர்கொள்ள சரியான வழி என்றும் இலங்கை நினைப்பதாக டெல்லி அதிகாரிகள் கூறினார்கள்.
தீர்மானம் நிறைவேறினால் இலங்கைக்குத்தானே நெருக்கடி என்று கேட்டதற்கு, “தீர்மானத்தில் உள்ள அம்சங்களை நிறை வேற்ற இலங்கை அரசு பொறுப்பேற்றுக்கொள்வதாகக் கூறும். உலக நாடுகளும் அதனை அனுமதிக்கும்.
இலங்கை, இறையாண்மையுள்ள நாடு என்பதால், தன்னுடைய பொறுப்பை நிறைவேற்ற அவகாசம் தேவை எனக் கோரும். ஐ.நா. விதிகளின்படி இதற்கும் அனுமதி கிடைக்கும். அந்த அவகாச நேரம் என்பது அநேகமாக ஒன்றரை ஆண்டுளாகக்கூட இருக்கலாம். இந்தக் கால இடைவெளியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ராஜபக்சே நினைக்கிறார். அதற்கு, இந்தியாவின் உதவியையும் நாடியிருக்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை என்பது மற்ற துறைகளைப் போல அந்தத் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளது அல்ல. ஆளுமைமிக்க அதிகாரிகளின் கண்ட்ரோலிலேயே உள்ளது. ஈழத்தமிழர்கள் பற்றி ஒருபோதும் கவலைப்படாமல் இலங்கையுடனான நட்புறவையே பெரிதாக நினைக்கும் அவர்கள் கட்சிஅரசியலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள் என்ற தகவல் தலைநகர உயர்மட்டத்திலிருந்து கசிந்தது. அண்மையில் சுப்ரமணியசாமி, இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.
தமிழர் பிரச்சினையில் இந்தி யாவுக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வார்த்தைகளை வெளியிட வேண்டாம் என்றும், ஐ.நா. தீர்மானத்தைப் பொறுத்தவரை ஒரு கட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்படும் வாய்ப்பும் உள்ளது என்றும் ராஜபக்சேவிடம் சாமி பேசியிருப்பதாகக் கூறுகிறார்கள். மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், ஐ.நா. பொதுமன்றத்திற்குச் செல்லும். அங்கு நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள சீனா, ரஷ்யா போன்றவற்றின் துணையுடன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்காமல் செய்யமுடியும் என்பதெல்லாம் ராஜபக்சேவுக்கு இந்தியா அனுப்பியுள்ள செய்திகளாம்.
"தமிழக அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்த நலன்களுக்காகப் பெயரளவில் போராட் டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கும் என்பதே இந்திய அரசின் கணிப்பு.
அவற்றை சமாதானப்படுத்தும் விதத்தில், ஒன்றிரண்டு தற்காலிக அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு விட்டு,
நீண்டகால நோக்கில் இலங்கையைக் காப்பாற்றும் முயற்சிகளை இந்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் "என்று தலைநகர அதிகாரிகள் அரசின் தற்போதைய செயல்பாடுகளை விரிவாகவே சுட்டிக்காட்டினார்கள்.
Source: Eelamboys
நன்றி:விஷ்ணுகொபிகாசொக்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------