சுயமரியாதைக் குடியரசு
சுயமரியாதைக் குடியரசு
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் -–- 2.5.1925 அன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழைத் தொடங்கினார். அதுதான் சுயமரியாதை இயக்கத்தின் போர்வாளாக இருந்தது என்பது மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கமாகவும் இருந்தது.
“இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டுவந்து போட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் அழகும் பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘சுயமரியாதை’ என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது” -– என்று சொன்னார் தந்தை பெரியார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த காலத்திலேயே அவர் தொடங்கநினைத்த இயக்கத்துக்கு ‘சுயமரியாதை இயக்கம்’ என்று பெயர் சூட்டிக் கொண்டார் தந்தை பெரியார்.
சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்ப ‘குடிஅரசு’ என்ற இதழைத் தொடங்கினார். தந்தை பெரியாரும், அவரது நண்பர் கருங்கல்பாளையம் தங்கப்பெருமாளும் சேர்ந்து தொடங்கிய இதழ் இது. திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும் முகப்பில் தாங்கி அந்த இதழ் வெளியானது. தமிழர் –- திராவிடர் அனைவரையும் ஒன்றுசேர்க்கவும், ஒருமுகப்படுத்தவும், ஒருமுனைப்படுத்தவும், ஒட்டு மொத்தமாக முன்னேற்றவும் இந்த இதழை பெரியார் தொடங்கினார். ‘பட்டியலினச் சமூகத்தவர் அமைப்புகளாக இருந்தால் இதழ் பாதி விலைக்குத் தரப்படும்’ என்று அறிவித்திருந்தார் தந்தை பெரியார்.
“அனைத்தையும் தைரியமாக பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே இந்த இதழின் நோக்கம்” என்றார். இதழைத் தொடங்கிவைத்தவர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்.
“மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கிவளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து – அனைத்து மனிதரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும்.
சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். உண்மை நெறியைப் பற்றியே ஒழுகுவோம். அன்பு நெறியே நமக்கு ஆதாரம்” –- என்று ‘குடிஅரசு’ இதழ் தனது நோக்கத்தைச் சொன்னது.
அன்புக்குத் தடையாக, அறிவுக்குத் தடையாக எதெல்லாம் இருந்ததோ அவை அனைத்தையும் தனது ‘குடிஅரசு’ இதழ்தாள் கொண்டு –- தடி கொண்டு அடித்தார் பெரியார். ‘குடிஅரசு’ இதழ் பரவிய ஊரெங்கும் சுயமரியாதை -– சமதர்மக் காற்று வீசியது.
அதுவே இந்த தமிழ்ச் சமுதாயத்தை திராவிட பூமியாக மாற்றியது. ‘குடிஅரசு’ பாதையில் பல நூறு இதழ்கள் முளைத்தன. அவையும் சேர்ந்து திராவிடப் பூங்காவாக தமிழ்நாட்டை வளர்த்தன.இன்றைக்கு ‘இது திராவிட மண், பெரியார் மண்’ என்று பேச அடித்தளம் அமைத்தது ‘குடிஅரசு’ இதழ்தான். ‘குடிஅரசு’ இதழின் துணையாசிரியராக தலைவர் கலைஞர் இருந்து பணியாற்றினார்.
அத்தகைய பெருமைமிகு இதழ் அது. ஈரோட்டில் தங்கி இருந்த காலத்தில் தினமும் இரவில் பெரியார் அவர்கள், கலைஞருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிய தோழர்களுக்கும் வகுப்பெடுத்த வரலாற்றை பல்வேறு மேடைகளில் தலைவர் கலைஞர் அவர்கள் விவரித்துள்ளார்கள்.
‘தந்தை பெரியாரையும் ‘குடிஅரசு’ இதழையும் பற்றிப் பேசினால் எனக்கு நேரம் போவதே தெரியாது’ என்பார் தலைவர் கலைஞர். ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தலைவர் கலைஞர்.
பெரியாரோடு எல்லாம் முடிந்துபோகும் என்று நினைத்தவர்கள் தலையில் மண்ணைப் போட்டு, தமிழ் மண் காத்து வரும் இயக்கமாக திராவிடர் கழகத்தை நடத்தி வருகிறார் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ‘விடுதலை’ இதழ், விரிந்த ‘குடிஅரசு’ ஆக வலம் வந்து கொண்டிருக்கிறது.
1925 -– 1949 காலக்கட்ட ‘குடிஅரசு’ இதழை 39 பாகங்களாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர் கி.வீரமணி.
சுயமரியாதை இயக்கம் –- நீதிக்கட்சி –- திராவிடர் கழகம் என்பதன் நீட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைய தினம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது கழகம்.
இன்றைய ஆட்சிக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பெயர் சூட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த சுயமரியாதை திராவிடக் குடியரசு ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதை தனது இலக்காக அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
இதுதானே குடியாட்சிப் பண்பின் இலக்கணம் ஆகும்.
பேரறிஞர் அண்ணா –- தமிழினத் தலைவர் கலைஞர் –- திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் ஆகிய மூவரும் இணைந்து இத்தகைய சுயமரியாதைக் குடியரசு ஆட்சியை தமிழ் மண்ணில் உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள்.
இது மட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ என்பது இந்தியா முழுக்கப் பரவிவிட்டது, வரவேற்கப்படுகிறது, எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகநீதித் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாமல் எந்தக் காங்கிரஸில் இருந்து தந்தை பெரியார் வெளியேறினாரோ, அந்த காங்கிரஸ் கட்சி இன்று சமூகநீதியைக் காப்பது பற்றியே அகில இந்தியா முழுமைக்கும் பரப்புரை செய்துவருகிறது. ராகுல் காந்தியின் உரைகள் இதனை மையம் கொண்டே உள்ளன.
இதனை எதிர்கொள்ள முடியாத பா.ஜ.க.வும், சமூகநீதிக்கு ஆதரவாளர்கள்போல வேஷம் போட்டு வருகிறது. ‘இடஒதுக்கீட்டை நீக்க மாட்டோம்’ என்று மாநிலம் மாநிலமாகப் போய் மோடியும் அமித்ஷாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
‘சாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும்’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னே சொல்லி இருக்கிறார்.
அய்யாவின் குரல் அகில இந்தியக் குரலாக மட்டுமல்ல, அனைவரின் குரலாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. ‘சமூகநீதி பேசாமல் அரசியல் நடத்த முடியாது’ என்பதை உருவாக்கியதுதான் பெரியாரின் வெற்றி!
‘நிலமெல்லாம் அவர் நடந்த தாரை; வாழும் ஊரெல்லாம் அவர் மூச்சின் காற்று’ –- என்று எழுதினார் முனைவர் வா.செ.குழந்தைசாமி. அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம்.
நூற்றாண்டு காணும் ‘குடி அரசு’வை ‘முரசொலி’ வாழ்த்துகிறது.
முரசொலித்து வாழ்த்துகிறது. ‘சம்பிரதாயமான’ வாழ்த்து அல்ல இது. சாதனை செய்த ‘குடிஅரசு’க்கான நன்றி வாழ்த்து.
நன்றி:-முரசொலி.