பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தும்...,

"லாபவரியை குறைத்துவிட்டால் பெருமுதலாளிகள் கூடுதல் முதலீடுகள் செய்வார்கள் என்பது பெருமுதலாளி வர்க்கம் அரசிடம் இருந்து கூடுதல் சலுகைகளைப்பெற தொடர்ந்து முன்வைத்து வரும் கதையாடல். நாட்டின் சந்தையிலோ, பன்னாட்டுச் சந்தைகளிலோ, கிராக்கி அதிகரிக்காமல் தனியார் முதலீடுகள் அதிகரிப்பு என்பது நடக்காது."

பொருளாதார மந்தநிலை பற்றி 2019 ஆகஸ்ட் இறுதியில் தீக்கதிரில் விளக்கமாக இரு கட்டுரைகள் எழுதியி ருந்தோம். ஒரு மாதம் கடந்தபின்னும் நெருக்கடியை எதிர்கொள்வதில் முன்னேற்றம் இல்லை என்பது மட்டுமல்ல; மந்த நிலை தீவிரமடைந்து வருகிறது.
  2019 ஜூலை முதல் செப்டம்பர் முடிய மூன்று மாதங்க ளில் நாட்டின் எட்டு முக்கியமான துறைகளின் உற்பத்தி சுருங்கியுள்ளது. ஆட்டோ துறைகளிலும் பல்வேறு நுகர்வுசார் துறைகளிலும் மந்தநிலை தொடர்கிறது.
 வேளாண்குடிகளின் துயரம் தொடர்கிறது.

வேலையின்மை நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் அதிகரித்து வருகிறது. தொடரும் மந்தநிலையின் பிரதிபலிப்பாக ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரிவருமானம் மேலும் சரிந்துள்ளது.
ஆனால் மத்திய பாஜக அரசு திகைத்து நிற்கிறதே தவிர தீர்வைத்தேடவில்லை. வேறு பல தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பி மக்களை திசை திருப்புகிறது.
 இந்தி மொழி தான் இந்தியாவின் ஒற்றை மொழியாகவேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறு கிறார்.
 “பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் தோற்றுவிட்டது” என்று கூறி பாஜக அரசின்  சர்வாதிகார நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துகிறார்.
2021க்குள் சிறுபான்மை மக்களற்ற இந்தியா உருவாகும் என்று இன்னொரு பாஜக தலைவர் பேசுகிறார். மகாத்மா காந்தியைக்கொன்ற கோட்சேயின் வாரிசுகள் கோட்சேக்கும் கோவில் கட்டுகின்றனர், காந்தி ஜெயந்தியிலும் பொய்களையும் புரட்டுகளையும் பேசி வருகின்றனர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      நெருக்கடியை எதிர்கொள்ள அரசின் ஒரே தாரக மந்திரமாக இருப்பது என்ன?  இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் அந்நிய நிதிமுதலாளிகளுக்கும் வரிச்சலுகைகள் வழங்குவதன் மூலம் தான் நிலைமையை சரி செய்ய முடியும் என்பது அரசின் நிலை.
அதனால் தான் மந்தநிலை தொடர்பான தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நிய நிதி மூலதனத்தின் மீது ஜூலை பட்ஜெட்டில் போடப்பட்டிருந்த வரியின் மீதான சர்சார்ஜை முழுமையாக ரத்து செய்தார். வேறு சில சலுகைகளையும் அறிவித்தார். இந்திய ஆட்டோ மொபைல்துறை பெருமுதலாளிகளுக்கும் சில சலுகைகளை அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதாக, ரூ.50,000 கோடி அளவிற்கு சலுகைகளை அறிவித்தார். அடுத்து ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகட்டும் துறைகளுக்கு ரூ. 20,000 கோடி கடன் மற்றும் வட்டிசார் சலுகைகளை அமைச்சர் அறிவித்தார். (இதில் அரசின் பங்கு பாதி என்றும் மறுபாதி “மற்றவர்கள்” மூலம் பெறப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.)                                                                                                                                                                                                            
இந்த சலுகைகள் ‘மீட்சியை’ உறுதிப்படுத்தும் என்று அரசு கூறிய போதிலும், பெருமுதலாளிகளின் தொடர்ந்த அழுத்தத்திற்கு அடிபணிந்து தனது அடுத்த நடவடிக்கை யாக பெருமுதலாளிகளுக்கு பெரும் வரிச்சலுகைகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
                                                                                                    இதன்படி, தற்பொழுது பெரும்பாலான கம்பெனிகளுக்கு 25% ஆகவும் முதலாளி களின் மொத்த லாபத்தில் பெரும்பங்கு கொண்ட மிகப்பெரிய கம்பெனிகளுக்கு 30% ஆகவும் உள்ள லாபவரி இனி அனைத்துக்கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் 22% ஆக இருக்கும். அதுமட்டுமல்ல. இந்த ஆண்டு அக்டோபர் 1 அல்லது அதன்பின் துவக்கப்படும் ஆலைத் துறை கம்பெனி களுக்கு லாபவரி 15% ஆக குறைக்கப்படும். மேற்கூறிய சலுகைகளால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரிவருமான இழப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டவுடன் “சென்செக்ஸ்” என்று அழைக்கப்படும் மும்பை பங்குச்சந்தை குறியீடு கிட்டத்தட்ட இரண்டாயிரம் புள்ளிகள் உயர்ந்தது. அப்படியானால், மந்தநிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லை என்பதுதான் உறுதியான பதில்.

அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து மறுநாள் பங்கு சந்தையில் ஏற்றம் நிகழ்ந்த போதிலும் அடுத்த சில நாட்களில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து சரிந்தும் வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மந்தநிலை தொடர்வ தையும் பல்வேறு துறைகளில் கிராக்கி சரிந்துவருவதையும் முதலீடுகள் ஸ்தம்பித்து நிற்பதையும் நாடு கண்டு வருகிறது.
இதில் வியப்பு ஏதும் இல்லை. லாபவரியை குறைத்துவிட்டால் பெருமுதலாளிகள் கூடுதல் முதலீடு கள் செய்வார்கள் என்பது பெருமுதலாளி வர்க்கம் அரசிடம் இருந்து கூடுதல் சலுகைகளைப்பெற தொடர்ந்து முன்வைத்து வரும் கதையாடல். நாட்டின் சந்தையிலோ, பன்னாட்டு சந்தைகளிலோ, கிராக்கி அதிகரிக்காமல் தனியார் முதலீடுகள் அதிகரிப்பு என்பது நடக்காது. தற்சமயம், கிராக்கி சரிவால், உள்ள உற்பத்தி கொள்ளளவில் 20 முதல் 40 சதம் பயன்படாமல் உற்பத்தி சுருக்கப்பட்டுள்ள நிலையில்,  வரிச்சலுகை முதலீடுகளை ஊக்குவிக்காது. எதிர்காலத்தில், அரசை நிர்ப்பந்தித்து பெறப்பட்ட சலுகைகளை கிராக்கி மீண்ட பிறகு பெருமுதலாளிகள் பயன்படுத்திக் கொள் வார்கள்.
ஆனால் இப்பொழுது முதலீடுகளை செய்ய மாட்டார்கள். அரசே முன்வந்து முதலீடுகளையும் மக்கள் நல செலவுகளையும் மேற்கொண்டால் தான் கிராக்கியை நோக்கி பொருளாதாரம் பயணிக்க முடியும். ஆனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அடித்துப்பறித்த 1.76 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகைகளிலும் இதர நடவடிக்கைகள் மூலமும் பெருமுதலாளிகளுக்கும் அந்நிய நிதி மூல தனத்திற்கும் அரசு தாரை வார்த்துள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                       என்றாலும் அரசு கிராக்கியை மீட்கவும், வேளாண் துறையில் மகசூலை உயர்த்தவும், வேலையின்மை பிரச்ச னையை எதிர்கொள்ளவும் முதலீடுகளையும் இதர செலவு களையும் கட்டாயம் அதிகரிக்க வேண்டும்.
ஆனால், அப்படி செலவு செய்தால் அரசின் வரவு செலவு இடைவெளி அதிக மாகிவிடும். இது நிகழ்ந்தால், அந்நிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சத்தில் மத்திய அரசு செலவுசெய்ய மறுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளின் தாராளமய கொள்கைகளும் மோடி அரசின் முற்றிலும் விப ரீதமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மக்கள் விரோத ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையும் இன்று இந்திய பொரு ளாதாரத்தை படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, விவசாயத்தையும் ஊரக பொருளாதாரத்தையும் பாதுகாக்கவும், தொழில்துறையில் வளர்ச்சியை சாதிக்க வும், வேலை வாய்ப்பை பெருக்கவும் தேவையான பொதுத் துறை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு மூடியும் விற்றும் வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.
மந்தநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கை என்ற பெயரில் நிலக்கரித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதித்திருப்பது “பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தைச் சாடிய பாரதியின் வரிகளைத்தான் நமக்கு நினைவுக்கு கொண்டுவருகிறது.                                                                                                                                          
தொழிலாளர் சட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு சாதக மாக, தொழிலாளிகளுக்கு விரோதமாக மாற்றப்பட்டுள்ளன. இப்பொழுது இந்திய, அந்நிய பெருமுதலாளிகள் கோரி வருவது நிலம் கையகப்படுத்துவது, விவசாயம் ஆகிய துறைகளிலும் தாராளமய கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்படவேண்டும் என்பதுதான்.
எனவே அடுத்த சுற்றில், விவசாயிகளின் மீதான தாக்குதல் தீவிரமடைய உள்ளது. ஏழை சிறு குறு விவசாயிகளும் நிலமற்ற கூலி தொழிலாளர்களும் கோரிவந்த நில சீர்திருத்தம் கைவிடப் பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ளன. பன்னாட்டு இந்நாட்டு பெரும் கம்பெனிகளுக்கு சாதகமாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட உள்ளது.
                                                                                                                                                          இவை எதுவும் மந்தநிலையை தீர்க்க உதவாது. மாறாக, மந்தநிலை மேலும் தீவிரமடையும்.  இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட இறக்குமதி சரக்குகளின் விலைகளை உயர்த்தி வருகிறது.

பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

மறுபுறம் அரசு உணவு, எரிபொருள் மற்றும் உர மானி யங்களை வெட்டி வருகிறது. கிராக்கி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் விவசாயிகளது விளைபொருட்களின் விலைகள் சரிந்து வருகின்றன.
கொள்முதல் செய்து கைகொடுக்க அரசு மறுக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வெண்ணெய், உழைப்பாளி மக்களுக்கு சுண்ணாம்பு என்ற நிலை தொடர்கிறது. பெரும் பொருளாதார சரிவு மக்களை அச்சுறுத்துகிறது.                      
ரூபாய் மதிப்பு வரும் நாட்களில், மாதங்களில் மேலும் சரியும் என்ற எதிர்பார்ப்புகள் அந்நிய நிதி மூலதனம் இந்தி யாவிற்கு தொடர்ந்து வருவதற்கு ஊக்கம் அளிக்கவில்லை.
 இவ்வாறு அந்நிய நிதி மூலதனத்தின் உள்வருகை குறைவதும் வெளியேறுவது கூடுவதும் நாட்டின் அந்நியச்செலாவணி பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்த உள்ளது.
உலகப்பொருளாதாரத்தில் மந்தநிலை பரவிவரும் சூழலில் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பும் இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 இனி ஒரே தேர்வு நீட் தேர்வு.
'அடுத்தாண்டு முதல் 'எய்ம்ஸ், ஜிப்மர்' மருத்துவக் கல்லுாரிகளிலும் 'நீட்' நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' 
 என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 'எய்ம்ஸ்' எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தால் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிகளில் 1500 இடங்களும்; ஜிப்மரில் 200 இடங்களும் உள்ளன.
இந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு தனியாக நுழைவுத் தேர்வை நடத்துவது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதாகவும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
மற்ற மருத்துவக் கல்லுாரிகளைப் போல் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான ஹர்ஷ்வர்தன் டில்லியில் நேற்று கூறியதாவது:

"அடுத்தாண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி களுக்கும் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்த கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கும் பொதுவானதாகவே இருக்கும். தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒரே தரத்தில் அமைவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
மேலும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி 'நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்' எனப்படும் 'நெக்ஸ்ட்' தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமம் பெற முடியும்;

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கு அனுமதி பெற முடியும். வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களும் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும். நெக்ஸ்ட் தேர்வுக்கான வழிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் இறுதி செய்யும்.
இந்த நடைமுறையால் மாணவர்கள் சேர்க்கைக்காக பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளை நாடுவதும் பல்வேறு கவுன்சிலில் நடைமுறைகளை பின்பற்றுவதும் ஒழிக்கப்படும்.

உடல் ரீதியான அலைச்சல் மற்றும் நிதி சார்ந்த பிரச்னைகளில் இருந்து மாணவர்களும் அவர்களது பெற்றோரும் விடுபடுவதற்கு இது பெரிதும் உதவும். மருத்துவ மேற்படிப்பை படிப்பதற்கான 'ரேங்க்'கை பெறுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நெக்ஸ்ட் தேர்வை எழுதலாம்.
தேசிய மருத்துவ ஆணையத்துக்கான உறுப்பினர்கள் அக்., 14ல் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
 நீட் க்கான பட முடிவு


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்

உலக  ஆசிரியர்கள் தினம்

இந்தோனேஷிய ராணுவ தினம்
இந்தியாவின்ஆன்மிக சிந்தனையாளர் ராமலிங்க வள்ளலார் பிறந்த தினம்(1823)

 பிரெஞ்சுப் புரட்சி
789 பிரெஞ் சுப் புரட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெர் செய்ல்ஸ் நோக்கிய பெண்கள் பேரணி தொடங்கியது. பாரிஸ்  நகரின் சந்தைப் பகுதிகளில் ரொட்டி தட்டுப்பாடு, ரொட்டியின் மிகஅதிக விலை ஆகிய வற்றுக்கெதிராக, போராடத்தொடங்கிய பெண்கள், அரசர் பதினாறாம் லூயி-யின் இருப்பிடமான வெர்செய்ல்ஸ் அரண்மனைக்குப் பேரணியாகச்சென்றனர்.
பசியாலும், நம்பிக்கையின்மையாலும் துவண்டிருந்த மக்கள், ரொட்டியைத் தேடித்தான் முதலில் போராடத் தொடங்கினார்கள். ஹோட்டல்-டி-வில்லி திறந்துவிடப்பட்டு, போதுமான ரொட்டி அவர்களுக்குக் கிடைத்தாலும்கூட, அடுத்த வேளைக்கு போதுமான அளவு ரொட்டி கிடைக்குமா, அதுவும் நியாயமான விலையில் என்ற நம்பிக்கையின்மையே பெரும் போராட்டத்தை உருவாக்கியது.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த கீழ்த்தட்டு மக்களை, ‘உயர்குடியினரின் சதி’ என்ற வதந்தியும் அச்சத்திற்குள்ளாக்கியிருந்தது. விவ சாயம் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலையை நிர்ணயித்து, சந்தைப்படுத்த, கில்ட் என்னும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரான்சில் இருந்தன. விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக என்று கூறிக்கொண்டு, 1773இல் இந்த கில்ட் முறை  ரத்து செய்யப்பட்டு, திறந்த சந்தை முறை அறிமுகப்படுத்தப் பட்டது.
 இதனால், உணவு தானியங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்ததை எதிர்த்து, 1775 ஏப்ரல்-மே-யில் நடைபெற்ற கலகங்கள் ‘மாவுப் போர்’ என்று அழைக்கப்படுகின்றன.
அவற்றால், 1775இல் கில்ட் முறை  மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், புதிய கில்ட் முறையை காவல்துறையால் சரியாக நிர்வகிக்க முடிய வில்லை. அக்காலத்தில், பிரான்சின் காவல்துறை, பாது காப்புப் பணிகளை மட்டுமின்றி, தெருக் கூட்டுதலி லிருந்து, அரசுத் துறைகளின் நிர்வாகம்வரை கவனித்துக் கொண்டிருந்தது!
இவற்றால் ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு, கீழ்த்தட்டு மக்களை ஒடுக்குவதற்காக, உயர்குடியினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக நம்பப்பட்டதே ‘உயர்குடியினரின் சதி’ என்று குறிப்பிடப்படுகிறது. சந்தைகளில் திரண்ட பெண்களுடன், ஆண்களும் சேர்ந்து கொள்ள, ஆயிரக்கணக்கானோர் நகரின் ஆயுதக்கிடங்கி லிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி, பீரங்கிகளை இழுத்துக் கொண்டு, 6 மணி நேரம் நடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவி லிருந்த வெர்செய்ல்ஸ் அரண்மனையை  அடைந்தனர்.
 வெர்செய்ல்ஸ் அரண்மனை தான் அரசரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக இருந்தாலும், பாரீசில் இருந்தால்தான் மக்களின் பிரச்சனைகளை அறிந்து செயல்பட முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
 அரண்மனை யின் பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டு, மறுநாள் உள்ளே நுழைந்த மக்கள், அரசர், அரசி, அவையோரைச் சூழ்ந்து, பாரீசின் டூய்லரிஸ் அரண்மனைக்கு அழைத்து (இழுத்து?!) வந்துவிட்டனர்! இந்நிகழ்வே, அரசியல்சட்ட முடி யாட்சிக்கு எதிரான அரசரின் நிலையைக் கைவிடச்செய்தது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்"
"ஜெய்ஸ்ரீராம் என கூக்குரல் எழுப்பவில்லை யென்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்"
 என்று பிரதமர் மோடிக்கு கலை ஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட 49 பேர் கடிதம் எழுதினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி எந்த பதிலும் கூறவில்லை.
 ஆனால் பாஜகவை நடத்தும் ஆர்எஸ்எஸ் பரிவாரம் தன்னுடைய வழக்கமான பாணியில் பதில் கூறியது.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த கவுசிக் சென் என்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

கேரளத்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் அச்சு றுத்தப்பட்டார். அவரை பாகிஸ்தானுக்கு போகு மாறு இந்துத்துவா கூட்டம் மிரட்டியது.  மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக வகையறா கூலிப்படை போல சிலரை தயார் செய்து இந்துத்துவா வெறியர்களுக்கு ஆதரவு தெரி விப்பதுபோல் கடிதம் எழுத வைத்தது.

பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இயக்குநர் மணிரத்தினம், தயாரிப்பாளர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.
  தற்போது அடூர் கோபாலகிருஷ்ணன், மணி ரத்தினம், ராமச்சந்திர குகா, அபர்ணா சென், கவுசிக் சென் உள்ளிட்ட 49 பேர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 ஜெய்ஸ்ரீராம் என்ற பெயரில் படுகொலை செய்பவர்களை கட்டுப்படுத்தக் கோரிய ‘குற்றத் திற்காக பிரிவினைவாத போக்குகளுக்கு ஆதர வளித்ததாகவும், தேச துரோகம், பொது தொல்லை, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் பொது அமைதியை குலைத்தல்’ உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 தலித் மற்றும் சிறுபான்மை மக்களை தாக்கி படுகொலை செய்வதை பிரதமர் என்கிற முறை யிலும், பாஜகவின் தலைவர் என்ற முறையிலும் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு கூறுவது எப்படி பிரிவினை சக்திகளை ஆதரிப்பது ஆகும்.  அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகை யில் இவர்கள் மீது வழக்குப்பதிய ஒரு நீதிபதி உத்தரவிட்டிருப்பது விசித்திரமாக உள்ளது.

வழக் கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் பெரும்பகுதி மக்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறை குறித்து செய்தி வெளி யிடுவது கூட தடுக்கப்படுகிறது.

ராமரின் பெயரை கூறிக்கொண்டு ஒரு காட்டுமிராண்டி கும்பல் வன்முறையில் ஈடுபடும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கில்லாதவர்கள் அதை சுட்டிக் காட்டுபவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடர்வது ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்க்கும் செயலாகும்.
இதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவித்தாக வேண்டும்.குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த குரலை எழுப்பாவிட்டால் மற்ற மதத்தைக்சார்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும்,தாக்கபப்டுவதும் தேசப்பற்று,ஆளும் பாஜக,ஆர்.எஸ்.எஸ்.சை  சார்ந்த அக்கொலைக்காரர்களை அடக்கி வைக்கக் கூறினால் தேசவிரோதமா?

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற சொலவடை உண்மையாகிவிடும் போல் தெரிகிறது!
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
 நினைவில் கொள்ளுங்கள்.!
அக்.12,13,19 மற்றும் 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு
நவ.17 - என்.டி.ஏ., தேர்வு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7,8,14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
டிச., 7, 8, 14, 15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச., 28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு

 660 பயிற்சியாளர்.
 தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் டிகிரி (218),

 டிப்ளமோ (442) படித்தவர்களுக்கான 660 'அப்ரென்டீஸ்' காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கும்பகோணம் 108, 225
 விழுப்புரம் 100, 40
நாகர்கோவில் 10, 27
நெல்லையில் 10, 150
பணிகள் உள்ளன.

 தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், 'அப்ரென்டீஸ்' விதிகளின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி: டிகிரி, டிப்ளமோ 'அப்ரென்டீஸ்'

காலியிடங்கள்: 660

வயது: 'அப்ரென்டீஸ்' விதிகள் படி

கட்டணம்: இல்லை

கடைசி தேதி:21.10.2019

தேர்வு முறை: இறுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு

விபரங்களுக்கு: www.tnstc.in/ www.boat-srp.com
 உச்சநீதிமன்றத்தில், உதவியாளர்
இந்திய நீதித்துறையில் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றத்தில், உதவியாளர் பிரிவில் 58 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: சீனியர் தனி உதவியாளர் பிரிவில் 35 இடங்களும், தனி உதவியாளர் பிரிவில் 23 இடங்களும் உள்ளன.

வயது: சீனியர் தனி உதவியாளர் பிரிவுக்கு 32 வயதுக்குள்ளும், தனி உதவியாளர் பிரிவில் 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சீனியர் தனி உதவியாளர் பதவிக்கு, பட்டப்படிப்புடன், சுருக்கெழுத்து நிமிடத்துக்கு 110 வார்த்தைகள் (ஆங்கிலம்) எழுத தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவுடன் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். ௨ ஆண்டுகள், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபராக பணியாற்றியிருக்க வேண்டும்.
தனி உதவியாளர் பதவிக்கு பட்டப்படிப்பு, சுருக்கெழுத்து நிமிடத்துக்கு 100 வார்த்தை (ஆங்கிலம்) எழுத தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவுடன் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு, சுருக்கெழுத்து டெஸ்ட், டைப்பிங் டெஸ்ட், நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம் ரூ. 300 (எஸ்.சி., / எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 150).

கடைசி தேதி : 24.10.2019

https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf

 மத்திய அரசில் பல்வேறு இன்ஜினியரிங் பிரிவுகளில் காலியாக 495 
 இடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலியிடங்கள்: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேசன் ஆகிய நான்கு இன்ஜினியரிங் பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய ரயில்வே, நில அளவை துறை, பாதுகாப்பு துறை, மத்திய நீர் துறை, மின்சாரம் போன்ற பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியமர்த்தப்படுவர்.

வயது: 2020 ஜன., 1 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி , மெயின் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 200.

கடைசி தேதி
: 15.10.2019

விபரங்களுக்கு: www.upsc.gov.in/sites/default/files/Notice-ESEP-2020-Engl_0.pdf
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?