ரப்பர் ஸ்டாம்ப் கதை.
துறைசார்ந்த அமைச்சர்கள் மேற் கொண்ட வெளிநாட்டுப் பயணங்களை விட, பிரதமர் மோடியே அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருப்பதும், அமைச்சர்களின் பயணத்திற்கு ஆனதைக் காட்டிலும், பலமடங்கு தொகைமோடி ஒருவருக்கு மட்டும் செலவிடப்பட்ட உண்மை தற்போது தெரியவந்துள்ளது.பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச் சர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுத்தொகை தகவல்அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப் பட்டுள்ளது.
அதன்மூலமே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
2014 ஏப்ரல் 1 முதல் 2018 மார்ச் வரையிலான 4 ஆண்டுகளுக்கு மட்டுமேயான இந்த கணக்கில், “பிரதமர் மோடி 84 முறைவெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்;
இந்த பயணங்களுக்காக ரூ. 2 ஆயிரத்து 12 கோடி செலவிடப்பட்டு உள்ளது;
பிரதமர் மோடி பயணம் செய்த,தனி ‘ஏர் இந்தியா’ விமானத்தின் பராமரிப்புக்கு மட்டும் ஆயிரத்து 583 கோடிசெலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் “மத்திய அமைச்சர்களின் பயணங்களுக்கான செலவினம் என்று பார்த்தால், வெறும் 224 கோடியே 30 லட்சம் ரூபாய்தான்” என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முன்னுக்கு வரும் குற்றச்சாட்டு, வெறும் செலவுக்கணக்கு மட்டுமல்ல;
அத்தனை அமைச்சர்களின் அதிகாரங் களையும் பிரதமர் மோடி தன்வசம் அபகரித்துக் கொண்டு, அவர்களை வெறும் பொம்மைகளாக நடத்தி, ஊர்சுற்றி வந்திருக்கிறார் என்பதே ஆகும்.
உபேந்திர குஷ்வாஹா |
மத்திய அமைச்சர்கள் சென்றால் போதுமானது என்ற நிகழ்ச்சிகளில் கூட ஓடோடி, பிரதமர்மோடி கலந்து கொண்டிருக்கிறார் என்பதுதான்.
ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் தலைவரான உபேந்திர குஷ்வாஹா, மத்தியபாஜக ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்து வந்தார்.
பாஜக அரசின் மதவெறி நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த இவர், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி தனது மத்தியஇணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது, தனது ராஜினாமாவுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை குஷ் வாஹா வழங்கியிருந்தார்.
அதில் முக்கியமானது, “அரசியலமைப்பில் உள்ள அமைச்சரவை செயல் பாடுகளை நீங்கள் நீக்கி விட்டீர்கள்; இங்குதற்போது இருக்கும் அமைச்சரவை உங்கள்முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டுமே உள்ளது;
நீங்கள் மற்றும் உங்கள் அலுவலகம், பாஜகதலைவர் அமித்ஷா எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தலைகளாகவே அமைச்சர்கள் நாங்கள் வைக்கப் பட்டு இருக்கிறோம்” என்பதுதான் ஆகும்.
“கடந்த நான்கரை வருடங்களாக உங்கள் அமைச்சரவையில் பணியாற்றினேன்.
ஆனால், உங்கள் தலைமையால் ஏமாற்றப்பட்டேன்.
தற்போது எனது ராஜினாமாவால், உங்களின் அமைச்சரவையில் ஒரு ரப்பர் ஸ்டாம்பு குறைந்துள்ளது;அவ்வளவுதான்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மோடியை விமர்சிப்பதற்காக கூறப்பட் டவையாகவே இந்த ராஜினாமாவுக்கான காரணங்கள் பார்க்கப்பட்டன. ஆனால், குஷ்வாஹா கூறியது முழுக்க முழுக்க உண்மைதான் என்பதை, தற்போது ஆர்டிஐ மூலமாக பெறப்பட்ட செலவுக் கணக்கு விவரங்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
பிரதமர் மோடி கடந்த நான்கரை ஆண்டுகளில் 90 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம்சென்றுள்ளார்.
பிரதமரின் இந்த பயணம் கடும் விமர்சனத்திற்கும் உள்ளான போதெல்லாம், பல்வேறு நாடுகளுடன், வெளியுறவு, பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியதுறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்தவே பிரதமர் இந்த பயணங்களை மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது.
ஆனால், பிரதமர் மோடியுடன் சம்பந்தப் பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்கள் எத்தனை முறை சென்றார்கள்? என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாகும்.
துறைசார்ந்த அமைச்சர்கள் இல்லாமல், அனைத்தையுமே பிரதமர் மோடிதான்தீர்மானித்து வந்தார். மத்திய அமைச்சர்களின் அதிகாரத்தை அவர் அபகரித்துக்கொண்டார்.
இவையே தற்போது ஆர்டிஐபுள்ளிவிவர செலவுக் கணக்குகளிலும்வெளிப்பட்டு இருக்கிறது.
மோடியின் சுற்றுலாப்பயணங்கள் அனைத்தும் வெறும் இன்பசுற்றுலாவாகத்தான் அமைந்துள்ளது.
எந்த நாட்டிலிருந்தும் இந்தியவாக்கு அந்நிய முதலீடுகள் வரவில்லை,பெருமளவு குவியவில்லை.
சொல்லப்போனால் மோடி பயணங்களுக்காக செலவிட்ட ரூ. 2 ஆயிரத்து 12 கோடியை சரிக்கட்டுமளவு கூட முதலீடு வரவில்லை.
கூறப்போனால் அமெரிக்காவிலும்,சவுதியில் பணியாற்றிய இந்தியர்கள் வேலை இழந்ததும்,விசா,கடவுச்சீட்டு போன்றவற்ரைவழங்கவதில் டிரம்ப் கட்மைகட்டியதும்தான் நடந்துள்ளது.அதை கூட டிரம்மில் நண்பர் மோடியால் சரி செய்ய இயலவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஊழல்பேர்வழி?
ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப் பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்பேர்வழி’ என்று நாங்கள் சொல்லவில்லை.
பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியசாமிதான் குற்றம் சாடியுள்ளார்.
பெங்களூருவில், கல்லூரி விழாஒன்றில், சுப்பிரமணியசாமி உரையாற்றியுள்ளார்.
அப்போது,“முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், பெங்களூரு ஐஐஎம் நிறுவன பேராசிரியருமான ஆர். வைத்தியநாதன்தான் ஆர்பிஐ ஆளுநர் பதவிக்கு பொருத்தமானவர்.
நல்ல புத்திசாலி. ஆர்எஸ்எஸ்-காரர். அவர் நம்முடைய ஆள்.
அப்படியிருக்க, ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ்நியமிக்கப்பட்டது தவறு.
சக்திகாந்த் தாஸூக்கு எதிராகநிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.
நான்இருக்கும்போது சக்திகாந்த தாஸ் பொருளாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் அவரைப் போய் தற்போது ஆளுநராகவே நியமித்துள்ளனர்.அது தவறு .
ஆடிட்டர் எஸ். குருமூர்த்தியும் ரிசர்வ் வங்கி அமைப்பில் இருக்க எந்தத் தகுதியும் வாய்ந்தவர் கிடையாது.அவரை ஆர்பிஐஇயக்குநராக்கியது மோடி செய்த மிகப் பெரிய குற்றம்” என்றும் சுப்பிரமணியசாமி
பேசியுள்ளார்.
இடையிடையே உண்மைகளை உளறிவிடுவது சுப்பிரமணியசாமியின் பலவீனம்.
====================================================
இன்று,
டிசம்பர்-25.
ஆன்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார்(1741)
பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னா பிறந்த தினம்(1876)
இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம்(1924)
சீன குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது(1947)
ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இறந்த தினம்(1977)
கீழ வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கூலியை உயர்த்திக்கேட்டதால் 44பேர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதன் நினைவுநாள்.
வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம்
காவிரியின் துணையோடு நெற்களஞ்சியமாக மாறிய தஞ்சை மாவட்டத்தில் கலை, இலக்கியம் செழித்து வளர்ந்தது.
மறுபுறத்தில் சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகளும் கோலோச்சின. நிலத்தில் இறங்கி வியர்வை சிந்தாமல், மேனிநோகாமல் உண்டு களித்தவர்கள் ஆண்டைகள் என்றும், நிலப்பிரபுக்கள் என்றும், நிலக்கிழார்கள் என்றும், பிரபுக்கள் என்றும், மடாதிபதிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
மறுபுறத்தில் உடல்மட்டுமே மூலதனமாக கொண்டு உழைத்து உழவுத்தொழிலை நடத்திய எளிய மக்கள் சாதிய நுகத்தடியால் அழுத்தப்பட்டு அடிமைகள் என்றும், பண்ணையாட்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
காலையில் கதிரவன் உதிக்கும் முன்னே வயலில் இறங்கி உழைக்கத் தொடங்கும் ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் சூரியன் மறைந்து இருட்டிய பிறகுதான் கரையேற முடியும்.
அவர்களது வாழ்க்கையும் இருட்டுக்குள்தான் அமிழ்த்தப்பட்டிருந்தது.
சாணிப்பால், சாட்டையடி போன்ற கொடுமைகள் தண்டனைகளாக அன்றாடம் வழங்கப்பட்டன.
இந்த கொடுமைகளை நிலைநிறுத்த சாதியும், மதமும் முட்டுக் கொடுத்தன.
விலங்குகளிலும் இழிவாக நடத்தப்பட்ட மக்களின் விலங்குகளை உடைத்தெறிந்த பெருமை செங்கொடி இயக்கத்திற்கு உண்டு. ஆமைகளாக ஒடுங்கிக்கிடந்தவர்கள் ஊமைகளாக தொண்டைக்குழி அடைக்கப்பட்டவர்களை அணிதிரட்டி, விடுதலைக் கொடியாம் செங்கொடியை கையில் கொடுத்து உரிமைபேச சொல்லிக்கொடுத்தது பொதுவுடைமை இயக்கம். குனிந்த முதுகுகள் நிமிர்ந்தன.
பஞ்சடைந்த கண்கள் வாழ்க்கையைப் பார்க்கத்துவங்கின. கும்பிட மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்ட கைகள் விண்ணை நோக்கி உயர்ந்தன.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆண்டைகள் வைத்த நெருப்பில் 44 மனித உடல்கள் உயிர்துடிக்க எரிந்து சாம்பலாயின.
அந்த கருகல்வாடை இன்னமும் கூட நாசிகளை துளைத்தவண்ணமே உள்ளன.
கூலிக் கேட்டதற்காக மட்டுமின்றி உயர்த்திய செங்கொடியை இறக்க மாட்டோம் என்று சொன்னதற்காகவும்தான் வெண்மணியின் கண்மணிகள் பொசுக்கப்பட்டன.
எரித்து முடித்துவிட்டால் சாம்பலைத் தவிர எதுவும் மிஞ்சாது என்றுநினைத்த ஆணவக்காரர்களின் ஆசையில் மண்விழ, வெண்மணியின் தியாகம் எழுந்துநிற்கிறது.
அந்த செஞ்ஜோதி கோடிக்கணக்கானோரின் உயிர்த் திரியில் பற்றி வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஆம். வெண்மணி தியாகிகள் வாழ்கிறார்கள்.
வரலாறு சக்கரம் போல் உருளும் என்பது உண்மைதான்.
இன்றும் கூட விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவங்களுக்கு ஆதரவாக மக்கள் தேர்ந்தெடுத்த பாஜக,அதிமுக அரசுகளே கொடுமைப்படுத்கின்றன.
நான்கு லட்சம் கோடிகளை கார்ப்பரேட் நிறுவங்களுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயிகளில் 14000கோடி கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பதால் பல விவசாயிகள் தற்கொலைகள் செய்து வருவது
இந்தியா முழுக்கவே வேதனைத் தரும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
====================================================
ஆழிப்பேரலை.
22.12.18 சனிக்கிழமை இரவு சரியாக 09.30 மணிக்கு, ஆழிப் பேரலை என்றழைக்கப்படும் சுனாமி இந்தோனேசியா தீவினை தாக்கியுள்ளது.
இந்தோனேசியாவில் இருக்கும் க்ராகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதின் விளைவாக சுனாமி ஏற்பட்ட்டுள்ளது.
சுந்தா ஸ்ட்ரைட், பண்டங்க்ளாங், செராங், மற்றும் தெற்கு லம்பூங் கடற்கரை பகுதிகளும் சுனாமியில் பெருத்த பாதிப்பினை சந்தித்துள்ளது.
இதுவரை சுமார் 281 பேர் பலியாகி இருப்பதாகவும், 843 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 28 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது . பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------