1,03,600 ஆயிரங்கோடிகள் வாரா கடன் தள்ளுபடி.

314 கடன்காரர்களுக்கு மட்டுமே ...
1,03,600 ஆயிரங்கோடிகள் வாரா கடன் தள்ளுபடி.
இந்திய  ஸ்டேட் வங்கி, 76 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
 வாராக்கடன்கள் குறித்து  தனியார் செய்தி சேனல் சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

அதில், இந்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில் இந்திய  ஸ்டேட் வங்கி சார்பில் 76 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த 220 வங்கி கணக்குகளுக்கு உரியவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த குறிப்பிட்ட காலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த  94 வங்கி கணக்குகளுக்கு உரிய 27 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவங்கிகள் மட்டுமே இவ்வளவுபெரிய தொகையை தள்ளுபடி செய்துள்ளன.
இன்னும் மிச்சம் உள்ள வங்கிகள் தள்ளுபடி செய்தவை எவ்வளவு எண்ணிப்பார்த்தால் தலை சுற்றுகிறது.இவர்களில் கல்விக்கடன்,விவசாயக்கடன் வாங்கியவர்கள் யாரும் இரார்.
அம்பானை,அதானி,மோடி,மல்லையாக்கள்தான் இருப்பார்கள் என்பது உறுதி.இல்லையெனில் தள்ளுபடியேது.?
 --------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஹுயாயிங் ளை டவ் இண்டு" 
 சீன மொழியில் வெல்கம் டூ இந்தியா என்று அர்த்தம்.
சீன அதிபர் சென்னை, மாமல்லபுரம் வருகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நாள் முதலே சென்னை நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.
இத்தகைய பரபரப்புகளுக்கு காரணமான சீன அதிபர் ஜின்பிங் அரசு முறை பயணமாக இன்று (அக்.,11)சென்னை வருகிறார்.
12,13 ஆகிய தேதிகளில் வரலாற்று சிறப்புமிக்க புராதான நகரான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

அதிபரின் வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சாலைகளை செப்பனிடுவது, சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, பூங்காக்கள் அமைப்பது என படு ஜோராக பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாமல்லபுரம் சொர்க்க பூமியாக மாறியுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவர் வந்திறங்கும் போது, மற்ற விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை கடற்படை மற்றும் விமானப்படையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் செல்லும் வழியில் இருக்க கூடிய கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் முன்னேற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகரின் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்புகளை பலப்படுத்த தமிழக அரசு 34 சிறப்பு அதிகாரிகளை நியமித்து மேற்பார்வை செய்ய 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் ஒதுக்கியுள்ளது.

 ஈஞ்சம்பாக்கம் - புதுப்பட்டினம் வரையிலான கிராமங்களில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல கூடாதென மீன் வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரையில் சம்மந்தப்பட்ட 22 கிராமங்களில் உள்ள மீனவர்கள் இந்த தடையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 கடுமையான பாதுகாப்பு கிடுக்கிப்பிடிகள் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும், ஹுயாயிங் ளை டவ் இண்டு என சீன மொழியில் அந்நாட்டு அதிபரை வெல்கம் டூ இந்தியா என வரவேற்க விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழகம் தயாராகி விட்டது.

சீன அதிபரின் பயண விவரங்கள் :- 

  இன்று (அக்டோபர்11/ 2019)
**மதியம் 02.10 மணி: சென்னை விமான நிலையம் வருகை.

**மாலை 04.00 மணி: மாமல்லபுரம் புறப்பாடு.

**மாலை 05.00 மணி: அர்ஜுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரை கோயிலை பார்வையிடுகிறார்.

**மாலை 06.00 மணி: கடற்கரை கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்சிகளை ரசிக்கிறார்.

**மாலை 06.45 மணி: பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.
நாளை (அக்டோபர் 12/ 2019)
**காலை 09.50 மணி: தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை.

**காலை 10.00: பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தை, இடம்-தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்.

**காலை 10.50: பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, இடம்-தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்.

**காலை 11.45: பிரதமர் அளிக்கும் மதிய விருந்தில் கலந்து கொள்கிறார்.

**நன்பகல் 12.45: சென்னை விமான நிலையத்துக்கு புறப்பாடு.

**மதியம் 01.30: சீனாவுக்கு மீண்டும் விமானம்.

இந்த பயணத்தை முடித்துவிட்டு இந்தியாவிலிருந்து கிளம்புகிறார் சீன அதிபர்.
அவர் கிளம்பிய பின் இந்தியாவுக்கு டச்சு அரச குடும்பத்தை சேர்ந்த இருவர் வரவிருக்கின்றனர்.

தலைநகர் புதுடெல்லியில் அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் 25 ஆவது தொழில்நுட்ப மாநாட்டுக்காக அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மேக்ஸிமா ஆகியோர் (King Willem-Alexander and Queen Maxima ) அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா வரவிருக்கின்றனர்.

இந்த மாநாட்டை இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய இருநாடுகளும் இணைந்து நடத்துகின்றன.
மேலும் அரசராக பதவியேற்றதற்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டின் துவக்க விழாவுக்கு வருகை தரும் டச்சு அரச குடும்ப விருந்தினர்கள், 5 நாட்கள் பயணமாக இந்தியா வருகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 மழை.
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் ,தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால் .
உலக பெண் குழந்தைகள் தினம்
 ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த  நீராவிப் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டது(1811)
தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)

நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)


1890 - ‘அமெரிக்கப் புரட்சியின் மகள்கள்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
விடு தலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, நாட்டுப்  பற்றை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த அமைப்பில், அமெரிக்க விடுதலைப்போரில் பங்கேற்றவர் களின் இரத்த உறவிலுள்ள பெண்கள் மட்டுமே உறுப்பின ராக முடியும். உண்மையில், ‘அமெரிக்கப் புரட்சியின் மைந்தர்கள்’ என்ற அமைப்பு ஏற்கெனவே தொடங்கப் பட்டு செயல்பட்டுக்கொண்டிருந்தது.

அமெரிக்க விடு தலைப்போரைத் தலைமையேற்று நடத்தி தளபதியும், முதல் குடியரசுத்தலைவருமான ஜார்ஜ் வாஷிங்டன் மறைவின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகள் 1889இல் தொடங்கிய போது, நாட்டுப்பற்றை வளர்க்கும் இயக்கங்கள், விடுதலைப் போரின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் அமைப்புகள் என்று ஏராளமான அமைப்புகள் தோன்றின.

அமெரிக்க விடுதலை அறிவிப்பின் நூற்றாண்டான 1876இலேயே ‘புரட்சி யின் மைந்தர்கள்’ என்ற அமைப்பு கலிஃபோர்னியாவில் தோன்றியிருந்தாலும்கூட, அது அமெரிக்கா முழுமைக்கும் பரவியிராத நிலையில், 1889இல்தான் ‘அமெரிக்கப் புரட்சி யின் மைந்தர்கள்’ என்ற அமெரிக்கா முழுமைக்குமான அமைப்பு உருவானது. ஆனால், அது பெண்களை உறுப்பினர்களாக அனுமதிக்க மறுத்ததைத் தொடந்து, ‘அப்படியானால் ஹன்னா ஆர்னெட்-டை எப்படி அங்கீகரிப்பது?’, என்று கேள்வியெழுப்பிய கட்டுரை வாஷிங்டன் போஸ்ட்-டில் வெளியானது.
உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிப்பதான உத்தரவாதத்தை ஏற்று, இங்கிலாந்துக்கு விசுவாசமாக இருக்க முயன்ற தன் கணவர் உள்ளிட்ட சிலரை, அமெரிக்கப் புரட்சிப் போருக்கு எதிராகச் செயல்பட்டால் கணவரைப் பிரிந்துவிடுவதாக எச்சரித்து, புரட்சிக்கு ஆதரவாக மாற்றியவர் ஹன்னா ஆர்னெட். இந்த விவாதத்தைத் தொடர்ந்தே, பெண்களுக்கான அமைப்பாக இது தொடங்கப்பட்டது.
‘இறை, வீடு, நாடு’ என்பதை நோக்கமாகக் குறிப்பிட்டு விடுதலை தொடர்பான அருங்காட்சியகம், நூலகம், கல்வி உதவி போன்றவற்றுடன், அமெரிக்க ராணுவத்தில் செவிலியர்கள் இல்லாத அமெரிக்க-ஸ்பானியப் போர்க்காலத்தில் செவிலியர்களை அனுப்பியதுவரை சிறப்பான பணிகளில் ஈடுபட்டாலும், தங்கள் அரங்கத்தில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தக்கூட கருப்பினத்தவர்களை அனுமதிக்காமல் இவ்வமைப்பு பாகுபாடு காட்டியது.

1952இல் அது மாறினாலும், ஒரு கருப்பினத்தவர்கூட உறுப்பினராக இல்லாமலே தொடர்ந்தது. 1976இல் பேட்ச்சிலர் என்ற பெண் 26 மாதங்கள் ஆய்வு செய்து, விடுதலைப் போரில் வீரராகப் போரிட்ட வில்லியம் ஹூட் என்பவரின் மரபில் வந்தவர் என்பதை நிரூபித்து, முதல் கருப்பின உறுப்பினராக ஆனார்.
அதன்பின், இன, மத பாகுபாடின்றி உறுப்பினர்களைக் சேர்ப்பது என்று விதிகளை மாற்றியதுடன், கருப்பினத்தவரின் குடும்பப் பின்னணிகளை ஆய்வுசெய்து, அவர்களை உறுப்பினராக்குவதை ஓர் இயக்கமாகவே மேற்கொண்ட இவ்வமைப்பு, இன்றும் அமெரிக்கர்களின் நாட்டுப்பற்றை மேம்படுத்தும் இயக்கமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
                                                                                                                                     -அறிவுக்கடல்
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இனிப்பு துளசி
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இனிப்புச்சுவை கொண்ட இனிப்பு துளசி(சீனித்துளசி) முக்கிய பங்கு வகிக்கிறது.
 இது ஆங்கிலத்தில் 'ஸ்டிவியா' என்று அழைக்கப்படுகிறது.
 இந்த மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி அல்லது சீனித்துளசி என அழைக்கப்படுகிறது.
கரும்பு சர்க்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.

அவர்கள் கரும்பு சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு துளசி இலையை பயன்படுத்தலாம்.
இது கலோரிகளை உருவாக்காத இனிப்புச்சுவை கொண்டது.
இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.

கலோரிகளை உருவாக்காது.
பக்க விளைவுகள் இல்லை.
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது.
ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நுண்ணுயிர்களை எதிர்க்கும் ஆற்றல் பெற்றுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு பண்டங்களில் பயன்படுத்தலாம்.

சீனித்துளசி இலையை தண்ணீரில் நன்றாக காய்ச்சி வடிகட்டி தேவையான அளவான 1:2 தேக்கரண்டியளவு டீ, காபியில் சேர்ந்து அருந்தினால் அசல் இனிப்புச்சுவை கிடைக்கும்.
                                                                                                                                                                   - எம்.ஞானசேகர்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்  பகவத் ஆற்றிய உரையானது ஆர்எஸ்எஸ்சுக் குள் ஊடுருவியுள்ள பாசிச சித்தாந்தத்தின் சிந்தனைத் துளிகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
‘குண்டர் கும்பல்கள்’ சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, தலித்துகள் மற்றும் மதச் சிறுபான்மையினரைக் கொல்லும் செயல்களை, “குண்டர் கும்பல் கொலைகள்” (“lynchings”) என்று சொல்லக் கூடாதாம்.
குண்டர் கும்பல்கள், கொலை கள் செய்திடும் நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு உண்டாம்.  “இத்த கைய நிகழ்வுகளை, “குண்டர் கும்பல் கொலைகள்” என்று குறிப் பிடுவது, பாரதத்தின் பாரம்பரியத்திற்கு அந்நியமானது, வேறெங்கோ உள்ளது, நம் நாட்டின், ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் புகழை இகழவேண்டுமென்ற நோக்கத்துட னும், சிறுபான்மையினர் என ‘அழைக்கப்படுகின்றவர்கள்’ மத்தியில் அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துட னும் இவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறியிருக்கிறார்.

‘கும்பல் கொலை’ என்றால் என்ன?

இந்த ஒரு வாக்கியமே, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரட்டை நாக்கு குணத்தையும், மதவெறிக் கண்ணோட்டத்தையும் அம்பலப் படுத்துகிறது.
ஒரு பக்கத்தில் கும்பல் குண்டர்கள், படுகொலை களைச் செய்து வருகிறார்கள் என்பதை மறுக்கிறார்; மறு பக்கத்தில், ‘குண்டர் கும்பல் கொலைகள்’ என்னும் சொற்றொ டர் பிராந்திய, கலாச்சார பொருள் கொண்டதல்ல என்கிறார். அந்தச் சொற்றொடரின் பொருள், “குண்டர் கும்பலின் தாக்குதல் கொலையில் முடிவதற்கு இட்டுச் செல்கிறது” என்பதாகும்.
மேலும், மோகன் பகவத் தமது பேச்சில், கும்பல் கொலை களைக் கண்டிப்பதற்காக மேற்கொள்ளப்படும் எவ்விதமான முயற்சியும் ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் அவமதிப்ப தற்கான முயற்சியாகும் என்றும் குற்றம் சுமத்துகிறார். பசுக் குண்டர்களால் சிறுபான்மை இனத்தவர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதைக்கூட அவர் ஒப்புக்கொள்ள வில்லை.
 இத்தகைய நிகழ்வுகள் ஒரு பக்கமானது அல்ல என்று கூறும் அவர், சிறுபான்மை இனத்தவரைக்கூட, சிறு பான்மையினர் என ‘அழைக்கப்படுகின்றவர்கள்’ என்று கூறு வதன்மூலம் அவர்களை அங்கீகரிக்கக்கூட அவர் மறுக்கிறார்.
குண்டர் கும்பல்கள் எண்ணற்றோரைக் கொலை செய்ததன் விளைவாகத்தான், 2018 ஜூலையில் உச்சநீதி மன்றம், “கும்பல் கூட்டத்தின் கொலைபாதக நடவடிக்கை கள்”(“horrendous acts of mobocracy”) என்று குண்டர் கும்பல்களின் கொலைகளைக் கண்டித்தது.
இதனைத்தொ டர்ந்து உச்சநீதிமன்றம் இவற்றைத் தடுப்பதற்கான நடவ டிக்கைகளையும்,  சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் வகுத்துத்தந்தது. மேலும் உச்சநீதிமன்றம், பசுப் பாது காப்புக்குழு என்ற பெயரிலும் மற்றும் பல்வேறு பெயர்களி லும் ‘குண்டர் கும்பல்கள்’ கொலைகள் செய்துவருவதைத் தடுக்கும் விதத்தில் தனியே ஒரு சட்டத்தை இயற்றுமாறும் நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.
 ‘குண்டர் கும்பல் கொலைகள்’ (mob lynchings) எனக் குறிப்பிடுவது இந்து சமூகத்தையும், நாட்டையும் அவமதிப்ப தற்கான ஒரு முயற்சி  என்று கூறும் ஆர்எஸ்எஸ் தலைவர், உண்மையில்,

 இதற்கு எதிராக நிற்பவர்களுக்கு சவால் விடுத்தி ருக்கிறார். அவருடைய கூற்றின்படி, “சில நிகழ்வுகள் திரித்து வெளியிடப்பட்டுள்ள அதே சமயத்தில், சில வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டவைகளாகும்.
” மேலும், உச்சநீதிமன்றம் கூறி யிருப்பதற்கு முரணாக அவர், இப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களே இந்நிகழ்வுகளை எதிர்கொள்ள போது மானவையாகும் என்றும் கூறுகிறார்.

இத்தகைய கண்ணோட்டம் இவர்களிடம் இருப்பதன் காரணமாகத்தான், ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரம், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த கட்டளைகளை இவர்கள் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்திருக்கின்றார்கள். மோடி அரசாங்கம், ‘குண்டர் கும்பல் கொலைகளுக்கு’ எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரவோ, இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்திடக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுத்திடவோ, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களைக் கேட்கவோ தயாரில்லை.
 மோகன் பகவத்தைப் பொறுத்தவரை, குண்டர் கும்பல் கொலை வழக்குகள் என்பவை நாட்டையும், இந்துக்களை யும் “இகழ்வதற்காக” புனையப்பட்ட சதியாகும். இத்தகைய சிதைந்த சிந்தனையோட்டத்தின் காரணமாகத்தான், குண்டர் கும்பல் கொலைகள் குறித்து 49 புகழ்பெற்ற கலை யுலகப் பிரமுகர்களும், அறிவுஜீவிகளும் பிரதமருக்கு எழுதிய கடிதம் கூட தேசத்துரோகச் செயலாகப் பார்க்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
“நாட்டின் அடையாளம், நம் அனைவரின் சமூக அடையா ளம், நாட்டின் இயற்கையான  அடையாளம் என்பது ‘பாரத் என்றால் இந்துஸ்தான், இந்து ராஷ்ட்ரம்’ என்றே சங் பரிவாரங் கள் கருதுவதாக,” ஆர்எஸ்எஸ் தலைவர் கொக்கரித்துள் ளார்.
 பாரதத்தில் உள்ள அனைவரும் இந்துக்களே என்று வலியுறுத்தும் அவர், “இந்து சமூகத்தையும் இந்துத்துவாவை யும் எவ்விதமான அடிப்படையுமற்ற அவதூறான குற்றச் சாட்டுகள் மூலமாக அவமானப்படுத்துவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன,” என்கிறார்.
மேலும் அவர் ஆர்எஸ்எஸ்சின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற சிந்தனையை, இப்போது ஒரே பாஷை, (swabasha), ஒரே மாதிரி உடை (swabhoosha), ஒரே கலாச்சா ரம் (swasanskriti) என்கிற கோஷத்தின் மூலமாகப் புதுப் பித்திருக்கிறார்.
இத்தகைய இந்துத்துவா கண்ணோட்டத்தைத் தழுவிக் கொண்ட அடிப்படையில்தான், மோகன் பகவத், இந்துத்துவா விற்கும் கார்ப்பரேட் மூலதனத்திற்கும் இடையேயான பிணைப்பையும் கையாள்கிறார். அவர், மோடி அரசாங்கம் அந்நிய மூலதனத்திற்கு அநியாயமானமுறையில் வெண்சா மரம் வீசுவதையும், தனியார்மயமாக்கலையும் சரி என ஏற்றுக் கொள்கிறார்.
 “நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்திட”, பல துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடும், பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்தலும் அவசியம் என்கிறார். இதனைக் கூறிய அடுத்த நிமிடமே தன்னிறைவு குறித்தும், சுதேசி குறித்தும் கூறி கைதட்டலும் பெறுகிறார்.
  எனினும், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, பாஜக அரசாங் கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது என்கிற உண்மையை இவை மூடிமறைத்திட வில்லை.
 நாட்டின் நிலக்கரி வளங்களைச் சுரண்டிட அந்நிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது, நாட்டின் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியையும் அந்நியரிடம் விற்றிட முன்வந்திருப்பது ஆகியவற்றை இவர்கள் எப்படி தன்னிறைவு என்று அழைக்கிறார்கள் என்பதைக் கற்பனை கூட செய்யமுடியவில்லை.

இந்துத்துவா எதேச்சதிகாரத்தின் பின்னே இருந்து கொண்டு இயக்கிடும் பிரதான உந்து சக்தியான மோகன் பகவத், மோடி அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதையும், ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தைத் தகர்த்ததையும் வானளாவப் புகழ்கிறார்.
 ஆர்எஸ் எஸ்சின் அகண்ட பாரதக் கண்ணோட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இடமில்லைதான்.
 நாட்டில் வலதுசாரி சக்திகள் ஒருமுகப்படுத்தப்பட்டி ருப்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் விளக்கியிருக்கிறார்.
 இதன் மூலம் அவர் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்களின் வாழ்வாதாரங்கள், அடிப்படை உரிமைகள் மீதான தாக்கு தல்கள் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
                                                                                                                                    -தமிழில்: ச.வீரமணி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜான்சன் & ஜான்சன்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து மற்றும் குழந்தைகளுக்கான நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

அப்படித்தான், அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் முர்ரோ என்பவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா நீதிமன்றம் விசாரித்துவந்தது.
ஜான்சன் நிறுவனத்தின் ரிஸ்பெர்டால் என்ற ஆன்டி சைக்கோடிக் மருந்தை பயன்படுத்திய இளைஞருக்கு பெண்கள் போல மார்பகங்கள் வளர்ந்துள்ளது.
 இப்படி ஒரு பக்க விளைவு இருக்கும் என்று எந்தவித எச்சரிக்கையையும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குறிப்பிடத் தவறியதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 4.83 கோடி இழப்பீடாக வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்த அபராதத் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த தவறியதை அடுத்து மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அதனை விசாரித்த பிலடெல்பியா நீதிமன்றம், இந்திய மதிப்பில் 56,000 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
 இந்நிலையில் இந்த குற்றசாட்டு உண்மையில்லை என ஜான்சன் அண்ட் ஜான்சன்கூறிவருகிறது.ஆனால் மருத்துவ ஆய்வின் முடிவிலேயே நீதிமன்றம் தீர்ப்பை எழுதியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் இதன் தயாரிப்பை உபயோகித்ததால் தனக்கு புற்று நோய் வந்ததாக அமெரிக்க பெண்மணி வழக்குத்தொடர்ந்தார்.
அதிலும் புற்றுநோய் வரக்காரனம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு தான் என ஐயத்துக்கிடமின்றி உறுதி செய்யப்பட்டதால் பல கோடி டாலர்கள் நட்ட ஈடாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வழங்கியது.

இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொள்ளை லாபத்திற்காக செய்து வந்த முறைகேடு,ஆபத்தான ரசாயனங்கள் சேர்த்தல் போன்றவற்றை தற்போது அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலும் ஆரம்பித்திருப்பது மருந்துப்பொருட்களில் தரக்கட்டுப்பாட்டை உறுதியாகக் கடை பிடிக்கும் அமெரிக்காவை அதிரவைத்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு சென்ற ஆண்டில் யாருக்கும் வழங்கப்படவில்லை.
அதனால்  இந்தாண்டு சேர்த்து இரண்டாக அறிவிக்கபப்ட்டுள்ளது .

சென்ற  2018ம் ஆண்டிற்கான நோபல் பரிசை போலந்து நாட்டை சேர்ந்த ஒல்கா டொகர்சுக்,
2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேன்ட்கே ஆகியோருக்கு வழங்கப்படுவதாக நோபல்பரிசுக்  குழு  அறிவித்துள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக மருத்துவத்துறை, இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதில் தற்போது பயன்மிகுந்த அலைபேசிக்கான லித்தியம் பேட்டரி கண்டு பிடித்த 96 வயதான குட் எனாப் என்ற அறிவியலார் உட்பட மூவருக்கு வழங்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?