சனி, 26 அக்டோபர், 2019

நுரையீரலை சுத்தம் செய்யுங்கள்

 துாதுவளை

மனிதர்களை அச்சுறுத்தும், 10 ஆரோக்கிய பிரச்னைகளை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில், காற்று மாசு, முக்கிய இடத்தில் உள்ளது.
சென்னை, டில்லி உட்பட, இந்திய நகரங்களில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், காற்று மாசு பெரிய பிரச்னையாகி விட்டது.
நாம் பின்பற்றுகிறோமோ, இல்லையோ, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி பற்றி, குறைந்த பட்சம் பேசுகிறோம், படிக்கிறோம், சொல்கிறோம்.
ஆனால், நம் உடலில், நாம் அக்கறையே செலுத்தாமல் இருக்கும் ஒரு உறுப்பு என்றால், அது நுரையீரல் மட்டும் தான்.

நுரையீரல், சுவாசப் பைகள் மாசடையும். பிராங்கைடிஸ், ஆஸ்துமா, அலர்ஜி, கேன்சர் என, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் வரும்.
காற்றில் உள்ள மாசால், சர்க்கரை நோய் வரும் எனச் சொன்னால் நம்புவீர்களா...
 ஆனால், அது உண்மை தான்.காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், சுவாசத்தின் வழியே உள்ளே சென்று, ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்கு சென்று, பக்கவாதத்தை ஏற்படுத்தும்.
இதயத்திற்கு செல்வதால், மாரடைப்பு வரும். கணையத்தின் உள்ளே சென்று, இன்சுலின் சுரப்பை பாதித்து, சர்க்கரை கோளாறை உண்டு பண்ணும்.
நிறைய மரம், செடி, கொடிகளை வளர்த்து, சுற்றுச்சூழலை பசுமையாக வைத்திருப்பது, காற்று மாசை தடுக்கும். இது, நம்மால் முடிந்த விஷயம்.

 சமையல் அறையில் இருந்து வரும் மாசால், பெண்கள் அதிகளவு, நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
காற்றோட்டத்திற்கு வசதியாக, காற்றோட்ட வசதியுள்ள, வெளிச்சம் வரக்கூடிய இடமாக, சமையல் அறை இருக்க வேண்டும்.

முடிந்தளவு, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
 ஒரே இடத்திற்கு செல்லும் போது, ஆளுக்கு ஒரு வாகனத்தில் செல்வதை விடவும், நான்கைந்து பேர் சேர்ந்து, ஒரு வாகனத்தில் செல்லலாம்.
 தேவையில்லாமல் வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மூலிகை, துாதுவளை.
இன்று, இதன் தேவையை அதிகம் உணர்கிறோம்.

நம் முன்னோர், இந்த மூலிகையை அதிகம் பயன்படுத்தி, ஆரோக்கியமான நுரையீரலுடன் வாழ்ந்து இருக்கின்றனர்.'மாதுளை வளர்த்த வீட்டில், வயிற்றில் கலங்கமில்லை... துாதுவளை வளர்த்த வீட்டில், நெஞ்சில் கலங்கமில்லை' என்ற, ஒரு பழமொழி உண்டு.
துாதுவளையை வளர்க்க முடியாவிட்டாலும், கடைகளில் கிடைக்கிறது.
வாரத்திற்கு இருமுறை, சட்னி, துவையல் என, பிடித்த மாதிரி சமைத்து சாப்பிடலாம்.
நுரையீரலை சுத்தம் செய்யும் திறன், இதற்கு அதிகம்.

 * சளி, இருமல் சரியாக...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சளி, இருமலுக்கான மிகச் சிறந்த மருந்து தூதுவளை. இதை கஷாயமாகவோ, வேறு எந்த வடிவிலோ உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு மூக்கடைப்பு, மார்புச்சளி, இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்றவை வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
தூதுவளையைக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, சூடான பாலில் தினமும் சிறிதளவு கலந்து குடித்து வர, நாள்பட்ட இருமலும் குணமாகும். சைனஸ் பிரச்னைக்கும் தூதுவளையைப் பரிந்துரைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.  இதன் இலை மற்றும் தண்டுகளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் குடித்துவர, சைனஸால் ஏற்படுகிற மூச்சுத் திணறல் சரியாகும். வைரஸ் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்களுக்கும் இதை முயற்சி செய்யலாம்.

* டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை கரைய...
இன்று டான்சில்ஸ் எனப்படுகிற தொண்டைச் சதை வளர்ச்சி இல்லாத குழந்தைகளே இல்லை. ஒரு கைப்பிடி அளவு தூதுவளையுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை தலா 10 கிராம் அளவு எடுத்து இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பாகமாக வற்றச் செய்யவும். அதில் 50 மி.லி. அளவுக்கு தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் தொண்டைச் சதை
கரையத் தொடங்கும்.

* ஆஸ்துமா அவதிகளுக்கு...
ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் தூதுவளையின் மகிமைக்கு இணையே இல்லை.  இதன் சாற்றை தேன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துவர, தீவிர ஆஸ்துமா குணமடைவதுடன், அதன் தீவிரத்தால் ஏற்படுகிற குரல் பாகுபாடு மற்றும் பசியற்ற நிலை போன்றவை சரியாகும்.

* புற்றுநோயைத் தடுக்க...
புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென் தன்மைக்கு எதிராகப் போராடும் தன்மை தூதுவளைக்கு உண்டு என்கிறார்கள். தூதுவளையை வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படுமாம். புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களும் தூதுவளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவு மீளலாம் என்கின்றன ஆய்வுகள்.

* நீரிழிவு பாதிப்புகளின் தீவிரம் தவிர்க்க...
நீரிழிவு பாதிப்புக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவின் காரணமாக, பலருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையானது நீரிழிவைக் கட்டுப்படுத்தி, செல்கள், திசுக்கள் பாதிப்பையும் தவிர்க்கிறது. நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு தூதுவளைச் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, எடையும் முறையாகப் பராமரிக்கப்படுகிறது.

* கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு...

தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் Anti hepatotoxicity தன்மைகள் கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றன. இதன் பூக்கள் மற்றும் விதைகள் நுரையீரல் புற்றுநோய்க்கான மருந்துத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

* வயிற்றுக் கோளாறுகளை விரட்ட...
தூதுவளைக் கீரையை மிளகு சேர்த்து அரைக்கவும்.  அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் வாயுக் கோளாறு மற்றும் சூடு காரணமாக ஏற்படும் வயிற்றுவலி பறந்து போகும்.

* ரத்த ஓட்டத்தை சீராக்க..
.
சித்த மருத்துவத்தின் கூற்றின் படி,  தூதுவளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தம் உறைவதைத் தடுக்கவும், ரத்தத்தை விருத்தி
செய்யவும் கூடிய குணங்கள் உண்டு என்கிறார்கள்.

* காதுக் கோளாறுகள் நீங்கவும், நினைவாற்றலுக்கும்...
காதுவலி மற்றும் கேட்கும் திறன் பிரச்னைகளுக்கு தூதுவளையின் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தூதுவளையின் பூக்களுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் சக்தி உண்டு.

* மலச்சிக்கல் குணமாக...

தூதுவளைச் செடியில் சிவப்பு நிறத்தில் பழங்கள் வரும். அவற்றைக் காய வைத்துப் பொடித்து உள்ளுக்கு எடுத்து வர, மலச்சிக்கல் சரியாவதுடன், அசிடிட்டி எனப்படுகிற பிரச்னையும் குணமாகும். அதே பொடிக்கு வாதநோய் பாதிப்புகளை சரியாக்கும் குணமும் உண்டாம்.

* கால்சியம் பற்றாக்குறையைப் போக்க...

கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதால் பற்கள், எலும்புகள் பலமிழக்கின்றன. கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளத் தயங்குபவர்கள், தூதுவளையை 48 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். தூதுவளைக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர, கால்சியம் பற்றாக்குறை நீங்கும்.


தூதுவளைக் கீரையில் இடையிடையே குட்டிக்குட்டி முட்கள் இருக்கும்.
 கீரையைப் பறித்ததும் கவனமாக அந்த முட்களை நீக்கிவிட்டு, தண்ணீரில் அலசி சமையலுக்குப் பயன்படுத்தலாம். குழம்பில் சேர்க்கலாம். துவையலாகச் செய்யலாம்.
அடை, தோசை போன்றவற்றில் சேர்க்கலாம். தூதுவளை அதிகம் கிடைக்கிற போது வாங்கி சுத்தப்படுத்தி, காய வைத்துப் பொடித்துக் கொண்டு, தேவைப்படும்போது உபயோகிக்கலாம். சூப் தயாரிக்க இந்த தூதுவளை பொடி பயன்படும்.

தூதுவளைச் செடியின் காய்களை மோரில் ஊற வைத்து வற்றல் போலக் காய வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
குளிர் மற்றும் மழைக்காலங்களில் இந்த வற்றலை குழம்பில் சேர்க்கலாம். எண்ணெயில் வறுத்துப் பொடித்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அந்த நாட்களில் ஏற்படக்கூடிய சுவாசப் பிரச்னைகள் சரியாகும்.

நீரிழிவு உள்ளவர்கள் தினமும் குறிப்பிட்ட அளவு தூதுவளைச் சாறு எடுத்துக்  கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, எடையும்  முறையாகப் பராமரிக்கப்படுகிறது.

தூதுவளையின் பூக்கள் மற்றும் விதைகள் நுரையீரல் புற்றுநோய்க்கான மருந்துத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தூதுவளை புளிக் குழம்பு

என்னென்ன தேவை?

தூதுவளைக் கீரை - 1 கப்
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் -10
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
சிவப்பு மிளகாய் -2
வெந்தயம் - அரை டீஸ்பூன்
வெந்தயத் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

தூதுவளைக் கீரையை முள் நீக்கி, ஆய்ந்து கழுவி, நறுக்கி வைக்கவும். புளியில் அரை கப் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து வைக்கவும். வெங்காயம், பூண்டை தோல் நீக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெந்தயம் சேர்க்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். பிறகு தூதுவளைக் கீரை சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் விடவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். குறைந்த தணலில் குழம்பு நன்கு கொதிக்கட்டும். கொதித்து கெட்டியானதும், வெந்தயத்தூள் சேர்த்து இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

தூதுவளை துவையல்

என்னென்ன தேவை?

தூதுவளைக் கீரை - 2 கப்,
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
புளி - கொட்டைப் பாக்களவு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி வைக்கவும். முதலில் சிறிதளவு எண்ணெயில் கீரையை வதக்கவும். பிறகு அதே கடாயில் உளுந்தையும் மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும். கீரை, உளுந்து, மிளகாயுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசா தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். சாதத்துடன் பரிமாறலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

தூதுவளைப் பொடி

என்னென்ன தேவை?

காய வைத்த தூதுவளைக் கீரை - 1 கப்,
பச்சைப் பயறு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம்- 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 2 சிட்டிகை,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
உளுந்து- 25 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயை சூடாக்கி, முதலில் முழு பச்சைப் பயறை வறுக்கவும். பிறகு உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இவற்றை ஆற வைத்து காய்ந்த தூதுவளைக் கீரை, உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும்.

* இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
* வெறும் தூதுவளைப் பொடியை பொடித்து வைத்துக் கொண்டு சூடான பாலில் சேர்த்துக் குடிக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 கீழடி
அதிர வைக்கும் ஐந்தாம் கட்ட அகழாய்வு .
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 

கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே நான்கு கட்ட அகழாய்வுகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன.

இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வின் இறுதிக் கட்டத்தில் சுட்டமண்ணால் ஆன வடிகால் அமைப்பு கிடைத்திருப்பதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட மாநிலத் தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

 

YD6/3 என்ற ஆய்வுக் குழியில் பணிகள் நடந்தபோது 47 சென்டிமீட்டர் ஆழத்தில் பானையின் விளிம்பு போன்ற அமைப்பு தென்பட்டது.

அதனை கவனமாக தொடர்ந்து
வெளிப்படுத்தியபோது, சிவப்பு வண்ணத்தில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் கிடைத்தன.
 இந்தக் குழாய்கள் 60 சென்டி மீட்டர் நீளமும் 20 சென்டி மீட்டர் அகலமும் கொண்டிருந்தன.

இந்தக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் விளிம்புகளைப் போல ஐந்து வளையங்கள் உள்ளன.
இந்த இரு குழாய்களும் ஒன்றோடு ஒன்று நன்கு பொருத்தப்பட்டிருப்பதால், நீரைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல இவை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அகழாய்வாளர்கள் கருதுகின்றனர்.


இந்த சுடுமண் குழாய்க்குக் கீழே, பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் காணப்பட்டன.

ஆகவே இந்த இரண்டு குழாய்ப் பாதைகளும் வெவ்வேறுவிதமான பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

பீப்பாய் வடிவிலான குழாயில் வடிகட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
 இந்தக் குழாயின் இறுதிப் பகுதி இரண்டடுக்குப் பானை ஒன்றில் சேர்கிறது.
ஆகவே இந்தப் பீப்பாய் வடிவிலான குழாய் மூலம் அந்தப் பானையில் திரவப் பொருளைச் சேகரித்திருக்கலாம் என கள ஆய்வாளர்கள் கருதுகின்றன.

இதே குழியின் மற்றொரு பகுதியில் திறந்த நிலையில் நீர் செல்லும் வகையிலான செங்கலால் கட்டப்பட்ட வடிகால் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது 5.8 மீட்டர் நீளமும் 1.6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
இந்த வடிகால் அமைப்பின் மீது ஓடுகள் பாவப்பட்டிருந்தன.

இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஏற்கனவே நடத்திய இரண்டாம் கட்ட அகழாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானத்தினால் ஆன வடிகால் அமைப்பின் தொடர்ச்சியே இந்த வடிகால் அமைப்பாகும்.

இதே இடத்தில் தொடர்ந்து நடந்த அகழாய்வுப் பணியில் 52 சென்டி மீட்டர் ஆழத்தில், கூரை ஓடுகள் செங்குத்தாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டன.
 மேலும் ஒரு செங்கல் கட்டடமும் வெளிப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்

நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 சைலன்ட் ஹார்ட் அட்டாக்...

படபடப்பாக இருக்கும் சோர்வாகவும் காணப்படுவார்கள்.
நூற்றில் 95 பேருக்கு இப்படி ஏற்படலாம்.
ஆனால், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டோர், குடிப்பழக்கம் உள்ளவர்கள், 80 வயதைத் தாண்டியவர்கள், தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள் இந்த வலியை உணராமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மனிதத்தை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மாரடைப்பும் இருக்கிறது.
உலகம் முழுவதும் இதய பாதிப்பால் உயிரிழப்போரின் சதவிகிதம் அதிகரித்தபடியே உள்ளது. பெரும்பான்மையான மரணங்கள் முதல் மாரடைப்பிலேயே நிகழ்ந்துவிடுகின்றன என்பதுதான் சோகம். மாரடைப்பு குறித்த சந்தேகங்கள் பலருக்கு உண்டு. `நெஞ்சுவலிக்கும் மாரடைப்புக்கும் வேறுபாடு என்ன' என்பது, அவற்றில் முக்கியமானது.

 கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இதயநோய் நிபுணராக சேவையாற்றிவரும் டாக்டர் வி.சொக்கலிங்கம், மேற்கண்ட கேள்விக்கு பதிலளிக்கிறார்.
 உலகத்தில் உயிர்க்கொல்லி நோய்கள் மூன்றுதான்.
 மாரடைப்பு,
புற்றுநோய்
மற்றும் விபத்துகள்.
 இவை மூன்றும்தான் உலக மக்களைக் கொன்றுகொண்டிருக்கின்றன.
 உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இவை மூன்றுமே வாழ்க்கைமுறை நோய்கள். எதிர்மறை எண்ணங்களாலும் எதிர்மறை வாழ்க்கைமுறையாலும் ஏற்படக்கூடியவை. ஒவ்வொருவரும் மனம் வைத்தால் இந்த மூன்றிலிருந்தும் விடைபெற முடியும்.
 நெஞ்சுவலிக்கும் மாரடைப்புக்கும் என்னங்க வித்தியாசம்?'
 என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.
மார்பில் அடைப்பு போன்று இருப்பதால்தான் அதற்கு மாரடைப்பு என்று பெயர். நெஞ்சுக்குள் இருப்பது இதயம். அந்த இதயத்தில் ஏற்படும் நோயால் வருவதே நெஞ்சுவலி.
 உடலின் இடது பாகத்தில் எலும்புக்கூட்டின் உள்ளே உள்ளது இதயம்.
எப்போதெல்லாம் இதயத் தசைகளுக்குச் செல்ல வேண்டிய பிராண வாயு குறைகிறதோ அதுதான் மாரடைப்பு.

இது ஏற்படும்போது அதிக எடையுள்ள கல்லைத் தூக்கி வைத்ததுபோல இருக்கும்.
இந்த வலி இடது தோள்பட்டை வரையிலும் சில நேரங்களில் இடது சுண்டுவிரல் வரையிலும் நீடிக்கும். சிலருக்கு வலது தோள்பட்டை, கழுத்து, முதுகு, வயிறு போன்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்பு உண்டு.

இந்த அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படும்போது தசைவலி, மூட்டுவலி, வாயுத் தொந்தரவு, செரிமானமின்மை என்று நினைத்து விட்டுவிட்டால் அது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்.
மேற்கண்ட எந்த அறிகுறியாக இருந்தாலும் அதை மருத்துவரிடம் எடுத்துக்கூறும்போது அவர்தான் அது மாரடைப்பா அல்லது வேறு வகையான பிரச்னையா என்பதைக் கண்டறிந்து சொல்வார்.
மரு ,வி.சொக்கலிங்கம்

மாரடைப்போ, நெஞ்சுவலியோ ஒருவருக்கு ஏற்படும்போது வியர்வை முக்கியமான அறிகுறியாக இருக்கும். படபடப்பாக இருக்கும், சோர்வாகவும் காணப்படுவார்கள்.
 நூற்றில் 95 பேருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டோர், குடிப்பழக்கம் உள்ளவர்கள், 80 வயதைத் தாண்டியவர்கள், தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள் இந்த வலியை உணராமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அவர்களுக்கு 5% 'சைலன்ட் ஹார்ட் அட்டாக் (Silent heart attack)' வர வாய்ப்பு உண்டு.
சர்க்கரைநோயோடு புகை, மது பழக்கம் உள்ளவராக இருந்து வயது 80 ஆக இருந்தால் அவருக்கு 40% 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட வாய்ப்பு அதிகம்.
 இப்படியானவர்கள் தொடர்ச்சியாக இசிஜி (Electrocardiography) எடுத்துப் பார்ப்பது அவசியம்!” என்கிறார் வி.சொக்கலிங்கம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
  ISRO-ல் உள்ள காலிப்பணியிடங்கள்

Indian Space Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி


இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.---------------------------------------------------------------------------------------------------------------------
  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1)
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
  இரா.எழிலன்@ezhilan148102 @ezhilan1481021 Oct 24
"என்ன துரை! தி.மு.க 39நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியப்போது செத்தப் பிணம் மாதிரி பொத்திக்கிட்டு படுத்திருந்தவன்லாம், இப்ப 'ஸ்டாலின் ஸ்தம்பித்தாரா? எடப்பாடி எழுகிறாரா?'னு ரைமிங்ல கத்திக்கிட்டே அம்மணமா ஓடுறானுகளா?" "ஆமாங்க தலைவரே!"
😂