கடத்தல் அதிகாரிகள்

 ஆதித்யா விண்கலத்தின் புவி சுற்றுபாதை நிறைவு எல்1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்க தொடங்கியது: இஸ்ரோ தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள மோசமான சாலைகளை மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டும்.-முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவு.

  • சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்குமார் விவாகரத்து கோரி மனு.
  • தமிழ்நாட்டில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் -தமிழ்நாடு அரசு .
  • தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 
  • சேலம் மாநகரில் 33 ஹோட்டல்களில் தரமற்ற முறையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல்.
  • ‘அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை பாஜக தயார் செய்துள்ளது’ – கே.சி. பழனிசாமி .
  • புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்தான் என்ற விதியால் ஆறு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருவேளை அமலாக வாய்ப்பு.
  • காவிரி பங்கீடு விவகாரம்: தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் - ஒன்றிய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வலியுறுத்தல்
  • இந்திய எல்லையில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் - துப்பாக்கியால் சுட்டு தமிழ்நாடு மீனவர்கள் விரட்டியடிப்பு.
  • காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல்; கனடா தூதரக அதிகாரி நாட்டைவிட்டு 5 நாட்களில் வெளியேற இந்தியா உத்தரவு.
  • தில்லி விமான நிலையத்திலிருந்து  சென்னை விமான நிலையத்திற்கு இண்டிகோ   விமானத்தில் செங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர் வந்துள்ளார்..
  • விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று அவசரகால கதவை மணிகண்டன் திறக்க முயற்சித்துள்ளார்.இவர் ஒருவேளை பாஜக தமிழக ரானுவ அணி தலைவரோ?
  • -----------------------------------------------------

இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கேதீண்டாமை!

கேரளத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கோவிலில் தீண்டாமைக் கொடுமை சனாதன கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளத்தில் பட்டியல், பழங்குடியினர் நலன் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் கே.ராதாகிருஷ்ணன். 
இவர் கேரளத்தின் கோட்டயத்தில் பாரதிய வேலன் சேவை சங்கம் (பிவிஎஸ்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். 

அப்போது பையனூர் கோவில் விழாவில் பங்கேற்றபோது தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமையை வேதனையுடன் குறிப்பிட்டார். 

கண்ணூர் மாவட்டத்தின் பையனூரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது குத்துவிளக்கு ஏற்றுவதற்கான தீபத்தை தனது கையில் தராமல் அர்ச்சகர் அவமதித்ததாக வருத்தம் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது
," தீபத்தை ஏற்றிய தலைமை அர்ச்சகர், அதனை மற்றொரு அர்ச்சகரிடம் கொடுத்து குத்துவிளக்கை ஏற்றச்செய்தார்.
 குத்துவிளக்கு ஏற்ற காத்திருந்த என்னை பொருட்படுத்தாமல், தீபத்தை கீழே வைத்துவிட்டார்.

 தரையில் இருந்து தீபத்தை எடுத்து விளக்கை ஏற்றுவேன் என பூசாரி கருதினார். 
ஆனால் அதனை நான் எடுக்கவில்லை.
பின்னர் கோவில் செயல் அதிகாரி தீபத்தை எடுத்து தந்தார். 
ஆனால் அதனைப் பெற நான் மறுத்துவிட்டேன். 

எனக்கு நேர்ந்த தீண்டாமையால் உடன் வந்த மற்றவர்களும் குத்துவிளக்கு ஏற்ற மறுத்துவிட்டனர் . 

மேலும், நான் கொடுத்தப் பணத்தை தீண்டாமை பார்க்காமல் கைகளால்வாங்கி தங்கள் பஞ்சகச்சத்தில் வைதுக் கொண்ட பூசாரிகள் எனக்கு எதிராக மட்டும் தீண்டாமை கடைபிடிப்பது ஏன்? 
நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியவர்களை விட சாதி கட்டமைப்பை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். 

இதுதான் சனாதனம்.
மக்களை எப்படி பிரித்து பார்ப்பது என்பது சாதி கட்டமைப்பை உருவாக்கியவர்களுக்கு தெரிந்துள்ளது 

இந்த சம்பவத்துக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
-------------------------------------------
கடத்தல் அதிகாரிகள்

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்.14- ஆம் தேதி காலை 8 மணியளவில், ஓமனிலிருந்து வந்த விமானத்தில் மிகப்பெரிய அளவில் கடத்தல் பொருள்கள் வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

 அதன்பேரில், அந்த விமானத்தில் இருந்த 186 பயணிகளிடம் நடத்திய சோதனையில், அதில் 113 பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், எலெக்ட்ரானிக் பொருள்களைக் கடத்துபவா்கள் எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 113 பேரிடமும் தனித்தனியாக நடத்திய சோதனையில், அவா்களிடமிருந்து 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 204 கைப்பேசிகள், மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ உள்ளிட்ட கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இதன் மதிப்பு ரூ.14 கோடி. இது குறித்து நடத்திய விசாரணையில் பல்வேறு அதிா்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

கண்டுகொள்ளாத போக்கு: இந்தியாவை விட வளைகுடா நாடுகளில் குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்படுவதால் அங்கிருந்து தங்கம் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. 
அதுபோல கைப்பேசிகள், எலெக்ட்ரானிக் பொருள்களும் அந்த நாடுகளில் மலிவு விலையில் கிடைக்கின்றன. அதனால், வழக்கமாக அங்கிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தும் நபா்களை ஏஜெண்டுகள் அனுப்பி வைக்கின்றனா்.

 இதன்படி, ஓமனிலிருந்து சென்னைக்கு காலை 8 மணியளவில் வரும் இந்த குறிப்பிட்ட விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகளின் உதவியுடன் நாள்தோறும் சென்னைக்கு தங்கம் கடத்தப்பட்டு வந்துள்ளது. 
இந்த கடத்தல்காரா்களுக்கு சுங்க சோதனை பெரிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. இவா்கள் விமானத்தில் இருந்து இறங்கியதும் ‘கிரீன் சேனல்’ எனப்படும் எந்திரம் மூலமான சுங்கச்சோதனை வழியாக வெளியேறிவிடுவாா்கள்.
 சில நேரங்களில் மட்டும் சிலரை பிடிப்பாா்கள். அவா்கள் ஒரு கிலோவுக்கும் குறைவான தங்கமே வைத்திருப்பாா்கள்.

 அதற்கு 37 சதவீதம் அபராதம் விதிப்பாா்கள்.
அந்தத் தொகையை செலுத்தினால் கடத்தல் தங்கத்தை அவா்களிடமே கொடுத்து விடுவாா்கள். இதனால் கடத்தல் தொடா்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இப்படித்தான்,

 செப்.14-ஆம் தேதி ஓமனிலிருந்த வந்த விமானத்தில் 113 போ் ஒரே ஏஜென்சி மூலம் டிக்கெட் எடுத்து ஒன்றாக வருவதை அறிந்த சென்னை விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவா், உஷாராகி, அந்த விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் உதவியுடன் சோதனையிட்டாா். 
இதைத்தொடா்ந்து இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் சிலருக்கு பங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. 

இது குறித்த விசாரணையில், இந்த சம்பவத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பலருக்குத் தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 4 சுங்கத் துறைக் கண்காணிப்பாளா்கள், 16 ஆய்வாளா்கள் என மொத்தம் 20 போ் சென்னையில் உள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையா் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதுமட்டுமன்றி மேலும் பல உதவி ஆணையா்கள், துணை ஆணையா்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
-----------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?