2ஜி ஊழல்: சோனியா இழுக்கு
2ஜி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை
இழுத்துவிடப்பட்டதன் மூலம், ராகுல் அவர் இடத்துக்கு வர அவரே வழி அமைத்துத்
தந்திருக்கிறார் என்று கூறியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்
சுவாமி. புதன்கிழமை எக்ஸ்பிரஸ் குழும செய்தியாளரிடம் பேசிய அவர்,
மன்மோகன் சிங்கை விரைவில் நீக்கி விட்டு, பிரதமர் பதவிக்கு ராகுலைக்
கொண்டு வரும் தீவிர முயற்சியில் காங்கிரஸார் ஈடுபட்டிருக்கின்றனர்
என்றார். மேலும், மன்மோகன் சிங்கை 2ஜி ஊழலுக்குப் பொறுப்பாளியாக்க
காங்கிரஸார் முயற்சிக்கின்றனர். ஆனால், இதன் மொத்தப் பொறுப்பின்
பின்னணியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாவிடம் உள்ளது
என்றார் சுவாமி.பிரதமரை இந்த ஊழலுக்குள் இழுத்து விடும்
காங்கிரஸ்காரர்களுக்கு நான் சவால் விடுகிறேன்... பிரதமர் கிரிமினல்
சட்டத்தை மீறியதாக எவரும் சொல்லமுடியாது என்று!நான் அனைத்து
கோப்புகளையும் பார்த்துவிட்டேன், அனைத்து தீர்மானங்களையும்
ஆராய்ந்துவிட்டேன்... எந்த இடத்திலும் மன்மோகன் சிங் நாட்டுக்கு இழப்பு
ஏற்படுத்தும் விதமாக எந்த வழிகளிலும் செயல்படவில்லை என்று கூறுவேன்
என்றார் சுவாமி.பிரதமர் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி,
ராசா 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டின்போதான ஊழலில் ஈடுபடுவதைத் தடுத்திருக்க
வேண்டும். இந்த ஒரே ஒரு வழியை பிரதமர் செய்யாமல் விட்டுவிட்டார். ஆனால்,
பிரதமரைக் காட்டிலும் ஒருவருக்கு மிகப் பெரும் பொறுப்பும் அதிகாரமும்
இருக்கிறது. அது, சோனியாதான். எனவே, யாரேனும் இந்த ஊழலுக்குப் பொறுப்பு
யார் என்று சுட்டிக்காட்ட விரும்பினால் அது சோனியாவைத்தான் இருக்கும்
என்றார் சுவாமி.2ஜி விவகாரம் குறித்து மேலும் பேசிய சுவாமி, 2ஜி
ஊழல் என்பது குறைந்தது சோனீயாவை எட்டியிருக்க வேண்டும். காரணம், மன்மோகன்
சோனியாவின் ஒரு பலியாடுதான்! என்றார்.இந்த வழக்கில்
ப.சிதம்பரத்துக்கு உள்ள பங்கை வெளிக்கொண்டு வரும் வரை நான் ஓயப்போவதில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் தவறிழைக்கக் காரணமாக இருந்தவர்
சிதம்பரம். அ.ராசா எந்த விதத்திலும் கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாக இயங்க
வழி அமைத்துக் கொடுத்தவரும் சிதம்பரம்தான் என்று குற்றம்சாட்டினார்
சுவாமி. ப.சிதம்பரம் இந்த ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருக்கும்
சூழ்நிலையில், சிபிஐ அவர் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு உண்மையைக்
கொண்டுவரவேண்டும் என்றார் சுப்பிரமணியம் சுவாமி.