குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலை, ஆனால் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் இன்னமும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை ஏற்படாமல் குழப்பம் நீடிக்கிறது .
முதலில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்த மம்தா பானர்ஜி அடுத்ததாக முலாயம் சிங்கை சந்தித்திருப்பதால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் புதிய குழப்பம் உண்டாகியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 30 என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்படும் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும் முன்னணியில் இருந்தனர்.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற கட்சிகள், காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரைத் தாங்கள் ஆதரிப்பதாக அறிவித்திருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மட்டும் இதுவரை தனது கருத்தை வெளியிடாமல் தவிர்த்து வந்தது.
இந்த சூழலில்தான், செவ்வாய்க்கிழமை இரவு தில்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கை சந்தித்துக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பதற்கு முன் முலாயம் சிங் யாதவை மேற்கு வங்க முதல்வர் சந்தித்தது குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்பாராத திருப்பங்கள் நேரலாம் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை நண்பகலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த மம்தா பானர்ஜி ஒரு மணி நேரம் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகிய இரண்டு பேரின் பெயர்களையும் காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருவதாகத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக நிருபர்களிடம் கூறினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.
சோனியா காந்தியை சந்தித்த பிறகு மீண்டும் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன் கலந்தாலோசித்தார் மம்தா பானர்ஜி. அதைத் தொடர்ந்து இருவரும் நிருபர்களை சந்தித்தனர். ""பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகிய இருவரின் பெயர்களைக் காங்கிரஸ் மேலிடம் பரிசீலிக்கிறது. அவர்களைத் தவிர பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பரிசீலிக்கலாம் என்பது எங்கள் கருத்து. இதில் கருத்தொற்றுமை ஏற்பட்டால் எவரையும் வேட்பாளராக நிறுத்தலாம்'' என்றார் மம்தா பானர்ஜி.
அதிமுகவும், பிஜு ஜனதா தளமும் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் மக்களவைத் தலைவர் சங்மாவுக்குத் தங்கள் சார்பில் நிறுத்திஆதரவு தெரிவித்துள்ளன.
பாஜக சார்பிலோ, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலோ குடியரசுதலைவர் வேட்பாளர் எவரும் அறிவிக்கப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் சுமுகமான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு தங்களது சார்பில் ஒருவரைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் அமர்த்துவதில் அக்கறை காட்டுவதாகக் கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜியைப் பொருத்தவரை ஆரம்பம் முதலே பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ""மேற்கு வங்க காங்கிரஸ் கோஷ்டி அரசியலில் இரு துருவங்களாகச் செயல்பட்டவர்கள் கனிகான் செüத்ரியும், பிரணாப் முகர்ஜியும். கனிகான் செüத்ரியால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, வளர்க்கப்பட்ட மம்தா பானர்ஜி,காங்கீரசில் இருக்கும் போதே பிரணாப் முகர்ஜி யின் எதிர் வரிசையில் இருந்தவர்.ஒரு வங்காளிக்கு எதிராக செயல்படுவதாக வங்க மக்கள் குறை கூறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரை அவர் பரிந்துரைத்திருக்கிறார்.மற்றபடி அவரை உண்மையில் விரும்பவில்லை "' என்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பதில் காங்கிரஸ் தலைமைக்கே முழு சம்மதம் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக அவர் மாறிவிட்டிருக்கிறார் என்றும், அவர் குடியரசுத் தலைவராவதில் நேரு குடும்பத்துக்கு விருப்பமில்லை என்பது உண்மையல்ல என்றும் கூறுகிறார்கள். அதேநேரத்தில், பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தை சமாளிக்க அவரைப் போல சிறந்த மூத்த தலைவர்கள் யாருமில்லை என்பதை சோனியா காந்தி சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியிலேயே, இன்னொரு பகுதியினர் பிரணாப் முகர்ஜி போன்ற காங்கிரஸ் அபிமானி ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்தால் மட்டுமே, 2014 தேர்தலுக்குப் பிறகு ஏற்படக்கூடிய அரசியல் சூழ்நிலையை சமாளிக்கவும், காங்கிரஸýக்குப் பாதுகாப்பாக இருக்கவும் முடியும் என்று அவரது சார்பில் சோனியா காந்தியிடம் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், முலாயம் சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் பிரதமர் மன்மோகன் சிங் பெயரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் பரிந்துரைத்திருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளராக மன்மோகன் சிங் அறிவிக்கப்பட்டால், பிரணாப் முகர்ஜி பிரதமராக்கப்படுவாரா, அதை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளுமா போன்ற கேள்விகள் தலைநகரத்தில் இப்போதே வட்டமிடத் தொடங்கிவிட்டன.
2007-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்தலில் இதேபோலக் குழப்பம் நீடித்துக் கடைசி நிமிடத்தில் பிரதிபா பாட்டீல் ஆளும் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை குடியரசுத் தலைவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படப் போகிறாரா இல்லையா என்பதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதும் முடிவாகாத நிலையில், வேட்பாளர் தேர்வில் குழப்பம் தொடர்கிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்ய பாஜக-வின் ஒத்துழைப்பையும் அக்கட்சி ரகசியமாகக் கோருவதாகத் தெரிகிறது. இதற்கு பிரதி உபகாரமாக குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்ய காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்குக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாக முன்னணியில் இருக்கும் பெயர்கள் பிரணாப் முகர்ஜியும், மன்மோகன் சிங்கும்தான் என்று தெரிகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் ஓரிரு தினங்களில் அறிவிக்கும் என்று அக்கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
_________________________________________________________________________
மியான்மர் [பர்மா] நாட்டில் தற்போது முஸ்லீம்-புத்த மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமான் நிலவரம் உள்ளது.
அங்குள்ள சில காட்சிகள்.
புத்த கோவிலில் அடைக்கலம்.
வெந்து தணிந்த வீடுகள்
காப்பாற்றுவது கடவுள்களல்ல.காவல்துறையினர்தான்.
என்று தணியுமோ இந்த கலவர மோகம்.