சமதர்மக் கட்சி
சுயமரியாதை இயக்கம் உருவாக்கப்பட்ட போது அதன் கிளையாகத் தென்னிந்திய சமதர்மக் கட்சி என ஒன்று தொடங்கப்பட இருப்பதை பிரிட்டிஷ் அரசு விரும்பவில்லை.
அரசு அதற்குரிய ஆணையைப் பிறப்பிக்க இருக்கிறது என்கிற செய்திகள் பரவின. சுயமரியாதை இயக்கமும் தடை செய்யப்பட்டுவிடும் என்பது உறுதிப்பட தெரியவந்தது.
அரசு ஆணை வெளியிடப் படுவதற்கு முன்பாக அரசின் நிலையைப் பெரியாரிடம் சர் ஏ.டி. பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார். அதனை ஏற்று சுயமரியாதை இயக்கக் கொள்கையை மட்டும் பரப்புரை செய்வது என்றும் தென்னிந்திய சமதர்மக் கட்சித் தொடங்குவதைக் கைவிடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து பெரியார் 1934 இல் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
இதே காலகட்டத்தில் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் வாலிப மாநாட்டில் பெரியாரை முதன் முதலாக அறிஞர் அண்ணா சந்தித்தார்.
1935 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தமிழ் எழுத்துகளில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.
1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒருவர் தம்மை மதத்தின் பெயரால் இன்ன மதம் என்று கூறுவதை விரும்பாமல் சுயமரியாதை இயக்கம் ‘பகுத்தறிவாளர்’ என்று கூறுமாறு பரப்புரைச் செய்தது.
இதே சமயம் இந்து மகா சபை இந்துக்களை ஜெயினர், பௌத்தர், சீக்கியர், ஆரிய சமாஜிகள், பிரம்ம சமாஜிகள் என்று குறிப்பிடுவதாகக்கூறி ஆட்சேபணை செய்தது.
1931 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின் போது சாதி விவரங்களை மக்களிடமிருந்து கோரப்படவில்லை.
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் ஆற்றிய பணிகளின் விளைவாகத் திராவிட தேசியம் உருவாகி வளர்ந்து வளரலாயிற்று, அதே சமயம் சுயமரியாதை இயக்கத்தின் வழிகாட்டுதலால் நீதிக்கட்சி மிக பலம் வாய்ந்த பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக முற்றிலும் மாறிவிட்டு இருந்தது.
சுயமரியாதை இயக்கத்தின் உச்சக்கட்டத்தின் போது ஆர்.கே.சண்முகம், ‘சுயமரியாதை இயக்கம் கடவுளை மறுக்கிற, பார்ப்பனர்களை எதிர்க்கிற இயக்கமல்ல, ஆனால் அது வினாவை எழுப்பி அறைகூவலைச் சந்திக்கிற இயக்கம்.
சுயமரியாதைக்காரர்கள் இந்து சமூகத்தின் மய்யப் புள்ளியாகவும் முக்கியமாகவும் இருக்கிற சாதி அமைப்பையே எதிர்க்கின்றனர். இந்து மதம் எல்லார்க்கும் அன்பு காட்டுகிற ஆதரவு அளிக்கிற மதமாகவே இருக்க வேண்டும்’ (மெட்ராஸ் மெயில் / 13.05.1930) என்று பேசினார். ஆனால் இதையும் தாண்டித்தான் தென்னிந்திய சமதர்மக் கட்சி அமைக்க சுயமரியாதை இயக்கம் வளர்ந்தது.
இருப்பினும் சுயமரியாதை இயக்கம் ஓர் அரசியல் கட்சியாக உருவம் பெற்று கைவிட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று என்பதை மேலே பார்த்தோம்.
நீதிக்கட்சி சைமன் கமிஷனின் பரிந்துரைகளின்படி புதிய அரசியல் சீர்த்திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தும் தேர்தலுக்காகக் காத்து இருந்தது. நீதிக்கட்சியின் ஆட்சி 1937 ஜூலை வரை நீடித்தது.
தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் அமைச்சரவைகள் நீடித்துக் கொண்டே இருந்தன.
1937 பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. மிக காலங் கழித்து பதவியை ஏற்றுக் கொண்டது. இராஜாஜி சென்னை மாகாண பிரதம மந்திரியானார். (அப்போதைய சட்டம் அப்படிக் கூறுகிறது)
1925 முதல் 1937 வரை சுயமரியாதை இயக்கத்தின் பணியைப் பற்றி சாராம்சமாகப் பார்க்கிறபோது கீழ்க்காணும் விதத்தில் எடுத்துரைக்கலாம்.
(1) முதல் நான்கு ஆண்டுகளில் மூடநம்பிக்கைகளை யும் சநாதன பழக்க வழக்கங்களையும் எதிர்க்கும் இயக்கமாக இருந்தது.
(2) செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டிற்குப் பிறகு (1929) இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. அது முதல் சாதியத்தையும் மதத்தையும் சுயமரியாதை இயக்கம் மிகக் கடுமையாக எதிர்த்தது.
(3) சுயமரியாதை இயக்கம் 1932 லிருந்து பொருளாதார திட்டங்கள், சோசலிசக் கொள்கைகள், கம்யூனிச ஆதரவு நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாகப் பணியாற்றுகிறது.
கம்யூனிச பரப்புரைக்கு அரசு தடை விதிக்கவே, சுயமரியாதை பரப்புரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.
(4) பெரியாரின் அரசியல் திட்டத்தின்படி 1935 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை இயக்கம் முழுமையாக நீதிக்கட்சியை ஆதரித்தது.
நீதிக்கட்சிக்காக 1937–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்காகச் சுயமரியாதை இயக்கம் பரப்புரைகளைச் செய்தது. நீதிக்கட்சித் தலைவர்களின் ஒற்றுமையின்மையால் மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.
பிரதமர் இராஜாஜி இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்தார். சுயமரியாதை இயக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
இந்திப் போராட்டம் காரணமாகப் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கிறபோதே பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் நீதிக்கட்சியையும், சுயமரியாதை இயக்கத்தையும் இணைந்து நடத்தும் பணியினைப் பெரியார் ஏற்றார். 1940–ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தி, பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கியதை கவர்னர் இரத்து செய்தார்.
இந்திப் போராட்டத்தில் நடராசன், -தாலமுத்து ஆகிய இருவரை இயக்கம் பலி கொடுக்க வேண்டியதாயிற்று.இந்தி எதிர்ப்புப் போராட்டம் திராவிடத் தமிழ்த் தேசிய உணர்ச்சியை சென்னை மாகாண மக்களுக்கு ஊட்டியது. தனி நாடு கோரிக்கைக்கு வழி வகுத்தது.
சுயமரியாதை இயக்கம் அதன் பரப்புரைப் பணியை இழக்க வேண்டியதாயிற்று. நீதிக்கட்சியின் அரசியல் போக்கையும் சேர்த்து கவனித்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு பெரியாருக்கு வாய்த்தது.
சரியாகச் சொல்வதானால் அவருக்கு விருப்பமான ‘சுயமரியாதை’ப் பணியை அவரால் செய்ய முடியவில்லை. இதை அவர் வருத்தத்துடன் பதிவு செய்து இருக்கிறார். 1939 ஆம் ஆண்டு செப்,2 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
போரின் நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கிய போது வல்லரசு நாடுகள் காலனி நாடுகளுக்கு சுதந்திரத்தை வழங்குவது என்பது தீர்மானமாயிற்று. இதனால் இந்தியாவெங்கும் கட்சிகள் தம்தம் கோரிக்கைகளுக்காக விழிப்படைந்தன.
சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் சேர்ந்து இயங்கத் தொடங்கியதற்கு முன்பாகவே ‘தமிழ்நாடு
தமிழருக்கே’ கோரிக்கை முழக்கமாக முன் வைக்கப்பட்டது.
அது பின்னர் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றங்கண்டது. 1940, முதல் திராவிடநாடு கோரிக்கையை இரு இயக்கங்களும் இணைந்து முன்வைத்தன. 1942 மார்ச்சில் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் குழுவினர் இந்தியா வந்தபோது பெரியார் குழுவினர், கிரிப்சைச் சந்தித்து திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினர்.
உலகப்போர் மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்த இந்தக் காலக்கட்டத்தில் 1941-–1943 அக்டோர் வரை குடிஅரசு நிறுத்தப்பட்டுவிட்டது. விடுதலை நாளேடு ‘யுத்த பிரச்சாரத்திற்காக’ அரசுக்கு வழங்கப்பட்டு விட்டது.
அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ மட்டுமே சுயமரியாதை இயக்கத்திற்கும் நீதிக்கட்சிக்கும் வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டு இருந்தது. சில ஆதரவு இயக்க ஏடுகள் துணை நின்றன. நீதிக்கட்சியின் சில மாவட்டங்களில் மாநாடுகள் நடைபெற்றன.
சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி ஆகியவை இணைந்த நிலையில் ‘திராவிடர் கழகம்’ எனும் பெயர் மாற்றம் பெற இருப்பதை அம்மாநாடுகளின் தீர்மானங்கள் சுட்டிக்காட்
டின.
உலகப் போர் செய்திகளை அறிஞர் அண்ணா தமது கட்டுரைகளின் வழி மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டினார்.
பெரியார் காங்கிரசிலிருந்த போதே இராமாயணத்தைப் பற்றி விமர்சனம் செய்து பேசியவர்.
பின்னர் சுயமரியாதைக்காரராக மநுஸ்மிருதியை எரித்தவர். இதன் தொடர்ச்சியாக 1943ஆம் ஆண்டு பெரியபுராணம், கம்ப இராமாயணம் போன்ற நூல்களை எரிக்க வேண்டும் எனப்பேசி இயக்கம் நடத்தினார்.
இது அறிஞர்களிடையே அதிர்ச்சியையும் சர்ச்சையையும் தோற்றுவித்தது.
இதே ஆண்டு மார்ச்சில் கம்ப இராமாயணம் குறித்து முதல் சொற்போர் அறிஞர் அண்ணாவுக்கும் இரா.பி. சேதுப்பிள்ளைக்கும் நடைபெற்றது. இது சென்னையில் நடந்தது.இரண்டாவதாக, சேலத்தில் அறிஞர் அண்ணாவுக்கும் நாவலர் சோமசுந்தர பாரதிக்கும் சொற்போர் நிகழ்ந்தது. இந்நிகழ்வுகள் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டன.
நீதிக்கட்சியை ஆங்கிலேய அரசு ஒரு முக்கியக் கட்சியாக இக் கட்டத்தில் கருதவில்லை என்பதையும் தனி நாட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பிரிட்டிஷார் நடவடிக்கைகள் இல்லை என்பதையும் பெரியார் சுட்டிக் காட்டி 1943 அக்டோபர் மாதம் குடி அரசில் எழுதினார்.
நவம்பரில் அறிஞர் அண்ணாவின் முதல் நாடகமான சந்திரோதயம் அரங்கேறியது. நாடகத்தைப் பாராட்டி குடிஅரசில் பெரியார் தலையங்கத்தில் அண்ணாவைப் பாராட்டி எழுதியிருந்தார்.
டிசம்பர் இதழ்களில் கம்ப இராமாயண பாத்திரங்கள் பற்றி தொடர்ந்து எழுதினார். அவை ஜனவரியில் முடிவுற்றது. இவைபோல பின்னர் இராமாயண பாத்திரங்கள் எனும் நூல்களாக விற்பனை ஆயின. இன்னமும் விற்பனையில் கிடைக்கின்றன.
1944 ஆண்டில் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றம் சேலம் மாநாட்டில் நிகழ்ந்தது. மாநாட்டில் நடந்த நிகழ்வுகளை அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ பதிவு செய்து இருக்கிறது.
குடிஅரசிலும் இன்னும் விரிவாக திராவிடர் கழகம் பெயர் மாற்ற நிகழ்வுகளைப் படித்து அறியலாம்.
சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் திராவிடர் கழகமாகிவிட்டது. அதில் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளும் பிரிட்டிஷ் அரசின் நேரடி பார்வையின் கீழான திராவிட நாடு கோரிக்கையும் முக்கியக் கொள்கைகளாக விளங்கின.
பெரியார் தலைவராகவும் அறிஞர் அண்ணா பொதுச்செயலாள ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன் பிறகு சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1944 நவம்பர் 1ஆம் தேதி கிருஷ்ணன் நாடக சபையாரின் இழந்த காதல் நாடகத்தில் கலந்து கொண்டு என்.எஸ். கிருஷ்ணனைப் பற்றி பெரியார் பாராட்டிப் பேசினார்.
நவம்பரில் சி.என்.இலட்சுமிகாந்தம் என்பவன் சென்னை வேப்பேரியில் கொலை செய்யப் பட்டான்.
இவன் ‘இந்துநேசன்’ எனும் மஞ்சள் ஏட்டின் ஆசிரியராக இருந்தான்.
அரசியல் தலைவர்கள், வணிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் பற்றிய அவதூறுகளைச் செய்தியாக வெளியிட்டு வந்தான்.
இவன் கொலைக்கு காரணமானவர்களாகக் கருதப்பட்டு நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.கே.தியாகராச பாகவதரும் கருதப்பட்டனர்.
அதனால் சிறையில் அடைக்கப்பட்டனர். மிகுந்த பரபரப்பான கொலை வழக்காக அது பேசப்பட்டது. பிறகு வழக்கு நடந்து ‘பிரிவி கவுன்சில்’ வரை சென்று பின்னர் உயர்நீதி மன்றத்தால் 1947இல் நிரபராதிகள் என்று அவர்கள் விடுதலை ஆனார்கள்.
இவர்களின் விடுதலைக்குப் பெரியாரும், அறிஞர் அண்ணாவும் பெரிதும் பாடுபட்டார்கள்.
இரண்டு பேரும் தமிழர்கள் குற்றம் செய்யாதவர்கள். கிருஷ்ணன் திரைப்படங்களில் இயக்கப் பரப்புரையை முதன் முதலில் செய்தவர். ஆகிய இக்காரணங்களுக்காக அவர்களின் விடுதலைக்காக இயக்கமும் தலைவர்களும் பாடுபட வேண்டியதாயிற்று.
திராவிடர் கழகம் சுயமரியாதைக் கொள்கைகளை அப்படியே வரித்துக் கொண்டது.
அதன் அடிப்படையில் வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தைத் தொடர்ந்து காத்து வந்தது. தனிநாட்டுக் கொள்கை முழக்கமாகிப் பின் 1940 முதல் அது முக்கியக் கொள்கை ஆயிற்று. பரப்புரையில் மேடைப் பேச்சுகளோடு பாடல்களைப் புனைந்து பாடுவோர் தோன்றினர். மேடை நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் 1930 களிலேயே தனது சிறுகதைகளில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி எழுதினார். திரைப்படங்களில் நம் கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன.
புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் திரைப்படத்துறையில் முதன் முதலில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். திராவிடர் கழகத்தினர் 1946 முதல் திரைப்படத்துறையிலும் நுழையலாயினர்.
திராவிடர் கழகமானவுடன் அமைப்புப் பணிகளில் மிகவும் கவனம் கொள்ள வேண்டியதாயிற்று. உறுப்பினர் சேர்ப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம் பற்றிய செய்திகள் இயக்க ஏடுகளில் இடம் பெற்றன.
ஊர்தோறும் அமைப்புகள் உருவாகி பலமாக்கப்பட்டு வந்தது. 1945 ஆம் ஆண்டு திராவிடர் கழக முதல் மாநில மாநாட்டில் விதிமுறைகள் கழகச் சட்டத்திட்டங்கள் படிக்கப்பட்டன. 1945ஆம் ஆண்டு உலகப் போர் முடிவுக்கு வந்தது. இந்திய விடுதலை பாகிஸ்தான் விடுதலை பற்றிய பேச்சுகளே நிகழ்ந்து வந்தன.
திராவிட இயக்கத்தை பிரிட்டிஷார் கண்டு கொள்ளவே இல்லை. இது குறித்து பெரியார் நிரம்ப எழுதி இருக்கிறார். திராவிடர் கழகம் உருவான ஓர் ஆண்டிற்குள் பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் கீழ்க்காணும் பிரச்சினைகளில் முரண்பாடுகள் தோன்றலாயின.
(1) அறிஞர் அண்ணா, 1945லேயே அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டும் என்பதை அறியாத கிளர்ச்சிக்காரர்” என்று பெரியாரைப் பற்றி எழுதினார்.
(2) 1946இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு நிதி வழங்கிய விழாவில் பெரியார் கலந்து கொள்ளவில்லை.
(3) கருஞ்சட்டை அணிவதிலே பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கருத்து மாறுபாடு.
(4) அறிஞர் அண்ணா கருஞ்சட்டை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
(5) 1947 சுதந்திரநாள் பற்றிய மதிப்பீட்டில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஒத்த கருத்து இல்லை.
-க.திருநாவுக்கரசு.