அப்படி என்ன செய்துவிட்டார்
மாமேதை காரல் மார்க்ஸின் 206 ஆவது பிறந்த தினம் இன்று.
அப்படி என்ன செய்துவிட்டார் காரல் மார்க்ஸ்?
எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான் என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியபோது, அவருக்கு வயது 30.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகும் அந்த இளைஞர் எழுதிய இந்த வார்த்தைகள் வரலாற்றில் தெள்ளத் தெளிவாக உறுதிபட தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
சமுதாயத்தில் வர்க்கங்கள் இருப்பதை முதலில் சொன்னது நான் அல்ல; ஆனால் இந்த வர்க்கங்களுக்கு இடையே இடைவிடாமல், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நடைபெற்று வரக்கூடிய இந்தப் போராட்டம்தான் சமுதாயத்தை முழுமையாக மாற்றி அமைக்கும், வரலாற்றின் உந்து சக்தியாக இருக்கிறது என்று கூறினார்.
வரலாற்றை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் அறிவியல் வெளிச்சம் பாய்ச்சியவர் காரல் மார்க்ஸ் தான்! அதே கம்யூனிஸ்ட் அறிக்கையில், முதலாளித்துவ சமுதாயம் முந்தைய சமுதாயங்களில் இருந்து மாறுபட்டு இருக்கவில்லை. மாறாக இந்த சமுதாயம், முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற இரு பெரும் பகை முகாம்களாக, வர்க்கப் போராட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது என்று கூறினார்.
இன்றைக்கு சர்வதேச நிதி மூலதனம் ஆதிக்கத்தின் கீழ் முதலாளித்துவ வர்க்கங்கள் ஒருபுறமும், உலக உழைப்பாளி மக்கள் மறுபுறமும் என்று மார்க்ஸ் சொன்னபடி முரண்பட்டு நிற்பதை நாம் இப்போது காண முடிகிறது.
காரல் மார்க்ஸ் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புரட்சிக்காரர்.
தத்துவவாதிகள் உலகத்தை வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் முன் உள்ள பணி, இந்த உலகத்தை மாற்றி அமைப்பது தான் என்று கூறினார். மார்க்சிய அடிப்படையில் உலகத்தை புரிந்து கொள்வது மட்டுமல்ல, சுரண்டலற்ற சமுதாயமாக இதை மாற்றி அமைக்கும் பணியை நாம் செய்ய வேண்டும்.
1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்ய புரட்சியின் மூலம் மாமேதை லெனின் தலைமையில் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதைத்தான் செயல்படுத்திக் காட்டியது. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் போக்கை நிர்ணயித்ததில் சோவியத் சோசலிஸ்ட் புரட்சியே முதன்மையான பங்கு வகித்தது.
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரல் மார்க்ஸ் நிகரற்ற முறையில் முதலாளித்துவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிப் போக்கை முன்னறிந்து கொண்டாலும் கூட, இந்த 21ஆம் நூற்றாண்டு, சமூக வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்டமான அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையில் என்ன விதமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சியர்கள், சோஷலிஸ்ட்கள் மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனையாளர்களும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனினும் முதலாளித்துவ அடிப்படை விதியாக இருக்கக்கூடிய சுரண்டல் என்பது, பசி, பட்டினி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு போர்கள், லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்குவது ஆகிய பிரச்சனைகளை உலகு தழுவிய அளவில் தீவிரப்படுத்தி உள்ளது.
முதலாளித்துவத்தின் பேராசை, கட்டுப்பாடற்ற சுரண்டல் ஆகியவை புவி வெப்பமயம் என்பதை ஒட்டுமொத்த பூமியின் உயிர் வாழ்வை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
முதலாளித்துவச் சுரண்டலை ஒழிக்காமல், முதலாளித்துவ சமுதாய அமைப்பை மாற்றி அமைக்காமல், சோசலிச சமுதாய அமைப்பை உருவாக்கும் போராட்டத்தை நடத்தாமல், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உலக உழைப்பாளி மக்களை அணிதிரட்டாமல் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகளில், தென்அமெரிக்க நாடுகளில், ஆப்பிரிக்கா கண்டத்தில், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராடி வருகின்றனர். முதலாளித்துவ அமைப்பு நீடிக்கும் வரை அதற்கு உள்ளிருந்தே தீர்வை தேடுவது ஒருபோதும் விடையைத் தராது! தீர்வை அடைய முடியாது!
மார்க்ஸின் வழியில் முதலாளித்துவத்திற்கும் அப்பால் வரலாற்றுப் போக்கின் பாடங்களை உள்வாங்கிக் கொண்டு, செயல்படும் போது தான் உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
இந்த உலகையும் பாதுகாக்க முடியும். காரல் மார்க்ஸ் மனிதகுல வாழ்வின் சாரத்தை மட்டுமல்ல, உன்னதமான மனித குல விடுதலை என்ற லட்சியத்தை முன்வைத்தவர். விடுதலையின் உண்மையான, அடிப்படையான அர்த்தத்தை உருவாக்கியவர்.
அதற்கான வழிமுறையையும் உருவாக்கியவர். எண்ணற்ற சாத்தியப்பாடுகள் கொண்ட சிந்தனைப் புரட்சியை உருவாக்கி, அதை நடைமுறையுடன் இணைத்த மகத்தான அந்த மனிதரின் வாழ்க்கையை கற்றுணர்வோம்!
மார்க்சியம் வெல்க!!
வே.தூயவன்(தீக்கதிர்)