பதஞ்சலி சோன்பப்டி
தரமற்றது.
ஆறுமாதம் சிறை!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி உணவு குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. இதையடுத்து, பித்தோராகர் பகுதியில் உள்ள கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, சோன் பப்டி உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், சோன் பப்டியின் உணவு மாதிரிகள் ஆய்வுக்காக மாநில உணவு மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. பின்னர் மாநில உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ஆய்வகத்தில் இருந்து, சோன் பப்டியானது தரமற்றதாக இருப்பதாக காட்டும் அறிக்கை கிடைத்தது.
இச்சம்பவத்தையடுத்து, உணவுப் பொருளில் தரம் குறித்து, தொழிலதிபர் லீலா தர் பதக், விநியோகஸ்தர் அஜய் ஜோஷி, பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேலாளர் உட்பட மூவருக்கும் சோன் பப்டி உணவுப் பரிசோதனையில் தவறியதற்காக ஆறு மாத சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து பித்தோராகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006, பிரிவின் கீழ், பதக், ஜோஷி மற்றும் குமார் ஆகியோருக்கு முறையே ஆறு மாத சிறைத் தண்டனையும் ரூ. 5,000, ரூ. 10,000 மற்றும் ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பானது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006ஐ மீறியதின் அடிப்படையில் இருந்து வழங்கப்பட்டது என்றும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் உணவு பொருளின் தயாரிப்பு தரமற்றது என தெளிவாக நிரூபித்துள்ளன என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கூறினார்.